கலைவாணர் எனும் மாகலைஞன் – 13 – சோழ. நாகராஜன்

 கலைவாணர் எனும் மாகலைஞன் – 13 – சோழ. நாகராஜன்

13 ) மதுரத்துக்குக் கிருஷ்ணன் வைத்த டெஸ்ட்…

கலையின் நேர்த்தியில் கலைவாணருக்கு இருந்த விடாப்பிடியான பற்றுதான் அவரை அந்நாளின் திரை ஆளுமையான ராஜா சாண்டோவிடமே முரண்பட வைத்தது என்பதைப் பார்த்தோம். இத்தனைக்கும் அது கிருஷ்ணனுக்கு இரண்டாவது படம்தான். அவர் அப்போதும் சினிமாவில் புதுமுகம்தான். அந்தச் சூழலிலும் நடிக்கும் காட்சி ஒவ்வொன்றையும் நேர்த்தியோடு வழங்க வேண்டியது ஒரு கலைஞனின் கடமையென்பதை அவர் உணர்ந்தே இருந்தார் என்பதற்கு அது சான்றாக இருந்தது.

“கலையை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அது வாழ்க்கையோடு பிணைந்துகிடப்பதைக் கண்டுகொள்ளலாம்!”

-என்று பின்னாளில் நாகர்கோவிலில் நடந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பேசுகிறபோது குறிப்பிட்டிருக்கிறார். கலை குறித்த கோட்பாடுகளெல்லாம் பெரிதாக உருவாகாத, அப்படியே உருவாகியிருந்தாலும் இங்கு வந்துசேராத காலத்திலேயே அவருக்குக் கலையின்மீதும் அதன் பயன்பாட்டின்மீதும் அழுத்தமான கருத்துக்கள் இருந்ததை அவரது செயல்பாடுகளின் வாயிலாகவே உணர முடிகிறது.

கிருஷ்ணன் நிகழ்த்திய ‘கோவலன்’ கதாகாலட்சேபத்தை இசைத்தட்டுக்களாகத் தயாரித்து விற்று நல்ல லாபம் ஈட்டிக்கொண்டிருந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியாருக்கு திரைத்துறையில் இறங்க விருப்பம். 1934 ல் சரஸ்வதி சௌண்ட் புரொடக்சன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். கல்கத்தா சென்று அங்கே இருந்த நியூ தியேட்டர் ஸ்டூடியோவில் “அல்லி அர்ஜுனா” எனும் படத்தைத் தயாரித்தார். ராவ் பகதூர் ப.சம்பந்த முதலியார் எழுதிய நாடகமான “ரத்னாவளி”யைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார் மெய்யப்பச் செட்டியார். கல்கத்தாவின் பயனீர் ஸ்டூடியோவில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி.எஸ்.சாமண்ணா, லட்சுமிபாய், சரஸ்வதிபாய் போன்ற கலைஞர்களைக் கொண்டு இந்தப் படத்தை எடுத்தார். 1935 ஆண்டு வெளியான படம் ரத்னாவளி ஏ.வி.எம்.மின் இரண்டாவது படமாகும்.

இந்த ரத்னாவளியில் இன்னொரு நடிகையும் நடித்திருந்தார். அவர் பெயர் டி.ஆர்.ஏ. மதுரம். அவர்தான் பின்னாளில் கலைவாணரின் காதல் மனைவியான டி.ஏ.மதுரம். துவக்கத்தில் டி.ஆர்.ஏ.மதுரமாக அறியப்பட்டார். அவருக்கு வேம்பு, விஜயம், பட்டம்மாள், காந்தம்மாள் ஆகிய நான்கு தங்கைகளும், மணி, துரைராஜ், ஞானம் ஆகிய மூன்று தம்பிகளும் இருந்தார்கள். பெரிய குடும்பத்தின் மூத்த பெண் என்பதால் அதன் பாரத்தைத் தாங்கவேண்டியவராகவும் மதுரம் இருந்தார். நடனம் கற்றார். பாட்டு கற்றுத் தேர்ந்தார். கலையின்மீதான ஆர்வமும் கைகூடி இருந்தது.

