குஞ்சரம்மாள் எனும் குணக்குன்று
சென்னை வெள்ளம் வந்தபோது வீடிழந்த மக்களுக்கு சில நல்ல உள்ளங்களால் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதைப் பார்த்தோம். பிறகு தமிழகப் புயல் நிகழ்ந்தபோதும் பார்த்தோம். அப்போதெல்லாம் யாரோ எவரோ உணவு தந்து பசி யாற்றினார்கள். கடந்த ஆண்டு கொரோனா கோரத் தாண்ட வத்தில் வேலை இல்லாமல் உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கும் உதவிக் கரங் களை நீட்டிய வர்களைப் பார்த்திருக்கிறோம்.
தற்போது ரசியா-உக்ரைன் போரின்போது உணவு கிடைக்காமல் தவித்தவர் களுக்கு கஞ்சி உணவு வழங்கப்படுவதைக் கேள்விப்படுகிறோம். ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த கோரப் பஞ்சமான தாது வருடப் பஞ்சம் பற்றியும் அதற்குத் தன் வீடு, நகைகளை விற்று பசிதீர்த்த ஒரு பேராண்மைப் பெண் மணியைப் பற்றித் தெரியுமா? பார்ப்போம்.
எழுபதுகளில் வந்த அரிசிப் பஞ்சம் பல மாதங்கள் நீண்டது. ஆனால் பல ஆண்டு கள் நீடித்த ‘தாது’ ஆண்டுப் பஞ்சம் தமிழகத்தை எப்படிப் பயமுறுத்தியது என்ப தைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
1875 முதல் 1880 வரை மாபெரும் பஞ்சம் தமிழகத்தைப் புரட்டிப்போட்டது. சாதாரண மக்கள் எலும்பும் தோலுமாய் ஒட்டி உலர்ந்திருந்தார்கள். மார்பு, விலா எலும்புகளை எண்ணிவிடலாம். வயல் வரப்புகளில் எறும்புகள் தங்கள் புற்று வீடுகளில் சேமித்து வைத்திருந்த அரிசி, குருணைகளைக்கூட விடாமல் தேடித் தோண்டி எடுத்து தின்கிற அளவுக்கு மக்களை விரட்டியது பஞ்சம்.
அதில் ஆறுதலாக இருந்தவை முருங்கை மரங்கள். முருங்கை இலைகளை பறித்து வேக வைத்து அதை மட்டுமே உண்டு பல நாள்கள், வாரங்கள்.. மாதங்கள் என்று ஓட்டியவர்களால் மட்டுமே தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந் தது. உணவுக்கு எதுவும் கிடைக்காதவர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந் தார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாண்டவமாடிய தாது பஞ்சத்தில் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் மதுரை நகரைப் பொறுத்தமட்டில் ‘குஞ்சரம்’ என்ற பெயரில் ஒரு மணிமேகலை தோன்றினார்.
குஞ்சரம் அழகே உருவான மங்கை. உடல் முழுக்க தங்கம், பவளம், வைரம், முத்து நகைகள் அலங்கரித்தன. குஞ்சரம் கோயிலுக்குச் செல்லும்போது அவள் நடை, உடை, நகை, கூந்தல் அழகினைக் காண ரசிக்க ஆயிரம் கண்கள் காத்திருக் கும். மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இரண்டு மாளிகைகள் குஞ்சரத் திற்குச் சொந்தம். அவர், தேவரடியார் ஆனதால் ஆடலும் பாடலும் எப்போதும் அந்த மாளிகைகளில் ஆட்சி செய்யும். எல்லா நாட்களும் விருந்து தடபுடல்தான். மாளிகைக்குப் பெரும் செல்வந்தர்களின் வருகை குஞ்சரத்தின் முக்கியத்துவத் தையும் பிரபலத்தையும், குவியும் செல்வத்தையும் சுட்டிக் காட்டின.
குஞ்சரம் கோயில் வேலைகளைச் செய்து வந்ததனால் பஞ்சம் பற்றி இம்மி அளவு கூட கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
‘சாதாரண மக்கள் பஞ்சத்தினால் ஒன்றும் கிடைக்காமல் ஒட்டி உலர்ந்து ‘நீ சாவதை நான் பார்க்கணுமா.. இல்லை நான் சாவதை நீ பார்க்கிறாயா’ என்று கணவன், மனைவி, பெற்றோர் – பிள்ளைகள் பேச, கேட்கக் கூட சக்தியில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்த நிலையிலேயே மடிந்து போகிறார்கள்’ என்ற செய்தி குஞ்சரத்தின் செவிகளில் வெந்நீர் போல் இறங்கின. ஆடிப்போனார் குஞ்சரம். குஞ்சரமும் பெண்தானே.
