கேப்ஸ்யூல் நாவல் – சிவகாமியின் சபதம் 03 – பாலகணேஷ்
மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்
புலிகேசியின் படைகள் காஞ்சியின் அகழியையும், கோட்டைச் சுவரையும் உடைக்க முயன்று தோல்வியடைகின்றன. முற்றுகைக்கு முன்பே மகேந்திரர் எல்லா அணைகளையும் உடைத்து விட்டதால் மூன்று மாத முற்றுகைக்குப் பின்னர் புலிகேசியின் படைகள் உணவும், தண்ணீருமின்றித் தவிக்க நேரிடுகிறது. வடநாட்டு சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வரப்போகிறார் என்ற வதந்தியை மகேந்திரர், ஒற்றர் படை மூலம் புலிகேசியின் படையில் பரவவிட, புலிகேசி சமாதானத் தூது அனுப்புகிறார். மகேந்திரர் அதனை ஏற்றுக் கொண்டு புலிகேசியிடம் நட்பு பாராட்ட விரும்ப, மாமல் லருக்கு அதில் சம்மதமில்லை. அவரை, பரஞ்சோதியுடன் சென்று பாண்டியனைத் தோற்கடித்து புத்தி புகட்டும்படி அனுப்பி விடுகிறார் மகேந்திரர்.
காஞ்சி வரும் புலிகேசிக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. அவரது விருப்பத்தின் பேரில் சிவகாமியை வரவழைத்து அரசவையில் நடனமாடும்படி செய்கிறார் மகேந்திரர். புலிகேசி புறப்படும் தருவாயில் அவரைத் தாம் வென்ற விதத்தை விரிவாக மகேந்திரர் சொல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் புலிகேசியின் மனம் எரிமலையாகிறது. தன் படைப் பிரிவின் ஒரு பகுதியை நிறுத்தி பல்லவ நாட்டின் சுற்றுப்புற கிராமங்களை சூறையாடி எரித்து அழிக்கும்படி கூறிவிட்டு வாதாபி நோக்கிச் செல்கிறான். காஞ்சியிலிருந்து சிவகாமியும் ஆயனரும் சுரங்கப்பாதை மூலம் கோட்டையை விட்டு வெளியேறி வாதாபிப் படைகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
இதற்கிடையில் சிறையிலிருந்த நாகநந்தி பிட்சு தப்பித்து விடுகிறார். புலிகேசியைப் போலவே இருக்கும் தன் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, புலிகேசி வேடம் தாங்கி மாமல்லபுரத்து கலைச் செல்வங்கள் அழியாமலும், ஆயனர் கொல்லப்படாமலும் காப்பாற்றுகிறார். சிவகாமி வாதாபிப் படைகளிடம் சிக்கி விட்டதை அறிந்த மகேந்திரர் படையுடன் வர, அவருடன் போரிடுகிறார் புலிகேசியாக இருக்கும் நாகநந்தி. போரில் விஷக்கத்தியால் மகேந்திரரைத் தாக்கி விட்டு சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். விஷக்கத்தி தாக்கிய மகேந்திரர் நோய்வாய்ப்படுகிறார்.
வாதாபி சென்றதும்தான் புலிகேசியும், நாகநந்தியும் இரட்டையர்கள் என்பதை சிவகாமி அறிகிறாள். அவள் மீது தான் கொண்ட காதலைச் சொல்கிறார் நாகநந்தி. வேங்கியில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் காரணமாக பிட்சுவை அங்கே அனுப்பும் புலிகேசி, சிவகாமியை தன் சபையில் நடனமாடும்படி கேட்கிறான். அவள் மறுக்கவே பல்லவ கைதிகளை சாட்டையால் அடித்தே கொல்வதாக அச்சுறுத்தி வாதாபியின் நாற்சந்திகளில் நடனமாடும்படி செய்கிறான். நாடு திரும்பும் பிட்சு, இதைக் கண்டு சினம் கொண்டு புலிகேசியிடம் வாதாடி சிவகாமியை காஞ்சிக்கே திரும்ப அனுப்ப அனுமதி பெற்று வருகிறார். அவளிடம் அதைச் சொல்ல, மாமல்ல நரசிம்மர் படையுடன் வந்து வாதாபியை எரிப்பதையும், வாதாபி மக்கள் மடிவதையும் கண்ணால் கண்ட பின்னரே தான் விடுதலை பெறுவேன் என்று சிவகாமி சபதம் செய்கிறாள்.
மாமல்லர், மகேந்திரரின் அனுமதியின்பேரில் பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியோருடன் மாறுவேடத்தில் வாதாபி வருகிறார். சிவகாமியைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல அவர்கள் முற்பட, அவள் வரமறுத்து தன் சபதத்தைக் கூறுகிறாள். அவர்கள் வாக்குவாதத்தில் இருக்கும் போது நாகநந்தி வந்துவிட, மாமல்லர் மட்டும் கோபத்துடன் தப்பிச் சென்று விடுகிறார். காஞ்சி வரும் மாமல்லரிடம் குலம் தழைக்க பாண்டியன் மகளை மணக்கும்படி வற்புறுத்தி சம்மதம் பெறுகிறார் நோயுற்றிருக்கும் மகேந்திரவர்ம பல்லவர்.