காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்

தஞ்சை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தூண்களில் ஒருவராக விளங்கியவர் துளசி அய்யா வாண்டையார். இவர் பெரும் நிலக்கிழார் ஆவார். காங்கிரஸ் கட்சியில் ஆரம்பம் முதல் உறுப்பினரான துளசி அய்யா வாண்டையார் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பர் ஆவார். தீவிர காந்தியவாதியான அவர் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

a.v.v.m sri pushpam college in thanjavur

சமூக அக்கறையுள்ள அவர் தஞ்சையில் பூண்டி புஷ்பம் கல்லூரியைத் தொடங்கி அம்மாவட்ட மாணவர்களுக்குக் கல்வி பெற உதவியுள்ளார். மாணவர்களிடம் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களைப் பட்டதாரியாக்கிய பெருமை இவருக்கு உண்டு. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், 1996-2001 வரை தஞ்சை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர்.

மக்களவை உறுப்பினராக இருந்தகாலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதும் பள்ளிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கே பயன்படுத்தினார். இதன் மூலம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பல பள்ளிகளுக்குப் புதிய கட்டடம் கிடைத்தது.

ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய, ஆன்மிக நாட்டம் உடையவர். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் துளசி அய்யா வாண்டையார் இன்று காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!