வரலாற்றில் இன்று – 11.07.2020 உலக மக்கள் தொகை தினம்
உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.
பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கா.மீனாட்சிசுந்தரம்
தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றிய கா.மீனாட்சிசுந்தரம் 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு என்னும் ஊரில் பிறந்தார்.
இவர் எழுதிய சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மேலும், இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகளில் பெரும் பங்களிப்பை வழங்கிய இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1927ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி லேசரை கண்டறிந்து வெற்றிகரமாக செயல்படுத்திய தியோடோர் ஹரோல்ட் மைமான், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.
1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இலக்கியம் மட்டுமன்றி பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற குன்றக்குடி அடிகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் பிறந்தார்.
1857ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய அரசியல்வாதியுமான செத்தூர் சங்கரன் நாயர் பிறந்தார்.
1920ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி தமிழக அரசியல் தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பட்டுக்கோட்டை அருகிலுள்ள திருக்கனாபுரத்தில் பிறந்தார்.
1856ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப்படும் எழுத்ததாளர் அ.வரதநஞ்சைய பிள்ளை மறைந்தார்.