வாகினி – 19| மோ. ரவிந்தர்

 வாகினி – 19| மோ. ரவிந்தர்

வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பூமி இந்நேரம் சற்றுத் தணிந்திருந்தது.

வானத்தில் தங்கியிருந்த மேகங்கள் எல்லாம் நீலம் பூத்த பூ கடல் போல் பூத்து கலைந்துக்கொண்டிருந்தன. ஆதவன் மட்டும் தனது வேலையை முடித்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்துடன் தயங்கி தயங்கி மறைந்து கொண்டிருந்தான்.

ஒத்தையடி பாதை வழி. இருபுறமும் கருவேல மரங்களும், தென்னை, பனை மரம் என இடைவிடாது தூரம் வரையில் அடர்ந்து பச்சை பசேலெனக் காணப்பட்டது. ஆங்காங்கே பறவைகளின் சத்தம் பெரிதாக மனிதர்களின் காதுகளைக் கைது செய்ய ரீங்காரமாக ஒலித்துக்கொண்டிருந்தது. பல விதமான விலங்குகளின் கூடாரமாகக் கூட இருக்கக்கூடும் இந்த இடம்.

புதியவர்கள் இந்தப் பாதையில் நுழைந்து தொலைந்தாலே அவ்வளவுதான். அவர்களைக் கண்டுபிடிப்பது மிகக் கடுமையான விஷயமாகத்தான் இருக்கக்கூடும். காட்டுக்குள் ஒரு திகில் பயணம் என்று சொல்வார்களே அப்படி இருந்தது இந்தக் காட்சியமைப்பு.

மனிதர்கள் யாரும் இல்லாத இந்தப் பாதையில் கஸ்தூரி, தனது தாய் பர்வதம்மாள் வீட்டிற்குச் சென்றுவிட்டு இந்தப் பாதையில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.

‘ச்சே, அம்மா கிட்ட காசு கேட்டது தப்பா போச்சு. காசு இல்லைன்னு ஒரே வார்த்தையிலே முடிக்க வேண்டியதுதானே. தேவையில்லாம இப்படியொல்லாமா பேசுவாங்க. பாவம் அந்த மனுஷன நாம படுத்துவது போதாதுன்னு, அம்மா வேற வா’ என்று ஏதோ ஒரு விஷயத்தை மூளைக்குள் போட்டு முணுமுணுத்துக் கொண்டே தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள், கஸ்தூரி.

அவள் கால்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த செப்பலும், அந்தக் கால் கொலுசும் அவள் புத்தியை மறைத்து பாதைக்கு ஒரு சங்கீதத்தைத் தருவதைப் போலப் புழுதியை எல்லாம் கிளப்பி விட்டுக் கொண்டே வந்தது.

அந்த நேரம், தனஞ்செழியன் கார் தூரத்தில் இருந்து கிளம்பி வந்து கஸ்தூரி காலுக்குத் தடைபோட்டு அவள் அருகே நின்றது.

கஸ்தூரி, தனது யோசனையை எல்லாம் நிறுத்திவிட்டு சடாரென அந்தக் காரை உற்றுப் பார்த்தாள். அந்தக் கார் எதற்காகத் தன்னைத் தடுத்து நிறுத்துகிறது. அப்படி? அந்தக் காருக்குள் யார் இருக்கிறார்கள் என்று உற்றுப் பார்த்தாள்.

தனஞ்செழியன், அந்தக் கார் கதவைத் திறந்து கொண்டு பொறுமையாக வெளியே வந்தார்.

என்னதான் கஸ்தூரிக்கு, மீனா தோழியாக இருந்தாலும் அவள் வீட்டுக்கு அடிக்கடி சென்று இருந்தாலும். இதுநாள் வரை தனஞ்செழியனிடம் ஒருமுறைகூட முகம் கொடுத்து பேசியதில்லை.

‘இந்த மனிதர் எதற்காக இப்படி இடைமறித்து நிற்கிறாரோ’ என்று பெரும் சங்கடத்துக்கு உள்ளானாள், கஸ்தூரி.

“என்னங்க, நான் வந்து மீனாவோட ஹஸ்பண்ட் உங்களுக்கு என்ன தெரியுதா…?” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார், தனஞ்செழியன்.

“நல்லாவே தெரியும். சொல்லுங்க” என்று சாதாரணமாகக் கேள்வி எழுப்பினாள், கஸ்தூரி.

“அது ஒண்ணும் இல்லைங்க. அன்னைக்கு நீங்க மீனா கிட்ட உங்களுக்குப் பணம் தேவைப்படுதுன்ணு கேட்டுட்டு இருந்தீங்க. அவளும் எடுத்த எடுப்பிலேயே, உங்களுக்குப் பணம் இல்லைன்ணு சொல்லிட்டா. அவ அப்படிச் சொன்னதிலிருந்தே எனக்குக் கஷ்டமா ஆயிடுச்சு. அதுக்கப்புறமா நான் உங்களைப் பாக்கவே முடியல.

இப்ப பணத்தைக் கொண்டு வந்து இருக்கேன். இந்தாங்க, இதுல 30 ஆயிரம் பணம் இருக்குத் தேவைப்படும் போது எனக்குத் திருப்பிக் கொடுத்தா போதும்” என்று கூறிவிட்டு கஸ்தூரி எதிரே கையை நீட்டினார், தனஞ்செழியன்.

