அ.தி.மு.க. பொன் விழாவும் எடப்பாடிக்குத் தலைவலியும்

அ.தி.மு.க. 50வது பொன் விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. எப்படி? ஒரு பக்கம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலும். சசிகலா தலைமையில் ஒரு பக்கமும் கொண்டாட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ஒரு பக்கம் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எந்தவித விழா கொண்டாட்டங்களும் இல்லாமல் முடக்கிப்போட்டிருந்தது. தற்போது கொரோனா தடைகளை நீக்கி முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் அ.தி.மு.க. 50வது பொன் விழா ஆண்டும் இரண்டாண்டு களுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டமும் வருகிறது.

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே அ.தி.மு.க.வுக்குத் தலைவலியாகத் தான் இருந்துவருகிறது.

2021 சட்டமன்றப் பொதுத் தேர்தல் தொடங்கும்போதே சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி வந்ததுமே இ.பி.எஸுக்குத் தலைவலி தொடங்கியது. தேர்தலில் அ.தி.மு.க. ஒரு பக்கம் என்றால் டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வும் நின்றது. அ.தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் வேட்பாளரை நிறுத்தி தலைவலியைத் தந்தார் டி.டி.வி.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்றத் தேர்தலின்போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். டி.டி.வி. மட்டுமே தனித்து நின்று அ.தி.மு.க. ஓட்டைப் பிரித்தார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கமுடியாத அளவுக்குத் தோல்வியைச் சந்தித்தது. 65 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாமல் தேர்தலைச் சந்தித்ததே தோல்விக்குக் காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டி வந்தனர். உள்ளிருந்துகொண்டே பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு பனிப்போர் தலைவலியைக் கொடுத்து வந்தார். இந்த நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த  சசிகலா  தற்போது  அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது எடப்பாடி பழனிச்சாமிக்கு தலை வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

     அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சீக்கிரமே நல்லது நடக்கும் என்று முன்னாள் அமைச்சருடன் சசிகலா பேசும் ஆடியோவால் இ.பி.எஸ்.சுக்குத் தலைவலி மேல் தலைவலி.

அ.தி.மு.க. பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அ.தி.மு.க.வின் கொடியை ஏற்றிய பிறகு ‘சசிகலா பொதுச்செயலாளர்’ என்கிற கல்வெட்டைத் திறந்து வைத்தார். சென்னை தி.நகர் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரைக்குப் புறப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு சென்று ஜெயலலிதா சமாதியில் கண்ணீர்விட்டு அழுதார். இ.பி.எஸுக்குத் தலைவலியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தால் சசிகலா மேல் கடும் கோபத்தில் இருந்த இ.பி.எஸ். தரப்பு இரு பிரிவினர் இடையே கலகத்தை விளைவிக்கும் வகையில் சசிகலா செயல்பட்டு வருகிறார். இதற்காக 153ஏ சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க முடியும். மக்கள் மத்தியில் தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்று கூறி தவறான தகவலைக் கொண்டு செல்லும் குற்றத்துக்காக 505 (பி) என்கிற சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கர்ஜித்தது.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. உருவாகி 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் 30 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது. அ.தி.மு.க. பொன்விழா காணும் இந்தத் நேரத்தில் அ.தி.மு.க. வளர்ந்த விதத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

தமிழ் சினிமா மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். அரசியலிலும் தனது செயல்பாட்டால் மக்கள் மனம் கவர்ந்த தலைவராகத் திகழ்ந்ததால் அறிஞர் அண்ணா அவரை தம் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன் படுத்திக்கொண்டார்.

அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் திடீரென இறந்ததால் கலைஞர் கருணாநிதி அடுத்த முதல்வராகப் பதவியேற்றார். அதற்கு முழு ஒத்துழைப்பு தந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் சில மாதங்களில் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் மனக்கசப்பு வந்தது. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கருணாநிதியைக் கட்சிக் கணக்கு வழக்கு பார்ப்பதற்கு கணக்குக் கேட்டார் என்பதற்காக அவரைக் கட்சியைவிட்டு 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியேற்றினார் கருணாநிதி.

அடுத்த ஒரே வாரத்தில் அக்டோபர் 17ஆம் தேதி அ.தி.மு.க.வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து வெற்றி பெற்றார். அவர் உயிரோடு இருந்தவரை அவர்தான் முதல் அமைச்சர் என்ற வரலாற்றைப் பதிவு செய்து அ.தி.மு.க. வரலாற்றில் அவரது அதியாயத்தை நிறைவு செய்தார்.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மிகப் பெரிய அரசியல் கட்சியான அ.தி.மு.க. மிகப் பெரிய மக்கள் செல்வாக் குப் பெற்று ஆகப்பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆரால் ஜெயலலிதால் நிலைத்து நின்றது.

அவர்களுக்குப் பின்னால் மிகப் பெரிய தேக்கம் கண்டது அ.தி.மு.க. அதற்குக் காரணம் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு. எம்.ஜி.ஆரைப் போல் ஜெயலலிதாவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தும் அதைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. சகோதரி சசிகலாவுடன் சேர்ந்ததி லிருந்து கட்சியிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் செயல்பாடுகளில் சகோதரியின் தலையீடு அதிகரித்தது. அரசு நிறுவனமான டான்ஸி நிறுவனத்தை முதலமைச்சராக இருந்தபோது கையெழுத்திட்டு வாங்கினார். அந்த வழக்கியிருந்து வெளிவந்தார்.  வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகினார். அந்த வழக்கு பல ஆண்டுகள் நடந்து இறுதியில் மூன்றாண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது. தீர்ப்பு வந்தவுடன் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மாண்டார்.

அ.தி.மு.க. கடந்த பத்தாண்டு (16-5-2011 – 3-5-2021) ஆட்சியில் இருந்தது. தி.மு.க. பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாகவே நின்றது. ஜெயலலிதா பதவி ஏற்று 16-5-2011 முதல் 27-8-2014 வரை ஆட்சியிலிருந்துவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக நீதிபதி குன்ஹா தீர்ப்புக்குப் பிறகு பதவியைத் துறந்தார். அதன்பிறகு ஓ.பி.எஸ். 29-8-2014 முதல் 22-5-2015 வரையும் ஆட்சியில் இருந்தார். அதன்பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வராக 23-5-2015 முதல் 23-5-2016 வரையும் முதல்வராகப் பதவி வகித்துவிட்டு மரணமடைந்தார். அப்போது சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இரவோடு இரவாக மீண்டும் தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் வடித்துக்கொண்டே முதல்வரானார். இவர் 6-12-2016 முதல் 15-2-2017 வரை பதவியில் இருந்தார்.

2017 பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் கூடியது. அடுத்த முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் ஆவதற்காகப் பன்னீர்செல்வம், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த 48 மணி நேரத்தில் என்ன மாயம் நடந்ததோ ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ‘தர்மயுத்தம்’ தொடங்கினார். ‘அவமானப் படுத்தப்பட்டேன். கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள்’ எனச் சொல்லி சசிகலாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார்.

இவர் மத்திய அரசுடன் நெருக்கமாகவும் சசிகலா தரப்புக்கு எதிராகவும் இருப்பதாகக் கருதிய சசிகலா தரப்பு பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தது சசிகலா தரப்பு.  ஜெயலலிதா சமாதியில் ‘தர்மயுத்தம்’ நடத்திய பிறகு, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி 2017 மார்ச் 8-ம் தேதி பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தார். அதன் பின் எடப்பாடி ஆட்சியில் துணை முதல்வர் ஆனார். அதன்பிறகுதான் ஜெயலலிதா வின் மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களை எழுப்பிய பன்னீர்செல்வத்திடம் விசாரிக்க சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி ஆணையம். ‘தர்மயுத்த நாயகன்’ அங்கே ஆஜராகவில்லை. ஒன்றல்ல… இரண்டல்ல ஆறு முறை விசாரணைக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பியும் பன்னீர் போகவில்லை.

‘தர்மயுத்தம்’ நடத்திய பிறகு, தன் தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவிடம் முயற்சிகள் எடுத்தார் பன்னீர்செல்வம். ஆனால், கூவத்தூரில் கும்மாளம் போட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பன்னீர் பக்கம் போகவில்லை. எடப்பாடி முதல்வர் ஆனார். சசிகலா தயவால் முதல்வர் ஆன எடப்பாடி ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது அந்த ஆட்சிக்கு எதிராகப் பன்னீர்செல்வம் வாக்களித்தார். எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டு, மோடியின் ஆதரவில் அதே ஆட்சியில் துணை முதல்வ ராகப்  பதவி ஏற்றுக்கொண்டார்.

எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் வைத்த 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்கிறார்கள். எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து ஓட்டுப் போட்ட பன்னீர்செல்வத்துக்குப் பதவி கொடுக்கிறார்கள். அந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு மட்டும் இன்னும் முடிவுக்கு வராமலேயே போய்விட்டது.

இதற்கிடையே சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகச் சிறைக் குச் சென்றார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகத் தொடர்ந்து கொண் டிருந்தபோது அதிருப்தியாகவே தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்.  எடப்பாடி 16-2-2017 முதல் 3-5-2021 வரை அ.தி.மு.க. ஆட்சியை நிறைவு செய்தார்.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு வழக்கு நடந்தது. கொடநாடு தொடர் கொலைகள் வழக்கு முடிக்கப்படாமலேயே இருந்தது. அ.தி.மு.க. மேல் கொரோனா முதல் அலையில் கையாண்ட விதம் குறித்தும் மக்கள் மத்தியில் பல ஐயங்களை ஏற்படுத்தியது.

ஆட்சி மாற்றத்தை முன்னிட்டு மீண்டும் உயிர் பெற்றது கொடநாடு வழக்கு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொட நாட்டில் ஜெய லலிதாவுக்கு மிக சொகுசான எஸ்டேட் பங்களாவில் சசிகலாவுடன் வாழ்ந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் அடையாளம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டார்.  மற்றும் கொள்ளையும் நடந்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 27ஆம் தேதி இரவு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். கொட நாடு வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான் தனது மனைவி மகளுடன் கேரளாவுக்கு காரில்  சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தில் மனைவி மகள் உயிரிழந்தனர். சயான் படுகாயம் அடைந்தார். அவரது செல்போன்கள் காணவில்லை. திருடப்பட்டதாக காவல் துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டது ஒரு கரடி பொம்மை. இந்த வழக்கை தற்போது மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது.

ஆட்சி மாற்றத்தை முன்னிட்டு ரெய்டு படலம் நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்கள் லஞ்ச தமிழக ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது.

அடுத்து வேலுமணி வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடைபெற்றது.

தற்போது சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவைச் செயலாளரானவும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும் உள்ள எடப்பாடியின் நண்பர் இளங்கோவன் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்.

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ இந்த ஐந்தாண்டுகளில் என்று இ.பி.எஸ்.சுக்கு தலைவலிக்கு மேல் தலைவலி. இந்த தீபாவளி இ.பி.எஸுக்கு தலைவலி தீபாவளிதான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...