எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 4 | இந்துமதி
“அம்மா நான் சித்ரா வீட்டுக்குப் போயிட்டு வரேம்மா…”
“இத்தனை நேரத்துக்காடி…? விளக்கு வைக்கிற நேரமாச்சே…?”
“ஆமாம்மா. சித்ராவுக்கு இன்னிக்கு மிஸ். மாத்யூஸ் நடத்தின பாடத்துல எதுவுமே புரியலையாம். ‘வந்து கொஞ்சம் சொல்லித்தாடீ’ன்னு கூப்பிடறா…”
“ஏன்… அவ இங்கே வரக்கூடாதா….? அவளுக்குக் கார் இருக்கு, டிரைவர் இருக்கான்….”
“ஆனால் இங்கே படிக்க வசதியாகத் தனி ரூம் இல்லையேம்மா. ஏர்கண்டிஷன் இல்லையே…..அமைதியான சூழ்நிலை இல்லையே… பிளாட் குழந்தைங்க இரைச்சலும், கத்தலும் எனக்குப் பழகிப்போச்சு. ஆனால் அவளுக்கு இந்த சத்தத்தில் படிச்சுப் பழக்கமில்லையே…”
“அப்படின்னா அவளைக் கார் அனுப்பச் சொல்றதுதானே…?”
“வேணாம்மா. அங்கிருந்து கார் வந்து அப்புறம் நான் போறதுன்னால் நேரமாயிடும். திரும்பி வர்றதுக்கு லேட்டாகும். சும்மா டைம் தான் வேஸ்ட். அதனால் நானே வர்றதா சொல்லிட்டேன்.”
“சரி. எப்படிப் போகப் போற…?”
“ஒரு ஆட்டோ பிடிச்சுப் போயிடுவேன்.”
“ஆட்டோவுக்குப் பத்து ரூபாய் ஆகாதாடீ….”
“ஆகும்.”
“எதுக்கு வேஸ்ட் பண்ற…? அந்தப் பத்து ரூபாய் இருந்தால் நான் இரண்டு நாள் கறிகாய் செலவைத் தள்ளுவேன்…..”
“ஆட்டோவுக்கு நானாம்மா பணம் தரப் போறேன்..? அதையும் சித்ராதாம்மா தருவாள்.”
“அப்படின்னாச் சரி. ரகுவை அனுப்பி ஆட்டோ கூட்டிண்டு வரச் சொல்லட்டுமா..?”
“வேணாம்மா. நானே தெருக்கோடிக்குப் போய் ஆட்டோ பிடிச்சுப்பேன்.”
“தனியாகப் போக வேணாம்டி. ரகுவைத் துணைக்கு அழைச்சுண்டு போயேன்…”
பகீரென்றது ஷைலஜாவிற்கு. ‘ரகுவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போனால் மதுவை எவ்வாறு சந்திக்க முடியும்?’ என்று தோன்ற அவசரமாக மறுத்தாள். “வேணாம்மா… நானும் சித்ராவும் படிப்போம். அவனுக்குப் போர் அடிக்கும். வீட்டுக்குப் போகலாம்னு நச்சரிப்பான். எங்களைப் படிக்க விடாமல் செய்வான்…” என்றவள் அதற்கு மேல் அம்மாவைப் பேசவிடாமல் மடமடவென்று மாற்றிக் கொண்டாள். மதுவிற்கு மிகவும் பிடித்தமான ரோஜா வர்ணப் புடவை உடுத்துக்கொண்டாள். முகத்திற்கு சந்தனப் பவுடர் பூசி, உதடுகளுக்கு இயற்கை வர்ண லிப்ஸ்டிக் தடவி, தலையை அப்படியே வாரி சரி செய்து கொண்டு கிளம்பியபோதுஅம்மா சொன்னாள்.
