மின் கைத்தடி – பொங்கல் மலர் 2022 | ஜெயந்தி சுந்தரம்

 மின் கைத்தடி – பொங்கல் மலர் 2022 | ஜெயந்தி சுந்தரம்

நீங்க எல்லாரும் இந்த திருமாமகளுக்கு என்னாச்சோன்னு யோசிக்கற மாதிரி இருக்கு. என்ன செய்யட்டும் ? நான் ஒரு புத்தகப்புழு. விமர்சனம் எழுதணும்னே ஒரு புரட்டு புரட்டிடுவேன். “மின் கைத்தடி” வித்தியாசமான பெயர். பொங்கல் மலர் வேற. கேட்கணுமா?விலை குடுத்து தான் வாங்கினேன். படிக்க ஆரம்பிச்சா முதல் ஷாக் வடிவமைப்பு. அவ்ளோ அருமை. பத்திரிக்கையின் முப்பது வருட அனுபவம் இருப்பது போல் தோன்றியது.

அது மாதிரி அவ்ளோ முயற்சி போட்டு தயாரிச்ச Mrs. லதா, கமலக்கண்ணன், பாலகணேஷ் இவங்களை பாராட்டலைன்னா எப்படி?

My God…. எவளோ விஷயங்கள். அட்டைப்படமே அசத்தல். எவ்வளவு எழுத்தாளர்கள். நம்மைச் சுற்றி மலைத்தேன்.

தலையங்கமே தூள். தினமும் ஒரு வைரலோடு போராடும் நமக்கு

இப்பொங்கல் மலர் ஒரு அரவணைப்பு தரும் என்று. உண்மை தான் அது.

கவிதைகள் கலக்கல்.

⭐ “பூட்டுக்களின் குரல்”, திரு ஆரூர் தமிழ் நாடன். வித்தியாசமான சிந்தனை. நச் வரிகள். “ஒரு சுயமரியாதைக் கருப்புச் சாவி வந்தது. ” “பூட்டுக்களான எங்களை பூட்டிய பூட்டுக்கள் எப்போது தெறிக்கும்” அருமை.

⭐ ஷக்திப்ரபா – குழலின் நாதம் – அழகு – “உன்னில் நான் கரைந்திடவே அழைக்குது பிறவா வராமளித்து பேரறிவாய் விரியுது”

⭐ அது போல் “முத்திரை” கவிதையும் அருமை.

⭐ நிலத்தில் சில கால்கள் : ஓவியா குமரவேல் அவர்கள் – “பசித்துயர் போக்க, ஆதி விதைக்க ஊன்றின அன்று, நிலத்தில் சில கால்கள் ” – என்ன உணர்வான வரிகள்?

⭐ அவரே “இலவசம் – விவசாயியின் வியர்வை ” எழுதியிருக்கிறார் – ஈட்டிய முதல் எடுத்து, கடன் தூர்க்க பாதி, தங்கம் மீட்க பாதி, எஞ்சியது என்னவோ விதைநெல்லு தானே ” – அருமை.

⭐திரு இளவல் ஹரிஹரன் – “பொங்கல் பொங்குக” – “தைப்பொங்கலுக்கு நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுப் பொருட்கள் நம்பியே பொங்கல் வருகிறது “வெகு எதார்த்தம்.

⭐ திரு. கோவை. நா. கி. பிரசாத் – “பொங்கலோ பொங்கல்” – “விதை நெல்லை சோறாக்கி உண்ண முடியலை, இருந்தாலும் பொங்கலோ பொங்கல்னு சொல்லி வைப்போம்” – மனம் சுடும் வரிகள்.

⭐ திரு. கே. அசோகன் – மும்பை – அவரும் “பொங்கலோ பொங்கல்” என்ற தலைப்பில் – நேர்மறை கவிதை – “கதிராடும் நெற்கதிர் அரிசி களமிறங்கும் உழவர்க்கு அரிசி “- அருமை.

