தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 10 | ஆரூர் தமிழ்நாடன்
ஆலிங்கன மயக்கம்!
இருளும் ஒளியும் ஒன்றையொன்று பிரியமாய்த் தழுவிக்கொண்டிருந்தது.
அங்கங்கே ஏற்றப்பட்டிருந்த தீப விளக்குகள், கொஞ்சமும் அசையாது நேர்த்தியாய் கைகூப்புவது போல் நிமிர்ந்து எரிந்துகொண்டிருக்க, மெல்லிய பனிப்படலம் தவழ்வது போல் அகில் கலந்த சாம்பிராணிப் புகை இதமாய் வியாபித்தது. ஜன்னல் திரைகள் ரம்மியமாய் வர்ண ஜாலங்களோடு சலசலத்தன.
ரவிவர்மாவின் ஓவியத் தூரிகையிலிருந்து ஜனித்து வந்த மாதிரி, மார்புக் கச்சையும் இடையில் பட்டாடையும் அணிந்தபடி, ஒரு தேவதைபோல் மிதந்து வந்துகொண்டிருந்தாள் அகிலா. அவளது விரிந்த கூந்தல், இரவின் விரிப்புபோல் குளிர்காற்றில் இங்கும் அங்குமாய் அலைந்து புரண்டது. நாணமும் மோகமும் அகிலாவிற்கு புதுவண்ணம் தீட்டியிருந்தது.
மார்பில் சந்தனமும் தோளில் பட்டுத்துண்டும் இடையில் பட்டாலான பஞ்சகச்சமும் தரித்தபடி அவளுக்கு எதிர்த்திசையில் இருந்து கம்பீர நடைபோட்டபடி வந்தார் அறிவானந்தர். முகத்தில் வாத்சல்யப் புன்னகை மலர்ந்திருந்தது.
எதிர் எதிரே நடந்துவந்த இருவரும் ஒருவரை ஒருவர் சமீபித்தபடி நின்று, விழிகளால் அளந்தனர்.
அகிலாவின் இமைச் சிறகுகள் படபடவென அடித்துக்கொண்டன. இருவரிடையேயும் ஒருவித பரவசம் வெப்ப மூச்சாய் வெடித்துக் கசிந்தது.
அகிலாவின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின.
‘என்ன அகில், என்னைப் பிடித்திருக்கிறதா?’ என்றார் அறிவானந்தர். அவர் குரலில் ஆனந்த லயம்.
‘ம்… பிடித்திருக்கிறது. எனக்கு ஒருவித பித்துப்பிடித்திருக்கிறது’ என்றாள் வீணையாய்.
’அந்தப் பித்தின் மேல் எனக்கும் பித்துதான்’ என்றார் அறிவானந்தார்.
‘காதல் அரும்பும் போது உங்கள் அறவழிச்சாலை தடை போடாதல்லவா?’ என்றாள் குறும்புக் குரலில்
‘அன்பிற்கு எதுவும் அணைபோடாது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்றபடி அகிலாவைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.
அவளது அணுக்களெல்லாம் சிலிர்த்தன. மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளைப்பந்து, மல்லிகைப் பந்தாகிவிட்டது போல் உள்ளுக்குள் நறுமணம் ததும்பியது. கோள்கள் யாவும் அவளது தலைக்குமேல் தட்டாமாலை சுற்றின.
ஒருகணம் மோனநிலையில் மூழ்கியிருந்த அகிலா, மெதுவான குரலில் ‘ஞான குரு, மன்மத குருவாதல் சரியா?’ என்றாள்.
’மனித இனத்தை பூமியில் விதைப்பதே மன்மதம்தான். அது தான் உயிர்களைத் தோன்றுவித்த ஆதிமதம். ஆண், பெண் என்னும் இரு சாதியையும் ஒன்றாக்கிய அபூர்வ மதம் அது.
எனவே பிற மதங்களை விடவும் மன்மதத்தைத் தழுவுதல் சிறப்பானதுதானே?’ என எதிர்க் கேள்வி போட்டார்.
