நிசப்த சங்கீதம் – 3| ஜீ.ஏ.பிரபா

 நிசப்த சங்கீதம் – 3| ஜீ.ஏ.பிரபா

துயர் போயின, போயின துன்பங்கள்
நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே.

“உய்” என்று விசில் அடித்தது குக்கர்.

“நிறுத்து, நிறுத்து “என்று ஓடி வந்தாள் ஹரிணி.

“விசில் அடிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று அதன் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.

“வர,வர நீ சொல் பேச்சு கேக்கறதில்லை.”என்று குக்கரை இறக்கி வைத்தாள்.

யார் கூடப் பேசறா என்று எட்டிப் பார்த்தாள் அம்மா.

“என்னம்மா காபி வேணுமா?”

“அதெல்லாம் முதல்லியே குடிச்சாச்சு. நீ கிளம்பு.”

“ஆச்சும்மா. சாம்பார் ஆச்சு. பொரியலை வறுத்துட்டு எடுத்து வச்சுட்டு கிளம்பறேன். அப்பாவை பத்தரை மணிக்கு சாப்பிடச் சொல்லு.பதி பத்தினியா புருஷனுக்கு போட்டுட்டு நீ சும்மா இருக்காதே.”

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நீ சாப்பிட்டியா?”

“என் சாப்பாட்டை நான் சாப்பிடணும்னு எனக்கென்ன தலையெழுத்து. ஹாஸ்பிடல் போனா, கேண்டீன்ல ஜம்முனு டிபன்.”

“அடிப்பாவி. எங்களுக்கு மட்டும்தான் தலையெழுத்தா?”

“கொடுத்து வச்சிருக்கணும்மா.பொண்ணு கைல சாப்பிட. இந்தக் காலத்துல எந்தப் பொண்ணு இப்படி பெத்தவங்களை உட்கார வச்சு சோறு போடறா? நீ கொடுத்து வச்சவ?” ஹரிணி சிரித்தாள்.

“உண்மைதான் கன்ணா. உன்னைப் பொண்ணா பெத்த்து நான் செஞ்ச புண்ணியம். எனக்கு நீ கடவுளோட கிப்ஃட்.” சங்கரன் வந்தார் உள்ளே.

“நன்றிப்பா. இன்னொரு கப் காஃபி வேணுமா?”

“கொடுடா குட்டி. என் செல்லம்.”

“நான் தரேன். நீ போய்க் கிளம்பு ஹ்ரிணி.” அம்மா விரட்டினாள்.

“ஒரு காஃபி கலக்கறதுல என்ன நேரம் ஆயிடப் போறது என்றபடி ஹரிணி கலந்து அப்பா கையில் கொடுத்தாள்.அம்மா எட்டிப் பார்த்தாள். திக் டிகாஷன், புதுப் பால்.

“அதான் என்னடான்னு பார்த்தேன்.” அம்மா முறைத்தாள்.

“நீ கலந்தா கர்னாடகா கேஸ் போடும் உன் மேல?”

“நான் என்ன செய்தேன்?”

“தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டேன்னு சொல்றோம். நீ காஃபில இத்தனை கலக்கிறியான்னு?” அப்பா கலகலவென்று சிரித்தார்.அம்மா முறைத்தாள்.

“அப்பா, ஜாக்கிரதை.நான் போனாட்டு நீ மட்டும்தான் வீட்டுல அம்மாகிட்ட தனியா இருக்கப் போறே. ஜாக்கிரதை.”

“எத்தனையோ அடி வாங்கிட்டோம். இதைத் தாங்க மாட்டோமா? நீ போடா செல்லம். இறைவன் துணை இருப்பான்.”

அம்மா,” வாடி, சாயந்திரம் வீட்டுக்கு வந்துதானே ஆகணும்.உனக்கு கச்சேரி வைக்கிறேன்.” என்றாள்.

“என் செல்ல அம்மா.” ஹரிணி அம்மாவை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள். சிரித்தபடி அப்பாவுக்கு டாட்டா காட்டி விட்டு வாசலுக்கு வந்தாள்.பக்கத்து வீட்டுப் பையன் கையில் விபூதியுடன் ஓடி வந்தான்.

“அக்கா,இந்தாங்க? என்று கை நீட்டினான்.

