நடிகர் விஜய் பீஸ்ட் படத்தைப் பற்றி… | கோலிவுட் கோகிலா

 நடிகர் விஜய் பீஸ்ட் படத்தைப் பற்றி… | கோலிவுட் கோகிலா

பத்து வருசத்துக்கு அப்புறம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய்.

டைரக்டர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும் சொன்னார்.

அதுக்காக இந்நிகழ்ச்சியின் ஸ்க்ரிப்ட் ரைட்டர் முதலில் ரெடி செஞ்ச கதை இதுவாம் : ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்துச்சு.ஜென் குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், தனக்கு வேண்டிய செல்வம் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும் மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும், தனக்கு மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார்.உடனே குரு, ”ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,” என்று சொல்ல,மன்னனும் சிறிது கூட யோசிக்காமல், ‘எடுத்தக் கொள்ளுங்கள் குருவே,”என்றார்.

குரு,”நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால், நீ என்ன செய்வாய்?”என்று கேட்டார்.மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.

உடனே குரு தயங்காம, ”எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்? நீ என்னிடமே வேலை பார்க்கலாமே? என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா. ஆண்டுக்கு ஒருமுறை நான் வந்து கணக்கு வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று சொல்ல மன்னனும் ஓ கே சொன்னார்.

ஒரு வருசம் கழிச்சு குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து,”நாடு எப்படி இருக்கிறது? வரவு செலவு எப்படி இருக்கிறது? நீ எப்படி இருக்கிறாய்?”என்று கேட்டார்.

மன்னனும்,”நாடு சுபிட்சமாக இருக்கிறது.நான் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன்.இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,” அப்ப்டீன்னு சொன்னார்.

குரு,”அதற்கு அவசியமில்லை.நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய்.ஆனால் முன்னால் இந்த நாடு, ‘என்னுடையது’என்று நினைத்து வேலை செய்தாய் அதனால் உனக்கு நிம்மதி இல்லை. இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய்.இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,”என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து விடை பெற்றார். -அப்படீன்னு இருந்த கதை ஏனோ சன் குரூப்-புக்கு பிடிக்காம போயிடுச்சாம்

அதுனாலே புது குட்டி ஸ்டோரி ரெடியாச்சாம்

அந்த ஸ்டோரி என்னா-ன்னு கேக்கறீங்களா?

“ஃபுட்பால் ஒரு புல்லாங்குழலை பார்த்து கேட்டுச்சாம், உனக்குள்ளையும் காத்துதான் இருக்கு, எனக்குள்ளையும் காத்துதான் இருக்கு. ஆனா உன்னை வாயில் வைத்து முத்தமிடுகின்றனர், என்னை தூக்கி போட்டு காலில் போட்டு மிதிக்கிறாய்ங்க என்றதாம்.

அதற்கு பதிலளிச்ச புல்லாங்குழல், நீ உனக்குள் இருக்கும் காற்றை யாருக்கும் தருவதில்லை. உதவாக்கரை.. ஆனால் நான் எனக்குள் இருக்கும் காற்றை இன்னிசையாக மக்களுக்கு தருகிறேன். அதனால் தான் என்னை அனைவரும் முத்தமிடுகின்றனர் எனச் சொன்னதாம்.

அதுனாலே நாம் ஃபுட்பால் மாதிரி இல்லாமல் ஃபுளூட்புல்லாங்குழலாக இருக்க ட்ரை பண்ணுவோம் – இதுதான் நேத்திக்கு விஜய் சொன்னது

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

விஷாலின் முஸ்லீம் மதத்துக்கு மாறிப்புட்டாரா? ரசிகர்கள் குழப்பம்.

தமிழ் திரையுலகில் இன்னமும் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி படம் தயாராகி வருது. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஷால் போலீஸாக நடிச்சிருக்கார்.

இதையடுத்து மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க உள்ளார் விஷால். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்குது.

நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்கிற தங்கை உள்ளார். இவருக்கும் கிரிஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விஷால்.

அந்த ட்விட்டர் கமெண்டில் : மீண்டும் மாமா ஆனதில் மிக்க மகிழ்ச்சி. இதுக்கு மேல என்ன வேணும்?. எனது தங்கை ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், பெற்றோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்” என பதிவிட்டுள்ளார்.

இப்படி விஷாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், அவர் மதம் மாறிவிட்டாரா அப்படீங்கற டவுட்டை எழுப்பி வராங்க

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அஜித்தின் 61வது படம் பூஜையுடன் படப்பிடிப்பு- தொடங்குதுங்கோ! .

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையா எச்.வினோத் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும். படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைச்சுட்டாராம்.

நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள இப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அதோடு தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணையவுள்ளனராம்.

அஜித் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்னிக்கு காலை இன்னும் கொஞ்ச நேரத்தில் துவங்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வந்துருக்குது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இப் படத்திற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அங்குதான் முதன்முதலில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக்கும்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

விரைவில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு நேர்மையான கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட திரைக்கதை, ஆகியவை குறித்து இன்றும் போதுமான அளவில் விவாதங்கள் தொடர்கிறது. இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் நடிகை பல்லவி ஜோஷி ஆகியோர் இதன் மூன்று பாகங்களையும் நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

250 கோடி ரூபாய் வசூலித்து ‘வசூல் கிளப்’பில் இணைந்திருக்கும் ‘ தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையுலக வணிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டியிருக்கின்றனர். இதனால் இந்த கூட்டணியின் அடுத்த பட அறிவிப்பிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தேஜ் நாராயன் அகர்வால் வழங்க, அபிஷேக் அகர்வால், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கின்றனர். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...