“சீக்கிரம் வந்துடு ஷைலஜா. இல்லைன்னால் அப்பா
திட்ட ஆரம்பிச்சுடுவார்…”
அப்பா திட்டுவார். நேரமானால் திட்டுவார். தொலைபேசியில் சிரித்துப் பேசினால் திட்டுவார். அம்மா ‘யார் கிட்டேயிருந்து போன்….’ என்று கேட்பாள். சந்தேகமாகப் பார்ப்பாள். இந்த சந்தேகம், திட்டு, கேள்விகள் இவையெல்லாம் நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள். மேல் வர்க்கத்திற்கு இந்தக் கேள்விகள் இல்லை. சந்தேகங்கள் இல்லை. பயங்கள் இல்லை. அதே போல் கீழ் வர்க்கத்திற்கும் இல்லை. அனாவஸ்யமான கட்டுப்பாடுகளும், சமூகம் பற்றின பயங்களும் இல்லை. எப்போதும் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பதனால் நிறைய சங்கடங்களும், கஷ்டங்களும் இல்லை. அன்றைய வயிற்றுப்பாடு மட்டுமே பிரச்சினையாக இருப்பதால் மற்றப் பிரச்சினைகள் அவர்களை அணுகுவதில்லை. பெரிதாகத் தெரிவதில்லை. எல்லா பிரச்சினைகளும் பாதிப்பது மத்தியதர வர்க்கத்தைத்தான். காய்கறி விலை உயர்வா… கவலைப்படுவது மத்தியத்தர வர்க்கம். சமையல் செய்கிற கியாஸ் சிலிண்டர் விலை உயர்வா… பாதிப்பது மத்தியதரவர்க்கம். தங்கம் விலை உயர்வா… அதற்கும் கவலைப்படுவது அவர்கள் தான். விலைவாசி உயர்விலிருந்து சமூகத்தின் வாய் வரை பயப்படுவது மத்தியதர வர்க்கத்தினர் தான். அதில் பிறப்பது போன்ற பாவம் வேறு ஒன்றுமில்லை. ஒன்று சித்ரா மாதிரி பெரிய பணக்காரியாகப் பிறக்க வேண்டும். அல்லது அஞ்சலை மாதிரி குப்பத்திலாவது பிறந்திருக்க வேண்டும் இரண்டுமில்லாது இப்படி இரண்டும் கெட்டான் குடும்பத்தில் பிறந்து எல்லாவற்றிற்கும் பயந்து, பதில் சொல்லி…
வெறுத்துப் போய்விட்டது ஷைலஜாவிற்கு. சினேகிதி வீட்டிற்குப் படிக்கப் போனால் கூட திட்டுகிற அம்மாவும், அப்பாவும் சலித்துப் போனார்கள். அதற்கே திட்டுகிறவர்கள் தான் மதுவைக் காதலிப்பது தெரிந்தால் என்ன சொல்வார்களோ… என்பதை பயத்துடன் நினைத்துக் கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.
“எவ்வளவுப்பா…?” என்று கேட்டு மீட்டரைப் பார்த்துப் பணம் கொடுத்துக் கொண்டிருந்த போதே மது அவனது சிவப்பு மாருதியை அருகில் கொண்டுவந்து நிறுத்தி விட்டு ஹாய் சொன்னான், ஆட்டோக்காரரிடமிருந்து மீதச் சில்லறை வாங்கிக் கொள்வதைக் கூடத் தவிர்த்து விட்டு யார் கண்ணிலாவது பட்டுவிடப் போகிற பயத்தில் பரபரப்புடன் முன் கதவைத் திறந்து அவன் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் . ஷைலஜா. அவளையும் மீறின விடுதலை உணர்வில் ‘அப்பாடா… என்று பெருமூச்சு விட்டாள்.
“என்ன ஷைலு இப்படிப் பெருமூச்சு விடற….?”
“ஆயிரம் பொய் சொல்லிவிட்டு ஓடி வர்றதுக்குள்ள நான் படற அவஸ்தை எனக்குத்தானே தெரியும்.”
“எதுக்குப் பொய் சொல்லணும்….?”
“உங்க வீடு மாதிரி எங்க வீட்ல சுதந்திரம்னு நினைப்பா…? விளக்கு வச்சு வெளியில் போனாலே அம்மா அப்பா ரெண்டு பேர் கிட்டேயிருந்தும் முணுமுணுப்பு வரும்…”
“அப்படின்னால் இப்போ என்ன சொல்லிட்டு வந்த….?”