“என்னடா? அதிகாலையில் ஆலய தரிசனம்.தேர்வு எதானும் ஆரம்பமா?”

“கிண்டலா.உங்களுக்கென்ன முருகன் துணை நின்னான்.நீங்க படிச்சி வேலைக்கு வந்துட்டீங்க.. எனக்கு அவன் செய்வானா?”

“ஏண்டா இப்படிக் கேக்கறே?”

“அவன்தான் சிஸ்டர்க்குதவும் செங்கதிர் வேலோன் ஆச்சே?”

“படவா, நல்லா உருப்படுவே” ஹரிணி சிரித்தபடி தன் டூ வீலரைக் கிளப்பினாள்.இந்த மாதிரி குறும்புகளால் காலை நேரமே அழகாயிடறது என்று நினைத்தபடி டிராஃபிக்கில் வண்டியை நிதானமாக ஓட்டினாள். எதையோ பிடிக்கப் போகும் அவசரத்தில் பறப்பவர்களை முன் விட்டு மெதுவாகச் சென்றாள்.

ஹரிணி எப்போதுமே நிதானம் இழப்பதில்லை. தன் செய்கை குறித்து தெளிவாக இருப்பாள்.டிராஃபிக் நெரிசல் இருக்கும் என்று அரைமணி நேரம் முன்பாகவே கிளம்பி விடுவாள்.முன்கூட்டியே சென்றாலும் சரி, தாமதம் மட்டும் கூடாது என்று உறுதி அவளிடம்.

சில விஷயங்களில் இப்படித்தான் என்ற கண்டிப்பு அவளிடம் உண்டு.நமது பாரம்பரியம், பண்பாடு என்ற விஷயத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுவாள்.எந்த நாள்,கிழமை, விசேஷங்களையும் விட்டதில்லை. வெள்ளி சனிக்கிழமைகளில் கோவிலுக்கு கட்டாயம் போய் விடுவாள்.

தறிகெட்டுத் திரியும் நாகரீகம் அவளிடம் இல்லை.தலையை விரித்துப் போட்டபடி, தொடை தெரியும், டிராயர் அணிவது, குர்தா, ஜீன்ஸ், பொட்டு இல்லாத நெற்றி என்று இருக்கவே மாட்டாள். ஆனால் தன்னை நேர்த்தியாக அலங்கரித்துக் கொள்வாள்.

இடுப்பு வரை அடர்த்தியான கூந்தல். பின்னி ஒற்றைக்கிள் பூ வைப்பாள். காதுகளில் தோடு, ஜிமிக்கி,கழுத்தில் நீளச் செயின்.கைகளில் பச்சை, சிவப்பு கண்ணாடி வளையலகள். ஹாஸ்பிடல் போனதும் வளையல்களைக் கழற்றி விடுவாள்.நெற்றியில் பளிச் என்று சிவப்புக் கலர் பொட்டு. கீழே சின்ன வெள்ளைப் பொட்டு. மேலே சின்ன விபூதிக் கீற்று என்று மங்களகரமாய் இருப்பாள்.

அவள் முறையாக பாட்டு கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அழகான் குரல் வளம் உண்டு. கோவில்களில் அவள் பாடும் சின்னச் சின்ன பஜனைப் பாடல்களைக் கேட்கவே ஒரு கூட்டம் கூடும்.வாரா, வாரம் அருகில் உள்ள ஒரு மாமி வீட்டில் லலிதா, விஷ்ணு, சகஸ்ரநாமம் படிப்பாள். தமிழ்ப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் என்று நிறையக் கற்று வைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் நோயாளிகளுக்கு தகுந்த சமயத்தில் கூறி ஆறுதல் அளிப்பாள்.

சர்வ மத பிரார்த்தனைக் கூட்டங்களில் மத வேறுபாடு இல்லாமல் அவள் பாடுவது சீஃப் டாக்டருக்கு ரொம்பப் பிடிக்கும்.எப்போது கூட்டம் நடந்தாலும் அவளைக் கூப்பிட்டு விடுவார்.

ஹாஸ்பிடல் நிர்வாக உதவியாளர்தான். ஆனால் அனைத்தும் அவள் மேற்பார்வையின் கீழ்தான் வரும்.என் வேலை நோயாளிகளுக்கு வைத்தியம் செய்வது மட்டும்தான். எந்த நோயாளிக்கு என்ன வியாதி, என்ன சிகிச்சை, மெடிசின் இருக்கா, இல்லையா, கவுன்சிலிங் எல்லாம் நீதான் பொறுப்பு மை டார்லிங் என்பார் சீஃப்.