மிருதுவான கட்டில் அவர்களை அள்ளிக்கொண்டது. அவரது பரந்த மார்பில் தலைசாய்த்திருந்த அகிலா, கட்டில் விதானத்தில் தொங்கிய மலர்ச் சரங்களில் பர்வையை ஓட்டியபடியே ‘எவ்வளவு பெரிய ஞானியானாலும், அவன் இடறிவிழும் மாயப் பள்ளம்தான் காமம்’ என்றாள்.
‘அதில் இடறி விழுவதே, சலனம் தொலைத்து முழுதாய் எழுவதற்காகத்தான். விழாதவர்; எழாதவர்’ என்றார் அறிவானந்தர் கிறக்கப் புன்னகையுடன்.
‘அன்பையும் ஞானத்தையும் போதித்தபடி உயரத்தில் சுதந்திரமாகப் பறந்துகொண்டிருந்த அறிவானந்தர், மோகத்திலும் ஒரு பெண்ணின் தேகத்திலும் கட்டுண்டு கிடக்கிறார்’ என்றாள் அகிலா கிண்டல் தொனிக்க.
அவளை ஆதரவாக அணைத்தபடி ‘இப்போதும் அறிவானந்தர் காதல் என்னும் அன்பு வசப்பட்டும், காமம் சார்ந்த ஞானத்தின் வசப்பட்டும்தான் கிடக்கிறார். அதிலும் சுதந்திரமாய்’ என்றபடி கைகளால் அவளிடம் அத்துமீறுவது போல் பாவனை செய்தார்.
அவர் கைகளைத் தன் கைகளுக்குள் சிறை வைத்தபடி ‘காமம் சார்ந்த ஞானமா?’ என்றாள் திகைப்பாக,
அறிவானந்தரோ ‘ஞானம் என்பது ஒரு துறையில் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்து அதில் தேர்ச்சி பெறுவது. ஆன்மீகத்தில் ஞானம் பெறுவது போலவே காமத்திலும் ஞானம் பெறுதல் சாத்தியமே’ என்றார் குறும்பாக.
“மன்மதம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றாள் அகிலா செல்லக் கோபத்தோடு.
அறிவானந்தரோ ’அதில் எழுத்துத் தேர்வை முடித்தாகி விட்டது. செய்முறைத் தேர்வுதான் இன்னும் நடக்கவில்லை. அதற்கு ஆயத்தமாகிவிட்ட எனக்கு உளப்பூர்வமாகவும் தேகப்பூர்வமாகவும் உதவுவாயா?’ என்றார்.
அகிலவோ கொஞ்சம் காரம் சேர்த்த குரலில் ‘மன்மதத்தில் எழுத்துத் தேர்வு எழுதியாகிவிட்டதா? எங்கே? எப்படி?’ என்றாள்.
அறிவானந்தரோ கொஞ்சமும் தயங்காமல் ‘அக உலகம் பற்றிய தகவல்கள் தாமாகவே நமக்குள் வந்து சேகரமாகிவிடுகின்றன. அப்படியே இல்லவிட்டாலும் நமது வாலிபத்தைத் தூண்டும் ஹார்மோன்கள், இத்தகைய தகவல்களை எப்படியாவது தேடிக் கண்டடைய வைக்கின்றன. புலன்களின் புதிரை புலன்கள்தான் அவிழ்க்கத் துடிக்கின்றன. போதாக்குறைக்கு, நமது இலக்கியங்களும் குறைவில்லாது அகம் போதித்து, மனதையும் உடலையும் மன்மதத்தை நோக்கி ஆற்றுப்படுத்துகின்றன. வள்ளுவன் தொடங்கி சங்கப்புலவர்கள், அரண்மனைப் பாணர்கள், முற்றும் கற்ற அதிவீரராம பாண்டியர்கள் என பலரும் இலக்கியத்தின் பேராலேயே மன்மதப் பாடத்தை நடத்திவிடுகின்றனர். நம் புலவர்களிடம் இலக்கிய நயங்களைக் கற்றதுபோல் இல்லறத்துக்கான நயங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இது தொடர்பாய் எனக்கு நானே வைத்துகொள்ளும் எழுத்துத் தேர்வில் நான் தேறியாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன். இனி நடக்க இருக்கும் செய்முறைத்தேர்வுக்காகத்தான் இயற்கை உன்னை இத்தனை காலம் எங்கோ வளர்த்து தக்க தருணம் பார்த்து இங்கே அனுப்பிவைத்திருக்கிறது’ என்றார் கண்களைச் சிமிட்டியபடி.