⭐ திரு. மானா பாஸ்கரன் – “காலம் என் பென்சிலை சீவிக் கொடுக்கிறது ” – ரொம்ப வித்தியாசமான சிந்தனை – “என்னிடம் நிலா இருக்கிறது, வாங்கிக்கொண்டு தங்கம் கொடுங்கள் ராஜமூலிகை கொடுத்து விஷம் என்று தொடர்ந்து, முத்தாய்ப்பாய் அவர்கள் இருளும் விஷமும் மீனும் கொடுப்பது தெரிகிறது, உனக்கு முன்னால் அவர்கள் தங்கம் வாங்கப் போனார்கள்…” – lateral thinking.

⭐ பழனீஸ்வரி தினகரன் அவர்கள் – பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா என்ற சொந்தங்களைச்சொல்லி கடவுள் குழந்தையிடம் கேட்கிறார், உலகை இயக்குவது நீயா நானா என்பதற்கு மொட்டவிழ்ந்து சிரித்தது குழந்தை என்று முடித்திருப்பார். குழந்தைக்கு அதன் உலகம். அருமை.

⭐ திரு எல். இரவி – முரண்பாடுகள் –

⭐ அருமையான ஹைக்கூ கவிதைகள் – உ.ம். ரொம்ப பிடித்தது

“குளத்து மீனுக்கு
இரை கரையில்
பழைய சோறுடன் கருவாடு ” – அருமை.

அடுத்து சிறுகதைகள் – ஒற்றைவரி கொஞ்சம் கூடவும் இருக்கலாம் விமர்சனம்.

⭐ புதுவை திரு ரா. ரஜினி – அநியாய அப்புசாமி – வழக்கமாய் அப்புசாமி அவர் பவிசை காட்ட முடியாமல் மனதுக்குள்ளே அடுத்த சொற்பொழிவுக்கு ரெடி ஆகிவிட்டார். அப்படியே பாக்கியம் ராமசாமி படித்த திருப்தி. அருமை.

⭐ திரு ஜெயராமன் ரகுநாதன் – மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி – மலரை மயக்கி ஏ(மாற்றும்)சாதாரண ஆண். மலர் ஏமாறுவது எதிர்பாராத முடிவு – வாத்தியார் (திரு சுஜாதா) டச் நிறைய. சூப்பர்.

⭐ திரு நந்து சுந்து – பானை பிடிக்காதவள் – சந்து பொந்தெல்லாம் நந்து சுந்து சார் புகழ். கடைசியில் பானை வித்து பொங்கல் என்கிற வரிகள் அவர் டச். செம சிரிப்பு.

⭐ திரு. சின்னக்கண்ணன் – தோடுடைய செவியள் – அழகான காவியம் – இன்றைய ஸ்டைலில் – ஒரு பஞ்ச் கடைசியில் – எம். ஏ. பி. எஃ ப் னா, மெட்ரிகுலேஷன் அட்டெம்ப்ட் பட் ஃ பெய்ல்ட் – அசாதாரணமான flow.

⭐ திரு கல்கி – இதென்ன சொர்க்கம் – கடவுளுக்கு தினம் ஆயிரம் நமஸ்காரம் பண்ணனும் – என்னமா இருக்கு இந்த கதை – சொர்க்கதுக்கு போன ரெண்டு பேர் பேசறதை இதைவிட சத்தியமா யாராலும் கற்பனை பண்ண முடியாது – ரம்பை, ஊர்வசி, சங்கீதம் னு எல்லாம் ஒரு அலசல். அவர் வீட்டுச்சண்டையும் விட்டு வெக்கல. கடைசியில் அவரே அவரோட பையனுக்கு குழந்தையா பிறக்கறதுல முடிச்ச, சண்டை போட்ட மாட்டுப்பெண் கைல அவளோட குழந்தையா மாட்டி, அடடா என்ன ஒரு சுவாரசியம். நினைவு வந்துவிட்டது குழந்தைக்கு. ஆனால் நல்லவேளையாய் பூர்வ ஜென்ம நியாபகம் வரவில்லை என்று முடித்திருக்கிறார்.

மறுபடியும் பிறந்து அவர் நமக்காக எழுத வேண்டும். அசந்து விட்டேன். ஆஹா…

⭐ தேனீ – ஆர்னிகா நாசர் அவர்கள் — தேனீக்களை பற்றி இப்படி ஒரு தெளிவு எங்கும் படித்ததிலை. என்ன ஒழுக்கம், கட்டுப்பாடு அவைகளுக்குள். தேன் இல்லையெனில் பூமி இல்லை. மனிதன் நான்கு வருடங்களுக்கு மேல் வாழ முடியாது. இது தான் கரு. அதை வைத்து அமர்க்களமாய் நகரத்துகிறார். Brilliant. Hats off… superb.

⭐ உறவுகள் தொடர்கதை – விஜி முருகநாதன் அவர்கள் –

குடும்பங்களின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும். உறவுகளின் உன்னதம் என்ன? இவை பற்றி அழகான காவியம் படைத்துள்ளார். இறுகிக் கிடந்த மனசுகளின் கொண்டாட்டம் புரிதலுக்குப் பின். நல்ல தெளிவான நடை.

⭐ பொன்னம்மா – லதா சரவணன் அவர்கள் – பெண்களின் பாதுகாப்பு எங்கே? காமக் கழுகுகளின் பார்வையிலிருந்து தப்ப இன்றைய “வைரஸ் ” ஆயுதம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வனிகையருக்கு வைரசும் ஆயுதம். அழகிய கதை.

⭐ உழைப்பு : திரு கே. ஆனந்தன்

75 வயதின் உழைப்பை பறை சாற்றும் ஒரு அருமையான காவியம். கொஞ்சம் கூட அயராத உழைப்பு. “சும்மா உட்கார்ந்து சாப்பிட உடம்பு கூசும்.. கூனி குறுகிடுவேன்..” – இக்கால இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை இக்கதை. – அமர்க்களம்

⭐ மோட்டிவேஷன் – திரு சாய் செந்தில்

ஊரே வாய் பிளந்து கேட்கும் அவர் உபதேசத்தை. தன்னம்பிக்கை தரும் மோட்டிவேஷன் மோகனரங்கம் கதையின் நாயகன். ஆனால் சொந்தப் பெண்ணால் அலட்சியம் செய்யப்படும் ஒரு பக்கக் கதை. சூப்பர்.

நடிப்பு — மீண்டும் அவரே – பிரச்சினையோடு வீட்டுக்குள் வரும் பெண்ணை அம்மா அப்பா அவர்களுக்குள் வரும் நடிப்புச் சண்டையால் திருத்த அவள் வீடு திரும்பும் பெண். கடைசியில் உண்மையாகவே சண்டை வருகிறது.

⭐ திரு பிரபு பாலா : பார்த்த முதல் நாளே –

பெயர் குழப்பத்தில் காதல். பின்பு உண்மை தெரியவர காதலன் அவளை உண்மையாய் காதலிக்கிறான். பார்த்த முதல் நாள் காதல் உண்மையாகிறது. சுவாரசியம் குறையாமல் கதை நகருகிறது.

⭐ திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் : “ஒரு ஹீரோ உருவாகிறான்” — தனக்கு ஒன்றன் பின் ஒன்றாய் நேர்ந்த அவமானங்களை எப்படி முறியடித்தான் கிச்சா (சந்தர்ப்பம் கிடைத்தது. விடாமல் பற்றிக்கொண்டான்). ஒரே நாளில் ஹீரோவாகாவும், கை நிறைய பணத்துடனும். எப்போதும் போல் டெம்போ குறையாமல் எழுதும் எழுத்தாளர். Superb

⭐ திரு மலர்மதி : உபதேசம் — “நச்”ன்னு ஒரு ஒரு பக்கக் கதை : ஊருக்கு தான் உபதேசம். செய்யறவங்களுக்கு இல்லை. நைஸ்.

