தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 7 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 7
நிம்மதிப் பிரியர்கள்!
அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது அகிலாவிற்கு.
“இப்படி திடீர் முடிவெடுத்து அறிவானந்தரை சந்திக்க வந்தது சரியா? பெரிதாக இந்த சந்திப்பின் மூலம் எதை சாதித்துவிடப் போகிறோம்?” என ஒரு கணம் நினைப்பு ஓட…
“அப்படி என்னதான் அறிவானந்தாவிடம் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே. அவரை இத்தனை இளைஞர்கள் மொய்ப்பதன் சூட்சுமம் என்ன என்பதையும் கண்டுவிடலாமே” என மனதை லகான் பிடித்துத் திருப்பினாள்.
குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு 7 மணிக்குள் அகிலா, ஒரு உற்சாகத் தென்றலாய் ரெடியாக.. அடுத்த கொஞ்ச நேரத்தில் ஆசிரமத்தரப்பில் இருந்து அழைத்துச் செல்ல, பூங்கொடி என்ற இளம்பெண் வந்து சேர்ந்தார்.
பளீரென வெண்ணெய் நிறத்தில் இருந்த அந்த பூங்கொடி, சந்தனநிற காட்டன் புடவையில் அழகாக் காட்சியளித்தார்.
“வணக்கம் அகிலா. உங்களை எங்க அறவழிச்சாலைக்கு அழைத்துப்போக வந்திருக்கேன்” என அவர் கனிவுடன் கைகூப்பிய விதமே அலாதியாக இருந்தது..
அவருடன் உற்சாகமாகக் கிளம்பிய அகிலா, வழியில் அதிகம் எதையும் பேசவில்லை. அவளது மனதில் பல்வேறு சிந்தனைகள் முகாமிட்டபடியே இருந்தன.
“அகிலா, அறவழிச்சாலையை நெருங்கிவிட்டோம்” என்ற பூங்கொடியின் குரல், அகிலாவின் நீண்ட சிந்தனையைக் கலைத்தது.
மலைக் குன்றுகளுக்கு மத்தியில் அழகிய தனித்தீவாய் தூரத்திலேயே காட்சியளித்தது அறிவானந்தரின் அறவழிச் சாலை.
நகர சந்தடிகளில் இருந்து மிகவும் நகர்ந்து ஒதுங்கிய நிலையில், இயற்கையின் ஏகாதிபத்திய அழகிற்கு நடுவே கம்பீரமாக வீற்றிருந்த அந்த அறவழிச் சாலையை, எட்டத்தில் இருந்து பார்க்கும் போதே இதயம் முழுதும் ஒருவித பரவசம் தொற்றிக்கொண்டது.
அறவழிச்சாலையின் முகப்பு விளக்கின் தீபம் போல் மண்டப வடிவில் காட்சியளித்தது அறவழிச்சாலையின் முகப்பு வாயில் திறக்கப்பட, நடுவே ஓடிய சாலைகளுக்கு இரு புறமும் பச்சைப்பசேல் என தழைத்திருந்த தாவர வர்க்கங்கள் விதவித மலர்களை ஏந்தியபடி வரவேற்பதுபோல் நின்றிருந்தன. ஓடு பாதையில் கொஞ்சதூரம் கார் போக, அங்கங்கே தனித்தனிக் குடில்கள் தென்பட்டன.
பூங்கொடியோ, “அதுதான் அறவழிச்சாலை அன்பர்கள் தங்கியிருக்கும் குடில்கள். ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும் குடும்பமாக வருபவர்களுக்குத் தனியாகவும் தனித் தனியாகவும் கச்சிதமாகவும் இவை வடிவமைக்கப்பட்டிருக்கு. இங்கு யாராலும் யாருக்கும் சிறு தொந்தரவு கூட இருக்காது. அதேபோல் இங்கு எவர் சுதந்திரத்திலும் எவரும் தலையிடமாட்டார்கள். இங்கு தங்கியிருக்கும் எல்லோரும் நிம்மதியை மட்டுமே தேடி வந்திருக்கிற நிம்மதிப் பிரியர்கள். இவர்களில் பலர் கோடீஸ்வரர்கள். பலர் வெளிநாட்டினர். இன்னும் பலர் வெகுஜன அன்பர்கள்.
இங்கு எல்லோரும் சமமாகவே நடத்தப்படுவார்கள். அதேபோல் இந்த அறவழிச்சாலையில் பயிரிடப்பட்ட உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டே இங்கிருப்பவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. அறவழிசாலை அன்பர்களின் வியர்வையால்தான் இந்த ஆசிரமே இயங்குகிறது” என இனிமையாக விளக்க அகிலாவின் பிரமிப்பு பலமடங்கானது.
