அம்மையும் எய்ட்ஸும் – சிறுகதை | சிபி

 அம்மையும் எய்ட்ஸும் – சிறுகதை | சிபி

காலையிலேயே அம்மா ஹாஸ்டலுக்கு வந்திருந்தாள். தம்பியும், நானும் அவளோடு கிளம்பி போனோம்.எங்கே போகிறோம் ? என கேட்கும் போதெல்லாம் அவள் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அம்மாவின் உடலில் ஏலக்காய் வாசம் வீசியது வேலைக்கு போய்விட்டு அப்படியே வந்து இருக்கிறாள் போலிருக்கிறது. அவளின் விரல்கள் முன்பை விட இப்போது அதிகமாக கருப்பு,கருப்பாய் பித்தவெடிப்பை போல் வெடித்திருந்தது. எங்கள் குடும்பம் கடன்களால் சீரழிந்த குடும்பம். கடன் கொடுத்தவர்களின் கெட்ட வார்த்தைகளை கேட்க திராணியில்லாமல் சொந்த ஊர் விட்டு கேரளாவில் பிழைக்கும் நிர்பந்தம்.

எங்கள் தெரு வந்துவிட்டது. தெருவின் முக்கில் ரமேஷ் மாமாவும். குமாரண்ணனும் தேருக்கு பூமாலை கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேர் எவ்வளவு விசேஷமானது தெரியுமா ? இந்த பூமியை விட்டு பிரியும் ஒவ்வொரு மனித பிண்டத்தையும் தன்மேல் வைத்து பூக்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டு திருஊர்வலம் கூட்டிப் போகும் வாகனமல்லவா அது. முன்பு எப்போதோ பார்த்த சில சொந்தக்காரர்களின் முகம் தென்பட்டது. அவர்கள் தலையை தொங்க போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் . வீட்டுக்கு முன்னே பரபரப்பாக பந்தலுக்கு தென்னங்கிடுகு சொருகும் வேலை நடந்தது. சிமெண்ட் தெரு என்பதால் மண் முட்டையில் அப்பா பந்தல் தாங்க மூங்கில் குச்சிகளை சொருகி கொண்டிருந்தார். அப்பாவை பார்த்ததும் தம்பி ஓடிப்போய் அவரின் வேட்டியை இழுக்க,அவர் அவனை அள்ளி முத்தமிட்டார்.

“என்னப்பா உறுமிக்காரரே ! சும்மா எனக்கென்னானு இருந்தா எப்படி? நாலு இழுப்பு இழுத்து விடுப்பா அப்பத்தே ஊரு ஆளகளுக்கு எழவுனு தெரியும்” எழவு என்றதும் நான் அம்மாவை திரும்பிப் பார்த்தேன்

அவள் “சித்தப்பா நம்மள விட்டு போயிட்டாரா!!” என்றாள். உறுமியை தவில்காரர்கள் வலது கையிலுள்ள கொஞ்சம் நெளிந்த குச்சியால் தவிலில் “டவுன்… டவுன்…’ என இழுத்தார்கள். இரண்டு இழுவைக்கு ஒரு முறை இடது கையில் இருந்த நேரான குச்சியால் ‘டம்..டம்’ என அடித்தார்கள். எனக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது அம்மாவின் புடவைக்குள் தலையை சொருகிக்கொண்டு விம்மி விம்மி அழுதேன்.

“போடுவனம் வசூல் பண்ற கொய்யா மண்டயனை போனை போட்டு வரச் சொல்லுங்கப்பா” என பெரியவர் சொல்ல

“அவேன் இந்நேரம் பொச்சுல வெயில் அடிக்கவர பொழந்து போட்டு தூங்கிட்டு கிடப்பானே” என்றது இன்னொரு குரல்.

சித்தப்பாவின் பிணத்தை மரப்பலகையில் படுக்க வைத்திருந்தார்கள் ஒவ்வொருத்தராய் போய் அவர் தலைக்கு எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார்கள்.

“அம்மா லட்சுமி பிள்ளைய கூப்பிட்டு வந்து தலைக்கு எண்ண வைங்கம்மா”

அம்மாவை அடுத்து நான் எண்ணை எடுத்து சாய்ந்து கிடந்த சித்தப்பாவின் தலையில் தடவும்போது எலும்புகள் கையில் பட்டது போல ஒரு உணர்வு. உடலை வேட்டியால் மூடியிருந்தார்கள் கால்கள் சூம்பிப் போய் முருங்கைக்காயைப் போலிருந்தது .என்னை அறியாமலே நான் அழுக ஆரம்பித்து விட்டேன். பாட்டி மூலையில் தலையை விரித்துப் போட்டு மகனை வெறித்து பார்த்த வண்ணமிருந்தாள்.அழுது, அழுது பாட்டியின் முகம் சிதைந்து போயிருந்தது.

