வரலாற்றில் இன்று – 31.10.2020 வல்லபாய் படேல்
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும்,
பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் தன் வக்கீல் தொழில் மூலம் உள்ள10ர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917ஆம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 1950ஆம் ஆண்டு மறைந்தார். 1991ஆம் ஆண்டு படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தற்போது இவருக்காக 597 அடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.
நினைவு தினம்..! – இந்திரா காந்தி
இந்தியாவின் துணிச்சல்மிக்க பெண்மணி இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார்.
இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள் ஆவார். 1958ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இவர் 1959ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார். மீண்டும் 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் இப்பதவியை ஏற்றார். 1966ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் வரை இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
1980ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1931ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது.