31. மயூரியின் காதல் வியூகம்
கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளிப்பட்டதும், மலாயாவில் நட்சத்திர இரவு நடத்தும் விழா குழுவினர், அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
“சார்..! உங்களுக்கு ‘டார்செட்’ ஹோட்டலில் அறை புக் செஞ்சிருக்கோம் சார்..!” –விழாக்குழு உறுப்பினர் மலேஷியா மார்த்தாண்டன் கூற, மிதுன் சங்கடத்துடன் கனிஷ்காவைப் பார்த்துவிட்டு, மீண்டும் அவரை நோக்கினான்.
“சார்..! இது கனிஷ்கா. என்னோட வுட்பீ..! நடிகை..! இது அவங்க பிரதர்..! இவங்களும் என்னோட தங்கப் போறாங்க.” –என்றதும் செல்வராஜ் தலையைச் சொறிந்தார்.
“சாரி சார்..! விழாவுல கலந்துக்கற ஸ்டார்ஸ் – மற்றும் டெக்னிஷியன்ஸ் தங்கறதுக்காகவே டார்செட் ஹோட்டலை புக் பண்ணியிருக்கோம்..!” –செல்வராஜ் கூற, கனிஷ்காவின் முகம் சிவந்தது.
“வாட் டூ யு மீன்..? நீங்க என்னை விழாவுக்கு கூப்பிடலைங்கிறதுக்காக நான் ஸ்டார் இல்லாமல் போய்டுவேனா..? ஐ ஆம் ஸ்டில் லீடிங் ஸ்டார் இன் கோலிவுட்” –கனிஷ்கா வெகுண்டாள்.
“தெரியும்மா..! உங்களைக் கூப்பிடலாம்ன்னுதான் இருந்தோம். ‘பாலைவனம்’ படத் தயாரிப்பாளர் எங்க ஸ்பான்சர்ஸ்ல ஒருத்தர்..! பிக் பட்ஜெட் படம்..! அதனால, உங்களுக்குப் பதிலா, அந்தப் படத்தோட, கதாநாயகி மித்ரா ராவை அழைச்சோம்.” –என்றதும் கனிஷ்காவின் முகம் சிறுத்தது.
“லுக் ஹியர் மேன்..! நான் ஒண்ணும் உங்க விழாவுக்கு வரலை.! பர்சனல் வேலையா வந்திருக்கேன். மிதுன்..! இந்த மாதிரி தராதரம் இல்லாத ஆளு கிட்டேல்லாம் ஏன் எனக்காக ரூம் கேட்கறே..? அப்படியே அந்த ஆளு ரூம் கொடுத்தாலும், அந்த பிட்ச் மித்ரா தங்கற ஹொட்டலுலயா நான் தங்குவேன்..?” –என்று கனிஷ்கா சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவளது முகத்திற்கு நேராக ஒரு மலர்க்கொத்து நீண்டது. மலர்களின் நடுவே ஆங்காங்கே உயர்ரக சாக்லேட்கள் பதிக்கப்பட்டிருந்தன.
“–மலேசியாவின் உயர்ந்த பூக்கள் எல்லாம், இணைந்து , இந்திய நட்சத்திர மலரை வரவேற்கின்றன.” –என்ற வாசகம் தாங்கிய ஒரு பொன்னிற கார்ட் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அந்த மலர்களின் வாசமே, கனிஷ்காவைக் கிறங்க வைத்தது.
”எஸ் ! ” என்று கேள்வியுடன் பார்க்க, கருப்புக் கண்ணாடி அணிந்து உயரமான, பேரழகன் ஒருவன் நின்றிருந்தான். உடலில் சதையே இல்லாமல் வெறும் தசைகள் மட்டுமே ஆறுகள் ஓடுவது போன்று புஜத்திலும், கைகளிலும் காணப்பட்டன. அவனது அகன்ற மார்பை அவன் அணிந்திருந்த கருப்பு நிற ஸ்லிம் ஷர்ட் மிகவும் சிரமத்துடன் மறைத்திருந்ததது. இருப்பினும். அவனது மார்பின் மேற்புறம் இவளுக்கு மூச்சைத் திணற வைத்தது.
அவன் அருகே, மிதுனும், தேஜஸும், பொம்மைகளைப் போலத் தெரிந்தார்கள்.