அங்கங்கே அமைக்கப்பட்டிருந்த பசுந் தாவரங்களால் ஆன நிழற்குடைகளின் கீழ் சிலர் தியானத்தில் ஈடுபட்டிருந்ததையும் அகிலாவால் பார்க்க முடிந்தது.
செயற்கை நீரோடைகள் அங்கங்கே சலசலத்து காற்றை இயற்கையாகக் குளிரவைத்துக்கொண்டிருந்தன.
இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க அகிலாவின் மனதுக்குள் ஒருவித குழந்தைத் தனமான சந்தோஷம் ஒட்டிக்கொண்டது.
ஆனாலும் தன் பிரமிப்பையோ சந்தோசப் பரவசத்தையோ காட்டிக்கொள்ளாமல் முகத்திற்கு செயற்கையான சாதாரணத்தை அணிந்துகொண்டாள் அகிலா.
ஆசிரமத்தின் மற்றொரு பகுதிக்குள் நுழைந்த கார், அங்கிருந்த ஒரு அழகான வெள்ளை நிறக் கட்டிடத்தின் முகப்பில் நின்றது.
“வாங்க அகிலா. பார்த்து இறங்குங்க” பூங்கொடியின் குரலில் அக்கறையும் அந்நியோன்யமும் இருந்தது. காரிலிருந்து இறங்கிய அகிலா, பூங்கொடியைத் தொடர்ந்து அந்தக் கடிடத்திற்குள் நடந்தாள். வட்டவடிவிலான அந்த வெள்ளை நிறக் கட்டிடத்தின் பக்க வாட்டுகளில் சில நவீன அறைகள் தென்பட்டன. அதைத் தாண்டி பூங்கொடியோடு கட்டிடத்தின் மையப் பகுதிக்கு நடந்த அகிலாவை, அந்த மண்டபப் பகுதி ரொம்பவே ஈர்த்தது.
அங்கே இருந்த மேடைப்பகுதியில் வெண்கலத்தால் ஆன பிரமாண்டமான நடராஜர் சிலையும் ஆளுயர விளக்குகளும் வைக்கப்பட்டிருந்தன. மேடையின் மத்தியில் ஒரே ஒரு அலங்கார இருக்கை மட்டும் போடப்படிருக்க, மேடையின் பின்புறம் அழகிய தீபவட்ட ஓவியம் வரையப்பட்டிருந்தது.
அகிலாவை அருகில் இருந்த ஒரு தனி அறைக்கு அழைத்துச்சென்ற பூங்கொடி
“கொஞ்சம் ஓய்வெடுங்கள்.” என்றபடி வெளியேறினார். பூங்கொடியின் ஒவ்வொரு அசைவிலும் கண்ணியத்தை அகிலாவால் உணரமுடிந்தது. மரநாற்காலிகள் டீபாய், கட்டில் என அந்த அறைக்குள் பொருட்கள் நேர்த்தியாக வைக்கப்படிருந்ததை மனதிற்குள் ரசித்தாள் அகிலா.
அப்போது அகிலாவின் செல்போன் சிணுங்க “ஹலோ” என்றாள் அகிலா.
எதிர் முனையில் இருந்த நக்கீரன் ஆசிரியர் “அகிலா, வணக்கம்” என்றார் கம்பீரமாக.
“அண்ணே நீங்களா? உங்க குரலைக் கேட்கறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு”என்று துள்ளிக் குதிக்காத குறையாய் குபீர் உற்சாகத்தோடு சொன்னாள் அகிலா.
“சந்தோசம்மா. நீங்க அறவழிச்சாலை பத்தின அசைன்மெண்டில் இருப்பதா எடிட்டோரியல் தம்பிகள் சொன்னாங்க. விருப்பு வெறுப்பு இல்லாம அங்க உணர்ந்ததை அப்படியே எழுதுங்க. நீங்க அறவழிச் சாலைக்குப் போய்ச் சேர்ந்திட்டீங்களா?” என்றார்.
“இப்பதான் வந்து சேர்ந்தேன்.”
“ஓ.கே. உங்களுக்கு என்ன தேவைன்னாலும் சொல்லுங்க. அங்க இருக்கும் நிருபர் தம்பி தேவையானதை செஞ்சு கொடுப்பார். வாழ்த்துக்கள்” என்று அவர் முடிக்க…
அவளது உற்சாகம் பல மடங்கானது.
சற்று நேரத்தில் கதவைத் தட்டிவிட்டு வந்த மற்றொரு இளம்பெண், பச்சைத் தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீரைக் கொடுத்து உபசரித்துவிட்டுப் போனார்.