⭐ முழு நாவல் – தளசிங்கம் (சரித்திரம் ): பௌசியா இக்பால் அவர்கள்.

25 அத்தியாயம். எப்படி முடித்தேன் இவ்வளவு வேகமாக. என்ன ஒரு நடை. எவ்வளவு விளக்கங்கள்.

வாலி அவர்களின் பாடலில் ஆரம்பித்து பயணிக்கிறது கதை. ராஜபபாளயத்தில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் வேளாண் கல்லூரி மாணவர்கள் மண் பரிசோதனை செய்ய ஒரு மரகத வாள் கிடைக்கிறது. சாயில் சயின்ஸ் துறையின் தலைவர் செல்வம் இதை தலைமையேற்று நடத்துகிறார். அந்த வாளின் பின்னணி தான் கதை. ராஜ் என்ற மாணவனுக்கு அந்த வாள் கிடைக்க அவன் மறைக்க கதைப் பின்னல். சந்தோஷும் ஒரு அருமையான பாத்திரம்.

சரித்திரப் பின்னணி நிறைய. முடிவு சுபம். கொடூரம் புரிந்த மைசூர் மண்ணின் ஹம்பையாவிற்கு சரியான பாடம். மூக்கறுபடுகிறான்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வாள் அது. முடிவில் மாணவர்கள் கண்டுபிடித்த அம்மன் சிலைகள், பூஜைபொருட்கள் எல்லாம் ஊர் பொதுமக்களிடம் ஒப்படைக்ப்படுகிறது.

அருமையான கதைக்களம். தற்காலத்தில் ஆரம்பித்து, சரித்திரப் பயணம் செய்து, தற்காலாமே வந்து சுபம். நிறைய சரித்திரப் பின்னணி. திருமலை நாயக்கர் காலத்திய கதை. ஆசிரியருக்கு பாராட்டுகள்.

கட்டுரைகள் :

⭐ தமிழக எழுத்தாளர் குழுமத்தின் 7வது சந்திப்பு. – புதுவண்டி ரவீந்திரன்

தமிழ் இதழ்களில் எழுதும் எழுத்தாளர்கள் குழுமம். எவ்வளவு எழுத்தாளர்கள். அடடா. வைகை திரு ஆறுமுகம் மற்றும் திருமயம் பாண்டியன் இணைந்து 15 பேரோடு ஆரம்பித்து இப்போது 180க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. ஏழு சந்திப்புகள் முடித்துள்ளதாம். எழுத்தாளர்களின் படைப்புத் திறன்களை மேம்படுத்துவதே இக்குழுமத்தின் நோக்கம். வாழ்க தமிழ். வளர்க இவர்கள் தொண்டு.

⭐ செய்திகள் (சு)வாசிப்பது – திருமாளம் எஸ். பழனிவேல்

அத்துணை செய்தி வாசிப்பாளர்களை பற்றிய தொகுப்பு. திரு பத்மனாபன் தொடங்கி, திரு. செல்வராஜ், திருமதி ஜெயா பாலாஜி, சரோஜ் நாராயணசாமி, திருமதி. ஷோபனா ரவி, திருமதி. பாத்திமா பாபு, திரு. பி. ராமகிருஷ்ணன் மற்றும் திருவாளர்கள் நிஜந்தன், ஸ்ரீதர், இனியன் சம்பத், சந்தியா ராஜகோபால், வராதராஜன், பாலிமர் ரஞ்சித், விகாணிக்கா, வேல்ராஜ் இவர்களின் செய்தி வாசிப்பு பற்றி ஒரு அலசல். அருமை.