“ஐ ஆம் அபி..! அமீரின் ரைட் ஹாண்ட்” –கரகரத்த குரலில் அபி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுமே, கனிஷ்கா எச்சரிக்கை அடைந்தாள். ஓ… இவன்தானா கொலைபாதகத்துக்கும் அஞ்சாத கொலைவெறியன்..? சித்ரவதை செய்வதில் பலே கில்லாடி என்று அப்பா கூறினாரே ! மீண்டும் தனது கண்களால் அவனது மார்பை வெறித்தாள். ஒரு கத்தியை எடுத்து அவனது பரந்து விரிந்த மார்பில் ரத்தக் கோலம் போட்டால் எப்படி இருக்கும்..? –தனக்குள் நினைத்தபடி, அவனைப் புன்னகையுடன் பார்த்தாள்..!
“ஓ..! நீங்கதான் அபியா..? நைஸ் மீட்டிங் யு..!” –தனது கையை நீட்ட, வலுவான தனது கரத்தால் அவளது உள்ளங்கையைப் பற்றி ஒருமுறை அழுத்தி விட்டு கையை விலக்க, அதனால் உள்ளங்கையில் ஏற்பட்ட வலி, அவளது தோள் வரை பரவியது.
அவள் கண்களில் தெரிந்த வலியை கவனித்த மிதுனும் தேஜஸும் எச்சரிக்கையுடன் தங்கள் கையை நீட்ட, அவற்றை பற்ற விரும்பாதவனைப் போல அவர்களது ஆட்காட்டி விரலை மட்டும், தொட்டு விட்டு, கனிஷ்காவைப் பார்த்தான்.
“மிஸ் கனிஷ்கா..! மலேசியாவிலேயே பெஸ்ட் ரிசார்ட்ல உங்களுக்கு ரூம் புக் செஞ்சிருக்கோம்..! எங்க அமீரோட ரிசார்ட். சொர்க்கபுரி..! செயற்கை ஆறுக்கு நடுவுல இருக்கிற தீவுல, சுற்றி நீரூற்றுகள் நடுவுல உங்களுக்கும், உங்க பிரதருக்கும் தனித்தனியா காட்டேஜ் ஏற்பாடு செஞ்சிருக்கோம். ரிசார்ட் பெயரே மலாய் ஹெவன்.” –என்று கூறியபடி தனது கருப்புக் கண்ணாடியை கழற்றினான். தனது ஊடுறுவும் பார்வையால், அபி அவர்களைப் பார்க்க, தேஜஸுக்கு அவனது பூனைக் கண்களைப் பார்த்ததும் ‘பகீர்’ என்றது. புலியின் விழிகளைப் போன்று, அபியின் கண்களில்தான் எத்தனை குரூரம்..! ரொமான்டிக் பார்வைகளையே வீசிப் பழக்கமாகி இருந்த தேஜஸுக்கு, ‘ஒரு மனிதனின் கண்கள் இவ்வளவு அமானுஷ்யமாக இருக்க முடியுமா.?’ என்கிற எண்ணம்தான் தோன்றியது. ‘அபியை நெருங்குவது ஆபத்து,.அவனை விட்டு சற்றுத் தள்ளியே நில்லுங்கள்,’ –என்று தந்தை சரவணபெருமாள் கூறியது செவியில் ஒலித்தது.
ஆனால் அபியின் ஊடுருவும் பார்வை, கனிஷ்காவைச் சற்றும் பாதிக்கவில்லை. அவனது கண்களை அலட்சியமாகப் பார்த்தாள்.
“நல்லது..! அங்கேயே போகலாம்..! ஆனால் இப்பவே சொல்லிடறேன். எங்களுக்கு பிரைவசி வேணும்..! எங்களுக்கு உதவி தேவைன்னா மட்டும்தான் உங்க கிட்டே வருவேன். எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்கக் கூடாது..!” –சற்றே காட்டத்துடன் கூற, அவளைப் புன்னகையுடன் நோக்கினான், அபி.
“எது செய்யணும், எது செய்யக்கூடாதுன்னு என்னோட பாஸ் அமீர்தான் தீர்மானிப்பார். அவர் சொல்றதை நான் கேட்பேன். அவர் எங்கிட்ட உங்களைத் தொந்திரவு செய்-னு சொன்னா, நிச்சயம் நான் உங்களைத் தொந்திரவு செய்வேன். அவர் வேண்டாம்னு சொன்னால், நான் உங்க கிட்டேயே வர மாட்டேன். ஆக, எதுவாக இருந்தாலும், நீங்க அவர்கிட்டே தான் பேசணும்.” –அபி சொல்ல, கனிஷ்கா, மிதுன் ரெட்டியைப் பார்த்தாள்.
“மிதுன்..! நானும் தேஜஸும், இவரோட போறோம்..! நீ டைம் கிடைக்கறப்ப எனக்கு போன் செய்..!” –என்றபடி ஆப்ரகாம் என்கிற அபியின் பின்பாக கனிஷ்கா நடக்க, அவளைப் பின்தொடர்ந்தான் தேஜஸ்.
