கலைவாணர் எனும் மாகலைஞன் – 11 – சோழ. நாகராஜன்

 கலைவாணர் எனும் மாகலைஞன் – 11 – சோழ. நாகராஜன்

11 ) அவர் நடித்த முதல் சினிமாவும்

வெளிவந்த முதல் சினிமாவும்…

‘சதிலீலாவதி’யில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்று நடித்தது கதாநாயகனின் நண்பன் பாத்திரம். நாயகனுடன் சீட்டாடுவதே அவர் வேலை. அது நகைச்சுவைப் பாத்திரம்தான். கிருஷ்ணன் முழுக்கால் சட்டையும், மேல் சட்டையும், தனித்துவமான மூக்குக் கண்ணாடியும் அணிந்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஹாலிவுட்டின் ஹெரால்ட் லாயிட் என்னும் நகைச்சுவை நடிகரின் கண்ணாடி அந்த நாளில் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தது. அதைப்போல கிருஷ்ணன் அணிந்து தோன்றிய கண்ணாடியும் கவனம் பெற்றது.

கிருஷ்ணனின் நடிப்பில் உருவான சதிலீலாவதி வெளிவரும் முன்னமே அதை முந்திக்கொண்டு அவர் நடித்த இரண்டாவது படமான ‘மேனகா’தான் முதலில் வெளியானது. ஆக, கிருஷ்ணன் நடித்த முதல் சினிமா சதிலீலாவதி. கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த முதல் சினிமா என்ற பெருமையைத் தட்டிச் சென்றது மேனகா. இந்த மேனகாவை இயக்கியவர் அந்நாளைய பேசாப்பட காலத்தின் சூப்பர் ஸ்டார் ராஜா சாண்டோ. இவர் இந்திப் படவுலகிலேயே உச்சம் தொட்டவர். வடக்கே ஒரு சுற்று வலம் வந்துவிட்டுத்தான் தமிழ்ப் படவுலகில் கால் பதித்தார். மிகப்பெரிய மற்கலை வீரர். நடிப்பில் சிகரம் தொட்டுவிட்டு, இயக்குநர் ஆனவர். இந்தியிலிருந்து தமிழுக்கு வந்து அவர் இயக்கிய முதல் படமும் இந்த மேனகாதான்.

ராஜா சாண்டோவுக்கு இந்தி, உருது, பஞ்சாபி மொழிகள் சரளமாகப் பேச வரும். அவரை யாரும் ஒரு தென்னிந்தியர் என்று கூறமுடியாத அளவுக்கு இருக்கும் அவர் பேசும் இந்தி. அன்றுவரையில் சினிமாவில் எழுத்து காட்டும்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தின் பெயர் மற்றும் இயக்குநர் பெயர் என்றுமட்டும் காட்டும் வழக்கம்தான் இருந்தது. அந்த வழக்கத்திற்கு மாறாக, ஒரு படத்தில் பங்களிப்பு செய்த நாயகன், நாயகி உள்ளிட்ட கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எல்லோர் பெயரையும் காட்டும் வழக்கத்தைப் பட முதலாளிகளுடன் சண்டைபோட்டு உண்டாக்கியவர் ராஜா சாண்டோதான்.

எம். கந்தசாமி முதலியார் வசனத்தில் உருவான மேனகா படம் 1935ல் வெளியானது. அந்த ஆண்டு தமிழில் மேனகாவுடன் சேர்த்து 31 படங்கள் வெளிவந்தன.

டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீபால சண்முகானந்தா சபா குழுவினர் ஏற்கெனவே மேடையேற்றி வெற்றிகரமாக நடந்துவந்த நாடகம்தான் இந்த மேனகா. கோபிச்செட்டிபாளையத்தில் சகோதரர்கள் குழு நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் நிறுவனத்தினர் அங்கே வந்து சகோதரர்களைச் சந்தித்தார்கள். மேனகா நாடகத்தைத் திரைப்படமாக்க விரும்புவதாகச் சொன்னார்கள் வந்திருந்த எஸ்.கே. மொய்தீன், சோமசுந்தரம், கேசவலால் களிதாஸ் சேட் ஆகியோர்.

தங்கள் நாடகக் குழுவின் பெயரையே இந்தத் திரைப்படக் கம்பெனியும் கொண்டிருப்பதை எண்ணி வியந்து மகிழ்ந்தார்கள் சகோதரர்கள். நாடகத்தின் கதை வசனத்தையும், அதே நாடக நடிகர்களையும், நாடகத்திற்கு இசையமைத்தவர்களையும் அப்படியே பயன்படுத்தப்போவதாக அவர்கள் சொன்னார்கள். அப்படியே ஒப்பந்தமும் ஆயிற்று. தங்களின் உருவம் முதல்முதலாக வெள்ளித்திரையில் அசைந்தாடப்போவதை எண்ணி ஆனந்தம் கொண்டார்கள் சகோதரர்கள்.

