நலம் நலமறிய ஆவல் | இயக்குனர் மணிபாரதி

 நலம் நலமறிய ஆவல் | இயக்குனர் மணிபாரதி

குன்னூர் சிம்ஸ் பார்க் வாசலில், அந்த வேன் வந்து நின்றது. தோழிகள் பத்து பேரும், வேனிலிருந்து இறங்கினார்கள். வருடத்திற்கு ஒருமுறை, அவர்கள் இப்படி எதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு, டூர் வருவது வாடிக்கை. அதுவும் கணவன்மார்களின் தொல்லையிலிருந்து விடுபட்டு.

தோழிகளின் குழுவிற்கு தலைவி ஜானகி. மார்ச், ஏப்ரலில் டூர் புறப்படுவதற்கு, ஜனவரி மாதத்திலிருந்தே வேலையை தொடங்கி விடுவாள். தோழிகள் அத்தனை பேரும், ஒரே காலேஜில், ஒரே கிளாஸில் படித்தவர்கள். இன்று, கல்யாணமாகி வேறு வேறு ஊர்களில் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் ஒன்று சேர்த்தது ஜானகிதான். தோழிகளுக்காக FRIENDS – 2017 என்கிற ஒரு வாட்சப் குரூப்பை ஏற்படுத்தி, அதற்கு அட்மினாக அவளே இருக்கிறாள். வடகம் போடுவதில் ஆரம்பித்து, புதிதாக எடுத்த பட்டுப்புடவை வரை, அதில் பகிர்ந்து கொள்வார்கள்.

போன வருடம் ஏற்காடு போய் வந்தவர்கள், இந்த வருடம் ஊட்டியை தேர்வு செய்திருக்கிறார்கள். தோழிகளில் ஒருத்தியான உஷா, ஊட்டிக் குளிரை அனுபவிக்கிறளோ இல்லையோ, ஊட்டி வர்க்கியையும், பட்டர் பிஸ்கட்டையும் அவளுக்கு சாப்பிட்டு பார்த்து விட வேண்டும். யூ ட்யூபை பார்த்து அதை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள். கவிதாவிற்கு ஹோம் மேட் சாக்லட்டை சாப்பிட்டு பார்க்க வேண்டும். வசந்திக்கு, அவளது குழந்தைக்கு நல்லதாக ஒரு ஸ்வொட்டர் வாங்க வேண்டும். இப்படி, ஆளாளுக்கு ஒரு ஆசையை வைத்துக் கொண்டு புறப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அனைவரும் இறங்கி சிம்ஸ் பார்க்கின் உள்ளே வந்தார்கள். கலர் கலரான பூக்களையும், யானை, மயில் வடிவில் வெட்டப்பட்ட செடிகளையும், சல சலவென்று ஓடிய சிறு நீரோடையையும், தாமரைப் பூ குளத்தையும் ரசித்துப் பார்த்தார்கள். தோழிகளில் ஒருத்தியான வனிதா காவல்காரனுக்கு தெரியாமல் ஒரு தாமரைப் பூவை பறித்து வைத்துக் கொண்டாள்.

பின், அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தார்கள். தோழிகளில் ஒருத்தியான அனிதா, குளிர் தாங்காமல் இரண்டு கைகளையும் தேயத்து விட்டுக் கொண்டு, அருகில் இருக்கும், சாரதாவிடம் “ஒரு தம் போட்டா தேவலாம் போலிருக்கிறது..“ என்றாள்.

“என்னடி சொல்ற..“ சாரதா அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஏன்.. ஆம்பளைக்க மட்டும்தான் தம் அடிக்கனுமா..“ எனக்கேட்டாள்.

சாரதாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. அதற்குள் ஜானகி, உடன் கொண்டு வந்திருந்த அட்டைப் பெட்டியை பிரித்து, அதிலிருக்கும் பிரேக் ஃபாஸ்ட்டை, ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாக்கெட்டாக எடுத்துக் கொடுத்தாள். அதை, அவர்கள் பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பண் பட்டர் ஜாம் வறண்டு போகமால், ஃபிரஷ்ஷாக இருந்தது. ராதிகா “வேற ஊரா இருந்தா, இந்நேரம் கருவாடா போயிருக்கும்.. இந்த ஊர் கிளைமேட்டோட ஸ்பெஷலே அதுதான்..“ என்றாள். ஆளுக்கொரு கதையாக பேசிய படி சாப்பிட்டு முடித்தார்கள். அதன் பிறகு சுடச்சுட காபி பறிமாறப்பட்டது. அந்த குளிருக்கு அது மிகவும் இதமாக இருந்தது.

காபி சாப்பிட்டு முடித்ததும், ஜானகி “கேம ஸ்டார்ட் பண்ணலாமா..“ எனக் கேட்டாள். அனைவரும் கோரஸாக “ஓ..“ என கத்தினார்கள். ஜானகி ஒரு குடுவையை காண்பித்து, “இதுல பத்து சீட் எழுதிப் போட்டுருக்கேன்.. அதுலேருந்து ஆளுக்கொரு சீட்டா எடுக்கனும்.. யார் யாருக்கு என்ன சீடடு வந்துருக்கோ, அதுல எழுதியிருக்குற படி செஞ்சு காட்டனும்..“ என்றாள். மீண்டும், குரூப் கோரஸாக “ஓ..“ கத்தினார்கள். ஜானகி அனைவரிடமும் குடுவையை நீட்டினாள். அதிலிருந்து ஆளுக்கொரு சீட்டாக எடுத்தார்கள். ஜானகி, ராதிகாவிலிருந்து ஆரம்பிக்க சொன்னாள். ராதிகா, அவளது சீட்டைப் பிரித்து படித்துப் பார்த்தாள். அவளது முகம் அஷ்ட கோணலாக மாறியது. “என்னடி வந்துருக்கு..“ ப்ரியா கேட்டாள். ராதிகா “கழுதைப் போல் கற்ற வேண்டும்..“ என படித்து காண்பித்தாள். தோழிகள் “ஓ..“ என கத்தி அவளை வெறுப்பேற்றினார்கள். ராதிகா கழுதைப் போல் கத்தினாள்.

அடுத்ததாக அனிதா. அவளது சீட்டைப் பிரித்தாள். “ஒரு காதல் கதை சொல்ல வேண்டும்..“ என்றிருந்தது. அதைப் படித்துக் காண்பித்தாள். தோழிகள் அமைதியாக இருந்தார்கள். சிறிது நேரம் யோசித்த அனிதா “எதுக்காக அடுத்தவங்க கதைய சொல்லனும்.. நா என் கதையவே சொல்றேன்..“ என்றாள். அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள். ஆச்சரியத்திற்கு காரணம், அவளுக்கு கல்யாணமாகி ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவளது கணவன் திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸில் புராஜக்ட் ஹெட்டாக வேலைப் பார்க்கிறான். ஆனால், அவள் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரிய வில்லை. தன்னுடைய காதல் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

அனிதா படித்து முடித்ததும் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள். அங்குதான் சந்திரனை சந்தித்தாள். அந்த கம்பெனியின் அசிஸ்டன்ட் மேனேஜரான அவன், ஒரு ஹேன்ட்சம் பாய். எந்தப் பெண்ணிற்குமே, அவனைப் பார்த்தவுடனே பிடித்து விடும். அனிதா மட்டும் விதி விலக்கா என்ன? வேலைக்கு சேர்ந்ததிலிருந்து, எப்போது அவன் தன்னிடம் பேசுவான் என, ஒவ்வொரு நாளையும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கடத்தினாள்.

அந்த நாளும் வந்தது.