மலேசியா மார்த்தாண்டனுடன் நடந்த மிதுன், சட்டென்று ஒருமுறை கனிஷ்காவைத் திரும்பி நோக்கினான். ஏதோ சரியில்லை என்று அவனது உள்ளுணர்வு எச்சரித்தது.
*
“தகையோன் மலைக்குப் போறதுக்கு முன்னாடி சில ஏற்பாடுகளைச் செய்யணும். அநேகமா ஒரு வாரம் கழிச்சு, நாம தகையோன் மலைக்குப் போகலாம். நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்க..!” –குகன்மணி கூற, பத்துமலையில் இருந்து வந்ததும் தனது அறையில் முடங்கிக் கொண்டாள் மயூரி.
“குகன்மணி சாதாரண ஆள் இல்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கிறான். இவனுக்குப் பயந்து மிகவும் எச்சரிக்கையுடன் சுவடியை சூடிதாரில் ஒளித்து வைக்க, கடைசியில் அந்தச் சுவடியில் விஷயம் ஒன்றுமே இல்லை. இவளைத் தனது வீட்டுக்கு வரவழைக்கவே சுவடி நாடகத்தை ஆடியிருக்கிறான்!
மூன்றாவது நவபாஷாணச் சிலை தகையோன் மலையில் இருக்கிறது என்றால், அதன் பாதுகாப்புக்கு அவன்தானே முழு பொறுப்பு..? தனது குடும்பம் மூன்றாவது சிலையை அபகரிக்க நினைக்கிறது என்றால், இவளை எதற்குத் தனது மேற்பார்வையில் வைத்திருக்கிறான்..? அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் இவள் மீது வெறுப்பைத்தானே காட்ட வேண்டும்.? அவனது திட்டம் தான் என்ன..?
கவலையுடன் அந்த பிரம்மாண்ட அறையின் கட்டிலில் படுத்திருந்தவள், அறையின் விட்டத்தையே வெறித்தாள். பத்து மலைப் படிகளில் ஏறிவிட்டு வந்திருந்ததால், உடல் அசதியாக இருந்தது. ‘தூங்கப் போயேன்’ என்று மேனி கெஞ்சினாலும், மனம் அதன் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.
குகன்மணியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள்.
தனது குடும்பத்தினர் இறுதியில் குகன்மணியிடம்தான் மோத வேண்டியிருக்குமோ..? அவனால் குடும்பத்தினருக்குத் தீங்கு நேரிட்டால் என்ன செய்வது..?
அப்போது, மனதின் ஆழத்திலிருந்து ஒரு குரல் எழுந்து அவளிடமே எதிர்க்கேள்வி கேட்டது. குகன் மணியால் உனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படுவது இருக்கட்டும். உனது குடும்பத்தால் குகன்மணிக்கு ஆபத்து ஏற்பட்டால் பரவாயில்லையா..?
இந்தக் கேள்வி மனதில் ஒலித்ததுமே, அவளால் படுத்துக் கிடக்க இயலவில்லை. மேனி நடுங்க எழுந்து உட்கார்ந்தாள்.
பத்து மலைக்குப் போய் விட்டு வந்ததில் இருந்தே, மயூரிக்கு அவன் மீது ஒருவித ஈர்ப்பு தோன்றிவிட்டிருந்தது. அவள் மனதில் அவனை பற்றிய எண்ணங்களே நிலவிக் கொண்டிருந்தன. இவளது எண்ணங்கள் முழுவதையும் வியாபித்து விட்டு, தன்னைப் பற்றிய எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காதவாறு செய்து கொண்டிருந்தான். அவன் மீது எழுந்திருந்த சந்தேகங்களைக் கடந்து, சிறிது சிறிதாக அவன் வசப்பட்டிருந்தாள்.
கல்லூரித் தோழிகளுடன் ஒருமுறை வம்படித்துக் கொண்டிருந்த போது போது, திவ்யபிரபா என்கிற பெண் கூறினாள்.
“யார் யார் எதிர்காலத்துல என்னவாகப் போறீங்கன்னு சொல்லுங்க. உங்க கணவர் யாருன்னு நான் சொல்றேன்..!” –என்று திவ்யபிரபா கூற, அவள் ஒரு ஜோசியரின் மகள் என்பதால், எல்லோரும் அவளை சீரியஸாக எடுத்துக்கொண்டு தங்கள் எதிர்காலக் கனவுகளை கூற ஆரம்பித்தார்கள்.
