வரலாற்றில் இன்று – 29.08.2020 மேஜர் தயான் சந்த்

இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதற்கு இவரே முக்கியக் காரணம். இவர் ஹாக்கி விளையாடும் முறை இன்றளவிலும் வியக்க வைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இவர் 1948ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரை கௌரவிக்கும் விதமாக டெல்லி தேசிய மைதானத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்துள்ளது.

மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் தனது 74வது வயதில் மறைந்தார்.

சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணு ஆயுதத்தை முதன்முதலாக 1945ஆம் ஆண்டில் வீசியது. அதன் பிறகு இதுவரை சுமார் 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இன்றைக்குள்ள அணு ஆயுதங்களை கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள் பற்றியும் அதன் பரவலைத் தடுக்க வலியுறுத்தியும் ஐ.நா. சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மைக்கல் ஜாக்சன்

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக்கலைஞர் என்று போற்றப்படும் மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவின் இன்டியானா நகரில் பிறந்தார்.

இவர் வெளியிட்ட த்ரில்லர் இசை ஆல்பம்தான் உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. இவர் பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.

இவர் பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த பாப் நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை. அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக்கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம்.

இன்றளவும் பாப் இசையுலகின் ஈடு இணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 50-வது வயதில் (2009) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1831ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி மைக்கேல் பாரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.

1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்திய அறிவியலாளர் கே.இராதாகிருஷ்ணன் கேரளாவில் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!