இப்போது | திருமாளம் எஸ். பழனிவேல்

 இப்போது | திருமாளம் எஸ். பழனிவேல்

அவர் மிகப்பெரிய ஜாம்பவான் என்று அறியப்பட்ட ஒருவர் இப்போது எப்படி இருக்கிறார்…? இந்த கேள்வி அனைவருக்குள்ளும் எழும். அதற்கான விடை நெட்டில் தேடினால் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

சில வேளைகளில் அப்படிபட்ட ஒருவரை நாமே நேரில் பார்த்து அதிர்ந்து போன சம்பவங்களும் இருக்கலாம். ஏதோ ஒரு கோயிலில் பிச்சைக்காரராக அமர்ந்திருந்து காலத்தை கழித்துக்கொண்டு இருக்கலாம். தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல…நீர் நிலைகள், காடுகள், பொதுத்துறை, ரயில்வே இப்படி பலவற்றிலும் அப்போது இப்போது என்று பிரித்துப் பார்க்கலாம் இப்போது.

தியாகராஜ பாகவதர் அந்தக்காலத்தில் கொடிகட்டி பறந்த தமிழ்த் திரை உலகின் முன்னணி கதாநாயகன். மிகவும் அழகாக இருப்பார் என்று தாத்தா பாட்டிகள் சொல்லி இருக்கிறார்கள். பாகவதர் கிராப் அப்போது மிகவும் பிரபலம்.

இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் 1944 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி 1946 தீபாவளி வரை தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. இன்று வரையில் அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ இன்றளவும் பிரபலமான பாடல். பாடியவரைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். புகழின் உச்சியில் இருந்த அவர் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து பின்பு விடுதலையானார். அதன் பிறகு அவரது வாழ்க்கை மிக மோசமாக தடம் மாறியது. வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலில் கண் பார்வை திரும்ப கிடைக்க அங்கேயே தினமும் படுத்துறங்கியதாக பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

ஒருவரின் வாழ்க்கையை அப்போது இப்போது என்று பிரித்துப் பார்க்கும் போது பாகவதர் வாழ்க்கை பலருக்கு பாடமாக இருக்கிறது. அவர் சேர்த்து வைத்த பணம் கோர்ட் கேஸ் என்று அலைந்ததில் காலியாயகிப் போனது. 1959 ஆம் ஆண்டு இறந்தார். அவரின் நினைவைப் போற்றும் வகையில் புரட்சித்தலைவர் தனது ஆட்சிக் காலத்தில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ‘கலையரங்கம்’ திரையரங்கிற்கு ‘தியாகராஜ பாகவர் மன்றம்’ என்று புதுப் பெயரை சூட்டி மரியாதை செய்தார். நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டு இருந்த அந்த அரங்கம் இப்போது திருமண அரங்காக மாறி இருக்கிறது.

இரயில்வேயில் புகழ் பெற்றது என்று சொன்னால் சோழன், பாண்டியன், நீலகிரி எக்ஸ்பிரஸ். இவையெல்லாம் இப்போது அதிவிரைவு ரயிலாக மாறி ஓடிக்கொண்டு இருக்கின்றன. மீட்டர் கேஜில் புகழ் பெற்ற பாசஞ்சர் ‘செங்கோட்டை பாசஞ்சர்’. எல்லாவற்றிற்கும் வழி விட்டு மெதுவாக பயணித்து அதிகாலை முதல் வண்டியாக எக்மோர் வந்தடையும்.

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மயிலாடுதுறைக்கு பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மத்தியில் இந்த ரயில் அப்போது மிகவும் பிரபலம். இப்பகுதியிலிருந்து சென்னைக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க ஏழை எளியவர்களுக்கு உதவியாக இருந்தது. அகலப்பாதை போடுவதற்காக நிறுத்தப்பட்ட அந்த பாசஞ்சர் திரும்ப இயக்கப்படவேயில்லை. பலர் கோரிக்கை வைத்தும் டெல்டா மக்களின் அபிமானம் பெற்ற அந்த ரயில் எப்போது வருமென்று இப்போது அனைவரும் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிலரது வரலாறுகளே அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி புகழோடு இருக்கிறது. கல்கியை போல சாதனை படைத்த ஒரு வரலாற்று நாவலாசிரியரை இன்றுவரையில் நம்மால் பார்க்கமுடியவில்லை. இன்றைய இளைஞர்களும் ஆவலோடு படிக்கத் துடிக்கும் ஒன்று அவரின் ‘பொன்னியின் செல்வன்’ தான்.

அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார், வானதி, சுந்தர சோழன், பெரிய பழுவேட்டரயர், சின்ன பழுவேட்டரயர், நந்தினி, பூங்குழலி சேந்தன் அமுதன் இந்த கதாபாத்திரங்கள் இன்றளவும் படித்த ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் உலாவிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இப்போது திரையில் மணிரத்னம் எப்படி கொண்டு வந்து காட்டப்போகிறார்.

இதுவும் மில்லியன் டாலர் கேள்விதான். சிவகாமியின் சபதம் பற்றி சொல்லாவிட்டால் நரசிம்ம பல்லவன் நம் மேல் போர் தொடுப்பான். படைக்கு பரஞ்சோதி தலைமை தாங்கி வருவான். இப்படி ஒவ்வொரு வரலாற்று நிகழ்வையும் பல நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்க வைப்பவர் அப்போது இப்போது எல்லைக்குள் வராமல் எப்போதும் ஒரே மாதிரியான புகழோடு நம்மிடையே வாழ்ந்து கொண்டே இருப்பார்.

வீராணம் ஏரி என்று இப்போது அழைக்கப்படும் ஏரியின் இயற்பெயர் வீரநாராயணன் ஏரி. பொன்னியின் செல்வன் கதை இந்த எரிக்கரையோரமாகவே ஆரம்பமாகும் ஆடிப்பெருக்கு அன்று . காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறதே என்று வருந்திய சோழ மன்னன் ராஜாத்திய சோழனால் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டு இப்போது வரையில் புகழோடு இருக்கிறது. கடலூர் மாவட்டம் மட்டுமல்ல, சென்னை நகர மக்களுக்கும் தொடர்ந்து இந்த ஏரி உதவிக்கரம் நீட்டி வருகிறது.

அப்போது சென்னையை சுற்றி பல ஏரிகள் இருந்தன. அவைகளில் பாதிக்கு மேல் குடியிருப்புகளாக மாறிவிட்டன. மிச்சமிருக்கும் எரிகளை பாதுக்கப்போம் என்று இப்போது உறுதிமொழி எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உணவளித்துக்கொண்டு இருந்த வயல்கள் ரியல் எஸ்டேட் என்று பெயர் மாறி 100 கி.மீ. தாண்டி இருந்தாலும் சென்னைக்கு மிக அருகாமையில் என்ற விளம்பரங்களோடு விதியை நொந்தபடி இருக்கின்றன. மிச்சம் மீதி இருக்கும் வயல்களில் செயற்கை உரங்கள் குடியேறி விட்டன. இ.ப்போது சாணி, சாம்பல், ஆட்டாம் புழுக்கை போன்ற உரங்கள் எங்கே அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரியவில்லை.

அப்போதும் இப்போதும் ஒன்று போல இருக்க நாம் இப்போது என்ன செய்ய வேண்டும். சுவாசக்கோளாறுகள் வருவதற்கு வைரஸ்கள்தான் காரணமா…? அப்போது வீடுகள் தோறும் ஒரு வேப்ப மரம் இருக்கும். அதை சுவாசிக்க சுவாசிக்க உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். அதன் இலைகள் பழங்கள் மருத்துவ குணமுடையது. ஒவ்வொரு மாரியம்மன் கோவிலிலும் கட்டாயம் மிகப் பெரிய வேப்ப மரம் இருக்கும். நம்மைக் காக்கும் ஆத்தாவுக்கு துணை அந்த மரமே. வீட்டுக்கு ஒரு வேப்ப மரம், அடுக்கு மாடிகுடியிருப்புகளுக்கு பத்து மரம் வளர்ப்போம். நாம் இப்போது அணிந்திருக்கும் முகமூடியை கழட்ட அதுவும் ஒரு காரணியாக அமையும்.

நம் பாதைகளை அடிக்கடி செப்பனிட வேண்டும். அதுதான் நிலைத்த புகழுக்கு நம்மை அழைத்து செல்லும். செயற்கையை விட்டு உண்மையாக இருந்தால் எல்லாமே தேடி வரும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா…’ தலைவர் பாடிய இந்த பாடலை நம் உள்ளத்தில் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும். அனைவரின் மனங்கள் நன்றாக இருந்தால் சுற்றுப்புறம் நன்றாக இருக்கும். வங்கியில் வாங்கிய கடன்கள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

வாரக்கடன்கள் இல்லாமல் போனால் பொதுத்துறைகள் எப்போதும் லாபகரமாக இயங்கி மக்களுக்கு சேவைகளை தொடர்ந்து செய்யும். புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் என்ற வார்த்தை இங்கு இல்லை…இல்லை.. என்று மாற்றிப் பாடவேண்டும். இப்போதும் எப்போதும் அது ‘உன்னால்…நம்மால் முடியும் தம்பி’

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...