சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த குகேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து
சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 48வது லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள்ளார். 15 வயதான குகேஷ் தனது கடைசி சுற்றில் இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் விக்டரை 26 நகர்த்தர்களில் வீழ்த்தி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். குகேஷ் 9 சுற்றுகளுக்கு 8 புள்ளிகளை சேர்த்து முதலிடம் பிடித்தார். இதே தொடரில் இளம் செஸ் வீரரான R.பிரக்யானந்தா மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சென்னையைச் சேர்ந்த 15 வயதுடைய செஸ் வீரர் குகேஷ் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன்.இளம் வயதில் கடினமான வீரர்களை கொண்ட கோதாவில் தோல்வியே காணாமல் வாகை சூடுவது தனித்துவமானது. ஆட்டமிழக்காமல் விளையாடியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதே தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள இளம் செஸ் வீரரான R.பிரக்யானந்தாவுக்கும் எனது வாழ்த்துகள்.’ என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,’ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் P.குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.இதே தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள இளம் செஸ் வீரரான R.பிரக்யானந்தாவுக்கும் எனது வாழ்த்துகள்.சதுரங்கத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் இவர்கள் இருவரும் மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்,’என்றார்.