தடக் தடக் | சிபி சரவணன்
கடந்த ஒரு வாரமாகத்தான் வேலைக்கு போகிறேன்.நான் பழுத்த சோம்பேறி என்பதாலோ என்னவோ , என்னை நானே அவ்வளவாய் வேலை வாங்கிக் கொண்டதில்லை.
நுங்கம்பாக்கத்திலிருந்து தரமணி போக வேண்டும்.தேர்ந்த நோஞ்சான் ஆன எனக்கு இந்த தூரம் ஒரு கேடென புலம்பிக் கொண்டே ரயிலில் ஏறி வாசல்பக்கமாய் நின்றேன்.
ரயில் கொஞ்ச கொஞ்சமாய் நடந்து கொண்டேஇருந்து விட்டு பிறகு ஓட ஆரம்பித்தது.பேருந்து பயணத்தில் அவ்வளவாய் காணக் கிடைக்காத
சென்னையின் மறுப்பக்கத்தை அதாவதுசேரியைபார்த்து விட முடியும்.கருப்பு ஆறுகள் ஓடிக் கொண்டிருக்க அதனை தொட்டவாரே சில குடிசைகள் நின்றிருக்கும்.அங்கே உள்ள மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது ஒன்றேஒன்று தான் வாழ்தலின் அர்த்தம்
கௌரவம் சார்ந்தல்ல புன்னகை சார்ந்ததென்று.
“டொடக்… டொடக்…”
எனும் இந்த இசைக்கு எதாவது பல்லவி கிடைக்குமா ! என வாய்க்குள்ளே முனகிக்கொண்டேன்.பாமரர்களும், பணக்காரர்களும் கலந்து பயணிக்கும் இரும்பு பெட்டியில் வேறுபட்ட உடைகள் அவர்களின் பணச் சாதியை பிரித்துக் காட்டிக்கொண்டிருந்தது.
பச்சை கலரில் ஸ்கர்ட் அணிந்திருந்த அந்த வெள்ளை பெண் காதில் வாக்மேனை மாட்டிக் கொண்டு ஏதோ விமானத்தில் பறப்பதுபோல சீன் போட்டுக் கொண்டிருந்தாள்.எப்படியாவது இஞ்சிமிட்டாயை வித்துவிட துடிக்கும் அந்த பெருசுக்கு என்ன என்னவெல்லாம் மிமிக்கிரி தெரிந்திருக்கிறது. ரெண்டு ரூபாய் மிட்டாயை விற்க அவன் படும்பாடு அய்யையோ சொல்லி தீராது.பூக்கார கிழவி ஒருத்தி தனது கூடையில் இருந்த மீத பூக்களையும் , சீலை முந்தானையில் முடிந்து வைத்திருந்த சில்லரையும் எண்ணிக்கொண்டிருந்தாள். கருப்பு கண்ணாடி போட்ட இரு பார்வை அற்றவர் எவ்வளவு நுணுக்கமாக ரயிலில் தடயங்களை வைத்து நடந்து வருகிறார். ஒவ்வொரு ஜன்னலோர முகங்களும் தங்களுக்குள் இருக்கும் தங்களை தொலைத்து விட்டு வேடிக்கை பார்த்தார்கள்.
புது புது முகங்களும், புது புது கனவுகளையும் இந்த ரயில் எவ்வளவு கவனாக கொண்டு சேர்க்கிறது.
வலது பக்க வாயிலில் காற்று நன்றாய் வராததால், இடது பக்கமாய் வந்து நின்றேன். ரயில் தண்டவாளத்தின் முள்செடியை ஒட்டி இரண்டு பெண்கள் சேலையை பிடித்தவாரே
“சீக்கிரம் போங்கடா..அவசரம் புரியாம..” எனச் சொல்வது போலிருந்தது.
காற்று என் தலை முடியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்க நகரும் கட்டிடங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் பிடித்திருந்த சில்வர் கம்பியின் கீழ் புறத்தை பிடித்துக் கொண்டு ஒருவர் உட்காந்திருந்தார்.
அழுக்கு மூட்டை ஒன்றை தனக்கான இருக்கையாய் மாற்றிக் கொண்டு அவர் தன் மீதடிக்கும் காற்றை நேசிக்கும் விதம் ரசிக்கும் படியாய் இருந்தது. அதிகம் கருத்த கொஞ்சம் நரைத்த முடியோடு அவர் தோற்றமளித்தார்.நாடோடிக்கே தகுந்த நீள தாடியும் அவருக்கிருந்தது.முகஜாடையில் வடநாட்டவரைப்போலத் தெரிந்தார்.அப்படி இவர் எங்கே தான் போய் வருகிறார் என தெரிந்து கொள்ள வேண்டுமென எனக்கு தோன்றியது .அவருக்கு எதிராக நானும் உட்கார்ந்து கொண்டேன்.அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாணியில் லேசாக சிரித்துக் கொண்டேன்.அவரும் பதிலுக்கு சிரித்தார்.
