எழுத்தாளர் இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது
இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று பிறந்தார் இவர். பெற்றோர் சூட்டிய பெயர் அண்ணாமலை. தற்போது அரசுப் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட இமையம், ‘கோவேறு கழுதைகள்’ , ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘மண் பாரம்’, ‘கொலைச்சேவல்’, ‘சாவு சோறு’, ‘வீடியோ மாரியம்மன்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ ஆகிய தொகுப்புகளாக வெளியாகியிருக்கின்றன.
இவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் 1994ல் வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய போக்கின் துவக்கத்தை இந்த நாவல் சுட்டிக்காட்டியது.
செல்லாத பணம் நாவலின் கதை என்ன?
சற்று வசதியான வீட்டுப் பெண்ணான ரேவதி, ஆட்டோ ஓட்டுனரான ரவி என்பவனை விரும்பித் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், ரவியால் தினம் தினம் சித்ரவதைக்கு உள்ளாகிறாள். ரேவதியின் பெற்றோருக்கு ரவியைச் சுத்தமாகப் பிடிக்காது. ஒரு நாள் ரேவதி தீக்காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். தற்கொலை செய்தாளா, ரவி கொளுத்தினானா, தெரியாமல் தீ பிடித்துவிட்டதா என்ற விவாதங்கள் ஒரு புறமிருக்க, ரவிதான் தீ வைத்துக் கொளுத்தினான் எனச் சொல்ல வேண்டுமென ரேவதியின் பெற்றோர் விரும்புகின்றனர். எப்படியாவது ரவியை வஞ்சம் தீர்க்க விரும்புகின்றனர் ரேவதியின் குடும்பத்தினர்.
“செல்லாத பணம் என்ற படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்தில் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. நாவல் சமூகப் பிரச்சனைகளைப் பேசும். அவற்றை எப்படிப் பேசுகிறதோ அதில்தான் இலக்கியம் தரும் அனுபவத்தின் முழுமை இருக்கிறது” என இந்த நாவலின் பின்னுரையில் குறிப்பிடுகிறார் தங்க. ஜெயராமன்.
இதற்கு முன்பாக இமையம் இந்திய அரசு வழங்கிய இளநிலை ஆய்வு நல்கை, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது உள்ளிட்ட கௌரவங்களைப் பெற்றிருக்கிறார்.
“இமையத்தின் கதைகளின் சிறப்பு இதுதான். இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள், நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்மாகத் தேர்ந்தெடுத்த சமூக தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணியிக்கிறது.கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு” என இமையத்தின் படைப்புகள் குறித்து குறிப்பிடுகிறார் இந்தியாவின் முக்கியமான மொழியியலாளர்களில் ஒருவரான டாக்டர் இ. அண்ணாமலை.
இந்த விருது குறித்து பிபிசியிடம் பேசிய இமையம், “இது எனக்கு காலதாமதமாக வழங்கப்பட்ட அங்கீகாரம். எனது முதல் நாவலான கோவேறு கழுதைகளுக்கே கிடைக்க வேண்டியது. ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய நாவலுக்குக் கிடைக்கும் என்பார்கள். கிடைக்காது. இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. தேர்வுக் குழுவுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
இவரது கோவேறு கழுதைகள் நாவல் Beast of Burden என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் நாவல், கதா நிறுவனத்தால் அதே பெயரில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.