தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 12 | ஆரூர் தமிழ்நாடன்
அறிவானந்தர் சாகடித்துவிட்டார்!
அகிலாவிற்குள் மீண்டும் மனச்சலனம் புகுந்துகொண்டது.
எதற்காக அறிவானந்தரிடம் காதல் குறித்துப்பேசினேன். அவர் இதயத்தில் யார் இடம்பிடித்தால் எனக்கென்ன? அவர் திருமணத்தைப் பற்றி எனக்கென்ன கவலை? அவர் யாரையாவது திருமணம் பண்ணிக்கொள்கிறார். அல்லது பண்ணிக்கொள்ளாமலே போகிறார். அந்தக் கவலை எனக்கு எதற்கு? அவர் இதயத்தில் காதல் உணர்ச்சி பொங்கினால் என்ன? பொங்காவிட்டால்தான் என்ன? அவரது காதல் அனுபவங்கள் பற்றி நான் ஏன் கேட்கவேண்டும். அவரைப்பறி நான் ஏன் அக்கறைகாட்டவேண்டும்? எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? நான் ஏன் அறிவானந்தர் பால் இத்தனை ஆர்வம் காட்டுகிறேன். எனக்கு என்ன ஆச்சு? பித்துப் பிடித்துவிட்டதா? இல்லை என் மனம் பேதலித்துவிட்டதா?’
என்றெல்லாம் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.
அவளுக்கு அவள் மீதே கோபம் வந்தது.
நான் சரியில்லை. என் போக்கு சரியில்லை. நான் வெகுவாக மா றிவிட்டேன்.
ஆன்மீகம் போலித் தனமானது. சாமியார்கள் நம்பத்தக்கவர்கள் அல்ல. அவர்கள் சூதாட்ட வியபாரிகள் என்றெல்லாம் அழுத்தமாக நம்பியும் பேசியும் வந்த நான், இப்போது அறிவானந்தரின் ஆசிரமத்தில் ஐக்கியப்பட்டுக்கிடக்கிறேனே.
இது என்ன வேடிக்கை?
என் புத்தி பிசகிவிட்டதா?
என்னை அறிவானந்தர் மெஸ்மரைஸ் பண்ணிவிட்டாரா?
என்றெல்லாம் தனக்குல் கேள்விகளெழுப்பிக்கொண்டாள்.
பின்னர் அவளே, ச்சே… ச்சே… நான் எங்கும் சறுக்கவில்லை. எந்தவலையிலும் விழவில்லை. இது எனது தேடலின் விளைவு. நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். அதே சமயம், ஏமாற்றுக்காரர், ஆன்மீக வியபாரி என நான் கணித்திருந்த அறிவானந்தர் அப்படிப்பட்டவர் இல்லை என்பதை கண்டறிந்திருக்கிறேன்.
அவரது ஆன்மீகம், சமூக உயர்வுக்கான பாதை. அன்பு அறனும் கலந்த உலகம் அவருடையது. இதை நான் கண்டறிந்திருக்கிறேன். அவர் போகிற பாதை நிம்மதிக் கடலில் சங்கமிக்கக் கூடியது. இதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.
ஒரு உயர்ந்த மனிதரை வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவரது மரியாதையான நட்பைப் பெற்றிருக்கிறேன். இது அற்புதமான வாய்ப்பு’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். அப்போது தமிழ்செல்வன் லைனில் வந்தான்.
’ஏய், எப்படி இருக்கே செல்வா?’ என்றாள் அகிலா உற்சாகமாக.
‘நல்லா இருக்கேன். நீயும் நல்லா இருக்கே’ என்றாண்ச் எல்வா.
‘நான் நல்லா இருக்கேன்னு நீ எப்படிச்சொல்றே?’ என்றாள்.
தமிழ்செல்வனோ ‘னான் சொல்லலை. உன் குரல் சொல்லுது’ என்றவன்…’அந்த சாமியார் என்ன சொல்றார்? ஓவரா பீலா விட்றாரா?’ என்று கேட்டான்.
