கற்பனை | திருமாளம் எஸ். பழனிவேல்

அட… கற்பனையா… இதென்ன புதுமாதிரியா இருக்கே… இப்படி யாராவது ஒரு விமர்சனம் செய்தால்… சொன்னவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க… விவரிக்க இயலாது. இந்த கற்பனை கட்டுக்குள் அடங்காது. அலங்காநல்லூர் காளையைப் போல துள்ளிக் குதிக்கும். ஆனால் அடக்க வாருங்கள் என்று போட்டி எதுவும் நடக்காது. தடை செய்யணும்னு பீட்டா போன்ற அமைப்புகளும் முன்வராது.
‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்…” வாலியின் வைர வரிகள் டி.எம்.எஸ். ஸின் கணீர் குரலில் ஒலிக்கும் போது நமது கற்பனைக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனைத்தேடி ஓடும். ஞானப்பழத்தைப் பற்றிய தேடலை தொடங்கும். தந்தைக்கு பாடம் சொன்ன தகப்பன்சாமியை எண்ணி பக்தியில் சிலிர்க்கும். ஒருவரின் கற்பனை நம்மை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது… எண்ணிப்பாருங்கள்.
ஆதாம் ஏவாள் தொடங்கிய வாழ்கையில் என்ன கற்பனை இருந்திருக்கும். சுற்றித் திரிந்தார்கள்… ஆடையோடா… இல்லையா… ஆதாரம் தர இயலாது. உயிரற்ற ஒரு ஆப்பிள் இன்றைய பாணியில் சொன்னால் ஒரு புது ஆப் அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. கற்பனை எப்போது தோன்றியது…? தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடம் சொல்லி கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள சொல்லலாம். நாகரீகம் எப்போது வளர ஆரம்பித்தது.. சிக்கிமுக்கி கல்லில் நெருப்பைக் கண்ட போது. அதை உரசிப்பார்க்கலாம் என்ற சிந்தனையே கற்பனை கோலம் போட வைத்த முதல் புள்ளியாக இருக்கலாம்.
நிலாவில் ஒரு பாட்டி இருக்கிறாள் என்று நம் பாட்டன் முப்பாட்டன் கற்பனையாய் நம்பியது ஒரு வேளை அமெரிக்க விஞ்ஞானிகளின் மனசுக்குள் சென்று நேரில் செல்ல முடிவெடுத்திருக்கலாம். நமது இலக்கியங்களில் வானூர்தி பற்றிய தகவல் இருந்ததை நாம் படித்திருக்கிறோம். கற்பனை கலந்து எழுதப்பட்ட அவைகள் நம்மை பாதித்து இருக்கின்றன.
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் . வாழவேண்டும் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்றான் அர்த்தமுள்ள இந்துமதம் தந்தவன். வாழ்வியல் தத்துவங்களை தனது கற்பனையில் கலந்து தந்தான்.
தருமி கதாப்பாத்திரத்தில் நாகேஷ் நடித்தது இன்று வரையில் பேசப்படுகிறது. புராணப் படத்தில் தனது கற்பனையை கலந்து திரு. ஏ.பி.நாகராஜன் அவர்கள் எழுதிய நகைச்சுவை வசனங்கள் அதற்கு உயிர்க்கொடுத்த திரு.நாகேஷ், ஹேமநாத பாகவதராக நடித்த திரு.டி.எஸ். பாலையா அவர்களை மறக்க முடியுமா. பக்தியிலும் நகைச்சுவை கலந்தது நன்றாக எடுபட்டது.
சமூகக்கதையோடு முக்கோண காதல் கதைகள் பல இயக்கி வெற்றி கண்ட புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு பக்க பலமே சித்ராலயா கோபுதான். இந்த கூட்டணியின் கற்பனையில் உருவான மன்னார் அண்ட் கம்பெனி மேனேஜர் சம்பத், எழுத்தாளர் பைரவன், ஓஹோ புரொடக்சன் செல்லப்பா, எஸ்டேட் விஸ்வநாதன். இவர்கள் அனைவரும் இன்றும் நம் உள்ளங்களில் உயிரோடு உலாவருகிறார்கள்.