அவன், அவளை, தனது கேபினிற்கு வரச் சொன்னான். அனிதாவிற்கு ஆயிரம் சிறகுகள் முளைத்தது. இன்று அழைப்பான் என்பது முன்பே தெரிந்திருந்தால், பார்லர் போய் புருவத்தை திருத்திக் கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என்று, ஹேன்ட் பேக்கில் இருக்கும் கையளவு கண்ணாடியை எடுத்து, தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். புருவத்தை தவிர எல்லாம் சரியாகதான் இருந்தது. எழுந்து, பாதங்களை அடி வைத்து நடந்து, அவனது கேபினிற்கு வந்தாள். அவன் அவளை நிமிர்ந்து பார்க்காமலே “வாங்க அனிதா..“ என்றான். அவள் “எஸ் சார்..“ என்றாள்.

“கோயம்புத்தூர் ஆபிஸ்க்கு அனுப்ப வேண்டிய லெட்டர ரெடி பண்ணிட்டிங்களா..“

“பண்ணிட்டேன் சார்..“

“அதை எனக்கு மெயில் பண்ணுங்க.. நா ஒரு தடவை படிச்சு பாத்துடுறேன்.. அதுக்கப்புறம் அவங்களுக்கு சென்ட் பண்ணலாம்..“

“எஸ் சார்..“ என்றவள், அவனது முகத்தை முழுமையாக பார்க்க ஆசைப்பட்டு, தனது கையிலிருக்கும் பேணாவை, அவனது டேபிளின் மேல் நழுவ விட்டாள். சத்தம் கேட்டு அவன் நிமிர்ந்து பார்த்தான். அத்தனை பிரகாசம். காதல் கோட்டை அஜித்தை பார்ப்பது போலிருந்தது. “ஸாரி சார்..“ என்று கூறி பேணாவை எடுத்துக் கொண்டாள். மனதில் “நலம் நலமறிய ஆவல்..“ பாடல் ஓட ஆரம்பித்தது. வெளியில் வந்தாள். மீண்டும் அடி போட்டு நடந்து, அவளது சீட்டிற்கு வந்தாள். அந்தக் கடிதத்தை அவனுக்கு மெயில் பண்ணினாள். அவனிடமிருந்து அதே வேகத்தில் “குட்“ என ரிப்ளை வந்தது. அதை, அவள் எதிர்பார்க்க வில்லை. தான் செய்த வேலைக்காகதான் அந்த பாராட்டை அனுப்பியிருக்கிறான் என்றாலும், தனக்காக, தன் அழகிற்காக அனுப்பப்பட்டதாகவே நினைத்துக் கொண்டாள். கம்ப்யூட்டரின் திரையில் விரலை வைத்து, அந்த வார்த்தையை ஒரு முறை தடவிப் பார்த்தாள். உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. கூடவே, மனதில் “நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா..“ என பாடல் தொடர்ந்தது.

அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், முதல் வேலையாக, அம்மாவிடம் “எனக்கு புதுசா அஞ்சாறு சுடிதார் எடுத்துக் குடும்மா.. பழசெல்லாம் கோவிலுக்கோ சினிமாவுக்கோ போட்டுட்டு போறதுக்கு பரவாயில்ல.. வேலைக்கு செட் ஆகல..“ என்றாள். அம்மா “அதனால என்னம்மா.. எடுத்துக்க..“ என்றாள். அப்போதே அம்மாவை கடைக்கு தள்ளிக் கொண்டு போனாள். ஒரு வாரமாக சந்திரனை கவனித்ததில், அவனுக்கு என்ன கலர் பிடிக்கும் என்பதை, மனதில் ஓட விட்டுப் பார்த்தாள். அவன் அதிகமாக எல்லோ கலர் சட்டையே அணிந்து வந்திருந்தான். அதையே சாட்சியாக வைத்து, ஆறு சுடிதாரையுமே, அதில் ஏதோ ஒரு விதத்தில் எல்லோ கலர் கலந்திருப்பது போல், பார்த்து எடுத்தாள். அம்மா “எல்லாமே எல்லோ கலரா இருக்கே.. வேற பாக்கலாம்ல்ல..“ என்றாள். அனிதா “இல்லம்மா.. என் நிறத்துக்கு இதுதான் எடுப்பா இருக்கும்..“ என்றாள். அம்மா அவளது விருப்பத்திற்கு விட்டு விட்டாள்.