சித்தப்பாவிற்கு நான் இரண்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது திருமணம் நடந்தது. மருது என்ற பெயர் அவருக்கு அவ்வளவு பொருத்தமானதாகயிருந்தது. ஆள் துடிப்பாய் இருப்பார் சண்டை என்று வந்துவிட்டால் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு போவார். குட்டையாய், கட்டை மீசை கள்ளங்கபடமில்லாத புன்னகையோடும் சிரிக்க கூடியவர். அவருக்கு சுருள் சுருளாய் அடர்ந்த கால் மயிர்கள் இருக்கும் அது எனக்கு பிடிக்கும் .

கமல்ஹாசனை போல் முடியை ஏற்றிச் சீவியிருப்பார். பார்க்க வெள்ளையாகவும்; கொஞ்சம் சிடுமூஞ்சியை போலவும் முகமிருக்கும். அவருக்கு கமல் என்றால் அவ்வளவு பிடிக்கும் .சின்ன வயதிலேயே அப்பாவிற்கும் ரஜினி என்றால் உயிர் . இரண்டு பேரும் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்களாம். ஒரு நாள் அப்பாவை மாட்டு கொட்டத்தில் வைத்து அடித்திருக்கிறார் சித்தப்பா ஆனால் அவரை தவிர அப்பாவை வேறு யாராவது அடித்தால் அவர்களை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை.

சண்டியர் என்றாலே காதல் என்ற ஒன்று இருந்துதானே ஆகும் பள்ளபட்டி ரத்தினம் டீச்சர் படிக்கும் போதிலிருந்தே அவள் கல்லூரிக்கு போய் வரும் போதிலிருந்தே சித்தப்பாவும்,அவளும் காதலித்தார்கள்.அது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டீச்சரோ வீட்டுக்கு பயந்து கடைசியில் மாமன் மகனை கட்டிக்கொண்டாள். பிறகு சித்தப்பாவிற்கு கல்யாணம் செய்துகொள்ள விருப்பமில்லை அவருக்கு வலுக்கட்டாயமாக உசிலம்பட்டியிலிருந்து பெண்பார்த்து கட்டி வைத்தார்கள். ஆனால் அவருக்கு சித்தியை சுத்தமாகப் பிடிக்கவில்லை.

எப்போது பார்த்தாலும் கோள் மூட்டி விடுவது பக்கத்து வீட்டு விஷயங்களைப்பற்றி பொரணி பேசுவது சித்தப்பாவின் சோம்பேறித்தனத்தை சுட்டி, சுட்டி காட்டுவது அவருக்கு இது ஒப்பவில்லை. எப்போது பார்த்தாலும் அடி உதை தான் சித்தப்பாவின் நெஞ்செல்லாம் ரத்தினம் டீச்சர் தான் நிறைந்திருந்தாள்.இருவரும் கல்யாணம் செய்திருந்தாள் அவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும் என அம்மாவே பலமுறை அப்பாவிடம் சொல்லியிருக்கிறாள்.

சித்தி கர்ப்பமாக இருந்தபோது அவள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து தலை சீவிக் கொண்டிருந்தாள். சித்தப்பா டிவி பார்த்துக்கொண்டே சுவரில் சாய்ந்து பீடி வலித்தார்.

சித்தி “செத்த பய..செத்த பய… காசு சம்பாதிக்க வக்கில்லாதவனக்கு வாக்கப்பட்டு சீரழிய வேண்டியிருக்கு” என புலம்பினாள். சித்தப்பா கோபத்தில் பக்கத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து சித்தியின் தலையில் எறிந்தார். அவள் நெற்றியில் பட்டு ரத்தம் ஒழுகியது சித்தி அழுது கத்தி ஊரைக் கூட்டிக் கூப்பாடு போட்டாள். பிறகு துணிமணிகளை எடுத்துக்கொண்டு உசிலம்பட்டிக்கு போனவள் தான் இன்று அவர் கணவர் இறந்து கிடந்த போதும் இன்னும் வந்து சேரவில்லை.