“வழக்கமான பொய்தான்…”
“என்ன பொய்…?”
“ஆபத்பாந்தவி, அனாதரட்சகி இருக்காளே… அவ வீட்டுக்குப் போறேன்ற பொய்…”
“அது யார் அந்த ஆபத்பாந்தவி, அனாதரட்சகி….?”
“வேற யார்… சித்ராதான்.”
“எப்போ பார்த்தாலும் சித்ரா சித்ரா சித்ராதானா…? அவளை நினைக்கிறதில் கால்வாசிகூட நீ என்னை நினைக்க மாட்டே போல இருக்கு ஷைலு…”
மது ஒருவித நிஜமான வருத்தத்தில் சொல்ல அதைக் கேட்ட ஷைலஜா உருகிப் போனாள். ஸ்டியரிங் மீதிருந்த அவன் கை மீது கை வைத்துச் சொன்னாள்.
“அப்படியில்ல மது. அவள் நமக்கு உதவி செய்யறா… அவளை விட அவளது பெயர் நமக்கு நிறைய உதவி செய்யறது. அவள் பெயரைச் சொல்லிவிட்டு வெளியில் வர வசதியாக இருக்கு. அதனால்தான்…”
“ஏதோ சொல்லு. சரி, நாம் இப்போ எங்கே போறோம்…?”
“நேரா பீச் ரோடு வழியாக ஒரு டிரைவ் போகலாம்.”
“எங்கேயாவது டின்னர் சாப்பிடலாமே…. உன்கூட சாப்பிட்டு ரொம்ப நாளாச்சே…?”
“நேரமானால், வீட்டுக்கு சாப்பிடப் போகலைன்னால் உதை விழும்…”
“குழந்தை மாதிரி பீச் ரோடு வழியாக ஒரு ரவுண்ட் போகவா வந்த…?”
“ம்ஹும். அதுக்கு வரலை. உங்களைப் பார்க்க வந்தேன். பாராமல் ஒருநாளும் இருக்க வேணாம்னு நீங்க தானே சொன்னீங்க…?”
அதைக் கேட்டு உருகிப் போன மது ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு மறு கையால் அவள் தோள் மீது போட்டு அணைத்தவாறே சொன்னான்.
“தாங்க்யு ஷைலு… ஆமாம், மகாபலிபுரம் போகலாம்னு சொன்னாயே… எப்போ….?”
“நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போ…”
“இந்த வீக் எண்ட் போகலாமா…? சனிக்கிழமை காலையில் கிளம்பிப் போய் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் வந்துடலாமா?”
“ஓவர்நைட் ஸ்டேவா…? கொன்னுடுவாங்க வீட்ல… அப்படியே போ வீட்டுக்குள்ள வராதன்னு அனுப்பிடுவாங்க….”
“வந்துடு… நேரா எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் எங்க அம்மா அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வீட்லயே வச்சுண்டுடறேன்…”
“ஆ.. ஆசையைப் பாரு.. அதைவிட அம்மா அப்பா கிட்ட சொல்லிப் பெண் கேட்க அனுப்பி கல்யாணம் பண்ணிக்கலாமில்ல…?”
“இப்ப சொல்லு. நாளைக்கே பெண் கேட்டு வீட்டுக்கு வரேன்..”
“ஐயயோ… வேணாம்ப்பா. படிப்பு முடியட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.”
“பின்ன… எனக்கென்னவோ தைரியமில்லாத மாதிரி பேசறியே…”
ஷைலஜா பேசாதிருந்தாள். அவன் கடற்கரைக்குள் காரைத் திருப்பி மணலை ஒட்டிய சாலையில் ஓட்டியவாறு பேச ஆரம்பித்தான்.