“இது என்ன? உலகிற்குள்ளேயே ஒரு வினோதமான தனி உலகமாக இருக்கிறதே. அரவமோ சலனமோ இல்லாமல் இப்படியும் ஒரு நிசப்தப் பிரதேசமா? தனக்குக் கிடைத்த வசதிவாய்ப்பை வைத்து அறிவானந்தர் நன்றாகக் குளிர்காய்கிறார் போலிருக்கிறது. அவரது அன்பர்கள் கொடுக்கும் நன்கொடையில் வாழ்க்கையை அவர் சுக போகமாக அனுபவிக்கிறார் போலிருக்கிறது” என அகிலாவின் சிந்தனைகள் ஒரு பக்கம் ஓட… அப்போது கதவைத் தட்டிவிட்டு ஐந்தாறு இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் புடைசூழ அறைக்குள் கைகூப்பியபடி வந்தார் அறிவானந்தர். வந்தவர்
வசீகரப் புன்னகையோடு..
“அகிலா நலமா? பயணம் இனிதாக இருந்ததா? உங்களை இந்த அறவழிச்சாலை அன்போடு வரவேற்கிறது” என்றார் மிருதுவாக.
தன்னை மறந்த லயத்தில் எழுந்து கைகூப்பிய அகிலா “உங்கள் அன்பான உபசரிப்புக்கு நன்றி” என்றாள் புன்னகையோடு. அறிவானந்தருடன் வந்திருந்தவர்கள் அழகுப் பதுமைகள் போல் ஆடாது அசையாது கனிவு ததும்ப நின்றிருந்ததையும் அகிலா கவனிக்கத் தவறவில்லை.
“சரி வாங்க அகிலா, மைய மண்டபத்துக்குப் போகலாம்” என்றபடி அறிவானந்தர் நடக்க…. அவரது குழுவோடு மைய மண்டபத்துக்கு சென்றாள் அகிலா.
அங்கே ஏற்கனவே போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலிக்கு அருகில் இன்னொரு நாற்காலி முளைத்திருந்தது. ஒன்றில் அமைர்ந்துகொண்ட அறிவானந்தர்,
“உட்காருங்க அகிலா”என பக்கத்து நாற்காலியில் அகிலாவை அமரச்சொன்னார்.
மற்றவர்கள் நிற்பதை அவள் விழிகள் நோக்க, “யோசிக்க வேண்டாம். அவர்கள் எப்போதும் என்னோடு இருப்பவர்கள். என்னோடு எனக்குச் சமமாக இருப்பவர்கள். அதனால் அவர்கள் தரைவிரிப்பில் அமர்ந்துகொள்வார்கள். நீங்கள் எங்கள் விருந்தினர். அதனால் சங்கோஜப்படாமல் அமருங்கள்” என்றார் அறிவானந்தர்.
“எல்லோருமே தரையிலேயே அமரலாமே…” என அகிலா சொல்ல…
“ஓ… அமரலாமே..” என்றார் அறிவானந்தர்.
அடுத்த நொடி அறிவானந்தருடன் இருந்தவர்கள் பரப்பரப்பானார்கள். நாற்காலிகள் அங்கிருந்து காணாமல் போயின. அழகிய கம்பளம் தரைமீது குபீரென வியாபித்தது.
அதன்மேல் அங்கங்கே திண்டுத் தலையணைகள் முளைத்தன. அறிவானதரும் அகிலாவும் அருகருகே எதிரும் புதிருமாக அமர… மற்றவர்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்துகொண்டனர்.
மிகவும் பாதுகாப்பான அணுசரணையான அன்புமயமான ஒரு இடத்தில் இருப்பதாக அகிலாவின் மனம் உணர்ந்தது.
அறிவானந்தர், அகிலாவை நோக்க… அகிலா எந்தக் கேள்வியில் இருந்து ஆரம்பிக்கலாம்? என ஒரு கணம் யோசித்தாள்.
அப்போது பரபரப்பாக ஓடிவந்த ஒரு இளைஞர் அறிவானந்தரின் காதில் ஏதோ கிசுகிசுக்க… ஒரு கணம் அவரது புன்னகை, உதட்டிலிருந்து நழுவியது.
அகிலாவிடம் அவர் “பொறுத்தருள வேண்டும். ஒரு பத்து நிமிடத்தில் வருகிறேன்” என்றபடி எழுந்தார். மற்றவர்கள் அப்படியே அமர்ந்திருக்க, அறிவானந்தர் மட்டும் வந்த இளைஞரோடு அங்கிருந்து அகன்றார்.
(தொடரும்)
| அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |