நிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா

 நிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா

Men talk concept. Two young male friend sitting on sofa and chatting at home. Multiracial people friendship.

“என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என் உயிர்நின்னதன்றோ”

ஜெகன் நாதன் வாசலில் செருப்பை கழற்றி விட்டார்.

ஏற்கனவே சந்தீப் விஷயம் சொல்லிதான் கூட்டி வந்திருந்தான். மித்ராவும் சொல்லியிருந்தாள்.

அவர்களை மாதிரி தான் எதுவும் செய்யக் கூடாது என்று புரிந்திருந்தார் ஜெகன். அவர் காரியவாதி. குள்ளநரி. காசுக்காக என்ன வேஷம் வேண்டுமானாலும் போடலாம் என்று நினைக்கும் நரித்தனம் மிகுந்தவர். பின்னிருந்து முதுகில் குத்தியே பழக்கம்?

மித்ரா சந்தீப் காதல் பற்றி அறிந்ததுமே அவர் சாய் நாதனப் பற்றி விசாரித்தார். வசு பற்றி விஷ்யம் தெரிந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. யாருக்குமே அவள் எங்கு இருக்கிறாள்? என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை. மனைவியைப் பிரிந்து இருக்கிறார் என்ற அளவில்தான் விஷயங்கள் தெரிந்திருந்தது.

காசுதான் அவரின் கண். திருவான்மியூரில் வீடு ஐந்து சென்ட். அது போக பல்லாவரத்தில் இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். வங்கியில் அவர் பெயரில் நாலைந்து டெபாசிட்கள் இருக்கிறது என்ற விஷயமே திருப்தி தருவதாக இருந்தது.

ஜெகன் ஒரு ஓட்டைப் பாத்திரம்.

எந்த வருமானமும் இல்லை. வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த அவரை தாய் மாமன் துபாய் அழைத்துச் சென்றார். அங்க சாதாரண கார் டிரைவர் வேலைதான். எல்லாம் தாறு மாறாய் செலவு. வீட்டுக்கு ஒரு பைசா அனுப்புவதில்லை. அவருக்கு அம்மா, இரண்டு தங்கைகள். அப்பா இல்லை. வறுமையில் வாழும் குடும்பம். இவர் துபாயில் வேலை பார்த்து கடனை அடைப்பார், தங்கைகளுக்குத் திருமணம் ஆகும் என்று நம்பிய அம்மா, கூட்டி வந்த மாமா எல்லாரும் ஏமாந்து போனார்கள்.

குடும்பத்திலிருந்து முழுதாக ஒதுங்கி, கூட்டி வந்த மாமாவையும் ஒதுக்கினார். அங்கிருந்து சவுதி சென்று விட்டார். அங்கும் எதேதோ வேலை. எதுவும் நிரந்தரமில்லை. அந்த இடத்திலேயே தன்னுடன் வேலை பார்த்த வட இந்தியனின் அக்காவை மணந்து கொண்டார். அவள் கொண்டு வந்த பணத்தை வைத்து ஒரு கமிஷன் வியாபாரம் ஆரம்பித்தார். எதோ சுமாரான வருமானம். இரண்டு பெண்கள். படிக்க வைத்தார். மித்ரா கல்லூரி வரும்போது அவருக்கு அங்கு வியாபாரம் நஷ்டம். இருப்பதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வந்து விட்டார்.

மொத்த பணத்தையும் டெபாசிட் செய்து அதிலிருந்து வரும் வட்டிதான் ஜீவன்.

மித்ராவை அவள் அம்மாவின் ஆண் நண்பர் படிக்க வைத்தார். அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள். பெரிய பெரிய நிறுவனங்களுக்குவெளி நாட்டு விருந்தினர்கள் வரும்போது இவளுக்குப் போன் செய்வார்கள். அவர்களுக்குத் தேவையாண பெண் தோழிகளை அனுப்பி வைப்பது இவள் வேலை. நிறைய கல்லூரி மாணவிகள் பகட்டாகச் செல்வு செய்ய பாக்கெட் மணிக்காக கால் கேர்லாக வருவார்கள்.

மித்ரா கூட அப்படிப் போய்தான் தன் மேல் படிப்பு செலவுகள், தன் மேக்கப் சமாசாரங்களை கவனித்துக் கொண்டாள். அது மாதிரி ஒரு நிறுவனத்திற்குச் செல்கையில்தான் சந்தீப்பின் அறிமுகம் கிடைத்தது. பார்த்த முதல் பார்வையிலேயே அவளின் கோதுமை நிறம் அவளை வீழ்த்தியது. குழந்தையாய் கொஞ்சிக் கொஞ்சிபேசும் பாவனை, நுனி நாக்கு ஆங்கிலம் அவனை மெய் மறக்க வைத்தது. அவள் தொட்டுத் தொட்டுப் பேசுவாள். சந்தீப் அவளை மெய்யாக நேசித்தான். அவள் காசைப் பறிக்க விரும்பி பழகினாள்.

வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று விரும்பி அதன் படி நறுவிசாக. கௌரவமாக வாழ்பவன் சந்தீப். சாய் வளர்ப்பு. ஆனால் எப்படியும் வாழ்லாம். காசு மட்டுமே பிரதானம் என்று வாழ்வது மித்ராவின் குடும்பம். அவளைப் பற்றித் தெரிந்தவர்கள் சந்தீப்பிற்காக பரிதாபப் பட்டார்கள்.

உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்று நினைத்தவர்கள் அவனுக்கு சில மொட்டைக் கடிதம் கூடப் போட்டார்கள். அவன் அதைப் பொறாமை என்று நினைத்தான். நிறமும், அழகும் அவனை முழுதாக மயக்கியிருந்தது. அதை விட்டு விலக முடியாமல் தவித்தான் சந்தீப். அதுதான் அவனை சாய் நாதனிடம் சண்டையும் போட வைத்தது,

இந்தக் கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஜெகன் நினைத்தார். அதனால்தான் உடனே கிளம்பி வந்தார். சந்தீப் வீட்டில் இருந்தான். அவரைப் பார்த்த்தும் விழித்தார் சாய்.

“மித்ராவோட அப்பா வந்திருக்கார்” மெல்லிய குரலில் சொன்னான் சந்தீப்.

“ஓ. உள்ள வரச் சொல்லு.”

“வணக்கம்” ஜெகன் சோபாவில் அமர்ந்தார்.

“உங்களை மாதிரி பெரிய மனுஷாளைப் பார்க்க வரப்போ வெறு கையோடு வரக் கூடாது. என்று பழப் பையை நிட்டினார்.

“எதுக்கு இந்தப் ஃபார்மாலிடீஸ் எல்லாம்” என்று அதை வாங்கி சுக்கானிடம் நீட்டினார். சுக்கான் காஃபி கொண்டு வந்தான்.

“சுக்கான் இவருக்கும் சேர்த்து சமையல் செஞ்சுடு”

“நிச்சயம் ஆகற வரைக்கும் சம்பந்தி வீட்டுல கை நனைக்கக் கூடாது”

சட்டென்று வந்த சுக்கானின் பதில் ஜெகனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஆனால் சிரித்து ஆமாமா என்றார்.

“இங்க பேசி முடிவு செய்ய எதுவும் இல்லை. நாள் நல்ல நாள் குறிக்கணும். அதனால ஒரு கேசரி கிளறி வடை போடறேன். சாப்பிடுங்க. சீக்கிரம் கல்யானத் தேதி குறிங்க” என்ற படி சுக்கான் உள்ளே போனான்.

“யார் இது?”

“என் தம்பி” சட்டென்று பதில் அளித்தார் சாய் நாதன்.

“ஓ அப்போ உங்க சொத்துல அவருக்கும் உரிமை உண்டா?” என்றார் ஜெகன்.

“அவனுக்கு உரிமையானதுதான் இந்தச் சொத்து. அவன் சம்பளத்து சேமிப்பைப் போட்டுத்தான் இந்த இடம் எல்லாம் வாங்கினது. வீடு கட்டினது. நான் ஒத்தைப் பிள்ளைன்னு அப்பா அவனை தத்து எடுத்துட்டு வந்தார்.”

அதில் ஜெகன் முகம் மாறினார்.

அப்பா எதற்கு இப்படிப் பேசுகிறார் என்று சந்தீப்பிற்குத் தெரிந்தது.

அமைதியாக நடப்பதைக் கவனித்தபடி நின்றான்.

லேசான மௌனம் அந்த இடத்தில். சுக்கான் எட்டிப் பார்த்தான்.

“என்னத்துக்கு இந்த மௌனம்? பேச வந்துட்டு இப்படி கம்முனு உட்கார்ந்தா எப்படி? எஜமான் பேசுங்க”

“என்னடா பேசறது?”