சித்தி போனப்பிறகு அவர் ரொம்பவும் மாறிவிட்டார் வீட்டிலேயே இருப்பதில்லை.எப்போது பார்த்தாலும் குடி, பீடி இப்படியாக இருந்தார் தாத்தாவின் அதட்டலுக்கெல்லாம் அஞ்சுவதில்லை. “ எனக்கு பிடிக்காத கல்யாணத்தை செஞ்சு வச்சு என்ன சீரழித்துப் புட்டீங்களே” என குடித்து விட்டு புலம்புவார்.

எங்கள் குடும்பம் கடன் தொல்லையால் கேரளா போக வேண்டியதாயிற்று.நானும் என் தம்பியும் அரசு மாணவர் விடுதியில் படித்தோம் . எப்போதாவது விடுமுறைக்கு ஊருக்கு வருவோம். ஒவ்வொருமுறை போகும்போதும் அவர் உடல் மெலிந்து கொண்டே இருந்தார். எங்களை பார்க்கும் போதெல்லாம் பாக்கெட்டில் எவ்வளவு இருந்தாலும் எடுத்துக் கொடுத்து விடுவார் “நல்லா வாங்கித்தின்னுங்கடா” என்பார். கூடவே கன்னத்தில் ஒரு முத்தம் கிடைக்கும். அப்போதெல்லாம் எனக்கு அந்த பீடியின் நாற்றம், நாற்றமாய் தெரிந்ததில்லை. பாட்டிக்கு அவர் மீது அளவு கடந்த பாசம் காசு கேட்கும் போதெல்லாம் அவள் சம்பாதித்த பணத்தை தருவாள்.

“உன்னாலதே அவன் அழிஞ்சு போகப் போறான். காசு குடுத்து,குடுத்து கெடுத்து வைக்காத டி முண்ட” தாத்தா பாட்டியை உதைப்பார். ஆனால் பிள்ளை பாசம் யாரைத்தான் விட்டு வைத்தது.

ஒருநாள் இரவு அம்மா எங்களை ஊருக்கு கூட்டி போகும் போது பஸ்ஸில் சீனி சேவு வாங்கி கொடுத்தவள்

“சித்தப்பா உங்களை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்தாராம், நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாம ஊரே அலைஞ்சு இருந்திரக்காரு, கடைசியா உங்க ஹாஸ்டலை கண்டுபிடிச்சு போய் வாடன் கிட்ட உங்களை பாக்கனும்னு கேட்டிருக்கார். அப்ப நீங்களும் பள்ளிக்கூடத்துக்கு போயிட்டீங்க. ஆளு மெலிஞ்சு போயி வேட்டி, சட்டை எல்லாம் மண்ணும் கின்னுமா போகவும் கிறுக்கேனு நினைச்சுகிட்டு அடிச்சு பத்தி விட்டாக அவருக்கு உங்கள பாக்கணும்னு ரொம்ப ஆசையாம்’’

“ஆமாமா நாங்க அன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வெளிய வந்தப்ப ரொம்ப மெலிஞ்சு போய் ஒரு ஆள் நின்றிருந்தாரு. சித்தப்பா மாதிரி தான் இருந்தாரு, ஆனா தம்பிதான் அவரு நம்ம சித்தப்பா இல்லடா, சித்தப்பா இப்படியா இருப்பாருனு சொல்லி கூட்டிட்டு போயிட்டான். அவரு வானத்த பாத்துகிட்டு உக்காந்திருந்தாருமா”

பஸ்ஸை விட்டு இறங்கியதும் நாசர் சிக்கன் கடை திறந்து இருந்தது “அம்மா சித்தப்பாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா வாங்கிட்டு போலாமா” என்றேன்.

சித்தப்பா வீட்டுக்கு போனோம் ஒரு கட்டிலில் படுத்திருந்தார் எங்களைப் பார்த்ததும் பதட்டமாக போர்வையை எடுத்து உடலை மூடிக் கொண்டார். கட்டிலில் கிடந்தவரை பார்த்த எனக்கு அழுகை வந்தது அவர் பாதி உடல் மெலிந்து இருந்தார் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “நல்லா படிக்கனும்டா! உங்க அப்பேன் உங்கள கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறான். பார்த்து நல்லா படிச்சு அவங்கள நீங்க தான் மேடேத்தணும் என்ன ?” என்றார்

“சரி சித்தப்பா! இந்தாங்க சிக்கன் சாப்பிடுங்க.”

“எனக்கு எதுக்கு இம்புட்டு நீங்க சாப்பிட சாப்பிடுங்க”

அவர் ஒரே ஒரு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி தந்துவிட்டு ஒரு முழுச்சிரிப்பு சிரித்தார் அது அவரின் வழக்கமான சிரிப்பிலிருந்து வேறுபட்டு முழுமையாயிருந்து.

