வரலாற்றில் இன்று – 07.11.2020 சர்.சி.வி.இராமன்
உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கடராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் பிறந்தார்.
அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித்துறை துணை தலைமை கணக்கராக பணியில் சேர்ந்தார். மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக்கருவிகளின் அதிர்வுகள், ஒளிச்சிதறல் பற்றி ஆய்வுகளை செய்தார்.
ஒளி ஒரு பொருளில் ஊடுருவிச் செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (சுயஅயn நுககநஉவ) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு 1930ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறையாகும்.
இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டும், அகில ‘உலக லெனின் பரிசு’ 1957ஆம் ஆண்டும் அளிக்கப்பட்டது. பெரும் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் 1970ஆம் ஆண்டு மறைந்தார்.
மேரி கியூரி
ஒவ்வொரு பெண்ணிற்கும் உதாரணமாக திகழும் அறிவியல் மேதை மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி போலாந்தின் வார்சா நகரில் பிறந்தார்.
இவர் ரேடியம், பொலோனியம், தோரியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்துள்ளார். பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை ‘கியூரி தெரபி’ என்று அழைத்தனர்.
இவருடைய சாதனைகள் கதிரியக்கம் பற்றிய ஓர் கோட்பாடு, கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள் ஆகியனவாகும். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை 1903, 1911ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.
மருத்துவ துறையில் மேன்மையை ஏற்படுத்திய மேரி கியூரி 1934ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி இந்திய திரைபடத்துறையில் முக்கிய பங்காற்றிய நடிகர் கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார்.
1993ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி இந்திய ஆன்மீகவாதி கிருபானந்த வாரியார் மறைந்தார்.
1665ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது.
1910ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.