இரட்டை எழுத்தாளர்கள் சுபா- கதையும் திரைக்கதையும்

 இரட்டை எழுத்தாளர்கள் சுபா- கதையும் திரைக்கதையும்

சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்தபோது சூட்டிக்கொண்ட புனை பெயராகும். தற்போது இருவரும் தமிழ்த் திரைக்கதை, வசனங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இருவருமே சென்னைக்காரர்கள்.

சுரேஷ், பாலகிருஷ்ணன் ஆன இரு நண்பர்களும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதைகளைச் சேர்ந்து ‘சுபா’ என்ற பெயரில் எழுதியுள்ளனர், மேலும் 1979-லிருந்து அவற்றை வெளியிட்டு வருகின்றனர். இவர்களிருவரும் குறைந்தபட்சம் 450 குறு நாவல்களையும், 400 சிறுகதைகளையும், ஏராளமான திரைப்படங்கள் & தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதைகளையும் எழுதியுள்ளனர். கனா கண்டேன், அயன், அனேகன், கோ, மாற்றான், தனிஒருவன், கவண், வேலைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சுபாவின் நாவல்களைத் தழுவியும், திரைக்கதையிலும், வசனத்திலும் அமைந்துள் ளவை. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான சுமார் 150க்கும் மேலான திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள், வசனங்கள் ஆகியவற்றை எழுத்தாளர் கள் சுபா சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களுடன் சேர்ந்து எழுதியுள்ளனர்.

சுரேஷ், பாலகிருஷ்ணன் இருவரையும் 82-83களில் சென்னை இலக்கியச் சிந்தனை மாதக்கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். அப்போது இருவரும் வங்கிகளில் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களையும் இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் பார்த்து இருக்கிறேன்.
70களின் பிற்பகுதி, 80களில் வெகுஜன ரசனையில் கதைகளை எழுதி தமிழ் மக்களை வாசிக்க வைத்ததில் பெரும்பங்கு எழுத்தாளர்கள் சுஜாதா, பால குமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சிவசங்கரி, இந்துமதி, சுபா, மகரிஷி, ரமணிசந்திரன், தேவிபாலா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் உள்ளிட் டோருக்கு உண்டு.

இவர்களில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் சுபாவுக்கும் முன்னணி இடம் உண்டு. சுபாவின் கதைகளில் விறுவிறுப்புடன் வித்தியாசமாக, புத்திசாலித்தனமாகக் கதை சொல் கின்ற போக்கினையும் காணலாம். அவையே சுபாவின் கதைகளின்பால் நம்மை ஈர்க்கச் செய்கிறது; ரசிக்கவும் வைக்கிறது. பல குறிப்பிடத்தக்க சிறப்பான சிறுகதைகளையும் இரட்டையர்களான சுபா எழுதி யுள்ளனர்.

சுரேஷ் தனது நண்பர் பாலாவைப் பற்றி முகநூலில் ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

“பாலா சிறுவனாகத் தன் தோழர்களுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு நாள். ஓர் அம்பாசிடர் கார் கடந்து சென்றது.

“டேய், எம்.எஸ்.வி. போறான்டா..” என்று பாலா கத்தினான்.

சற்று தள்ளிப்போய் கார் நின்றது. அதிலிருந்து எம்.எஸ்.வி. இறங்கினார். நேரே பாலாவைப் பார்த்து வந்தார்.

நண்பர்கள் பதறி, சிதறி ஓட.. பாலா ஓடவும் தைரியமற்று அப்படியே உறைந்து நின்றான். எப்படியும் கன்னத்தில் பளார் என்று ஓர் அடி விழப் போகிறது என்று அவன் நடுங்கியபடி மன்னிப்புக் கேட்கக் காத்திருக்க…

எம்.எஸ்.வி. அவன் தோளில் அன்பாகத் தட்டி, “தம்பி, என்ன இருந்தாலும் நான் உன்னைவிட வயசுல பெரியவன் இல்லியா? அவன் இவன்னு சொல்றது தப்பு. யாரையும் அப்படி மரியாதைக் குறைவாப் பேசாத…” என்று சொல்லிவிட்டு, காருக்குத் திரும்பினார்.