குஞ்சரத்தினுள் இருந்த தாயுள்ளம் விழித்துக்கொண்டது. பஞ்சத்தில் அடிபட்டு மக்கள் செத்து மடிவதிலிருந்து காக்க, பசியால் தவிப்பவர்களுக்கு ஒருவேளை கஞ்சியாவது வழங்கத் தீர்மானித்தாள்.
பெரிய வட்டையில் கஞ்சி காய்ச்சி வழங்க ஆரம்பித்தாள். சில நாட்கள் நகர்ந்தன. ‘குஞ்சரம் வடக்கு ஆவணி மூல வீதியில் பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு கஞ்சி வழங்குகிறார்’ என்ற செய்தி மதுரை சுற்றுவட்டாரத்தில் காட்டுத் தீயாகப் பரவி யது. நடக்க வலுவில்லாதவர்கள் கூட உயிரைப் பிடித்துக்கொண்டு நகர்ந்து தவழ்ந்துவர ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அலைமோத… ஒரு வட்டை கஞ்சி வழங்கி வந்த குஞ்சரம், இரண்டு வட்டை கஞ்சி காய்ச்சி வழங்கினார். சில நாட்களில் அது மூன்று வட்டையானது.
இந்தக் கஞ்சி வழங்கல் செய்தியைக் கேட்ட மதுரை ஆட்சியரான ஜார்ஜ் பிராக்டர் ஆச்சரியப்பட்டுப் போனார். ‘ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை குஞ்சரம் செய்கிறாளே’ என்று வியந்தார். ‘நாமும் ஏதாவது செய்ய வேண்டும்… இல்லையென்றால் நம்மை இழிவாகப் பேசுவார்கள்.. நாளைய சரித்திரத்திலும் பஞ்ச காலத்திலும் ஒன்றும் செய்யவில்லை என்று இகழ்ச்சியாகப் பதிவு செய்வார்கள்’ என்று நினைத்து மூன்று கஞ்சித் தொட்டிகளை திறந்தார்.
ஆட்சியரின் கஞ்சித் தொட்டிகளில் கஞ்சி குடித்தவர்களை மதுரையிலிருந்து பல ஊர்களுக்கும் செல்ல ரயில்பாதை அமைக்கும் வேலைகளில் ஈடுபடுத்தினார். அரசாங்கக் கஞ்சித் தொட்டிகள் வந்ததினால் குஞ்சரம் வழங்கும் கஞ்சியை வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மொத்தமாக நின்றுவிட வில்லை. நாட்கள் நகர.. நகர .. கஞ்சி காய்ச்ச பணம் இல்லாதபோது உச்சி முதல் பாதம் வரை அணிந்திருந்த நகைகளை விற்று கஞ்சி ஊற்றினாள்.
இடை யிடையே சமையல்காரர்கள் வராமல் இருந்துவிடுவார்களாம். குஞ்சரம் சிரமம் பார்க்காமல் அவரே கஞ்சி காய்ச்சுவாரம். பஞ்சம் தொடர்ந்ததால் கஞ்சி வழங்குவதைத் தொடர, ஓட்டு வீட்டிற்கு மாறி, தனது இரண்டு மாளிகைகளையும் விற்றார். அந்தப் பணத்தில் இடைவெளி விடாமல் பதின்மூன்று மாதங்கள் கஞ்சி வழங்கி வந்தார். இப்படி ஒரு ஆண்டு முழுவதும் கஞ்சி சலிக்காமல் ஊற்றி வந்த குஞ்சரம் நோய் வந்து இறந்தார்.
குஞ்சரத்தின் இறுதிச்சடங்கில் அவர் வழங்கிய கஞ்சி குடித்ததினால் உயிர் பிழைத்த அனைவரும் கூடி அஞ்சலி செலுத்தினார்களாம்.
அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்த வெள்ளைக்கார ஆட்சியர் ஜார்ஜ் பிராக்டர் “கோயில் திருவிழாவுக்குத்தான் மதுரையில் இப்படி மக்கள் கூடுவார்கள்… ஒருவர் இறந்ததற்காக மக்கள் இப்படி கூடியதை முதல் முறையாகப் பார்க்கிறேன்’ என்று பதிவு செய்தாராம்.