தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 5 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 5
தேடிக் கண்டடைய எதுவுமில்லை!
கடல் கொஞ்சம் அடக்கமாகவே அலைகளை வீசி விளையாடிக்கொண்டிருந்தது.
கடற்கரையோர நடைபாதை பெஞ்ச்சில் நண்பன் தமிழ்ச்செல்வனோடு அமர்ந்திருந்த அகிலா, ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அவள் கண்கள் மட்டுமே கடலின் மீதுவிரிந்திருந்தது.
தமிழ்ச்செல்வன், ப்ளஸ் டூ காலத்தில் இருந்தே உற்ற நண்பனாக இருந்து வருபவன். அவன் அப்பா ஒரு பகுத்தறிவுவாதி. பெரியார் பெருந்தொண்டர். அவரது தாக்கம் இவனிடமும் உண்டு. எப்போதாவது பெரியார் திடலில் நடக்கும் நிகழ்சிகளுக்கு அவனோடு அவள் போயிருக்கிறாள்.
மற்ற நண்பர்களோடு கடவுள் எதிர்ப்பு வாதத்தில் அடிக்கடி அவன் ஈடுபடுவான். அது கொஞ்சம் தீவிரமாகக் கூட இருக்கும். அப்போதெல்லாம் ‘உண்டென்பார் சிலர்; இல்லையென்பார் சிலர், எனக்கில்லை கடவுள் கவலை’ என்று பாவேந்தன் வரிகளால் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டு புன்னகைப்பாள் அகிலா.
அதே சமயம், தமிழ்ச்செல்வன், யாரையும் இழிவாகப் பேசி அவள் பார்த்ததில்லை. பெண்களை விளையாட்டுக்குக் கூட அவன் கிண்டல் செய்தது இல்லை. காதல் கத்தரிக்காய் என்று யார் பின்னாலும் அவன் அலைந்ததுமில்லை.
நாகரீக எல்லை தாண்டாத நண்பன் என்பதுதான் அவளுக்கு அவனைப் பற்றி இருக்கும் மதிப்பீடு.
‘என்ன அகிலா, இதோ பக்கத்தில் தெரியுதே, விவேகாந்தர் இல்லம். அதுக்குள்ள தியானத்தில் உட்காரவேண்டியவளைப் போல உட்கார்ந்திருக்கிறாயே. என்ன சிந்தனை?’என்றான் தமிழ்ச்செல்வன். அவனைத் திரும்பிப் பார்த்தாள் அகிலா.
அவனது தலைக்கேசம், சிலுசிலுத்த காற்றின் உதவியோடு அவனது நெற்றிமீது புரண்டு விளையாடிக் கொண்டிருந்தது. அவனது கண்களில், நட்பும் நிறம் மாறாமல் இருப்பதை கவனித்தாள். எப்போதும் பெரியரைப் பற்றியே அதிகம் பேசும் அவன், காவி உடைதரித்தால் எப்படி இருப்பான் என தேவையில்லாமல் அவள் மனம் ஒரு கணம் எண்ணியது. தலையில் தலைப்பாகையையும் கட்டிவிட்டால் அப்படியே விவேகானந்தரைப் போல்தான் இருப்பான் என்று தோன்றியது. அப்படி ஒரு தெளிவான முகம். கட்டான உடல்.
விவேகானந்தர் கெட்டப்பில் தமிழ்ச்செல்வன் நடந்து வருவது போல் ஒருகணம் கற்பனை செய்து பார்த்தாள் அகிலா. அவளுக்கு சிரிப்பு வந்தது. காரணம், அந்தக் கற்பனையிலும் அவன் கைகளில் பெரியார் திடல் வெளியீடுகள்தான் தெரிந்தன. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘என்ன கேட்டேன் என்று இப்படி சிரிக்கிறாய் அகிலா?’ என்றான் தமிழ்ச்செல்வன்.
‘என்னை விவேகாந்தர் இல்லத்தில் தியானம் செய்ய வந்தவள் போல இருக்கிறது என்றாயே. உன்னை விவேகானந்தர் கெட்டப்பில் கற்பனை செய்து பார்த்தேன்.. சும்மா சொல்லக்கூடாது. நூத்துக்கு தொன்னூத்தைய்ந்து சதம், தோற்றத்தில் நீ விவேகானந்தர்தான்’ என்றாள் குறும்பாக.
அதை அவன் ரசிக்கவில்லை. மாறாக,
‘அவர் யாரோடும் ஒப்பிடக் கூடாத உயர்ந்த மனிதர். ஆன்மீகத்தில் அவர் முற்போக்கு சிந்தனையாளர். இளைஞர்களின் சக்தியை பெரிதும் நம்பியவர் அவர். தன்னம்பிக்கையை உயிரைவிட உயர்வாகப் போற்றிய சமூகவியல் பேராசான் விவேகானந்தர். அவர்போல் தெளிவான சிந்தனையோடும் ஒழுக்கத்தோடும் வாழ முற்பட்டாலே போதும். உயர்ந்த மனிதர் ஆகிவிடலாம்’ என்றான் தமிழ்ச்செல்வன்.