இங்கு நடக்கும் அனைத்து காட்சிகளையும், காரின் முன் சீட்டில் இருந்து கவனித்து மௌனமாகச் சிரித்துக்கொண்டிருந்தான், டிரைவர் நல்லதம்பி.

திடீரெனத் தனஞ்செழியன் கையிலிருந்த பணத்தை அப்படி நீட்டியதும். கஸ்தூரியின் மனம் படபடக்கத் தொடங்கியது. இவரிடத்தில் ஒரு வார்த்தை நான் சரியாகப் பேசியதில்லை. இவரை யார் பணம் கேட்டது. எதற்காக இவர் இப்படி ஒரு அநாகரீகமான செயலில் ஈடுபடுகிறார்’ என்று நினைத்துக்கொண்டாள், கஸ்தூரி.

“பணம் தேவைப்பட்டது என்னவோ உண்மைதாங்க! ஆனா, எனக்கு அது வேறொரு இடத்தில் கிடைச்சிடுச்சு. உங்கள் பணம், உங்க கிட்டயே இருக்கட்டும். என்ன மன்னிச்சிடுங்க.” என்று பணத்தைக் கையில் வாங்க மறுத்து விட்டாள், கஸ்தூரி.

அதே நேரம், இந்தப் பாதையில் சற்றுத் தொலைவில் இருந்து கஸ்தூரியின் கணவர் ‘சதாசிவம்’ சைக்கிளில் மெல்ல அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.

கஸ்தூரி யாரோ ஒரு ஆண்மகனிடம் பேசிக்கொண்டிருப்பது சதாசிவம் பார்வையில் தெளிவாக விழுந்தது. யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அந்த இடத்திற்கு வர சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்தினார், சதாசிவம்.

“ஏங்க, நீங்க ரொம்பக் கஷ்டத்தில் இருக்குறது எனக்கு நல்லாவே தெரியுதுங்க. இந்தப் பணத்திற்கு வட்டி கூடத் தேவையில்லை. உங்களால எப்ப திருப்பித் தர முடியுமோ அப்ப கொடுத்தா போதும். இந்தாங்க இதைப் பிடிங்க” என்று மீண்டும் வற்புறுத்தினார், தனஞ்செழியன்.

கஸ்தூரிக்கு, தனஞ்செழியனின் செயல் எரிச்சல் கூட்டும் விதமாக இருந்தது.

“இங்க பாருங்க, இந்தப் பணம் எனக்குத் தேவைப்படல. அப்படி எனக்குத் தேவைப்பட்டா உங்கள் மனைவி மூலமா வட்டிக்கு வாங்கிக்கிறேன். அவ கிட்ட கொடுங்க. வீதியிலே நின்ணு இப்படியெல்லாம் நடந்துக்காதீங்க” என்று கூறிவிட்டு கோபத்துடன் வேகமாக நடக்க ஆரம்பித்தாள், கஸ்தூரி.

தனஞ்செழியன் ஏதோ ஒரு பெரும் எண்ணத்துடன் வந்தான். ஆனால், இப்படி ஒரு செயலை கஸ்தூரியிடம் எதிர்பார்த்திருக்க மாட்டான். எப்படியும் இவளை மடக்கி விடலாம் என்று நினைத்தான்.

ஆனால், தற்போது அது நடக்காமல் போய்விடக் கையில் வைத்திருந்த பணத்தை இடது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, காரில் ஏறி பாதையில் போய்க் கொண்டிருந்த கஸ்தூரியை ஒரு அசுர பார்வையில் பார்த்துக்கொண்டு சென்றான்.

சதாசிவம், இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேருவதற்குள் மூவரும் கலைந்த மேகங்களாக அந்தப் பாதையில் இருந்து கலைந்து சென்றனர்.

சதாசிவம், கஸ்துரி யார்கிட்ட நின்ணு பேசிட்டு போறா? அது யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் பயணத்தை வேகப் படுத்தினார்.

– தொடரும்…

< பதினெட்டாம் பகுதி | இருபதாம் பாகம் >

கமலகண்ணன்

3 Comments

  • தனஞ்செழியின் வஞ்சக வலையில் இருந்து கஸ்தூரி தப்பிப்பாள் என்று நம்புகிறேன்…சதாசிவம் தன் மனைவி மீது சந்தேகப்படாமல் இருக்க வேண்டும்.மகிழ்ச்சி நண்பரே ! வாழ்த்துக்கள்.

  • மோ. ரவிந்தர் திறம்பட எழுத்தாளர்தான் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு காட்சி அமைப்பு அழகு! எண்ணற்ற கேள்விகளுடன் போய்க்கொண்டிருக்கிறது ‘வாகினி’ நெடுந்தொடர். புறப்பட்டு நேரம் அழகு போகின்ற தூரம் ? கேள்விக்குறியாய் கேள்விகள் வாழ்த்துக்கள் மோ. ரவிந்தர்!!

  • வாசித்துக் கொண்டே இருக்கலாம் மனிதர்களின் குணங்களையும் அவருடைய செயல்களையும் அழகாக பதிவு செய்து கொண்டே இருக்கிறார் மோ. ரவிந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...