“அவர் கன்னத்துல அறைஞ்சி சொல்லியிருந்தாக்கூட அன்னிக்கே மறந்து போயிருப்பேன். மனசுல அறைஞ்சா மாதிரி அன்பாச் சொல்லிட்டுப் போனார். அதுக்கப்புறம் யாரையும் அப்படிப் பேசறதில்ல…” என்று பாலா சொன்னதும் நானும் திருந்தினேன்.

அதற்குமுன், சிவாஜி, எம்.ஜி.ஆர், டி.எம்.எஸ்., பாலச்சந்தர் என்று அத்தனை பேரையும் அவன் இவன் என்றே குறிப்பிட்டு விமர்சிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தவன் அன்றிலிருந்து அதை மாற்றிக்கொண்டேன்.”

எழுத்துலகத்திற்கு வந்த தனது அனுபவத்தையும் சுரேஷ் பதிவு செய்துள்ளார்.

“பள்ளிக்கூடத்தில் ஒருமுறை கிரிக்கெட் விளையாடுகையில், கேட்ச் பிடிக்க முயற்சி செய்து வயிற்றில் அடிவாங்கி, மயக்கமாகி, அன்றோடு கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்டது தான் என் வாழ்வில் முக்கியமான திருப்புமுனை.

பள்ளி வயதில், விளையாட்டு நேரத்திலெல்லாம் பள்ளிக்கு எதிரில் இருந்த ராமகிருஷ்ணா மடத்தின் இலவச நூலகத்தில் போய் அமர்ந்து புத்தகங்கள் படிக்கத் தொடங்கினேன். அம்புலிமாமாவும், கலைமகள் குழுமத்திலிருந்து வெளியான கண்ணன் பத்திரிகையும் என் நெருக்கமான தோழர்களாயினர். சிறுவர்களுக்கான கதைகளைப் படிக்கப் படிக்க, எழுதும் ஆசையும் உயிர் பெற்றது. நாற்பது பக்க நோட்டு புத்தகத்தில் ‘சிறுவர் மலர்ச் சோலை’ என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகையாக அது மலர்ந்தது. கதை, கவிதை, ஜோக் என்று பக்கங் களை வண்ண வண்ண பேனாக்களால் நிரப்பினேன். நண்பர் களுக்குள் அது வளையவரும்.

பத்தாவது படிக்கும்போது, நாமே பத்திரிகை நடத்தி நாமே எழுதி, அதை நாமே படித்து சந்தோஷப்பட்டுக் கொள்வதா என்று கேள்வி பிறந்தது. ஒரு கதை எழுதி கண்ணன் பத்திரிகைக்குத் தைரியமாக அனுப்பினேன். ஒரு மாதம் கழித்து குறுக்கில் மடித்து கண்ணன் பத்திரிகை அஞ்சலில் வீட்டுக்கு வந்தது. திறந்து பார்த்தால், அதில் ‘வீடோ வீடு’ என்ற தலைப்பில் படமெல்லாம் போட்டு, என்னுடைய கதை! ‘த.சுரேஷ்’ என்ற பெயரை அச்சில் பார்த்து கிறக்கமும், குதூகலமுமாக இரவுத் தூக்கமே பறிபோயிற்று.

ஓர் எழுத்தாளனாகிவிட்டோம் என்ற பெருமிதம். இனிமேல் நம் கதை இல்லாமல் கண்ணன் எப்படி வர முடியும் என்பதுபோல் அடுத்தடுத்து கதைகள் எழுதி, திருத்தி, தொடர்ந்து அனுப்பினேன்.

இரண்டாவது கதை ‘கிரிக்கெட் கிட்டு’. தடிமனான கண்ணாடி அணிந்த ஒருவன் கிரிக்கெட் விளையாட ஆர்வம் கொண்டது பற்றிய கிண்டல் கதை. அன்றைய (15-16) வயதில் பார்வைக் கோளாறையெல்லாம் கிண்டல் செய்யக் கூடாது என்று புரியவில்லை.