“அட எல்லாம் நான் சொல்லித் தரனுமா? என்ன எதிர்பாக்கிறே? வரதட்சனை, சீரு எல்லாம் பேசிடு. மனசுல வச்சுகிட்டு அப்புறம் மறந்துட்டேன்னு சொல்லக் கூடாது”

“என் பொண்ணை நான் படிக்க வச்சிருக்கேன். எதோ வெறும் கழுத்தோட அனுப்பாம பத்து பவுன் போடறேன் மாப்பில்ளைக்கு துணிமணி”

“அதெல்லாம் இல்லாமத்தான் எங்க பையனை வச்சிருக்கோமாக்கும்” சுக்கான் நொடித்தான்’

அவன் பேசுவதைத் தடுக்காமல் எல்லோரும் வேடிக்கை பார்த்தது ஜெகனுக்கு வெறுப்பாக இருந்தது. முகத்தை சுளித்தார்.

“ஏன் அவரே பேசறார். நீங்க பேசலாமே?”

“இந்த வீட்டுல அம்பது வருஷமா இருக்கான். ஒவ்வொரு அணுவையும் அறிவான். இந்த வீட்டுப் பழக்க வழக்கம். சம்பிரதாயம், மனுஷாளுடைய குண நலன், ருசி எல்லாம் அவன் அறிந்த அளவுக்குக் கூட யாரும் அறிய மாட்டார்கள். அவன் எங்களுடைய மனசாட்சி.” சாய் நாதன் குரலில் கடுமை.

“சாரு ந்தா பாரு, எங்க வீட்டுக்கு வர பொண்ணு காசு, பணம், நகை எதுவும் கொண்டு வர வேண்டாம். நல்ல பண்பு, அடக்கம், அன்பு, பெரியவங்க கிட்ட மரியாதை, குணம்னு வந்தா போதும் .இந்த வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. அது குலையாம நடந்தாப் போதும். புன்னகைதான் பொன் நகை. எங்க சாய் எஜமானுக்கு ஒரு அன்பான மகளா, எனக்கு ஒரு நல்ல தாயா, எங்க சந்தீப்புக்கு எல்லாம் சேர்ந்த ஒரு நடமாடும் தெய்வமா வந்தா போதும். இந்த வீட்டில் விளக்கேத்த மகாலஷ்மி வரணும். அடக்கமில்லாத ஒரு பஜாரி வர வேணாம். உங்க மகளுக்கு நல்லதா நாலு புடவை வாங்கித் தந்து அனுப்புங்க. அது போதும்.” சுக்கான் பேச்சில் சாய் நாதனின் உதட்டில் புன்னகை விரிந்தது. சந்தீப் தன் சிரிப்பை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டான்.

ஜெகன் கடு கடுத்த தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகைத்தார்.

“பாருங்க எங்க வீட்டுப் பத்ததி வேற. ஆனா நீங்க ரெண்டு பொண்ணு பெத்துருக்கீங்க. அதனால் உங்க பொண்ணை கட்டிய புடவையோட அனுப்பி வைங்க, கல்யாணச் செலவு ஆளுக்குப் பாதி. நீங்க எதாச்சும் ஒரு செலவானும் செய்யணும்.” சுக்கானுடைய பேச்சில் அனைவருக்கும் திருப்தி. ஜெகன் சாய் முகத்தைப் பார்த்தார்.

“சுக்கான் சொல்றதுதான் எங்க முடிவும்”

“அப்போ?” ஜெகன் இழுத்தார்.

“வீட்டுக்குப் போங்க, கலயாண ஏற்பாடுகளைக் கவனிங்க. அடுத்த முகூர்த்த்த்திலேயே கல்யாணம் வச்சுடலாம்.”

“அடுத்த முகூர்த்தமா?”

“நீங்களா செலவு செய்யறீங்க. எங்க சாய் எஜமாந்தான் செய்யப் போகுது. ஜம்முனு மாப்பிள்ளை வீடு மாதிரி வாங்க.” என்றான் சுக்கான்.

ஜெகன் எழுந்தார்.

பேச எதுவும் இல்லை என்று தோன்றியது. சந்தீப் முகத்தைப் பார்த்தார். அவன் புன்னகையோடு அவரைத் தொடர்ந்து வெளியில் வந்தான்.

“என்ன சந்திப்? ஒரு வேலைக்காரனை இவ்வளவு பேச விடறீங்க”?

“ஓ! சார். சத்தமா சொல்லிடாதீங்க. சுக்கான் இந்த வீட்டு வேலைக்காரன் இல்லை. அவந்தான் எஜமான். அவன் எடுக்கற முடிவுதான். அவன் உடம்புல ஓடற ரத்தம், துடிக்கிற நரம்பு, அணு எல்லாம் இந்த வீட்டு நலம்தான். கர்ணனை விட செஞ்சோற்றுக் கடன் தீர்க்கறவன்”

“என்னவோ இருக்கட்டுமே. எனக்கு மித்ரா தடங்கலில்லாமல் கிடைச்சாப் போதும்” உல்லாசமாகச் சிரித்த சந்தீப்பின் மனசு ஜெகனுக்கு தெளிவாகப் புரிந்தது.