‘ஆளைச் சாய்க்கும் அளவிற்கு, சாமர்த்தியப் பேச்சு உங்களிடம் இருக்கிறது. அதுதான் உங்களைப் போன்றவர்களுக்கு பலம். -நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். ஆன்மீக வழிகாட்டிகளும் ஞானிகளும் மன்மதத்தில் மூழ்குவது தவறே இல்லை என்கிறீர்களா?’ என்றாள் அவரது விழிகளைத் தீர்க்கமாகப் பார்த்தபடி.
‘வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்வதும் அதன்படி வாழ்வதும் சாமர்த்தியம் என்றால் நானும் சாமர்த்தியசாலியாய்த்தான் இருக்க விரும்புகிறேன். ஆன்மீகம் பிரமச்சர்யத்தைப் போதிக்கவில்லை. அது தேவையுமில்லை. ஆனால் ஆன்மீகவாதியாயினும் தனது உரிமைக்குரிய தோழமையிடம்தான் வாத்சாயனம் பழகவேண்டும். மன்மதம் படிக்கவேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மறந்து, கண்ட இடத்திலும் மேய நினைப்பவரை மனித இனத்தில் சேர்க்க முடியாது. அத்தகையோர் விலங்குகளுக்குச் சமமானவர்கள் ஆவார்’ என்றார் குரலிலும் விரலிலும் அழுத்தம் கொடுத்து.
‘சரி, நான் உங்களுக்கு உரிமையுள்ள தோழமையா?’ என்றாள் துடுக்குத் தனத்தை குரலில் சேர்த்துக்கொண்டு.
அறிவானந்தரோ ‘ இதிலென்ன சந்தேகம். நான் உன்னைக் கண்டடையவும் நீ என்னைக் கண்டடையவும் நமது சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. வா நாம் நம்மைக் கண்டடையலாம். இனி நமக்கிடையே வார்த்தைகள் கூடத் தேவையில்லை. வா’ என்றபடி அவர் தீவிரம் காட்ட, அவரிடமிருந்து திமிறிக்கொண்டு ஓடினாள் அகிலா. அவரோ விடாது துரத்திப் பிடித்தார். கைகளில் வீணையாய் ஏந்தினார். அந்த வீணை, கைகால் உதறிச் சிணுங்கியது.
அப்போது கட்டிலின் தலைமாட்டில், பழத்தட்டின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பால்செம்பு தரையில் ‘டொபீர்’ என்ற சத்தத்தோடு விழுந்தது.
‘ஆ..பால் சொம்பு’ என்றபடி வேகமாய் எழுந்தாள்.
திடுக்கிட்டுத் திகைத்தாள். இவ்வளவும் வெறும் கனவுதானா? என்று மருண்டாள்.
கட்டிலில் வைக்கப்பட்டிருந்த செல்போன்தான் தரையில் பரிதாபமாக விழுந்து கிடந்தது.
இவ்வளவு தத்ரூபமாகவா கனவுகள் வரும்? என மிரண்டவள்…’ஒருவேளை அந்த அறிவானந்தர் தன் சித்துவேலைகளைக் காட்டி, பூட்டிய அறைக்குள் புகுந்து அத்துமீறிவிட்டாரோ?’ என ஒரு கணம் குழம்பினாள்.