அகிலாவோ ‘செல்வா அந்த அறிவானந்தர் சாதாரண ஆள் இல்லை. அபூர்வமான அறிவுஜீவி. ரொம்ப உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டிருக்கார். அவரோட இந்த அறவழிச்சாலை, மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பியதா இருக்கு. நாம நினைச்சமாதிரி இவர் இல்லை. இவர் மேம்பட்டவர்’ என்று அடுக்கிக்கொண்டே போனாள்.
இடைமறித்த தமிழ்ச்செல்வன் ‘எனகு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அகிலாவா இப்படி பேசறது?’ என்றான் ஆதங்கமாய்.
அகிலாவோ ‘இல்லை செல்வா, நீ அவரை ஒருமுறை சந்திச்சா நீயும் இப்படிதான் பேசுவே’ என்றாள்.
’ஆமாம் உள்ளபடியே அறிவானந்தர் திறமையான ஆள். எப்படின்னா பாமரர்களை மட்டுமல்ல; கூர்மையான அறிவுகொண்ட உன்னையும் மூளைச்சலவை செய்திருக்கார் அவர். உன்மேல் பரிதாபப்படுகிறேன். அந்த அறிவானந்தர் கில்லாடியா இருப்பார் போலிருக்கு. உன் போன்ற அறிவுஜீவியையே அவர் முட்டாளாக்குகிறார் என்றால், அந்த அறிவானந்தரை அறிவுலகின் சத்ரு என்றுதான் சொல்லவேண்டும் ’ என்றான் சற்றே காட்டமாக.
அகிலாவுக்கு சுரீர் என கோபம் வந்தது.
‘இல்லை செல்வா, உண்மை தெரியாம அறிவானந்தரைப் பத்தித் தப்பா பேசாதே. அவர் ஒரு மாமனிதர். ஆன்மீகத்தின் பேரால் அன்பையும் அறத்தையும் வளர்க்கிறார். எதையும் நிர்தாட்சண்யமாக நிராகரிக்காதே செல்வா. அது பகுத்தறிவல்ல’ என்றாள் கறார் குரலில் அகிலா.
ஒரு கணம் அமைதி காத்த தமிழ்ச்செல்வன் ‘அகிலா, நான் சொன்னால் கோபப்படுவாய். பரவாயில்லை. என்னைப் பொறுத்தவரை அறிவானந்தர் ஒரு ஆன்மீக ஆபத்து. புரட்சி மனோபாவம் கொண்ட உன்னையே அவர் தலைகீழாய் மாற்றியிருக்கிறார் என்றால், அவரை ஒரு வீரிய விபரீதம் என்றுதான் சொல்லவேண்டும். ஆன்மீக உலகம் மூடநம்பிக்கைகளால் உருவான கற்பனா உலகம். அங்கே அறிவுக்கு வேலையில்லை; புரட்சிக்கு வாசல் இல்லை. ஆன்மீகத்தின் மூலம் அவர் அறத்தையும் அன்பையும் வளர்க்கிறார் என்கிறாய். இது விஷத்துக்குள் வைத்து மருந்தைக் கொடுக்கிறார் என்பது போலிருக்கிறது. எனக்குப் புரிந்துவிட்டது. அறிவானந்தர் அகிலா என்கிற புரட்சிக்காரியைச் சாகடித்துவிட்டார். உன் சுயம் அழிக்கப்பட்டுவிட்டது. நீ பழைமைப் பதுமையாக மாற்றப்பட்டுவிட்டாய். உன் மண்டையோட்டுக்குள் மெளடீகம் புகுத்தப்பட்டுவிட்டது. எதிரி நாட்டுக்கு உளவு பார்க்கப்போனவன், அந்த நாட்டின் பிரஜையான மாதிரி ஆகிவிட்டது உன் கதை. உனக்காக வருத்தப்படுகிறேன்’ என்றபடி லைனைத் துண்டித்துவிட்டான்.
‘செல்வாவா இப்படி…அவனா என் இதயத்தை உடைக்கிறான் ’ என அதிர்ச்சியில் உறைந்துபோனாள் அகிலா.
(தொடரும்…)