குழுவினர் அனைவருக்கும் சேர்த்து ஊதியமாக 14 ஆயிரம் ரூபாய் முடிவாயிற்று. நாடகத்தில் சாமா ஐயராக நடித்த என்.எஸ்.கிருஷ்ணனே படத்திலும் அந்த வேடத்தில் நடிக்கவேண்டும் என்று ‘பெரியண்ணா’ சங்கரன் விரும்பினார். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்தார் நம் கிருஷ்ணன். 1935 செப்டம்பர் இரண்டாம் நாள். நாடகக்குழுவினர், தயாரிப்பாளர்கள் சகிதம் புகைவண்டி கிளம்பியது பம்பாய் நோக்கி.

ராஜா சாண்டோ இயக்குநராகப் பணியாற்றிவந்த பம்பாய் ரஞ்சித் மூவிடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு. பம்பாய் தாதரில் ஸ்டுடியோ அருகிலேயே அவர்கள் தங்குவதற்கு ஒரு பெரிய பங்களா வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய நடிகைகளான கே.டி.ருக்மணி, எம்.எஸ்.விஜயாள் மற்றும் மூன்று பெண்கள் மேனகாவில் நடிப்பதற்காக அழைத்துவரப்பட்டிருந்தார்கள். பங்களாவின் மாடியில் பெண் கலைஞர்களும், கீழ்ப் பகுதியில் ஆண்களும் தங்கவைக்கப்பட்டார்கள். ஆண் கலைஞர்கள் எவரும் அனுமதியின்றி மாடிக்குப் போகக்கூடாது என்று பெரியண்ணா சங்கரன் கட்டளையிட்டிருந்தார். ஒழுக்கத்தையும் பண்பையும் அந்தளவுக்கு விரும்பியவர்களாக டி.கே.எஸ். சகோதரர்கள் இருந்தார்கள்.

நடிப்பைச் சொல்லிக்கொடுத்து வேலை வாங்குவதில் ராஜா சாண்டோவுக்கு இணையாக இன்னொரு இயக்குநர் இந்தியாவிலேயே கிடையாது என்கிற எண்ணம் வடநாட்டாரிடமே கூடுதலாக இருந்தது. அந்தளவுக்கு அவர் அங்கே தன் உழைப்பால், திறமையால், கலை ஈடுபாட்டால் புகழடைந்திருந்தார். ராஜா சாண்டோவைப் பற்றி டி.கே.சண்முகம் இப்படி எழுதியிருக்கிறார்:

“ராஜா, பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற நடிகப் பேரரசன். அவரிடம் பயிற்சி பெறும்போது நடிகன் சலிப்படைவானேயன்றிச் சொல்லிக் கொடுக்கும் ராஜா சிறிதும் சலிப்படைய மாட்டார்”.

எத்துணை கலை ஈடுபாடும், மேதைமையும் இருந்தால் இத்தகைய புகழுரையை அவர் பெற்றிருப்பார். இந்தியாவே போற்றிய அப்படியான முன்னோடிக் கலைஞனைத் தமிழர்களும், தமிழகமும் உரிய வகையில் உயர்த்திப் புகழ்ந்ததா? கௌரவித்து மகிழ்ந்ததா? இன்றுவரையில் இல்லையென்பதுதானே உண்மை?

மேனகாவிற்குப் பாடல்கள் உருவாக்குவது பற்றிய விவாதம் எழுந்தது. மெட்டுக்குப் பாட்டெழுதுவதா அல்லது பாடலுக்கு மெட்டமைப்பதா என்று அந்த விவாதம் நீண்டது. இறுதியில் மெட்டுக்கே பாடல் எழுதுவது என்று முடிவானது. இந்தப் படத்தின் பாடல்களை எழுதிய பாட்டு வாத்தியார் பூமிபாலகதாஸ் இந்த முடிவால் மிகவும் சிரமப்பட்டாராம். படத்தின் இசையமைப்பாளர் ‘சின்னண்ணா’ டி.கே.முத்துசாமிதான். இந்திப் பாடல் மெட்டுக்களுக்குள் தமிழ் வரிகளை அடக்க பாடலாசிரியர் பூமிபாலகதாஸ் பெரும்பாடுபட்டாராம். இந்த வம்பே வேண்டாமென்று என்.எஸ்.கிருஷ்ணன் தனது பாத்திரத்துக்குத் தேவையான இரண்டு பாடல்களைத் தானே உருவாக்கிக்கொண்டார்.

அதுமட்டுமா?

அவர் ஏற்று நடித்தது சாமா ஐயர் என்னும் நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரம். அந்த வில்லன் என்னவெல்லாம் பண்ணினார், எப்படியெல்லாம் வில்லத்தனம் செய்தார் என்று பார்ப்போம்…

( கலைப் பயணம் தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...