அவர் மனதுக்குள் மடமடவென்று திட்டங்கள் ஓடியது. மெதுவாகப் படி இறங்கிப் போனார். பார்வை வீட்டைச் சுற்றிலும் ஓடியது. அது சந்தீப்பிற்கு சிறிது கசப்பாக இருந்தாலும் அதை விலக்கி விட்டு உள்ளே வந்தான். சுக்கான் யாருடனோ ஓ, அப்படியா? எங்கே என்று பேசிக் கொண்டிருந்தான்.

“அவர் போயிட்டாரா?” சாய் நாதன்.

“ம்.” என்ற சந்தீப் “தேங்க்ஸ்பா “என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.

“சீச்சி, அப்பா பிள்ளைக்குள் எதுக்கு நன்றி எல்லாம். நீ சந்தோஷமா இருந்தாப் போதும்”

சாய் நாதன் மனசாரச் சொன்னார். சந்தீப் அவர் கழுத்தை கட்டிக் கொண்டான். “சாரிப்பா. சாரி” என்றான்.

“அப்பாவும் பிள்ளையும் கொஞ்சியாறாதா” சுக்கான் அவந்தான்

“எஜமான் என் காசு எத்தனை இருக்கு?”

அந்தக் கேள்வியில் அதிர்ந்தான் சந்தீப். இத்தனை வருஷம் காசு பற்றிக் கேட்ட்தே இல்லை சுக்கான். இப்போது எதற்கு? ஒருவேளை தான் சொன்னதை மறக்க முடியாமல் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு இங்கிருந்து போகப் போறானா?

ஆனால் சாய் நாதன் அசரவில்லை.

“உனக்கு எத்தனை வேணும்”

“இப்போதைக்கு ரெண்டு லட்சம். போதும்” என்ற சுக்கான் “எஜமான் ஏன் கேட்க மாட்டியா?”

“சுக்கான் நீ உனக்காக கேட்க மாட்டே. எதோ போன் வந்தது. அப்புறம்தான் நீ கேட்டே. என்ன விஷயம்?”

“என் மனைவிக்கு. அவ ஹரிணி பொண்ணு வேலை பாக்கற ஆஸ்பத்திர்லிதான் கேன்சர் வியாதிக்கு அட்மிட் ஆகி இருக்காம். காசு இல்லைன்னு அழுதுகிட்டு இருக்காம். கூட்டிட்டுப் போனவன் வியாதின்னு தெரிஞ்சதும் ஓடிட்டான்.”

“ஹரிணிக்கு எப்படித் தெரியும் உன் மனைவின்னு.”

அவரு சங்கரன் புள்ளைக்கு சாப்பாடு எடுத்துட்டு போயிருக்கார். அங்கன வச்சு பாத்திருக்கார். கவுன்சிலிங்க்ல உட்கார்ந்திருக்காம். ஹரிணிகிட்ட சங்கரன் பாத்துட்டு விஷயம் சொல்லி பாப்பா எனக்கு போன் செஞ்சுச்சு.”

“உன்னை வேண்டாம்னு உதறிட்டுப் போயிருக்கு. அதுக்கு நீ வைத்தியம் பாக்கறியா?”

அதானே என்னை உதறிச்சு. நான் உதறலையே. நான் காப்பாத்துவேன்னு நம்பிதான் என் கூட வாழ வந்துச்சு. அதுக்கு எதோ போதாத காலம். என்னை வேண்டாம்னு போயிருச்சி. அதுக்காக நான் விட்ற முடியுமா? சரி உன் குழந்தை உன்னை எட்டி உதைக்குது. அதுக்காக அதை நீ விட்றுவியா?” சுக்கான் பேசப் பேச சந்தீப் அவனை தாவிக் கட்டி முத்தமிட்டான்.

“டேய் நீ எங்கியோ போயிட்டடா” சாய் நாதன் நெகிழ்ந்தார்.

“உன் பணத்தை எடுக்க வேண்டாம். வைத்தியச் செலவு எல்லாம் நான் செய்யறேன். கிளம்பு போலாம்”

சந்தீப் ஓடிப் போய் காரை எடுத்தான்.

பகுதி – 7……………………………………………………………………………………………………………..பகுதி – 9 >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...