“வேர் ஆர் யூ ப்ரம்?”என்றேன்.
“எந்தா பறயூ எனக்கு தமிழ்பறஞ்சா மதி எனக்கு தமிழ் அறியும்” மலையாளத்தில் பேசினார்.
“நீங்க எங்கிருந்து வரீங்க??
“நென்ட ஊர் எர்ணா குளமானு!!!அங்கன நம்மடசொந்தம் யாருமில்லா???அதுனால எவ்வடயேனும் டிராவல் செய்து கொண்டியிருக்காம்”.
“ஓ..இப்ப எங்க இருந்து வரீங்க??
“அறியில்லா!!!இ டிரெயின் எங்கே நின்னதோ அங்கிருந்து ஏறி வரேன்.”என்றார்.
“எந்த ஊருனு தெரியாதா???
“தெரிஞ்சு???
“தெரிஞ்சுகிட்டா நல்லது தான??
“நாம போற பாதை இது தானு தெரிஞ்சுகிட்டா நமக்கு குரைச்சு போர் அடிச்சு போயிறும்.இந்த வண்டி போயிட்டே இருக்கும் போது எங்க இறங்கணும்னு மனசுக்கு தோணுதோ அவ்வடஇறங்கி நடந்து போக வேண்டியது தான்”
“அப்போ , இலக்குனு ஒண்ணும் இல்லையா ?”
“ஈ ஜுவிதத்தில இலக்குனு ஒண்ணு இருக்கா என்ன ? “
“நமக்கு இந்த பணத்து மேல நம்பிக்கை இல்லை.மனுசங்க பேசுற பாசையும் அவங்க வாசனையும் எனக்கு பிடிச்சுருக்கு.இந்த உசுரு இருக்குற வரைக்கும் போக வேண்டியது தான். இதுல லட்சியம் ஒண்ணுமில்ல வாழணும் அவ்வளவு தான்.” என்று காற்றை பார்த்து பேசிக் கொண்டே தாடியை சிக்கலெடுத்தார்.எனக்கு அவரிடம் பேசும் போதுஒரு பைத்தியத்திடம் பேசுவது போலவே உணர்வு வந்தது.
“சரிங்க சார் அடுத்த ஸ்டேசன் நா இறங்கணும் , இன்னோரு நாள் சந்திப்போம்”
என சொல்லிவிட்டு எழுந்தேன்.
“என்னை நீ திரும்பி பாக்கணும்னா , நீயும் ஒரு பராரியாகணும் , அப்படி இல்லனா பாக்கமுடியாது “ என சொல்லி சிரித்தார். அப்போது அவர் முகம் அழுக்கு படிந்த ஓஷோவின் முகம் போல காட்சியளித்தது.
தரமணி ஸ்டேசன் வரும் வரை அவரை பார்த்துக் கொண்டே இருந்தேன்.அவர் துளியும் திரும்பிப் பார்க்கவில்லை.இரவெல்லாம் முழித்துப் படம்(நீங்கள் நினைக்கும் படம் அல்ல..) பார்த்துக் கொண்டிருந்ததால்கண் எரிச்சலாக இருந்தது, கொஞ்சம்கண்ணை மூடி கசக்கினேன்.எப்போதும் வரும் அந்த சிவப்பு வண்ணத்தை இப்போது காணவில்லை.எல்லா வண்ணமும் கலந்து அந்த நொடியை நிரப்பிக் கொண்டிருந்தது.
ஒரு முறையாவது நான் இறங்கும் முன் என்னை பார்ப்பாரா என எதிர் பார்த்தேன். கடைசி வரைபார்க்கவே இல்லை.
“பெயரை கூட கேட்காமல் விட்டுவிட்டோமே !! கேட்டால் மட்டும் எதாவது குழப்பமாக பதில் சொல்லியிருப்பார். ஆனால் அவர்பயணத்தின் ஆழம் எவ்வளவு நீளமானது”என கொஞ்சம் புரிய துவங்கியது.
நானும் எனது ஏதுமற்ற வாழ்வெனும்எச்சை பயணத்தை தொடர தரமணியில் இறங்கித்தானே ஆக வேண்டும் வேறு வழி.
1 Comment
அருமை கண்ணா…இரயில் பயணம் போல உன் கவிதை பயணம் தொடர வாழ்துக்கள் கண்ணா