கலைவாணர் எனும் மாகலைஞன் – 14 – சோழ. நாகராஜன்

 கலைவாணர் எனும் மாகலைஞன் – 14 – சோழ. நாகராஜன்

14 ) கருணை உள்ளமும் காதல் மனமும் ..

திருச்சியிலிருந்து கிருஷ்ணனுடன் புறப்பட்ட குழுவினர் சென்னைப் பட்டணம் வந்து சேர்ந்தார்கள். சென்னையை முதன்முதலாகப் பார்த்த மதுரத்துக்கு ஆர்வம் மேலிட்டது. மறுநாள்தான் புனே ரயில். ஆகவே அன்றைய நாளில் எங்காவது சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் மதுரத்துக்குத் தோன்றியது.

மதுரம் கிருஷ்ணனிடம் கேட்டார்:

“சென்னையில் என்ன என்ன இடங்கள் பார்க்கலாம்?”

கிருஷ்ணன் பார்க்கத் தகுந்த இடங்களின் பட்டியலைச் சொல்லத் தொடங்கினார்:

“கலங்கரை விளக்கம், மூர்மார்க்கெட்…”

பட்டியலை அவர் சொல்லி முடிக்குமுன்னரே மதுரம் முடிவெடுத்துவிட்டார் மூர்மார்க்கெட் போகலாம் என்று.
அவருடன் கிருஷ்ணனும் புறப்பட்டார். மதுரம் விழித்தார். கிருஷ்ணன் விளக்கம் சொல்லத் தொடங்கினார் இவ்வாறு:

“நீங்க மட்டும் தனியா போனா எப்படி? உங்களை நான் பத்திரமாகத் திரும்பக் கொண்டுவந்து விடுவேன் என்று உங்கள் பாட்டியிடம் உறுதியளித்திருக்கேனே… அதனால நானும் வருவேன்.”

மற்ற பெண்களுடம் புறப்பட்ட மதுரத்தோடு கிருஷ்ணனும் சேர்ந்துகொண்டார். மூர்மார்க்கெட்டில் மதுரம் வாங்கிய பொருட்களுக்கு கிருஷ்ணனே பணம் கொடுத்தார். அது மதுரத்துக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலாக வந்தது.

மற்ற பெண்களை ஏரெடுத்தும் பார்க்காத கிருஷ்ணன் ஏதாவது காரணத்தைக் காட்டி மதுரத்தைத் தேடித்தேடி வந்து பேச்சுக் கொடுத்தார். மதுரத்துக்குக் கோபம் கோபமாக வந்தது.

“ஏன்யா தொந்தரவு பண்றே?” – என்று எரிந்து விழுந்தார் மதுரம்.

உடனிருந்த பெண்கள் மதுரத்தைக் கேலி செய்யத் தொடங்கினார்கள்.

“யாருடீ அது, உன்னையே வட்டம் போடுது..?”

அடுத்த தடவை மறுபடியும் கிருஷ்ணன் வந்தபோது மதுரம் அவரைப் பார்த்துக் கடுத்த குரலில் இப்படிச் சொன்னார்:

“ஜாக்கிரதையாக இரும்…”

மறுநாள் காலையில் சென்டிரல் ரயில் நிலையத்துக்கு எல்லோரும் புறப்பட்டார்கள். காலை எட்டரை மணிக்கு புனே செல்லும் ரயில் புறப்பட்டது. மற்றவர்கள் எல்லோரும் வண்டியில் ஏறிவிட்டனர். 
அவர்களை அழைத்துச் சென்று படம் தயாரிக்க இருந்த அந்த திருப்பூர் டாக்கீஸ் சினிமா கம்பெனிக்கு இரண்டு நிர்வாகிகள் இருந்தார்கள்.
அந்த இரு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் ஏதேதோ குறை சொல்லிக்கொண்டு சண்டை போட்டார்கள். சென்டிரல் நிலையத்தின் நடைமேடையில் அவர்களின் சண்டை வலுத்துவிட்டது. ஆனால், புனே செல்லும் ரயில் இவர்களுக்காக இரக்கம் காட்டவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அது கிளம்பிவிட்டது.

ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பார்களே அந்தக் கதையாகிவிட்டது அப்போது. தாங்கள் பயணப்பட வேண்டிய ரயில் கிளம்பியதைக்கூட கவனிக்காமல் சண்டையில் மும்முரம் காட்டியதால் ரயிலை அவர்கள் கோட்டைவிட்டார்கள். ஆனால் சண்டை விட்டபாடில்லை.

