கிரேஸி மோகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக மேடை என இரண்டிலும் கால் நூற்றாண்டுக்கு மேலாக நகைச்சுவையைத் தந்த எழுத்தாளர், நடிகர் கிரேஸி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி காலமானார்.
தற்போதைய கரோனா ஊரடங்கு சூழலில், டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி கிரியேஷனுடன் இணைந்து, கிரேஸி மோகனுக்கான நேரலை, சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை ஜூன் 10-ம் தேதி இன்று கமல்ஹாசன் முன்னிலையில் வழங்கவிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நகமும் சதையுமாக ஒட்டித் திரிந்து வலம் வந்த கலைஞர்கள், கிரேஸி மோகன் – கமல் ஹாசன். இவர்களது கூட்டணியில் உருவான சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. இதை, இந்தக் கூட்டணி தொடர்ந்து சாத்தியப்படுத்திக்கொண்டே இருந்தது. இவ்வளவு ஏன் டி.வி-யில் சேனலை மாற்றும்போது ஒரு ஃப்ரேமைப் பார்த்தே சிரிக்கலாம் என்றால், அது இவர்களது காம்போவில் உருவான காட்சிகளால்தான் சாத்தியம். சில எவர்கிரீன் பாடல்களை ரிப்பீட் மோடில் கேட்பது சகஜம்.
இதே ஒரு முழுநீளப் படத்தை ரீப்பீட் மோடில் பார்க்கலாமா என்றால், கோரஸாக ‘ஆம்’ என்று சொல்வார்கள் இவர்கள். வடிவேலு அவர் வந்துபோகும் இடங்களில் காமெடி செய்து சிரிக்க வைப்பதுண்டு. சில மொக்கைப் படங்களை வடிவேலுவின் காமெடிகள் காப்பாற்றியும் இருக்கிறது. ஆனால், எல்லா ட்ரெண்டையும் உடைத்து, படம் முழுவதுமே சிரிக்க வைக்க முடியும் என்பதைச் சாத்தியப்படுத்தியது, ‘கமல் ஹாசன் – கிரேஸி மோகன்’ கூட்டணியில் உருவான படங்கள்தான். இப்படி சுவாரஸ்யம் நிறைந்த பல காமெடிகளுக்குப் பின்னால் இருக்கும் கதைகளைப் பற்றி பலமுறை அவர் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
கிரேஸி மோகனுக்குத் தமிழில் மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் சாவி, மௌலி மற்றும் சோ. அதேபோல் ப்ரிட்டிஷ் எழுத்தாளரான பி.ஜி.வோட்ஹவுஸ் என்பவரும் கிரேஸிக்குப் பிடித்தமானவர். பொதுவாகவே, தமிழ் சினிமாவில் காமெடிக்கென்று தனி டிராக் ஒவ்வொரு படத்திலும் இடம்பெறும். அதைப் பின்பற்றாது, தனித்துத் தெரியவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் களமிறங்கியவர்கள் கிரேஸி மோகன் – கமல்ஹாசன்.
அதனால்தான், பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் இடம்பெறும் காமெடி தனி – காட்சிகள் தனி என்ற அடிப்படையைத் தகர்த்து, படத்தின் தன்மையோடு இயல்பாகப் பயணிக்கும் காமெடி டெம்ப்ளேட்டை உருவாக்கினார்கள். வடிவேலு, கவுண்டமணி, செந்தில் என இவர்கள் பேசிய வசனங்களை நம் அன்றாட வாழ்க்கையில் கலாய் கவுன்டர்களாகப் பயன்படுத்துவோம். அதேபோல, கிரேஸி மோகனின் வசனங்களை எடுத்துப் பார்த்தால், அது அனைத்துமே நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் இயல்பான விஷயங்களாகவே இருக்கும்.
பதட்டமான ஒரு சூழலில் நம் வாய் குழருவதைக் கவனித்திருப்பீர்கள். அதை அப்படியே திரையில் கொண்டு வந்து சிரிக்க வைத்தவர், கிரேஸி. ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் வரும் க்ளைமாக்ஸ் காட்சியைச் சொல்லலாம். வையாபுரி அதில், ‘சம்பந்தம் அண்ணே… நம்ம ஆனந்த் பையன சாவடிச்சிட்டாங்க அண்ணே’ எனப் பதட்டத்தோடு பேசுவார். அதற்குக் கமல், ‘ஏன்டா மெய்யாலுமே சாவடிச்சிட்டாங்களாடா?’ எனப் பயத்தோடு கேட்பார். ‘சாவடிக்கலண்ணே… சாவடி அடிச்சிட்டாங்கனு சொன்னேன்’ என்று வையாபுரி சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்வார்.