“நான் நர்ஸ்..!” –ஒருத்தி சொல்ல, “அப்ப உன் புருஷன் டாக்டர்..!” –என்றாள் திவ்யபிரபா.
“நான் பாடகி..!” –இன்னொருவள் சொல்ல, “உன் கணவர் கிடார் வாசிப்பார்.” என்றாள் திவ்யபிரபா.
“நான் ஏர்ஹோஸ்டஸ்..!” –என்றவுடன் உடனே பட்டென்று “உன் கணவர் விமானி” – என்று கூறியிருந்தாள், திவ்யபிரபா.
“ஏய் பிராடு..! நான் சித்தாள்னு சொல்லியிருந்தா உன் புருஷன் கொத்தனார்னு சொல்லியிருப்பே.” –மயூரி அவளை முறைத்தாள்.
திவ்யா, கேலியுடன் கூறினாள் : “அழகான சித்தாளா இருக்கிறதால, ஆர்க்கிடெக்ட் கூட உன்னைத் திருமணம் செஞ்சுப்பான்..!” –என்று சொல்ல… ஒரே கலகலப்புதான்.
ஆனால் தோழி திவ்ய பிரபா விளையாட்டாகக் கூறியிருந்தது, இப்போது உண்மையாக மாறிவிட்டிருந்தது. குகன்மணி என்கிற விமானியிடம் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு, அவளது இதய ரன்வேயில் ஓடி, மேல் எழுந்து, அவளது சிந்தை என்னும் ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. காதல் என்றால் இதுதானோ என்கிற எண்ணம் தோன்றியது. ஆனால் இவளைப் பற்றி அவன் என்ன நினைக்கிறானோ ?
அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு டீம் லீடர் தனது ஜூனியரிடம் பேசுவது போல் அல்லவா பேசுகிறான்..? இவள் மீது அக்கறை காட்டும் விதத்தில் பேசிக் கொண்டிருக்கிறானே தவிர, இவள் மீது ஈர்ப்புக் கொண்டவனைப் போலப் பேசவில்லையே..? அவனது மனதில் உள்ளதை அறியாமல், இவளாக மனதைத் திறக்கக்கூடாது.
‘இவள் குடும்பத்தினர் நவபாஷாணச் சிலைக்கு அலைகிறார்கள். இவள் எனக்காக அலைகிறாள் போல இருக்கிறது’ –என்று நினைத்துவிட்டால்..?
குகன்மணி ஒரு துருவத்திலும், இவள் ஒரு துருவத்திலும் நிற்கிறார்கள். இவளது குடும்பம் எதற்காக மூன்றாவது நவபாஷாணச் சிலையைத் தேடுகிறது..? அது தங்கள் வசம் இருந்தால், குடும்பத்திற்கு நன்மைகளும், சௌபாக்கியங்களும் தொடரும் என்பதால்தானே..? அனைவருமே ஒரு குடும்பமாக இணைந்துவிட்டால்.? மூன்றாவது நவபாஷாணச் சிலையை தனது பொறுப்பில் வைத்திருக்கும், குகன்மணியைத் தனது குடும்பத்தில் ஒருவனாக மாற்றி விட்டால்..?
குடும்பத்தாரையும் அவனையும், சந்திக்க வைத்து, அவர்களிடையே நட்பையும், இணக்கத்தையும், ஏற்படுத்தி விட்டால்..?
இவளே திருமணத்தின் மூலம், குகன்மணியையும், குடும்பத்தையும் இணைத்துவிட்டால். எல்லோருடைய எண்ணங்களும் நிறைவேறுமே..!
ஒருவேளை, குகன்மணியும் இவளை உண்மையிலேயே நேசித்தான் என்றால், இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்வதில் அவனுக்கும் பிரச்னை இருக்காது. தனித்து வாழ்பவனுக்கு ஒரு பெரிய குடும்பம் கிடைக்கும். குகன்மணியை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வதில், தாத்தாவுக்கும், இவளது பெற்றோருக்கும், பிரச்சனைகள் இருக்காது. வயதில் இவளுக்கு மூத்தவளான கனிஷ்காவுக்கு மிதுன் ரெட்டி கணவனாக அமைய இருப்பதால், இவளது திருமணத்திற்குத் தடை ஏதும் இப்போதைக்கு இல்லை. குகன்மணிக்கும், இவளுக்கும் இடையே காதல் ஏற்பட்டு, திருமணத்தில் முடிந்தால், எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்றால், அவனைக் காதலிப்பதில் தவறென்ன..?
‘வழக்கமாக ஒரு ஆண்மகன்தானே காதலை வெளிப்படுத்துவான்..! நாமாக எப்படி அவனிடம் காதலைத் தெரிவிப்பது..? ஒருக்கால் அவனுக்குப் பிடித்த மாதிரியில் நடந்து கொண்டால்..? அவனைக் கவரும் விதத்தில் பேசிப் பழகினால்..?’ முயன்று பார்க்க முடிவு செய்தாள், மயூரி.
‘வழக்கமாக காதலுக்குத்தான் பிரச்சனைகள் உருவாகும். ஆனால் இவளைச் சுற்றி உள்ள பிரச்சனைகளுக்கு இவளது காதல்தான் நல்ல தீர்வாக இருக்க முடியும். தனது குடும்பத்தையும், குகன்மணியையும் இணைப்பதற்கு காதல் பாலம் ஒன்றைப் போட வேண்டியதுதான்.!’
மனதினுள் நினைத்ததுமே, அவளது இதயத்தில் சிறகடித்துக் கொண்டிருந்த பறவை, வெளியே வானில் பறப்பதற்குத் துடிக்க, அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு விஸ்தாரமான பால்கனியில் சென்று நின்றாள்.
குகன்மணி எஸ்டேட்டைச் சுற்றி மலைகளும், நீர்நிலைகளும் பரவியிருக்க, சில்லென்று முகத்தை வருடிய காற்றைச் சிலாகித்து, கண்களை மூடிச் சிறிது நேரம் அப்படியே நின்றவள், பிறகு கண்களைத் திறந்ததும், நிர்மலமான கரிய வானம்தான் தெரிந்தது.
விண்மீன்கள் வைரமணிகளாக ஜொலிக்க, குகன்மணியைப் பற்றி நினைத்தபடி, மேற்கு வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை மேற்கு நோக்கி இருப்பதை அப்போதுதான் கவனித்தாள். தென்மேற்கே நம் பள்ளங்கி மலை இருக்கிறது என்று நினைத்தபடி, அந்தத் திக்கையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று….
சிறு புள்ளியாக இரு ஒளி வட்டங்கள் தென்மேற்கே நகர்வதைக் கண்டாள். விண்கற்கள் ஏதோ விழுகிறது போலும் என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் அது சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு வால் நட்சத்திரமாக நீளுவதை கண்டு வியந்தாள். இவள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்த ஒளிக் கீற்றுகள், மிக வேகமாக நகர்ந்து இவள் நின்ற பால்கனியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தன.
திகைப்புடன் அந்த ஒளிவட்டங்களையே மயூரி கவனித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று, அந்த ஒளிவட்டங்கள் அப்படியே அசையாமல் நின்று, பிறகு இருந்த இடத்திலேயே சுழன்றன. அதன்பின் இரண்டு ஒளிக் கீற்றுகளும், இடதுபுறமாக நகர்ந்து அருகில் இருந்த மலையின் உச்சியில் இறங்கி அவளது பார்வையிலிருந்து மறைந்து போயின.
வாயடைத்து நின்றவள், தன் நிலையை உணர்ந்து, அவசரமாக அறைக்கதவை நோக்கி ஓடி, வெளியே சென்றாள். குகன்மணி அறை திறந்தே கிடந்தது.
“குமுதினி..!” –குரல் கொடுத்தாள் மயூரி..! அவளிடமிருந்தும் பதில் இல்லை.
‘அவசரமாக மாடிப்படிகளில் இறங்கி, பங்களாவின் வெளியே ஓடிப்போனாள். தொலைவில், தோட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு ஒற்றையடிப்பாதையில், குகன்மணி நடக்க, அவனைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர், குமுதினியும், அவளது கணவன், குனோங்கும்.
அந்தப் பாதை, சற்றுமுன் ஒளிவட்டங்கள் இறங்கிய அந்த மலையை நோக்கிச் செல்கிறது என்பதை மயூரி அறியவில்லை.
அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் முடிவுடன், மயூரி அந்தப் பாதையில் நுழைந்தாள்.

கதையாக தோன்ற வில்லை என் நாடு (மேலேஸியா)என்பதால் அதனுடன் நானும் ஒரு கதாபாத்திரமாக உணர்கிறேன்
மிக நன்றி மேடம் !
மலேசியா மார்த்தாண்ட செல்வராஜ் என்பது விழாக்குழு தலைவரின் பெயர். இரு இடங்களில் மார்த்தாண்டன் என்றும் இரு இடங்களில் செல்வராஜ் என்றும் பெயர்கள் வந்திருக்கிறது. ஒரே பெயராக படிக்கவும்.
Very interesting!
Thanks
Interesting! Waiting for next part eagerly!
Sir good evening sema thrilling ah iruku sir 👌
Yes.. Thrilling at its best…