விலகாத வெள்ளித் திரை – 12 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 12 | லதா சரவணன்

இரண்டு நாட்களாக மகன் மெட்ராஸ்க்கு சென்று வந்திருக்கிறான் என்று தெரிந்த உடனேயே அவன் அந்தப் பெண்ணைப் பார்க்கத்தான் போயிருப்பான் என்று நினைத்து கொண்டாலும் அதை மகனின் கேட்டு தனக்கு தெரிந்தபடி காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதி காத்தார் ஆனால் பிரச்சனை வேறு விதமாக வரப்போவது தெரியாமல் மகனிடம் பேசுவதற்குக் காத்திருந்தார். அன்றைய இரவு முதலியார் மகனிடம் பேசிவிடவேண்டும் என்று வாத்தியாரையும் வரச் சொல்லியிருக்கிறார். நிச்சயம் என் குடும்பத்திற்கு விடிந்துவிடும். முதலியார் தவிப்போடு கண்ணனைப் பார்த்து கேட்டார்.

“ஏண்டா திடீர்னு வாத்தியார் கூட ஊருக்கு போயிட்டே எனக்கு ஒரு கையே உடைஞ்சிப் போச்சுடா, முதலியார் புலம்பித் தீர்த்து விட்டார். கண்ணா எனக்குன்னு யாரும் இல்லை அதனால நீதான் எனக்கு எல்லாமேடா நான் உன்னை சட்டபூர்வமா தத்து எடுத்துக்கலான்னு நினைக்கிறேன். உனக்கு விருப்பமான்னு கேட்க மாட்டேன் ஏன்னா அப்பா பிள்ளைகிட்டே அனுமதி கேட்கக் கூடாது கண்ணா ?!”

“உன்னைத் தத்து எடுத்து உனக்கு என்னோட தங்கச்சி பொண்ணைக் கல்யாணம் செய்து வைக்ககலான்னு இருக்கேன். அதுக்கு உனக்கு விருப்பமா கண்ணா நான் சொல்ற பொண்ணைக் கல்யாணம் செய்துக்குவியா ?!” முதலியார் நெகிழ்ச்சியோடு சொன்னதும், கண்ணன் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“அய்யா எனக்குன்னு தனிப்பட்ட விரும்பம் எல்லாம் இல்லைங்க. நீங்க வாத்தியார் அம்மா இந்த மூணு பேரைத் தவிர நான் நல்லா இருக்கணுமின்னு யாரு நினைக்கப் போறாங்க. உங்களுக்கு என்ன செய்யணுமின்னு தோணுதோ அதைச் செய்யுங்க. இந்த தத்து எடுக்கிற முறை இல்லாம போனாலும், நீங்க எனக்கு அப்பாதான், வாத்தியார் எனக்கு வழிகாட்டிதான் ?!” முதலியாரின் முகத்தில் ஏக சந்தோஷம் கொப்பளித்தது.

“எனக்குத் தெரியும்டா, நீ நான் வளர்த்த பிள்ளை பெத்தவங்க உங்க அம்மாவா இருந்தாலும் மனதால நான் உன்னைச் சுமந்தேன் கண்ணா. நான் பெறாமல் பெற்ற பிள்ளையாத்தான் நினைக்கிறேன் நாளைக்கு மதியம் அம்மா வாத்தியார் ஸார் நீங்களும் தயாராகுங்க போய் பொண்ணைப் பார்த்து நிச்சயம் பண்ணி கல்யாணத் தேதியைக் குறிச்சிட்டு வந்திடலாம் !”.

முதலியார் இறுதி முடிவாக சொல்லி அம்மா நல்ல விஷயம் பேசி முடிச்சிருக்கோம் இன்னைக்கு வடை பாயசத்தோடு எனக்கு நீங்க சாப்பாடு போட்டே ஆகணும் என்று கண்ணனின் அம்மாவிடம் சொல்லவும் அவரும் முகம் நிறையப் பூரிப்புடன் அடுக்களைக்குள் செல்ல, வாத்தியார் கண்ணனின் முகம் மட்டும் உணர்ச்சிகளை முற்றிலும் தொலைத்தாற் போலிருந்ததை கவனித்தார். உதாசீனம் என்பது எத்தனை கொடுமை என்று அதை நேராய் கண்ட அவனின் மனம் படும் வேதனை அதில் தெரிந்தது.

பெண் பார்த்து நிச்சயமும் செய்து கல்யாணத் தேதியும் குறித்து விட்டார். நீர் இல்லாத தோட்டத்தில் வாடி வதங்கும் செடியைப் போல இன்றி முதலியாரின் பணம் பயிரிட்ட இடமெல்லாம் உடனேயே விளைச்சலைத் தந்தது. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் உடைகளை காஞ்சிபுரத்தில் இருந்தே வரவழைத்து விட்டார். வேலைகள் எல்லாம் ஜரூராக நடக்க, கண்ணன் மட்டும் சுருதியிழந்ததைப் போலத்தான் இருந்தான்.

கண்ணனின் மனதில் வேணியின் பிம்பம் கலைய மறுத்து அடம் பிடிக்க, ஒருவேளை நான் அம்மாகிட்டே பேசிட்டு சீக்கிரம் சொல்றேன்னு சொல்லிட்டு எதுவும் பேச முடியாம போனதுதான் அவளின் கோபத்திற்கு காரணமாக இருக்குமோ ?! ஆனால் சினிமாவில நடிக்க விருப்பம் இல்லைன்னு சொன்னாளே ? முதல் நாள் வரையில், என்னிடம் மட்டும் பெரியதாக தோன்றிய அன்பும் காதலும், உடனே மாறிடக் காரணம் என்னவாக இருக்க முடியும். தெளிவாக பதில் தெரியாமல் போனால் மனதளவில் இது இறக்கும் வரையில் தன்னை விட்டு அகலாது என்று தவித்தான் கண்ணன்.

“அம்மா அண்ணாக்கு கல்யாணமா ?” என்று சந்தோஷமாய் கேட்ட பிள்ளைகளை அன்போடு பார்த்தார் கண்ணனின் அம்மா பத்மா, “கண்ணன் இந்தக் குடும்பத்தைக் காக்க வந்த தெய்வம் டா, அண்ணா உனக்கு வேண்டிய எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திருக்கான் !”

“போய் அதெல்லாம் பாருங்க இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் வரப்போகுது!”. பிள்ளைகளுக்குப் புதுத்துணிகள் எல்லாம் தந்துவிட்டு, மனதார கடவுளை கும்பிட்டாள். இதெற்கெல்லாம் காரணம் வேணியின் தியாகம்தான். நான் பேசியதை மனதில் வைத்துதான் கண்ணனை அவள் மறுத்திருப்பாள் என்று நினைத்தார் கண்ணனின் அம்மா. எப்படியோ அவள் பிடியில் இருந்து மீண்டு ஒரு வளமான வாழ்வை மகன் பெற்றுவிட்டான் என்று மனம் தித்தித்தது அவருக்கு.

(தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...