இரண்டாவது, மூன்றாவது கதைகள் பிரசுரமானதும், கலைமகள் காரியாலயத் துக்கு துணிவுடன் படையெடுத்தேன். அங்கேதான் லெமன் அவர்களைச் சந்தித்தேன். திடுக்கிட் டேன்.  காரணம்… ஒரு சின்ன ரூமில் மேஜைக்குப் பின்னால், தடிமனான கண்ணாடி போட்டு உட்கார்ந்திருந்தார். சிறு நடுக்கத்துடன், என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

‘நல்லா ஹாஸ்யமா எழுதறீங்க’ என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.

ஒரு பள்ளி மாணவன்தானே என்று எந்த அலட்சியமும் காட்டாமல், ‘பொது வாவே நல்லா எழுதறீங்க..’ என்று என் எழுத்தை ஊக்கப்படுத்தினார். எப்பேர்ப்பட்ட கண்ணியமான ஆசிரியர்!

‘எனக்கு ஒரு தொடர்கதை எழுத ஆசையாக இருக்கிறது..’ என்று அடுத்த பேராசையைத் தெரிவித்தேன்.

‘எழுதலாமே..! முதல்ல அதுக்கு ஒரு கதைச் சுருக்கம் எழுதிக்குடுங்க’ என்று அன்போடு சம்மதம் தெரிவித்தார்.

தடிமனான கண்ணாடியைக் கிண்டல் செய்ததற்கு பிராயச்சித்தமாக ஒரு கதை எழுதி மானசீகமாக மன்னிப்பு கேட்க எண்ணினேன். ‘கண்கள்’ என்றொரு கதை எழுதி அனுப்பி அதுவும் பிரசுரமானது.

அடுத்த சில நாட்களில் தொடருக்கான கதைச் சுருக்கத்தை அத்தியாயவாரியாக எழுதிக் கொண்டுபோய் அவரிடம் நீட்டினேன். படித்துப் பார்த்தார்.

‘நல்லா இருக்கே..! தீபாவளி இல்லேன்னா பொங்கல்ல ஆரம்பிக்கலாம்..’ என்றார்.

மேகங்களில் மிதந்தேன்.  ஆனால், தொடர் தொடங்குவதற்குமுன், பொருளா தாரக் காரணங்களால் கண்ணன் பத்திரிகையே நிறுத்தப்பட்டது. அதன்பின் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, பாலகிருஷ்ணனுடன் நட்பாகி, சுபாவாக எழுதியதெல்லாம் வேறு கதை. ஆனால், என் முதல் போஷகர் லெமன் என்கிற திரு. லக்ஷ்மணன் என்பதை நான் என்றும் மறந்ததில்லை. அவரைப் பிற்பாடு திரு. சாருகேசியின் சகோதரராகச் சந்தித்து கால்களில் விழுந்து ஆசிபெற்று மகிழ்ந்ததும் மறக்கவியலாது.”

ஆனந்த விகடனில் எழுதிய ‘ரிலே ரேஸ்’ கதைகளைப் பற்றியும், முதல் வாக்கியம், கடைசி வாக்கியங்கள் கொடுத்து சிறுகதை எழுதியது குறித்த தனது எண்ணங்களையும் வாசகர் களுக்காக எழுத்தாளர் சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

“ஆனந்த விகடனில் வெளியான ‘ரிலே ரேஸ்’ கதைகள் பற்றி திரு ரவி பிரகாஷ் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். சில நினைவுகளை அது கிளறி விட்டது.

ஓர் எழுத்தாளர் எழுதும் சிறுகதையின் இறுதி வாக்கியத்தை ஆரம்ப வாக்கியமாக வைத்து அடுத்த எழுத்தாளர் சிறுகதை எழுதி அவருடைய கதையின் இறுதி வாக்கியம் அதற்கடுத்த எழுத்தாளரின் ஆரம்ப வாக்கியமாக அமைந்து என்று சங்கிலித் தொடராக வந்த சிறுகதைகள் அவை.