தங்களைப் பொறுப்பாக அழைத்துச் செல்லவேண்டிய மேனேஜர்கள் சண்டைபிடித்துக்கொண்டு, ரயிலைத் தவறவிட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்த கிருஷ்ணன் என்னசெய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். 
ஒவ்வொரு நடிகரிடமும் வந்து காதில் ஏதோ சொன்னார்.

“நம்முடைய மேனேஜர்கள் இப்போது நம்முடன் இல்லை. வழிச் செலவுக்குப் பணமுமில்லை. உங்களிடம் இருந்தால் கடனாகத் தந்து உதவுங்கள்.”

– இதைத்தான் ஒவ்வொருவர் காதிலும் கலைவாணர் சொன்னார். ஆனால் என்ன செய்வது? அங்கே எவரிடத்திலும் பைசா காசு தேறவில்லை. மதுரத்திடம் வந்தார் கிருஷ்ணன்.

“உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு?”

“தொண்ணுhறு ரூபாய்” – இது மதுரம்.

“எல்லாருக்கும் மதியச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஒரு ஐம்பது ரூபாயைக் கொடு.” – இது கிருஷ்ணன்.

மதுரம் மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்தார். அந்த மதியத்துக்கு எல்லோர் வயிறும் நிரம்பிற்று.

ரயில் தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. மாலை வந்து அதுவும் கடந்துபோய் இரவு வந்தது. அவரவருக்குப் பசியெடுக்கத் தொடங்கியது. கிருஷ்ணன் இதை உணர்ந்தவராக மதுரத்திடம் வந்தார்.

“உன்னிடம்தான் மீதப் பணம் நாற்பது ரூபாய் இருக்கிறதே…”

“ஆமாம் அதற்கென்ன?”

“அதையும் கொடு…”

“முடியாது, தரமாட்டேன்…”

“சரி… நீ தரவில்லையானால் எல்லாரும் ராப்பட்டினி.”

மதுரம் தன்னிடமிருந்த அந்த நாற்பது ரூபாயையும் கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

“இனி காலணா கிடையாது என்னிடம்…”

“அதான் தெரியுமே…”

கிருஷ்ணன் இரவு உணவை ஏற்பாடு செய்வதற்காக நகர்ந்தார். அவரையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டே நின்றார் மதுரம்.

இந்த மனிதர் மட்டும் ஏனிப்படி இருக்கிறார்? மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை இவருக்கு மட்டும் ஏன்? இதையெல்லாம் இவர் ஏன் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார்?

கிருஷ்ணனிடமிருந்த அந்த இரக்க சிந்தனையை, பிறருக்கு உதவ வேண்டும் என்கிற அந்தக் கொடை உள்ளத்தை நினைத்து நினைத்து அதனாலேயே கிருஷ்ணனிடம் கரைந்துகொண்டிருந்தார் மதுரம்.

தனக்குப் பிடித்துப்போன ஒருவரிடத்தில் தன்னையே இழக்கும் தருணம் அது. அந்தத் தருணத்தை உணர்ந்துகொண்டதுபோல இருந்தது மதுரத்துக்கு.  

இரவு முழுதும் கிருஷ்ணனைப் பற்றிய இப்படியான சிந்தனையோடேயே நேரமும் நகர்ந்தது. மறுநாள் காலைப் பொழுது விடிந்தது. 
எல்லோரும்அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள் வெகு நேரமான பிறகும்.
அப்போது மணி பத்து முப்பது இருக்கும். ரயில் புனே ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தவர்கள் ரயில் நிலையத்திலிருந்து அவர்களை ஒரு பெரிய பங்களாவுக்குக் கூட்டிச்சென்றார்கள்.

அது தங்குவதற்கு வசதியான இடமாக இருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான இடங்கள் அந்த பங்களாவிலேயே ஒதுக்கப்பட்டன.

கிருஷ்ணன் ஒரு வேலை செய்தார். ஆண்கள் அறைக்குப் பெண்களும், பெண்கள் அறைக்கு ஆண்களும் போகக்கூடாது என்று ஒரு அட்டையில் எழுதித் தொங்கவிட்டார்.

