கல்லுப்பூ – சிறுகதை | மாலா மாதவன்

 கல்லுப்பூ – சிறுகதை | மாலா மாதவன்

“நீ நதிபோல ஓடிக் கொண்டிரு….”

ஜெயிலரின் போன் இசைக்க செல்லுக்குள் இருக்கும் நீரஜ் நிமிர்ந்தான்.

நீரஜ் ஒலிம்பிக் வீரன். ஓட்டத்துக்கென்றே பிறந்தவன் போல் ஓடுவான். அவன் இல்லாத மேட்ச் விரல் விட்டு எண்ணி விடலாம்.

நீரஜ் இருக்கான் டா இந்த மேட்ச்ல என பயந்து தன் பெயரை விலக்குபவரும் உண்டு. ஓட்டத்தில் முதல் ஆனால் உணர்ச்சி வசப் படுவதிலும் முதல். சட்டென்று கை நீட்டி விடுவான். அதன் வினை இப்போது ஜெயிலில்.

” ஒலிம்பிக் இனிமே கனவு தான் தம்பி ! மறந்துடு!” அவனுக்குத் தண்டனை கிடைத்தவுடன் அவனின் கோச் கழன்று கொண்டு சொன்னார்.

“நீரஜ் இனிமே எழவே முடியாதுடா!” சக வீரர்கள் கேலி செய்தது இன்னும் அவன் காதுக்குள் உரமாய்.

சமீபத்தில் அனுராஜ் என்னும் எழுத்தாளர் எழுதியதாய் ஒரு அற்புதமான வாசகத்தை ஜெயிலர் நேற்று அவனுக்காக வாசித்துக் காண்பித்து இருந்தார்.

” விழுவது பூக்கள் என்றால் சேகரி! கற்கள் என்றால் வீடு கட்டு! “

ஆஹா. பூக்காலம் முடிந்து இது எனக்கு கல் சேகரிக்கும் காலம். நானும் வீடு கட்டுவேன். கற்கள் சேரட்டும். அந்த வார்த்தைகளில் தன்னைத் தொலைத்து ஆறுதல் அடைந்திருந்தான் நீரஜ்.

” ஜெயிலர் சார்! பொழுது போகல! பழைய செய்தித்தாள் ஏதாவது இருக்கா?”

” இருக்குப்பா! இதில் உன்னைப் பற்றின கவர் ஸ்டோரி இருந்ததால் எடுத்து வைத்தேன் என் பையனுக்காக. அவன் உன் ஃபேன்ப்பா! உன்னை மாதிரியே ஓடுவான் . நீ பண்ற மேனரிஸம்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வான்!” சிரித்தார் அவர்.

” நீரஜ் .. ஓட்டம் இவருக்கு சுவாசம் என்ற தலைப்பில் அவன் சம்பாதித்த அத்தனை வெற்றிகளையும் பட்டியலிட்டது அப்பக்கம். பல படிகள் ஏறினவனைக் கீழே தள்ளினாற்போல் அடியில் கரும்புள்ளியாய் அந்தச் செய்தி.. நீரஜ் ஊக்க மருந்து சாப்பிட்டதாக வந்த செய்தி. அதை செய்தியாக மட்டும் இருந்திருந்தால் இப்படி ஜெயிலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. பலபேர் முன்னிலையில் அவ்வாறு கேட்ட இருவரை அடித்து துவைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி விட்டான். அதனால் தான் இந்த வாசம்.

பக்கம் பக்கமாக பல கல்லெறிதல்கள். அத்தனையையும் பூமாலையாகத் தாங்கிக் கொண்டவனின் நெஞ்சு வழக்கை எதிர்கொள்ளும் திடம் பெற்று இருந்தது. தனக்கான பாதை என்ன என்று தெரிந்து வைத்திருந்தவன் சரியாக அடையாளம் காட்டினான் தன் சக போட்டியாளரை . அன்றைய தினம் அவனுக்கு அளிக்கப்பட்ட குளூகோஸ் கலந்த தண்ணீரில் ஊக்க மருந்துப் பவுடரும் கலக்கப் பட்டிருக்க, கலக்கச் சொன்னது இவனது வளர்ச்சி பொறுக்காத அந்த சக போட்டியாளரே!

” கிளம்புப்பா நீரஜ் ! இன்று உனக்கு விடுதலை. இனி ஒலிம்பிக்கில் உன் கொடி தான் என்றும்!” வாழ்த்தினார் ஜெயிலர்.

” ஒலிம்பிக்கில் என் கால்கள் மட்டும் ஓடினால் எப்படி? ஓராயிரம் கால்கள் ஓட வேண்டாமா? அதற்கான பயிற்சிக் களத்தை ஆரம்பிக்கிறேன்.. முதல் மாணவன் உங்கள் மகன் தான் ஜெயிலர் சார்!” என்றவன் தொடர்ந்தான்..

“போகும் முன் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஜெயிலர் சார்! “

” என்னப்பா?”

” நான் ஊக்க மருந்து சாப்பிட்டேன். உண்மை தான்!”

“அப்போ.. கோர்ட்.. கேஸ்.. நீ சாப்பிடலைன்னு நிரூபிச்சியேப்பா!” விழித்தார் ஜெயிலர்.

“அப்போ இல்ல ஜெயிலர் சார்! இப்போ.. இங்க இருந்த காலங்களில்… எனக்கான ஊக்க மருந்து வேற யாரும் இல்ல! நீங்க தான் சார்! வருகிறேன் கைதியாக அல்ல! உங்கள் நண்பனாக!”

கதவு திறந்தது.

கமலகண்ணன்

3 Comments

  • உற்சாகமூட்டும் பாசிட்டிவ் கதை

  • ஊக்கமது கைவிடேல்.நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் கதை
    மரு,வெங்கட்ராமன்,கோபிசெட்டிப்பாளையம்.

  • நல்வாழ்த்துகள் சகோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...