அடுத்த நாள், அதில் ஒன்றை தேர்வு செய்து போட்டுக் கொண்டு ஆபிஸிற்கு வந்தாள். சந்திரனின் வருகைக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில், அவன் வந்து இறங்கினான். என்ன ஆச்சரியம்.. அவனும் எல்லோ கலர் சட்டையே அணிந்து வந்திருந்தான். மீண்டும் அவளுக்கு சிறகு முளைத்தது. மனதில் “தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே.. வேண்டும் ஒரு சூரியனே.. நீ அனுப்பு குளிர் கேட்கிறதே..“ என பாடல் தொடர்ந்தது. அவளே, அவனது எதிரில் வலிய வந்து “குட் மார்னிங்..“ என்றாள். “குட் மார்னிங்..“ என்றவன், ஒரு விநாடி, மின்னல் வெட்டுவதைப் போல் அவளைப் பார்த்து விட்டு, பின் இயல்பாக அவனது கேபினிற்கு சென்றான். அவள் தனது எண்ணம் பூர்த்தியானதில் பூரித்துதான் போனாள்.

பத்து நிமிடத்தில் அவன், அவளை அழைத்தான். அவள் பறந்து சென்று அவன் முன்பாக நின்றாள்.

“உக்காருங்க அனிதா..“

சீட்டு நுனியில் உட்கார்ந்தாள். அவன் மீண்டும் தன்னைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. இந்தப் பிறவியே அவனுக்காக படைக்கப்பட்டதாக நினைத்தாள்.

“கோயம்புத்தூருக்கு அனுப்புன மாதிரியே இன்னும் சில ஊர்களுக்கு லெட்டர்ஸ் அனுப்பனும்.. எந்தெந்த ஊர்ங்குற டீட்டெய்ல நா மெயில்ல உங்களுக்கு சென்ட் பண்றேன்..“

“எஸ் சார்..“

“ஓ கே.. யூ கேன் கோ..“

அவள் எழுந்து கொண்டாள்.

“சுடிதார் புதுசா..“

“யெ…..ஸ் சார்..“

“எல்லோ கலர் ரொம்ப புடிக்குமா..“

“யெ…..ஸ் சார்..“

“எனக்கும் புடிக்கும்.. நைஸ் கலர்..“

“தா….ங்ஸ் சார்..“

மீண்டும் பறந்து வந்து அவளது சீட்டில் உட்கார்ந்தாள். மனதில் “கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே.. என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா..“ என பாடல் தொடர்ந்தது. அந்த ஆபிஸ், அவளுக்கு தாஜ் மஹால் போல் காட்சி அளித்தது. லெட்டரை கடகடவென்று தட்டினாள். தட்டிய வேகத்தில், அவனது பார்வைக்கு அனுப்பி வைத்தாள். அவனிடமிருந்து மீண்டும் அவளுக்கு அழைப்பு வந்தது. மீண்டும் பறந்து போனாள்.

“ரொம்ப ஸ்பீடா இருக்கிங்க..“

“உடனுக்குடனே முடிச்சுடலாம்ன்னு..“

“குட்.. அப்படிதான் இருக்கனும்.. இங்க நிறைய சோம்பேறிங்க இருக்காங்க.. அதுவும் அழுது வடியுற முகத்தோட..“

அதைக் கேட்டு, அவள் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும், வெளியில் காட்டிக் கொள்ளாதவளாக, அமைதியாக இருந்தாள்.

“இன்னிக்கு லஞ்ச் என் கூட சாப்பிடுறிங்களா..“

அந்த கேள்வியை அவள் எதிர்ப்பார்க்க வில்லை. காதல், வேகமாக பற்றுவதாக நினைத்தாள்.