அறுபதைத் தாண்டிய அவருக்கு ஹரிணி செல்லக் குழந்தை.

அவர்தான் அவளை டயடீஷியன் கோர்ஸும் படிக்கச் சொன்னார்.

மெல்ல மெல்ல மருத்துவமனை நிர்வாகம் அவள் கைக்குள் வந்து விட்டது. ஆனால் இது குறித்து யாருக்கும் அவள் மேல் பொறாமையோ,கோபமோ கொள்வதில்லை. அதற்கு காரணம் எல்லோரிடமும் அவளின் அணுகுமுறைதான். மென்னகையும், அதிராத கனிவான பேச்சும்தான்.

தன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவளை ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது. நோய் குணமாகி வீட்டுக்குச் செல்பவர்கள் அன்புடன் அவள் கை பற்றிப் பேசி விட்டுச் சென்றனர். நர்ஸ் “மேடம், நீங்க வந்த்தும் சீஃப் வரச் சொன்னார் என்றாள்.’ உடனே ஒடினாள்.

“ஹரிணி, புதுசா வந்திருக்கிற நோயாளி ரொம்ப மனசொடிஞ்சு போய் இருக்காம். போய்க் கொஞ்சம் கவுன்சிலிங் கொடு” என்றார். தலையாட்டி விட்டு வந்தாள்.

யார் என்ன என்றுநர்ஸ்சிடம் விவரங்கள் சேகரித்துக் கொண்டு வந்தாள். அது இரண்டு பிரிவாகப் பிரிந்த மருத்துவமனை. பொது, பிரசவம் என்று ஒரு பகுதி. இதயம், புற்றுனோய் என்பது மற்றொரு பிரிவு. இந்தப் பிரிவுதான் ஹரிணியின் பொறுப்பில். புற்றுனோய் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கவுன்சிலிங் தருவது அவளின் பொறுப்பு.

மருத்துவ மனையில் இரண்டு நாள் தங்கிவிட்டுப் போனாலே மனதின் பரபரப்பு, சஞ்சலம் எல்லாம் அடங்கி விடும். அங்கேயே இருந்து விட்டால்…..?

ஹரிணியிடம் உள்ள கனிவு, அமைதி, அன்புக்குக் காரணம் இங்கு வேலை பார்ப்பதுதான். எங்கும் எந்த அலட்டலுக்கும் அர்த்தமில்லை என்பது உணர்ந்தவள்.

அதனாலேயே அவள் யாரிடமும் பகைமை பாராட்டுவதில்லை.எந்த அவமானங்களையும் பொருட்படுத்துவதில்லை.இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை என்று உணர்ந்தவள்.

ஆனால் கவுன்சிலிங் அறையில் இருந்த பெண்மணி அழுது கொண்டிருந்தார்.

“அம்மா, அழுவதால் எதுவும் மாறிடாது. நம்ம தைரியமும், துணிச்சலும்தான் இதனை எதிர்த்து நிற்கும் ஆயுதம். எதுவும் நிரந்தரமில்லை. இந்த அழுகையே நாளை ஆனந்தமா மாறிடலாம் தெரியுமா?”

“துக்கமாவும் மாறலாம் இல்லையா?”

“பாசிடிவா நினைக்கறதால என்ன இழப்பு வந்துடப் போகுது?”

“இந்த நோய் உனக்கு வரலை. அதனால்தான் இப்படிப் பேசறே” நிஷ்டூரமாக வந்தது பேச்சு.

“ஓ” ஆயாசமாக உணர்ந்தாள் ஹரிணி.” அங்க பாருங்கம்மா” என்று சுட்டிக் காட்டிய இட்த்திம் மூன்று குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது. எல்லாம், அஞ்சு, நாலு, ஆறு வயசுக் குழந்தைகள். எவ்வளவு ஆன்ந்தமா விளையாடிட்டிருக்கு. தாங்க இறந்து போயிடுவோம்னு அதுகளுக்குத் தெரியும். ஆனா அது குறித்து எந்தக் கவலையும் இல்லை. அதுதான் நம்பிக்கை, வாழ்க்கை. கடவுள் நினைச்சார்னா எந்த உயிரையும் கொண்டு போகவும் முடியும், இருக்க வைக்கவும் முடியும்” என்றவள் அந்தக் குழந்தைகளை அருகில் அழைத்தாள்.

