உழவர் திருநாள் : பண்பும் பயனும்

 உழவர் திருநாள் :               பண்பும் பயனும்

உழவர் திருநாளாம் தைத்திருநாளானது உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ்  மக்களால் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் பயனுரைக்கும உயரிய திருநாளில் நன்றியை உழவருக்குப் பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு உழவர் திருநாள்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இது பன்னெடுங்காலமாக நம்நாட்டில் வழக்கில் உள்ள பொன்மொழியாகும். தைப்பொங்கல் உழவர்களின் திருநாளாக இருந்தாலும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களிப் போரை நிந்தனை செய்வோம்’ என்ற மகாகவி பாரதியாரின் கவிதை நம்நாட்டு மக்கள் அனைவரையும் விவசாயிகள் மீதும் உணவு உற்பத்தியில் முழுமையாக ஈடுபடுவோர் மீதும் பெரும் கெளரவத்தையும் மதிப்பையும் வைக்கச் செய்துள்ளது.

தைப்பொங்கல் விழாவில் தமிழ் மக்கள் மட்டுமன்றி, கிறிஸ்தவ தமிழர்களும் சில பிரதேசங்களில் உழவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் இஸ்லாமிய சகோதரர்கள் கூட தங்களுக்கு உணவுத் தானியத்தைப் பெற்றுக் கொடுக்கும் சூரிய பகவானுக்கும் பூமிமாதாவுக்கும் நன்றி தெரிவிக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு ஏற்புடைய வகையில் சிறந்த காலநிலையை தந்துதவிய சூரிய பகவானுக்கு நன்றிக் கடனைச் செலுத்தும் முகமாகவே இன்று உலகெங்கிலும் உள்ள விவசாயம் செய்யும் மற்றும் விவசாயம் செய்யாத தமிழர்கள் அனைவருமே தைப் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்கள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்குˮ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க மனிதர்களிடம் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நன்றி காட்டும் வகையில் மாடுகள் வயல்கள் பண்ணை உள்ளவர் கள் இந் நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். உழவர் தொழிலே அதிகம் பெருமையாகப் பேசப்படுகின்ற தொழிலாகும். ஆடி மாதத்தின் பயிர்களின் விளைச் சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

இந்நாளில் புதுப்பானை வைத்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் சக்கரை பால் இட்டுப் பொங்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைக்கும் திருநாளாகும்.

விவசாயமே வாழ்வியலுக்கு இன்றியமையாததாகும். அதைப் போற்ற வேண்டும் என்பதே இத்திருநாளில் தாத்பரியம் ஆகும்.

பயிர்கள் செழித்து வளரவும் உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் சூரிய ஒளி முக்கிய மானதாகும். இதனால் தான் இந்நாளில் சூரிய தேவனை வணங்கி பொங்கலிட்டு படையல் இடுவர். அத்தோடு விவசாயத்திற்கு உறுதுணையாய் இருக்கும் மாடுகளுக் கும் பால் தரும் மாடுகளுக்கும் பட்டிப் பொங்கல் இடுவது தமிழர்களின் சம்பிரதாயம் ஆகும்.

மாடுகள் அனைத்தும் கொம்புகள் சீவிக் கொம்புகளில் வண்ணம் பூசப்படும். கூரான கொம்புகளில் சலங்கை அல்லது குஞ்சம் கட்டப்படும். திருநீறு பூசி குங்குமம்⸴ மஞ்சள் இடப்படும். புதிதாக மூக்கணாங் கயிறு தாம்புக்கயிறு என்பனவும் அணி விக்கப்படும்.

ulavar katturai

அத்தோடு உழவர் கருவிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு திருநீறு, குங்குமம், சந்தனம் பூசப்படும். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி காளைகள், பசுக்கள் அனைத்திற்கும் பொங்கல் பழம் கரும்பு முதலானவை கொடுக்கப்படும்.

தமிழர்களின் வாழ்வியலில் அறிவியல் அர்த்தமும் தாத்பரியமும் கொண்டு விளங்கு கின்றது. நம் முன்னோர்கள் இயற்கையை நேசிப்பதும் அதனோடு ஒன்றிணைந்து வாழ்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதனாலே தான் உழவர் திருநாளில் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி கூறும் வகையில் கொண்டாடிக் சிறப்பிக்கின்றனர்.

இவற்றைப் போற்றிப் பேணும்போதுதான் உழவுத் தொழிலும் வயலும் செழிக்கும். உழைப்பின் செழிப்பைத் தானும் தன்னை சார்ந்தவர்களுக்கும் கொடுத்து இயற் கையை நேசித்து வாழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தமிழர் கலாச்சாரத்தில் பல வீர விளையாட்டுகள் தொன்றுதொட்டு இடம் பிடிக் கின்றன. அதன்படி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஐல்லிக்கட்டு, ஏறுதழுவல் போன்ற கலாச்சார விளையாட்டுகள் உழவர் திருநாளில் நடத்தப்படுகின்றன.

ஐல்லிக்கட்டில் காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு பிரசித்திப் பெற்றதாகும்.

மக்கள் வாழ்வில் ஒன்றிணைந்துள்ள உழவுத் தொழிலையும் அது சார்ந்த சூரியன் மாடு முதலானவற்றையும் சிறப்பிக்கும் உழவர் பண்டிகையான தைத்திருநாள் தமிழர்களின் பெருமையையும் நன்றி மறவாமைப் பண்பையும் உலகிற்கு காட்டு கின்றது. இதன் தாற்பரியத்தை உணர்ந்து உழவர் திருநாளை கொண்டாடி மகிழ் வோம்.

உலகப் புகழ்பெற்ற, பாரம்பரியமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று ஞாயிறு நடைபெறவிருந்தது. பொது முடக்கம் என்பதால் திங்கள் கிழமை 17-1-2022 காலை ஏழு மணிக்குப் போட்டி நடைபெறும். 1000 காளைகள் பங்கேற்கின்றன. காளைகள் வைக்கும் வாடிவாசல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 காவலர்கள் காவல் பணியில் ஈடுபட உள்ளனர். காளையை வெல்பவருக்கும் கார் பரிசு. காளை உரிமை யாளருக்கும் முதல்வர் கார் பரிசு வழங்கவிருக்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...