வரலாற்றில் இன்று – 25.03.2021 சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம்
கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும் மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நார்மன் எர்னஸ்ட் போர்லாக்
பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அமெரிக்காவின் கிரெஸ்கோ நகரில் பிறந்தார்.
இவர் மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் 20 ஆண்டுகளுக்குள் அதிக விளைச்சல் தரும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குட்டையான (Semi Dwarf) கோதுமை பயிர் ரகங்களை உருவாக்கினார்.
இவற்றை மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தானிலும் அறிமுகம் செய்ய வழிகாட்டினார். உணவு பாதுகாப்பை மேம்படுத்திய இவரது செயல்பாடு பசுமைப் புரட்சி எனப் பாராட்டப்பட்டது. உணவு உற்பத்தியை பெருக்கி, உலக அமைதிக்கு வித்திட்டதற்காக 1970ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம், அதிபரின் ஃபிரீடம் பதக்கம், நோபல் பரிசு ஆகிய 3 உயர்ந்த விருதுகளை பெற்றார். இந்தியாவின் பத்ம விபூஷண் விருதும் பெற்றவர். நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.
அடால்ஃப் எங்லர்
ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர், ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் கஸ்டவ் அடால்ஃப் எங்லர் 1844ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த ஸாகன் (தற்போது போலந்தில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.
1879ஆம் ஆண்டு இவர் பல்லுயிர் நில அமைப்பியல் (Geology on Biodiversity) காரணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு உயிர் புவியியல் பகுதிகளையும் (Biogeographical Regions) வரையறுத்தார்.
இவருடைய தி நேச்சுரல் பிளான்ட் ஃபேமிலீஸ், தி பிளான்ட் கிங்டம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 1881ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாள் இறுதிவரை பொட்டானிக்கல் இயர்புக்ஸ் ஃபார் சிஸ்டமாடிக்ஸ் என்ற இதழை வெளியிட்டு வந்தார்.
லின்னேயன் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகளை பெற்றுள்ளார். தாவர வகைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு இவரது பெயரில் பதக்கம் வழங்கி வருகிறது.
தாவரவியல் உலகின் முன்னோடியாக கருதப்படும் அடால்ஃப் எங்லர் 1930ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1857ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு (phonautograph) செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
1931ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி இந்திய இதழியலாளரான கணேஷ் சங்கர் வித்யார்த்தி மறைந்தார்.