“தங்கம், குளிச்சு சாப்பிட்டியா?”

“ஓ சட்னியில காரம் அக்கா. நாளைக்கு வெல்லம் தரச் சொல்லுங்க?” என்றது அஞ்சு வயசுக் குட்டி.

“நாளை என்பது நிச்சயமில்லை. ஆனா அதோட ஆசை பாருங்க” என்ற ஹரிணி” குட்டிம்மா, கோவிலுக்கு போய்ட்டு வந்துட்டியா?”

“காலைலயே போய்ட்டு வந்தாச்சே.”

“என்ன வேண்டிகிட்ட?”

“கடவுளே, இங்க வரவங்க எல்லோருக்கும் நோய் குணமாக்ணும்னு”

“ஏன், உனக்குன்னு வேண்டிக்கலையா?” அழுத பெண்மணி முகம் தெளிந்திருந்தார்.

“மத்தவங்க நல்லாயிருக்கணும்னு நாம நினைச்சா நம்மை கடவுள் நல்லா வைப்பார்னு ஹரிணி அக்கா சொல்லியிருக்காங்க.”

ஹரிணி அவர்கள் மூவரையும் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

“எங்கே, நான் சொல்லிக் கொடுத்த பாட்டை பாடிக் காட்டு.

மூன்றும் கையைக் கட்டி நின்றது. ஒன்று சேர்ந்த குரலில்

காலப் படர்கள் சினம்கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என் முன்
உயிரைக் கவர வரும்போது
கோலமயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து
பயமேன் எனத் தோன்றுகவே”

அருகில் இருந்த வசுமதி தாவி அவர்களை அணைத்துக் கொண்டாள்.

“கண்களா, அந்த முருகன் உங்களுக்கு எமன் வராம காப்பாத்துவான்” என்று கண்ணீர் மல்க ஆசிர்வதித்தாள்.

ஹரிணியின் பேச்சு, குழந்தைகளின் பாடலில் அவள் நெகிழ்ந்து போயிருந்தாள்.உள்ளே வந்தவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் மெய் மறந்து அமர்ந்து விட்டாள்.

ஹரிணியின் தோற்றமும், பேச்சும் அவள் அடி மனசை மலர வைத்திருந்தது.

அன்புடன் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“என் பெயர் வசுமதிம்மா. நியூயார்க் லிருந்து வரேன்.”

“ஓ நீங்கதானா அவர். சீஃப் உங்களுக்காக வெயிடிங்”

“ஒன் மினிட்” என்ற வசுமதி மித்ராவை அழைத்தாள். உள்ளே வந்த மித்ராவுடன் வந்த சந்தீப்பைப் பார்த்த ஹரிணியின் கண்ணில் மின்னல். அதை வசுமதி கவனித்தாள்.

“ஹாய் ஹரிணி?” சந்தீப்

“நீ இங்கதான் இருக்கியா? ஸோ நைஸ். மேம் உங்களுக்கு பயமே வேண்டாம். ஹரிணி வில் பீ ஹியர்”

“அதான் இப்ப பாக்கிறேனே” வசுமதியிடம் மகிழ்ச்சிப் புன்னகை.

“யார் சந்தீப் இது?” மித்ரா அருகில் வந்தாள்.

“நான் சொல்வேனே ஹரிணின்னு . இவதான்”

“இவங்க யாருன்னு தெரியலையே” ஹரிணி

“ஹாய் இது மித்ரா. மை ஸ்வீட் ஹார்ட்?” சந்தீப் அவள் தோள் சுற்றி கை போட்டுக் கொண்டான். ஹரிணி தனக்கு என்று நிச்சயிக்கப் பட்டவள் என்பதை அவன் அறிவான். உன் மூலம் விஷயம் வெளி வரட்டும் என்று அவன் நினைத்தான்.

ஹரிணி அதிர்ந்தாள். சட்டென்று கண்கள் நிறைய அவள் அதை மறைக்க குழந்தைகளை அணைத்துத் திரும்பினாள்.

ஆனால் வசுமதி அதைக் கவனித்தாள்.

(தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...