பேட்டிகள் :

⭐ நரிக்குறவப் பாட்டதாரிப் பெண் ஸ்வேதா – அமிர்தம் சூர்யாவின் கட்டுரை மனதை காலங்கடித்தது. எவ்வளவு போ ரா ட்டங்களுக்குடையில் அவர் எதிர் நீச்சல் போட்டு பொறியியல் பட்டதாரி ஆனார். நரிக்குறவர் சமுதாயம் பயன்பெற தனக்கு வந்த பெரிய வேலைகளையெல்லாம் உதறினார். மனது கனத்தது.

⭐ முத்துப்பேட்டையில் விளைந்த முத்து – திரு. கமலக்கண்ணனின் கட்டுரை அருமை. அகல்யாவின் ஓவியம் ஆச்சர்யம். பார்த்தவுடன் அப்படியே வரையும் திறன். ஆர்ட்ஸ் கேலரி வைப்பது இவர் ஆசையாம்.

⭐ அனுபவம் புதுமை – லதா சரவணன் அவர்கள். சித்ராலயா திரு கோபு அவர்களுடன் ஒரு பேட்டி.

நகச்சுவை அரசர், 91 வயதிலும் இளமை. 60 படங்கள் கதை வசனம், 27 படங்களை இயக்கவர் பற்றிய பேட்டி. ஸ்ரீதர் சாருடன் பயணம், காதலிக்க நேரமில்லையில் ஸ்ரீதர் கோபு என்று திரையில் வருமளவு ஸ்ரீதர் அவர்களால் விரும்பப்பட்டவர். அன்றைய கதநாயகர்கள் திருவாளர்கள் சிவாஜி, ஜெய்ஷங்கர், முத்துராமன் இவரின் ஆதர்ச காதநாயகர்கள் என்றும் சொல்லியுள்ளார். நிறைய சுவையான தகவல்கள்.

அருமையான பேட்டி.

⭐ அடுத்து திரு நத்தம் சுரேஷ் பாபு அவர்களின் சிறுவர் கதை. பாம்பின் தந்திரம் – பாம்பு தவளையின் கதை. பாம்பின் வஞ்சகத்தில் ஏமாந்து இரையான தவளைகள். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிற படிப்பினை.

தன்னைப்பற்றி முதல் பக்கம் குறிப்பில் (index) எதுவும் சொல்லாமல் திரு கணேஷ் பாலாவும் திரு கமலக்கண்ணனும் எழுதியுள்ள கதைகள் விமர்சனம் கீழே:

⭐ சரிதாவும் தொலை காட்சித் தொடரும்

மெல்லிய நகைச்சுவை ஆனால் வல்லிய கதைப்பின்னல். கதாகாலட்ஷேபமாய் ஆரம்பிக்கிறார் கதை நாயகன். சீரியலில் சிக்கி குடும்பத்தை கவனிக்காத பெண்களை வாருகிறார்.சீரியல் பார்த்தது போதாமல் சீரியலில் நடிக்க கிளம்பி கடைசியில் “இவருக்கு பதில் இவர்” என்று சரிதாவின் ஆசையில் மண்ணைப் போட நீதி சொல்கிறார் : மிடில் கிளாஸ் குடும்பம் சீரியல் பாக்கலாம் ஆனால் அழப்புடாது என்று உத்தரவு வாங்கிக்கொள்கிறார்.

⭐ அன்பு சாம்ராஜ்யம் : திரு கமலக்கண்ணன்

ஒரு அன்பு சாம்ராஜ்யதை பார்த்து வியந்த கதையின் நாயகன் கதிர் அது பிரிந்த போது உடைந்து அழுகிறான்.

⭐ நகைச்சுவை:
வெ. ராம்குமார், சாய் செந்தில் அண்ட் செந்தில் வேலன் அவர்களின் நகைச்சுவையும், கயத்தை சத்யாவின் ஒரு வரிக் கதையும் — அனைத்தும் அருமை.

ஏதாவது விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

முடிவாய் சில சிறுகதைகளில் கொஞ்சம் திணறல் தென்பட்டது. அது கூட இல்லாவிட்டால்…..

பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறது “மின் கைத்தடி டீம் “. சூப்பர்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...