அம்மாவிடம் சித்தப்பாவிற்கு என்ன ஆச்சு என கேட்கும் போதெல்லாம் அம்மா ஒரு நோய், ஒரு நோய் என மழுப்பி விடுவாள். அன்று எழவுக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டேன்.

அதில் ஒரு குரல் “தேவிடியா கூட போய் படுத்து நோய இழுத்துட்டு வந்திருக்கான். பிறகு எப்படி பொழப்பானமா”

இன்னொரு குரல் “ஆமாப்பா !நானே இவனை அந்த ஏழரசு குளத்துக்கிட்ட நிறைய தடவை பார்த்திருக்கரனப்பா”

மீண்டும் பழைய குரல் “என்ன செய்றது? பொண்டாட்டி கூட இல்லனா அப்படித்தானப்பா அவன் விதி சின்ன வயசிலேயே போயிட்டான் விடுங்க, இன்னும் பொண்டாட்டி புள்ளைங்க வரலையா ? யப்பா மணி 3 ஆக போகுது பிணத்த தூக்கம் வேண்டாமா?”

பக்கத்து தெருவில் இருந்த பெண்கள் எல்லாம் தங்கள் வீட்டில் இருந்து ஆளுக்கு ஒரு குடம் நீர் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றால் சித்தப்பாவை குளிப்பாட்டி புது வேட்டி, சட்டை எல்லாம் கட்டி உட்கார வைத்திருந்தார்கள். சித்தியும், அவரது சொந்தகாரர்களும் வந்துவிட்டார்கள்.சித்தி பிணத்தருகே நின்று சிறிது அழுதாள். அழுதால் என்ன சொல்ல முடியாது நடித்தாள் என்றால் சரியாயிருக்கும்.

“என்னய்யா எல்லாரும் வந்துட்டாகல தூங்கலாமா? கொள்ளி வைக்க பையனெங்கப்பா ஆள காணோம்? என்ன பெரியவர் ஒரு கேட்டக சித்தி

“பையனுக்கு அம்மை போட்டுருக்கு, அதே வண்டியில உட்கார வைச்சிருக்கேன்”

“அப்ப தகப்பந்தேன் கொள்ளி வைக்கணும்” தாத்தா பக்கம் திரும்பினார்கள் அவரும் தலையசைத்தார்.

நான் வேகமாக ஓடிப்போய் வண்டியில் இருந்த பையனைப் பார்த்தேன் உடலெல்லாம் வேப்பிலையை அரைத்துப் பூசியிருந்தார்கள்.ஆனால் உடலில் அம்மைக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவன் என்னை பார்த்ததும் சிரித்தான்.

“அம்மை போட்டு இருக்கா ?”

“ஆமா, இல்ல அம்மாதான் பூசிவிட்டுருக்கு நான் அப்பாவை பார்க்கக் கூடாதாம் அவருக்கு இருக்கது எனக்கும் வந்துருமாம். எனக்கு பிடிக்கல இருந்தாலும் பள்ளிக்கூடத்துக்கு லீவு கிடைக்கிதேனு சரினு சொல்லிட்டேன்” என்றான்.

சுடுகாட்டில் சித்தப்பாவை எரிமூட்ட தயார் செய்த மண்படுக்கையில் அவரை வைத்து எருத்தட்டிகளால் உடலை மூடி அடுக்கினார்கள்.தாத்தா கொள்ளி குச்சியை எடுத்து தீ வைக்க தயாரானார்.நான் என்னை அறியாமலே ஓடிப்போய் தாத்தாவோடு நானும் கொள்ளிக் கட்டையை பிடித்து கொள்ளி வைத்தேன். இன்னொரு பக்கம் அவரின் துணி, படுத்திருந்த போர்வை, தலையணையை கொண்டு வந்து அப்பா தீ வைத்தார்.

தாத்தாவுக்கு மொட்டை எடுக்க விருப்பமில்லை.மகனின் செய்கை மீது அவருக்கு உடன்பாடில்லை. பிரங்கை மயிரை மட்டும் எடுக்கச் சொன்னார் சித்தப்பாவின் உடல் எரியத் தொடங்கியதும், எல்லோரும் கிளம்பியதும் அப்பா என் தோல் திருப்பி இழுத்துப் போனார். எரியும் உடலின் இளஞ்சிவப்பு நிற தணல்கள், என்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போகக்கூடாதா என்பது போல பரிதாபமாக தீ நெளிந்தது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...