அதேபோல் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் பஞ்ச நாயகர்களும் பார்ட்டி கொண்டாடிவிட்டு சிம்ரனின் வீட்டுக்கு கமலை அழைத்துச் செல்வார்கள். போதையில் இருக்கும் கமல், ‘நான் உள்ளே போய் அவளைப் பார்க்கும்போது, பழசெல்லாம் ஞாபகம் வந்து அவபாட்டுக்கு ‘தூ’ன்னு துப்பீல மூஞ்சிட்டான்னா’ என்பார். இதை ஒரு சிலரே கவனித்திருப்பார்கள். வார்த்தைகளின் இடத்தை மாற்றிப்போட்டால் அந்த வசனத்துக்கான அர்த்தம் (மூஞ்சில துப்பிட்டான்னா) புரியும்.
\கமல் – கிரேஸி காம்போவில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் இதுபோன்ற ஜம்பிங் வேர்ட்' காமெடிகளைப் பார்க்கலாம்.
வசூல்ராஜா’ படத்தில் இடம்பெறும் ‘தொட்டிலையும் கிள்ளிவிட்டு, புள்ளையையும் ஆட்டிவிடுவீங்களே!’ (மறுபடி ஒருமுறை பழமொழியை வாசிக்கவும்!), அவ்வை சண்முகி' படத்தில்
நான் மானகி ஜம்பா வீட்டுக்குப் போறேன் (ஜானகி அம்மா)’ இவையெல்லாம் கிரேஸியின் மாஸ்டர் பீஸ் காமெடிகள். இப்படியாக, மைக்ரோ செகண்ட்டில் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பது கிரேஸியின் வசனங்கள்.
‘அவ்வை சண்முகி’ படத்தில் இடம்பெற்ற ஆள்மாறாட்டக் காமெடியில் கமலுக்கு ஷாக் அடித்துவிடும். என்னாச்சு' என மணிவண்ணன் கேட்க,
பயங்கர ஷாக் முதலியார்’ எனப் பதில் சொல்வார். மற்றொருவர், ‘வாட்?’ எனக் கேட்க, ‘ஒரு 440 வாட் (watt) இருக்கும்’ எனப் பதில் சொல்வார், கமல்.
இப்படிக் காமெடிகளில்கூட பல டீட்டெயிலிங்களைக் கொடுக்கும் நேர்த்தியை கமல் – கிரேஸி கூட்டணியில்தான் பார்க்க முடியும். அதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணமும்கூட!.
ஒரு படத்திற்கு ஹீரோதான் கதை சொல்லி. எனவே அவரது செயல்பாடுகளை மட்டுமே பெரும்பாலும் நாம் கவனித்துப் பார்ப்போம். இந்த ஃபார்முலாவை சுக்குநூறாக்கி, திரைக்கதையில் அனைவருக்கும் காமெடியை அள்ளித் தெளித்தார். இப்போது வெளியாகும் சினிமாக்களில்தான் ஒவ்வொரு ஃப்ரேமிலும் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறோம்.
ஆனால், அப்போதே கதையில் இடம்பெறும் அனைத்து விஷயங்களையும் கணக்கில்கொண்டு, காட்சிகளையும், வசனத்தையும் இடம்பெறச் செய்திருப்பார், கிரேஸி. கமல் – கிரேஸி காம்போவில் வெளிவந்த படங்களைப் பார்த்தால், ஒரு பக்கம் வசனங்கள் வாயிலாக நகைச்சுவை நகர்ந்துகொண்டிருக்கும். மறுபக்கம், வெர்பல் கம்யூனிகேஷனே (Verbal communication) இல்லாமல் ஒரு காமெடி பிளே போய்க்கொண்டிருக்கும்.அபூர்வ சகோதரர்கள்' படத்தில் தொடங்கி,
வசூல் ராஜா’ வரை அந்த மேஜிக்கைப் பார்க்கலாம்.
கிரேஸியின் பெரும்பாலான படங்களில் ‘ஜானகி’ என்ற பெயர் இடம்பெறும். பள்ளிப் பருவத்திலிருந்தே நாடகத்தில் நடிக்கும் ஆர்வம் கிரேஸிக்கு அதிகம். முதல் மேடை நாடகமாக, அப்போது அவர் நடித்தது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அதில் நடிக்கக் கிளம்பும்போது, கிரேஸியின் பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு மாமிதான் இவருக்கு மேக்அப் போட்டுவிட்டாராம். அதன் பிறகு பல நாடகங்களுக்கு அவரிடம் சென்று மேக்அப் போட்டுக்கொண்டுதான் நாடகத்தில் நடித்திருக்கிறார். அவரது பெயர்தான், ஜானகி. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே, தான் பணியாற்றும் படங்களில் சம்பளம் பேசும் முன், ஜானகி என்ற பெயர் படத்தில் எங்காவது இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார்.
மொத்தத்தில், காலம் கடந்தும் போற்றப்படவேண்டிய கலைஞன், கிரேஸி மோகன். இவரது நகைச்சுவை மூலமாக நம் உதடுகள் சிரிக்கும்வரை, கிரேஸி என்று நம்மோடு வாழ்வார்!