1970 களில் அக்கால அரசியல் கலந்து திரு.சோ அவர்கள் மாறுபட்ட கற்பனையோடு இயக்கிய ‘முகமது பின் துக்ளக் இன்றைய நிகழ்வுகளோடு பொருந்தி இருப்பதுதான் நம்மை பிரமிக்க வைக்கிறது.
“என் அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகனுக்கு மாமனார் என்றால் எனக்கும் அவருக்கும் என்ன உறவு…?’ இப்படி ஒரு புதிர் போட்டு விக்கிரமாதித்தன் கதைகளில் இருந்து ஒன்றை எடுத்து தனது அபாரமான கற்பனையால் ‘அபூர்வ ராகங்கள்’ தந்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர்.
நல்ல கற்பனையால் நம் உள்ளங்கள் வளமானது. சுற்றுப் புறம் மாசுபடாமல் இருந்தது.
மின்கைத்தடி பொறுப்பசிரியர், கமலகண்ணன், இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் அது,
திரைப்படப் படைப்பாளியின் முக்கிய தகுதி என்று எதைக் கருதுகிறீர்கள்?
என்று குமுதம் வார இதழின் வழியாக…
அதற்கு இசைஞானி அளித்த பதிலை பாருங்கள்…
முக்கிய தகுதி கற்பனை வளம். அதற்கு நல்ல சிந்தனைத் திறன் இருக்க வேண்டும். அந்த சிந்தனையும் வெகு இயல்பாக இருக்க வேண்டும். அது ஒரு குருவி பறந்து செல்வதைப் போல, ஒரு அருவி கொட்டுவதைப் போல இருக்க வேண்டும். ஒரு பறவை பறக்க நினைக்கும் போது, இப்பொழுது நாம் இறக்கையை ஒ விரிக்கலாம், இப்பொழுது இறக்கையை அடிக்கலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு செல்வதில்லை. ஒரு பூ மலர்வதும் அதைப் போலத்தான். அப்படி ஒரு பாடலை நாம் உருவாக்கும் போது இதை இங்கே தொடங்கலாம், இங்கே நிறுத்தலாம் என்று திட்டம் வகுத்துக் கொண்டு செய்யக் கூடாது.
ஒரு இசை மேசை சொல்லியிருக்கிறார். கற்பனை எவ்வளவு முக்கியம் என்று படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல மனிதராய் பிறந்த அனைவருக்கும் கற்பனை மிக மிக முக்கியம்.
ஆங்கிலத்தில் ஒரு சொட்றொடர் உண்டு
No Need Hard Work
Now Need Only Smart Work
என்பதற்கு அர்த்தம்
கடின உழைப்பு தேவையில்லை
இப்போது தேவை புத்திசாலித்தனமான வேலை மட்டுமே
என்பதாகும்…
புத்திசாலித்தனமான வேலை என்பதற்கு அதீத கற்பனை என்பது மட்டுமே
இன்று நம் கைக்குள் அடங்கி விட்டது எல்லாமே. இது இப்படி இருக்குமென்று நாம் கற்பனை செய்ய வேண்டாம் பட்டனை தட்டினால் வந்து விழும் வாஷிங்டனில் இருந்து கூட. கற்பனைக்கு குறுக்கே ஒரு பெருஞ்சுவர் வந்துவிட்டதா…யோசித்துப் பார்த்தால் ஒலிக்கும் தலைவர் பாட்டு ‘ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்.. அதுதாண்டா வளர்ச்சி..’ அறிவு வளரும் போது நேர்மையான கற்பனைகள் வளரும். அது உச்சத்தை தொடும் போது கற்பனையாய் கண்ணில் தெரியும் ‘வல்லரசு’ கனவு நிஜமாகும். ‘நாடு அதை நாடு அதை நாடா விட்டால் ஏது வீடு’ என்று வீரமாக பாடத் தோன்றும்.
கற்பனை தோட்டத்தை வீட்டுக்கு வீடு வளர்ப்போம்.
எங்கெங்கு காணினும் நல் சக்தியாட என்று பாடுவோம்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோம் என்று உண்மையாய் உணர்வோம்.