ஓர் எழுத்தாளர் கதை அனுப்பியபின் அதன் முடிவு வாக்கியத்தை அடுத்த எழுத்தாளருக்கு அனுப்பி கதை வாங்குவது என்பது பத்திரிகைகளின் அவசர நெருக்கடிகளில் இயலாத தொன்று என்பதால், ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஆரம்ப வாக்கியமும், இறுதி வாக்கிய மும் என்னவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கதைகள் கேட்கப்பட்டன.

அந்தச் சவாலில் எங்களுக்கு வந்த ஆரம்ப வாக்கியம்:

“அந்தப் பஞ்சகல்யாணிக் குதிரை தன் முன்னிரு கால்களையும் தூக்கி நீளமாகக் கனைத்து விட்டுச் சுருண்டு வீழ்ந்து மடிந்தது.”

கடைசி வாக்கியமாகக் கொடுக்கப்பட்டது:

“புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தவள் சட்டென்று அவனைப் பார்த்துக் கண்ணடித் தாள்.”

உண்மையிலேயே இந்த வாக்கியங்கள் பெரும் சவாலாக இருந்தது. கொஞ்சம் மண்டை யைக் குடைந்து யோசித்து, ‘ஜன்மங்கள் மாறலாம்’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பி னோம். ஆசிரியர் திரு பாலன் அவர்கள் கதை யைப் படித்துவிட்டுப் பாராட்டியதும்தான் நிம்மதி வந்தது.

அந்தத் தொடரின் அடிப்படைக் கருதான், திரு கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ‘அனேகன்’ திரைப்படத்தின் விதையாக அமைந்தது.”

எழுத்தாளர் சுரேஷ் ஒரு பேட்டியில் “ஓர் ஊரில் மேல்நிலைத் தொட்டி விரிசலைப் பார்ப்பதற்காகப் போனோம். பேருந்தில் இருந்து இறங்கியவுடன் பார்த்தால் அங்கே வரிசையாக நின்றுகொண்டு இருந்த சிறுவர், சிறுமியர் எல்லோருக்கும் இளம்பிள்ளை வாதம். வீட்டுத் திண்ணைகளில் படுத்திருந்த பெரியவர்களுக்கும் அதேநிலை. அந்த ஊரில் ஓடும் ஆறுதான் அவர்களுக்கு நீராதாரம். அதில் தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து மாசாகி வாத நோயை உருவாக்கி இருக்கிறது. கல்கி பத்திரிகையில் இதைப் பற்றி எழுதினோம். அந்த மாவட்ட வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காகப் போட்டார். தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டிஸ் கொடுத்தது. தீர்வு கிடைத்தது. நாங்களும் இது போல சமூக அக்கறையுடன்தான் எழுதுகிறோம்” என்கிறார்.

எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயகாந்தன், ஜானகிராமன், கவிக்கோ போன்ற ஆளுமை களைச் சந்தித்த நிகழ்வுகளையும் கட்டுரைகளில் சுவாரஸ்ய மாகப் பதிவு செய்துள்ளார் சு(சுரேஷ்)பா.

இன்று சுபா திரைத்துறையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல தரமான படங்களைத் தமிழ் மக்களுக்குத் தர அவர்களை வேண்டு வோம். அதே சமயத்தில் சுபாவின் முத்திரைகள் பதிக்கும் சிறுகதைகளை விடாமல் தொடர்ந்து எழுதும் படியாக வேண்டிக் கொள்வோம்.

நன்றி: சுரேஷ், பாலகிருஷ்ணன் முகநூல் பக்கம், சுபா விக்கிபீடியா & சிறகு ரவிச்சந்திரன் பதிவு. வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவில் எழுதிய பதிவு.

மூலவன்

1 Comment

  • சுவாரஸ்யமான கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...