அப்படி அவரே எழுதி வைத்துவிட்டு, பெண்கள் அறையைப் போய் எட்டிப்பார்த்தார் கிருஷ்ணன்.

மதுரத்துக்கு மீண்டும் கோபம் வந்துவிட்டது.

“நீர் ஆம்பளைதானே?”

“அதில் என்ன சந்தேகம் இப்போ?”

“பெண்கள் அறைக்கு ஆண்கள் போகக்கூடாதுனு போர்டு எழுதித் தொங்கவிட்டதும் நீர்தானே?”

“ஆமாம் அதுக்கென்ன?”

“அப்படி எழுதிவச்ச நீரே இங்கே வரலாமா?”

இந்தக் கேள்வியை மதுரம் கேட்டதும்தான் கிருஷ்ணனுக்கு அது உரைத்தது. கிருஷ்ணன் மதுரத்திடம் சொன்னார்:

“அப்படினா நீ வெளியே வா…”

“எதுக்கு? என்ன விசயம்?”

“பணம் ஏதும் வச்சிருக்கியா?”

– இது கிருஷ்ணன்.

மதுரம் முறைத்தார். பதிலும் சொன்னார்:

“அதான் இருக்குறதெல்லாம் ரயிலிலேயே கொடுத்துட்டேனே?”

கிருஷ்ணனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நல்ல நோக்கத்துடன்தான் தான் பணம் கேட்டு வந்திருக்கிறோம் என்பதை மதுரத்துக்குப் புரிய வைக்க முயன்றார் கிருஷ்ணன்.

இதோ பார் மதுரம்… நாம் திருச்சியிலிருந்து கிளம்பி இத்தனை பேரும் இங்கே வந்துட்டோம். நம்மைக் கவனித்துக்கொள்ளவேண்டிய நிர்வாகிகளும் நம்மோடு வரலை. ஊர் தெரியாத இடம். கையிலே காலணா கிடையாது. நமக்கு நாமே நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கொள்வதுதான் சிறந்த வழி.

இப்படிச் சொல்லிவிட்டு, மிகவும் அழுத்தமாக இப்படிக் கூறினார்:

“ஆபத்துக்கு உதவாத செல்வம் செல்வமே இல்லை மதுரம்!”

மதுரத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பணமாக அவரிடத்தில் பைசா காசுகூட இல்லை. ஆனால், கிருஷ்ணன் சொல்வதில் நியாயமும் இருக்கிறது. கிருஷ்ணனின் சொல்லும் செயலும் மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருக்கின்றன. ஆனால் என்ன செய்யலாம்?

மதுரம் ஓரிரு நிமிடங்கள் யோசனையில் மூழ்கினார். பிறகு கிருஷ்ணனைப் பார்த்து வாய் திறந்தார்:

“இந்தாய்யா… என்கிட்ட கடைசியா இது மட்டும்தான் இருக்கு. இதை வாங்கிட்டு எங்கேயாவது போய்விடும். இனி மறுபடியும் என்கிட்டே வராதீர்!”

– இப்படிச் சொல்லிக்கொண்டே தனது இரண்டு கைகளிலும் அணிந்திருந்த தங்க வளையல்களை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் கழற்றிக் கொடுத்தார் கிருஷ்ணனிடம்.

அன்பாலும் இரக்கத் தன்மையாலும் நிரம்பியிருந்த கிருஷ்ணனின் இதயத்தைப் புரிந்துகொண்ட நல் இதயமாகத் திகழ்ந்தவர் மதுரம் என்னும் பின்னாளின் வரலாற்று நிகழ்வுகளுக்கு இந்த நிகழ்வு.அச்சாரமிட்டதுபோல இருந்தது. 
மதுரத்தின் உள்ளத்தில் கிருஷ்ணனும் கிருஷ்ணனின் உள்ளத்தில் மதுரமும் பரஸ்பரம் இடம் பிடித்துக்கொண்டார்கள் தங்களின் பரோபகார சிந்தையாலும் செயலாலும். 
இப்படித்தான் நல்ல குணங்கள் நிரம்பியிருந்த அவர்களிருவரிடத்தில் ஒருவர் மேல் ஒருவருக்கு ஈர்ப்பு பிறந்தது.

இதுவே கிருஷ்ணனின் நெஞ்சம் முழுதும் மதுரத்தின் மீதான காதலாகப் பரிணமித்தது.
(கலைப் பயணம் தொடரும்)   

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...