ரத்னாவளி படத்தில் நடித்து முடித்த பின்னர் அடுத்த பட வாய்ப்புக்காகத் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்தில் காத்திருந்த டி.ஆர்.ஏ. மதுரத்துக்கு ஒருநாள் ஒரு கடிதம் வந்தது. அதை அனுப்பியது திருப்பூர் டாக்கீஸ் எனும் சினிமா நிறுவனம். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது:

“எங்களது அடுத்த படத்தில் திரு என்.எஸ்.கிருஷ்ணன் நடிக்கிறார். நீங்களும் நடிக்க வேண்டும்.”

அத்துடன் இருபது ரூபாய்க்கான காசோலையும் முன்பணமாக இணைக்கப்பட்டிருந்தது. நடிக்க ஒப்புதல் அளித்து பதில் கடிதம் எழுதினார் டி.ஆர்.ஏ. மதுரம். பத்து நாட்கள் ஓடிவிட்டன. மதுரம் வீட்டு வாசலில் வந்து நின்றார் திருப்பூர் டாக்கீஸ் ஊழியர் ராமய்யர். அவருக்குப் பின்னால் கிருஷ்ணன். வீட்டினுள்ளே கூடத்தில் படுத்திருந்த மதுரம் அசந்து உறங்கிக்கொண்டிருந்தார். ராமய்யர் சத்தம்போட்டு எழுப்பினார். மதுரம் விழித்துக்கொண்டு ராமய்யரைப் பார்த்தார். “அட நீங்களா? வாங்க…” – என்றவர், “உங்க கூட வந்திருப்பது யார்?” என்றார்.

ராமய்யர் மதுரத்திடம் நெருங்கி, அடங்கிய குரலில் சொன்னார்:

“மெல்லப் பேசு… அவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். பெரிய காமெடியன்…”

மதுரம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ராமய்யர் தொடர்ந்தார்:

“நாளை நாம் புறப்பட வேண்டியிருக்கும். படப்பிடிப்பு தொடங்கப்போகிறது.”

ராமய்யர் சொல்லி முடித்ததும் கிருஷ்ணன் சொன்னார்:

“இவங்களை ஒருதடவை டெஸ்ட் பார்த்துட்டா நல்லது…”

“டெஸ்டுனா?” – என்று அப்பாவியாகக் கேட்டார் மதுரம்.

“அதாவது, நீ எப்படிப் பேசுறே, எப்படிப் பாடுறேனு பார்க்க வேண்டாமா? அதான் டெஸ்ட்” – இது கிருஷ்ணன்,

மதுரத்தின் முகம் மாறியது. கண்களில் கோபத்தின் அடையாளம்.

“நான் பேசுறதைத்தான் இப்ப கேட்டுட்டீங்களே. எனக்குப் பாட வராது”

வெடுக்கென்று பதில் சொன்னார் அவர்.

கிருஷ்ணனும் ராமய்யரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். மதுரம் நடந்துகொள்ளும் விதம் கிருஷ்ணனுக்குள் ஏதோவொரு புதுவிதமான அனுபவத்தை உணர்த்தியது.

கிருஷ்ணன் தீர்க்கமாக யோசித்தார்.

ராமய்யருடன் மதுரத்தையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார் கிருஷ்ணன். திருச்சியில் இருந்த ராமசாமிப்பிள்ளை சத்திரத்தில்தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். அங்கேதான் மதுரத்தை அழைத்துச் சென்றார்கள். ராமசாமி சத்திரம் என்று கேள்விப்பட்ட உடனேயே மதுரம் சொன்னார்,

“இத்தனை பெரிய திருச்சியில் சத்திரம்தானா கிடைத்தது தங்குவதற்கு? வேறு இடம் எதுவும் கிடைக்கவில்லையோ?”

மதுரத்தின் சொற்களில் கிண்டல் தொனித்தது.

ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு வந்தார் ராமய்யர். வண்டியின் முன்பக்கமாக கிருஷ்ணன் அமர்ந்துகொண்டார். நடுவில் மதுரமும் கடைசியில் வண்டியின் பின்புறம் ராமய்யரும் அமர்ந்துகொண்டார்கள். மதுரத்தின்மீது கையேதும் பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு உட்கார்ந்திருந்தார் கிருஷ்ணன்.

வண்டி சத்திரத்தை அடைந்தது.

ஏற்கனவே தனலட்சுமி, விஜயாள் உள்ளிட்ட பல கலைஞர்கள் அங்கே இருந்தார்கள். மதுரத்தின் வீட்டில் கிருஷ்ணன் குறிப்பிட்ட நடிகர்களைச் சோதிக்கும் ‘டெஸ்ட்’ தொடங்கியது.

வந்திருந்த கலைஞர்கள் ஒவ்வொருவராக தங்களுக்குத் தெரிந்த வசனங்களைப் பேசியும், தெரிந்த பாடலைப் பாடியும் காட்டினார்கள்.
மதுரத்தின் முறை வந்தது. அவருக்குத் தெரிந்த வசனங்களைப் பேசிக் காட்டினார்.

பாடிக்காட்டச் சொன்னார்கள். ஆனால், அவருக்கு எந்தப் பாடலும் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. முதன்முதலாகப் பேசிய தமிழ் சினிமாவின் நாயகி, ‘சினிமா ராணி’ என்று புகழப்பட்ட டி.பி. ராஜலட்சுமி பாடிய ‘நானே பாக்யவதி’ – என்று தொடங்கும் பாடலைப் பாடத் தொடங்கினார்.

முதல் அடியைக்கூடப் பாடி முடிக்கவில்லை. அதற்குள் கிருஷ்ணன் குறுக்கிட்டார்.

“போதும் போதும், குரல் நல்லாவே இருக்கு!”

டெஸ்ட் முடிந்தது.

மறுபடியும் குதிரை வண்டியில் மதுரத்தை வீட்டில் கொண்டுவந்து விட்டார்கள்.

“நாளை புறப்படத் தயாராக இருங்கள். சரியா?” – என்று கேட்டார் கிருஷ்ணன்.

“அம்மாவைக் கேட்டுச் சொல்கிறேன்…” – சொல்லிவிட்டு உள்ளே சென்றார் மதுரம்.

விட்டினுள்ளே இருந்து மதுரத்தின் பாட்டி வந்தார். கிருஷ்ணனை ஏற இறங்கப் பார்த்தார். பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.

பாட்டி சொன்னார்:

“வந்திருக்கிறவன் மலையாளத்துக்காரன்போல தெரியுது. மதுரத்துக்கு மருந்து வச்சிடப்போறான். அவளைத் தனியே அவனோடு அனுப்பாதே…”

கிருஷ்ணன் காதில் இது விழுந்துவிட்டது. மதுரத்தின் பாட்டியையும் அவரது அம்மாவையும் பார்த்துச் சொன்னார்:

“பயப்படாதீங்கம்மா… உங்க பெண்ணை பத்திரமா கூட்டிட்டுப் போய், பத்திரமா கொண்டுவந்து விட்டுடுறேன்”

ராமய்யரும் கிருஷ்ணன் சொன்ன உத்தரவாதத்தை வழிமொழிந்தார். பலமுறை எடுத்துச்சொன்ன பிறகே ஒருவழியாக பாட்டியின் சம்மதம் கிடைத்தது.

மறுநாள் பிற கலைஞர்கள் உடன்வர, கிருஷ்ணனுடன் மதுரம் சென்னைக்குப் புறப்பட்டார். கிருஷ்ணனின் மனம் மதுரத்தின் மேல் ஈர்ப்புக் கொள்ளத் தொடங்கியிருப்பதை – மதுரத்திடம் தன்னைக் கிருஷ்ணன் பறிகொடுத்திருப்பதை அப்போது மதுரம் அறிந்திருக்கவில்லை.

(கலைப் பயணம் தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...