குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஏன்?
தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங் களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக் கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்தி களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மேற்கு வங்காளத்தின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு தமிழருவி மணியனின் காந்தி மக்கள் கட்சி அளித்த அறிவிக்கை இதோ
இந்தியா என்பது விந்திய மலையையும் தாண்டி இருக்கிறது
தில்லியில் நடைபெற இருக்கிற குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழ் நாடு அரசின் சார்பில் பங்கு பெற இருந்த, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் திருஉருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. மிகவும் பிரபல மான விடுதலைப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், தமிழக ஊர்தியில் இடம் பெற்றுள்ள விடுதலை வீரர்களை, வெளிநாட்டுத் தலைவர்கள் அறிய மாட்டார்கள் எனக் கூறியும் மத்திய அரசு அலுவலர்கள் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது தமிழக மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்துகிறது.
இந்த அலங்கார ஊர்தி அனுமதி மறுப்பு என்பது கர்நாடகம் தவிர அனைத்து தென் மாநிலங்களுக்கும், மேற்கு வங்கத்திற்கு நேர்ந்துள்ளது.
விந்திய மலையைத் தாண்டி குமரிமுனை வரை இந்தியா என்ற நமது நாடு பரவிக் கிடக்கிறது என்ற உண்மையும், அண்ணல் காந்தியடிகள் போன்ற மகத்தான தலைவர்களின் அறைகூவலை ஏற்று, வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த பெருமக்கள் தென் மாநிலங்கள் அனைத்திலும் இருந் திருக்கிறார்கள் என்ற புரிதலும் மத்திய அரசு அலுவலர்களுக்கு இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி தென்னிந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியச் செய்திட வேண்டும். வடமாநில பள்ளிப் பாடத் திட்டங்களில் தென்னிந்திய வரலாறு குறித்து தெளிவான பாடப் பகுதிகள் சேர்க்கப்பட வேண்டும். இந்த அலங்கார ஊர்தி அனுமதி மறுப்பை, துறை சார்ந்த மத்திய அமைச்சர் பெரு மக்கள் சீராய்வு செய்து, தமிழக மக்களின் மன வலி மறைந்திட, உரிய மருந்தினைத் தந்திட வேண்டும் என்றும், இது போன்று பாதிக்கப்பட்ட இதர மாநிலங்களுக்கும் நல்ல தீர்வினைத் தந்திட வேண்டும் என்றும் தமிழக மக்கள் சார்பாக காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காந்திய மக்கள் இயக்கம்.