சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படுமா?
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நடிகை குஷ்புவும், சுஜாதா விஜயகுமாரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது, சின்னத்திரை படப்பிடிப்புகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதற்கான அனுமதியை வழங்கக் கோரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்ததாகவும் குஷ்பூ தெரிவித்தார்.
மேலும் அவர், தொலைக்காட்சி தொடர்களில் முன்பை போன்று அனைத்து கலைஞர்களையும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் கதை கொஞ்சம் மாறும் எனவும், கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரங்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகியவற்றில் தினசரி ஊழியர்கள்தான் அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். 90% பேர் தினசரி சம்பளம் வாங்கக் கூடியவர்கள். 15 நாட்களுக்கும் மேலாக லாக்டவுணில் இருந்தோம் என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு. இந்த சூழலில், இதே லாக்டவுண் இன்னும் நீடித்தால் அவர்களுடைய அன்றாடத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள் என பிபிசி தமிழிடம் சின்னத்திரை நடிகையும், சீரியல் தயாரிப்பாளருமான நீலிமா ராணி கூறினார்.