’சீ… வாழ்க்கை என்ன விட்டலாச்சாரியா படமா? அப்படியெல்லாம் எதுவுமில்லை. இங்கு எதுவும் நிகழவில்லை. ஆனால் மோசமான கனவு மட்டும் வந்தது நிஜம். கனவிலும் அவருடன் தர்க்கம் புரிந்திருக்கிறேன். அந்தக் கனவே நிஜம் போல வந்து புத்தியைப் பேதலிக்க வைத்துவிட்டது. இந்தக் கனவு ஒருபோதும் நிஜம் ஆகக்கூடாது. எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு சங்கடம். இந்தக் கனவின் நினைவுகளைத் துரத்தியடிக்கவேண்டும். முழுதாக மறந்துவிட வேண்டும்’ என அகிலா தன்னையே தேற்றிக்கொள்ள முயன்றாள். எனினும்… குழப்பங்களே சூழ்ந்துகொண்டது.
படுக்கையில் இருந்து எழுந்தாள். ஜன்னல் திரைவிலக்கினாள், கண்ணாடிக்கு வெளியே விண்ணில் தங்கப் பந்தாய் தகதகத்துக்கொண்டிருந்தது முழுநிலா.
ஆசிரமத்தில் வேறு நடமட்டாமோ அரவமோ தென்படவில்லை. வாயில் ஒரு மிடறு தண்ணீரை சரித்துக்கொண்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.
மனம் மீண்டும் மறக்கத் துடித்த அந்த கனவையே மொய்த்துக்கொண்டிருந்தது. சங்கோஜமும் குழப்பமும் மனதில் கலவையிட்டன.
‘எப்படி எனக்குள் இப்படியொரு கனவு? என் வாழ்வில் இப்படியொரு எல்லை மீறிய கனவு வந்ததில்லையே. நான் மாறிவிட்டேனா? என் புத்தி களங்கப்பட்டுவிட்டதா? அறிவானந்தர் எந்த நிலையிலும் சலனத்தையோ சஞ்சலத்தையோ விதைக்கவில்லையே. விதைக்காமலே எப்படி இந்தக் கனவு விளைந்தது? நான் சறுக்கிக்கொண்டிருக்கிறேனா? என்னையறியாமலே அவர்பால் சரிந்துகொண்டிருக்கிறேனா? ச்சே.. ச் சே.. எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லையே. அவரது ஆன்மீக அன்பர்களின் பட்டியலில் கூட நான் இல்லையே. அவரை உரைத்துப்பார்க்கும் உரைகல்லாக மட்டுமே நான் இருக்கிறேன். என் பகுத்தறிவுக்கும் அவரின் எண்ணங்களுக்கும் இடையிலான உயரங்களை அளந்துபார்க்க மட்டுமே நான் வந்திருக்கிறேன். அவர் வேறு நான் வேறு. எனக்கு என் அம்மா அப்பா இருக்கிறார்கள். என் எதிர்காலத்தை அவர்கள் தீர்மானிப்பார்கள். என் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இந்த கனவுகள் யார்? ச் சே… வெற்றுக் கனவுகளுக்கு நான் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன்’ என்றெல்லாம் தனக்குத் தானே பேசிக்கொண்டவள்…
’அந்தக் கனவில் கூட நான் அவரை விடவில்லை. கேள்விகளால் துளைத்துவிட்டேன். அதே சமயம் கனவில் கூட என்னமாய் அவர் பேசுகிறார். விபரமாக. விளக்கமாக. அறிவுப்பூர்வமாக’ என யோசிக்கவும் செய்தாள்.
அந்தக் கனவு அவளுக்குள் சஞ்சலத்தை எழுப்பியபடியே இருந்தது. சரி, இந்த ஆசிரமத்திடமிருந்து விரைவாக விடைபெற்றுக்கொண்டு, ஊருக்குக் கிளம்பிவிடவேண்டும் என தீர்மானித்துக்கொண்டவர், மறுநாள் விடிவதற்குக் காத்திருந்தாள். படுக்கையில் புரண்டபடியே…
(தொடரும்)
| அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |