வரலாற்றில் இன்று – 24.10.2020 ஐக்கிய நாடுகள் தினம்
ஐக்கிய நாடுகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தச் சபை எந்தப் பொருளை பற்றி விவாதம் செய்யவும், ஆராயவும், உலகின் சமாதானம், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் உரிமை கொண்டுள்ளது.
உலக தகவல் வளர்ச்சி தினம்
உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. எனவே 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா. சபை அறிவித்தது.
1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்கள் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.
உலக போலியோ தினம்
உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவுக்கு முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஜோனஸ் சால்க் ஆவார்.
இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதை ஒழிக்க உலக அளவில் முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லக்ஷ்மணன்
நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லக்ஷ்மணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.
கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ‘யூ செட் இட்’ (You Said it) என்கிற தலைப்பில் ‘திருவாளர் பொதுஜனம்’ (Common Man) என்கிற கதாபாத்திரத்தை 1951ஆம் ஆண்டு முதல் அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.
இவர் பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1857ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் கால்பந்து அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1931ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.