‘சரி, விடப்பா. இன்னைக்கு அந்த அறிவானந்தாவைப் பார்த்தோமே. அவரைப்பற்றி உன் கருத்து என்ன?’ என்றாள்.
‘ஏதோ வித்தியாசமாக அவர் யோசிக்க முயல்கிறார் என்று தெரிகிறது. ஆன்மீகத்தை அறிவுப் பாதையில் திருப்பப் பார்க்கிறவர் போல் பேசுகிறார். ஆனால் அது சாத்தியமாகாது. ஆன்மீகம் ஏற்படுத்தித் தந்திருக்கும் புகழ் போதையும் வசதியும் ஹைடெக் வாழ்க்கையும், படையெடுக்கும் இளம்பெண்களும் அவரை, சரியான பாதையில் போகவிடுவது இயலாத காரியம்’ என்றான் நிதானமாக.
‘இந்த அளவிற்கு அவரை கணித்திருக்கிறாய். பரவாயில்லை. ஏறத்தாழ என் கருத்தும் இதுதான்’ என்றாள் அகிலா.
’நீ அவர் ராஜாங்கத்துக்குள்ளே போய் கொஞ்சம் துடுக்காகத்தான் கேள்விகளைக் கேட்டாய். ஆனால் அவர் கோபப்பட்டது போல் தெரியவில்லை. அவரது இந்த நிதானம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவரிடம் இன்னும் கேட்க கேள்விகள் இருக்கிறது என்றாயே… அது உண்மைதானா?’ என்றான்.
’அவர் வெளிப் பார்வைக்கு வேண்டுமானால், என்மீது கோபம் இல்லாதவரைப்போல் காட்டிக் கொண்டிருக்கலாம். அவரது அடிப்பொடிகள் முன் இப்படியெல்லாம் எதிர்வாதம் செய்ததில் அவர் என் மேல் கோபமாகாத்தான் இருப்பார். தனியாக அவர் கைகளில் நான் சிக்கியிருந்தால் என் தலையைக் கிள்ளிப்போட்டாலும் போட்டிருப்பார்’
‘எப்படிச் சொல்கிறாய்?’
‘அவர்தான் தனக்குள்ளும் ரெளத்திரம் இருக்கிறது என பகிரங்கமாக ஒத்துக்கொண்டாரே…’
‘சரி விடு. அவர் எப்படியோ போகட்டும். நமக்கு இப்படிப் பட்டவர்களோடு மோதுவதும், நம் நேரத்தை இத்தகைய மனிதர்களுக்காக நாம் விரயம் பண்ணுவதும் தேவையில்லாத ஒன்று. நமக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் எவ்வளவோ தூரம் போகவேண்டியிருக்கிறது’ என்றான் செல்வா.
‘நமது பயணத்தின் இடையில் இதுவும் ஒரு அத்தியாயம்தான்’
‘என்ன சொல்ல வருகிறாய் அகிலா?’
‘இதோடு நான் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. ஒன்று அவரிடம் உண்மை இருந்தால் நாம் ஒத்துக்கொண்டு போகவேண்டும். இல்லையேல் அவரை காவியைக் கழற்றிப் போட்டுவிட்டு ஆசிரமத்தைக் கலைக்கச் சொல்லவேண்டும். மாயையைக் கலைப்பது ஒன்றுதான் இங்கு பிரதானம்’-அகிலாவின் குரலில் தீர்க்கம் இருந்தது.
‘அப்படியென்றால்…?’
‘அந்த அறிவானந்தரை அவரது ஆசிரமத்திலேயே நான் சந்திக்கப்போகிறேன்’
‘நீ சராசரி இல்லையென்பது எனக்குத் தெரியும். எனவே அதுதான் உன் முடிவென்றால் அதை யாரால் தடுக்க முடியும்?’
‘செல்வா, நீயும் என்னோடு அறிவானந்தா ஆசிரமத்திற்கு வருகிறாயா?’
‘இல்லை. அவரிடம் தேடிக் கண்டடைய எனக்கு எதுவும் இல்லை’
’சரி, நேரமாகிறது. கிளம்பலாமா? தாமதமானால் அம்மா கவலைப்படுவாங்க’ என்றபடி
அகிலா எழுந்துகொண்டாள். தமிழ்ச்செல்வனும் எழுந்துகொண்டான். வழக்கமான சந்தோஷச் சிரிப்பு
இருவர் மத்தியிலும் பற்றிக்கொண்டது. இருவரும் அவரவர் டூவீலரை நோக்கி நடந்தனர்.
அலைகள் தங்கள் தீரா விளையாட்டில் லயித்தபடியே இருந்தன.