“சரி. முதல்ல நாம் மகாபலிபுரம் புரோகிராமிற்கு வருவோம். ராத்திரி தங்கலாம். அதுவும் பௌர்ணமி ராத்திரியாகப் பார்த்து போகலாம். கடலும் மணலும் நிலா வெளிச்சத்தில் தகதகன்னு ஜொலிக்கும். ரொம்ப அழகாக இருக்கும். நமக்கு ரொமாண்டிக் மூட் அதிகமாகும்னு சொன்னால் நீதான் பயப்படறியே… என்கூட பௌர்ணமி நிலவில் மகாபலிபுரம் கடற்கரையில் கைகோர்த்துண்டு நடக்கணும்னு தோணலை உனக்கு…? ஆசையாச இல்லை…?”
“தோணறது. ஆசையாக இருக்கு. ஆனால் அதே சமயம் பயமாகவும் இருக்கே…”
“எதுக்கு பயம்…?”
“யாராவது நம்மைப் பார்த்துட்டு அம்மா, அப்பாகிட்டே போய் சொல்லிடப் போறாங்களேன்ற பயம்.”
“சொல்லட்டுமே… எப்படியும் தெரியப் போகிற விஷயம் தானே….?”
“தெரியப் போகிற விஷயம் தான். ஆனால் இப்போ தெரிய வேணாமேன்னு நினைக்கிறேன்.”
“பின்ன… எப்போ தெரியணும்…?”
“படிப்பு முடிஞ்சப்புறம் தெரியட்டும்…”
“சரி… அப்படின்னா எப்படி மகாபலிபுரத்துக்கு வரப்
போற..?”
“அதான் சித்ரா வரேன்னு சொல்லியிருக்காளே… அவகூடப் போறதா சொல்லிட்டு வருவேன்…”
“நாம ரெண்டு பேரும் சந்தோஷமாகப் போகலாம் ஷைலு. சித்ராவெல்லாம் வேணாம்…”
“சித்ரா இல்லைன்னால் என்னால் எப்படி வரமுடியும்?”
“இப்போ எப்படி வந்த…?”
“இப்போ கூட பொய் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்..”
“அதே மாதிரி பொய் சொல்லிட்டு வா. இல்லைன்னா காலைல காலேஜுக்கு வர்ற மாதிரி வா, சாயந்திரம் காலேஜ்லேருந்து திரும்பிப் போற மாதிரி போயிடலாம்….”
“மகாபலிபுரத்துலேர்ந்து அத்தனை சீக்கிரம் வரமுடியுமா என்ன?”
“ஏன் முடியாது…? மகாபலிபுரம் என்ன அத்தனை தூரத்திலா இருக்கு… ரெண்டு மணி நேர டிரைவ், அவ்வளவு தானே…?”
“ஆனால் சித்ராவை விட்டுட்டு வர முடியாதே. அவ வரேன்னு சொல்லியிருக்காளே… என் கார்லயே போயிடலாம்னு வேற சொல்லியிருக்காளே…?”
“ஏன் நம்ம கிட்ட கார் இல்லையா…?”
“இருக்கு. ஆனால் அவள் வரேன்னு சொல்லியிருக்கிற போது எப்படி விட்டுட்டுப் போக முடியும்..?”
“உன்னை யார் அவகிட்ட போய் மகாபலிபுர புரோகிராமைப் பற்றி சொல்லச் சொன்னது…?”
“ஐயோ… அவகிட்ட சொல்லாமல் வந்தால் எப்படி…? எங்கம்மா போன் பண்ணிக் கேட்டால் ஷைலஜா இன்னிக்குக் காலேஜுக்கு வரலைன்னு சொல்லிட மாட்டாளா…?”
“அதுக்காக அவளைக் கூட்டிண்டு போகனுமா… எனக்குப் பிடிக்கலை…”
“வேற வழி இல்லை மது. அவள் நமக்குத் தொந்தரவாக இருக்க மாட்டா…”
“சரி. என்னவோ செய். எப்போ போகலாம்னு மட்டும் சொல்லு..”
“இந்த சனிக்கிழமை….”
“என் காரா இல்லை அவள் கார்ல போறமா..?”
“அவள் கார்லயே போயிடலாமே…”
“எங்க மீட் பண்றோம்…?”
“காலேஜ் வாசல்ல. சரியா ஒன்பது ஒன்பது மணிக்கு.ok.?”
“Ok!”
1 Comment
♥️♥️♥️♥️