“இன்னிக்கு எங்கப்பாவோட அனிவர்சரி.. அம்மா, ஸ்வீட் பாயசாம்ன்னு நிறைய செஞ்சு குடுத்து விட்டுருக்காங்க.. தனியா சாப்புடுறது கஷ்டம்.. அதான், என் கூட ஷேர் பண்ணிகிட்டிங்கன்னா ஈஸியா இருக்கும்..“

“யெ….ஸ் சார்..“

“தாங்ஸ்..“

அவள், தனது சீட்டிற்கு மிதந்து வந்தாள். மனசு முழுவதும் அவனே நிறைந்திருந்தான். மனதில் “இரவினில் கனவுகள் தினம் தொல்லையே.. உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே..“ பாடல் தொடர்ந்தது. எப்போது லஞ்ச் பிரேக் வரும் என்றிருந்தது. இன்றைக்கு பார்த்து கடிகாரம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மனசு இருப்புக் கொள்ள வில்லை. நேரத்தைக் கடத்த, என்னென்னவோ செய்து பார்த்தாள். ஆனால், அது அதன் இயல்பிலேயே நகர்ந்தது. ஃபோனை கையில் எடுத்து வாட்டர் கேம் விளையாடினாள். ஒரு வழியாக ஒரு மணி ஆனது. அவள், அவனது அழைப்பிற்காக காத்திருந்தாள். அவன், லஞ்ச் பேக்குடன் அவளது எதிரில் வந்து நின்று “போகலாமா அனிதா..“ என்றான். அவன், இப்படி நேரில் வந்து அழைப்பான் என அவள் எதிர்ப்பார்க்க வில்லை. மனசு படபடத்தது. “ம் போகலாம்..“ என்றாள்.

இருவரும் டைனிங் ஹாலுக்கு வந்தார்கள். ஓரிடத்தை தேர்வு செய்து உட்கார்ந்தார்கள். சில கண்கள் அவர்களை குறுகுறுவென்று பார்த்தது. அதைப்பற்றி அவர்கள் இருவருமே கவலைப்பட வில்லை. அவன் லஞ்ச் பேக்கை டேபிள் மேல் வைத்து பிரித்தான். ஒவ்வொரு அடுக்காக எடுத்து தனியே வைத்தான். சாப்பாட்டு மணம் நாசியை துளைத்தது. இரண்டு பிளேட்டுகளில் அதை பறிமாறினான். இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“எங்கப்பா ரொம்ப நல்ல மனுஷன்.. எல்லாருகிட்டயும் ப்ரியமா இருப்பார்.. அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா முதல் ஆளா ஓடிப் போய் நிப்பார்.. அவரோட அந்த குணாதிசியத்தை நானும் ஃபாலோ பண்ணனும்ன்னு நினைக்குறேன்..“

“ஒரு நல்ல மனுஷனோட நினைவு நாள் சாப்பாட்ட சாப்பிடுற நா, குடுத்து வச்சவளாதான் இருக்கனும்..“

“நிச்சயமா.. சாப்பாடு எப்படி இருக்கு..“

“அறுசுவை..“

“அம்மாவே, அவங்க கைப்பட சமைச்சது. இன்னிக்கு ஒரு நாள் சர்வன்ட்ட கிச்சனுக்குள்ள அலவ் பண்ண மாட்டாங்க.. அப்பாவுக்கு அவங்க கையால சவமைச்சு படைச்சாதான் நிம்மதி..“

அவளுக்கு பெருமையாக இருந்தது. மனதில் “கோவிலிலே நான் தொழுதேன் கோல மயில் உனைச் சேர்ந்திடவே.. கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே..“ பாடல் தொடர்ந்தது. அன்று தொடங்கிய அவர்களது அந்த நட்பு, அல்லது உறவு, நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே போனது. ஒவ்வொரு நாளும், அவன் அவளது கனவில் வந்தான். அவளை, காதலுடன் கட்டி அணைத்துக் கொண்டான்.

அவள், தனது காதலை வெளிப்படுத்த, ஒரு நல்ல சந்தர்பத்தை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தாள்.

(புகைப்படங்கள் பேட்டரி படத்தில் இருந்து அம்மு அபிராமி)

அந்த சந்தர்பமும் வந்தது. ஆனால் அவன் முந்திக் கொண்டு “அனிதா.. என்னை ஐதராபாத் ஆபிஸ்க்கு டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க.. நாளையிலேருந்து நா வர மாட்டேன்..“ என்றான். அவளுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. இந்தச் சூழலில் தன்னுடைய காதலை சொல்லலாமா வேண்டாமா.. சொன்னால் அவன் எப்படி எடுத்துக் கொள்வான்.. அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருக்கிறானா, இல்லையா.. எதையுமே அவளால் கணிக்க முடிய வில்லை.

“என்ன அனிதா பதிலையே கணோம்..“

“ஒண்ணுமில்ல.. நீங்க இருந்தது ஒரு தெம்பா இருந்துது.. திடீர்ன்னு போறேன்னு சொல்றீங்களே.. அதான் கஷ்டமா இருக்கு..“

“அதானே லைஃப்.. அதைதான வாழப் பழகிக்கனும்.. அங்கப் போனதும், எனக்கு ஒரு புது அனிதா கிடைப்பா.. இங்க, உனக்கு வேறொரு சந்திரன் கிடைப்பான்.. அவங்களோட பழகிக்க வேண்டியதுதான்..“

அவளது இதயம் சுக்கு நூறாக உடைந்தது. சிறகுகள் முறிந்து காற்றில் பறந்தது. எல்லோ கலர் கண்களை விட்டு மறைய தொடங்கியது.

மாலை, அவன், அவளிடமிருந்து விடை பெற்று சென்றான். மனதில் “உன் முகம் நான் பார்க்க கடிதமேதானா.. வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா.. நிழற் படம் அனுப்பிடு என்னுயிரே.. நிஜமின்றி வேறில்லை என்னிடமே..“ என பாடல் முடிந்தது.

அனிதாவின் காதல் கதை முடிய, அவளது கண்களில் நீர் வடிந்தது. தோழிகள் அமைதியாக இருந்தார்கள். ஜானகி “கேம் ஜாலியா போகும்ன்னு பார்த்தா, சீரியஸாயிடுச்சு..“ என்றாள். அனிதா “அதெல்லாம் ஒண்ணுமில்லடி.. நீங்க கண்டினியூ பண்ணுங்க..“ என்று கூறி கண்களை துடைத்துக் கொண்டாள். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் சகஜ நிலைக்கு வந்தார்கள். மீண்டும், சிரிப்பும் கும்மாளமும் ஆரம்பித்தது. கேம் முடிந்து வேனில் ஏறினார்கள். வேன் புறப்பட்டது.

அனிதா அருகில் உட்கார்ந்திருந்த சாரதா “உன் லவ் ஸ்டோரி ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு..“ என்றாள்.

“அவர், இன்னும் ஒரு மாசம் என் கூட ஒர்க் பண்ணிருந்தார்ன்னா, என்னோட லவ் சக்ஸஸ் ஆயிருக்கும்..“

“சரி.. நீ பாட்டுக்கு உன் லவ் ஸ்டோரிய இவ்வளவு பப்ளிக்கா அவுத்து விடுறியே.. உன் ஹஸ்பென்ட்டுக்கு தெரிஞ்சா என்னாகறது.. பிரச்சனை ஆயிடாது..“

அனிதாவிற்கு சிரிப்பு வந்தது.

“ஆம்பளைங்க மட்டும்தான் லவ் பண்ணனும்.. அவங்க மட்டும்தான் அதை அவங்க ஃபிரண்ட்ஸோட ஷேர் பண்ணிக்கனும்.. பொம்பளைங்க நாம பண்ணா அது தப்பு.. அப்புறம் என்ன மண்ணாங்கட்டி பெண் சுதந்திரம்..“

சாரதா வாயடைத்துப் போய் பார்த்தாள். ●

கமலகண்ணன்

1 Comment

  • அருமை யாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...