வீடு – ‘பரிவை’ சே.குமார்
அப்பாவின் இறப்புக்குப் பின் பூட்டியே கிடக்கும் வீட்டை வந்த விலைக்குக் கொடுத்து விடலாமென முடிவு செய்த இளங்கோ, அது விஷயமாக ஊரில் இருக்கும் சித்தப்பாவிடம் பேசினான்.
“ஏம்ப்பா… ஊருக்கு வந்தாப்போனா ஒரு வீடு வேணாமாப்பா…” மெல்லக் கேட்டார் சின்ராசு.
“இப்பவே அங்கிட்டு வர்றதில்லை… ஏதோ நல்லது கெட்டதுக்குத்தான் வந்துட்டு ஓடியாறோம்… அங்க வந்து தங்குற அளவுக்கு வசதி வாய்ப்பு எதுவும் இல்லையில்ல… பிள்ளைகளுக்கு எல்லாம் நகரத்து வாழ்க்கை பழகிப் போச்சு… இனி அதுக அங்க வந்து தங்குங்களா என்ன.. ஏசியில்லாம உங்க பேரம்பேத்திக தூங்க மாட்டாங்க சித்தப்பா… இனி யாரு சித்தப்பா வரப்போறா… மராமத்துப் பாத்து வைக்கிற அளவுக்கு அந்த வீட்டுல என்ன இருக்கு… உங்க மருமக அப்பாதான் கடல் மாதிரி வீடு கட்டி, சென்ட்ரல் ஏசி போட்டு வச்சிருக்காரே… அதுக்கும் நம்மூருக்கும் எவ்வளவு தூரம்..? பசங்க அங்க தங்குறதைத்தான் விரும்புவாங்க…. அங்கிட்டுத் தங்கிட்டு ஊர்ல வந்து சொந்தபந்தத்தை வந்து பாத்துட்டு வந்தாப் பத்தாதா…”
“இல்லப்பா… இருந்தாலும்… அண்ணன் வாழ்ந்த வீடு… நாங்க பொறந்த வீடு… அந்த ஞாபகார்த்தத்துக்காச்சும்…” இழுத்தார்.
“ஞாபகமா வச்சி… என்ன பண்ண… அட ஏஞ்சித்தப்பா… அப்பா இருக்கும் போதே சுவரெல்லாம் பெயர்ந்து விழுந்துச்சு.. இப்பவே உத்தரம், கைமரமெல்லாம் கரையான் அரிச்சிருக்கப் போவுது… பூட்டுத் தொறவா இருந்தாலும் பரவாயில்லை… அப்பா சாவுக்கு அப்புறமா பூட்டிகத்தானே கிடக்கு…”
“ஏய்… அப்படிச் சொல்லாதேப்பா… எல்லாம் வைரம் பாஞ்ச மரங்க… அவ்வளவு சீக்கிரத்துல கரையான் புடிச்சிடாது… அதுபோக ஒந்தம்பி பொண்டாட்டி அப்பப்ப தொறந்து கூட்டி அள்ளிட்டுத்தான் வருது… பூட்டுத் தொறப்பா இல்லைன்னு சொல்லாதே…. நாங்க பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்… என்ன ஒட்டடை அடிக்காம கை மரமெல்லாம் ஒட்டடை படந்து கிடக்குதாம்.. ஒரு ஆளு விட்டியன்னா… சுத்தம் பண்ணப் போறான்…”
“இல்ல சித்தப்பா… என்னதான் திறந்து கூட்டுனாலும் ஆளுக இருக்க மாதிரி வருமா..? இனி ஒட்டடை எல்லாம் அடிக்கிற மாதிரி இல்ல சித்தப்பா… ஊரே வேண்டான்னு சொல்லுதுக புள்ளைக… அப்புறம் எதுக்கு அந்த வீடு… கூடப் பொறந்தவனுக இருந்தாலும் எடுத்துக்கிட்டுப் போங்கடான்னு சொல்லலாம்… அதுக்கும் வழி இல்லை சித்ரா ஒருத்திதான் பொறந்தா அவளும் ஆஸ்திரேலியாவுல இருக்கா… எப்பவாச்சும் வந்து ரெண்டு மூணு நாளு தங்குறதுக்கு காரைக்குடியில காசைக் கொட்டி மாளிகை கட்டிப் போட்டு வச்சிருக்கா… அவ மாமனாரு வீடுதான் அனுபவிக்கிறாக… அவ இந்த ஓட்டு வீட்டையா எதிர்பார்ப்பா..? எடுத்துக்கன்னு சொன்னா என்னோட சண்டைக்கு வந்துருவா.. என்ன… இப்படியே கெடந்தா வீணாப் போகும் சித்தப்பா… வந்த விலைக்குத் தள்ளி விட்டுருங்க… பத்திரப்பதிவப்பச் சொன்னீங்கன்னா லீவு போட்டுட்டு வந்து முடிச்சிக் கொடுத்துருவேன்…”
“சரிப்பா… அது ஒண்ணுதான்… மேலமடையான் குடும்பம்ன்னு ஒண்ணு இங்க இருந்துச்சுன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு இருக்கு… அந்த வீட்டுப் பக்கம் போகும் போது என்னோட ஆயி அப்பனைப் பாக்குற சந்தோசம்… அதையும் கொடுக்கச் சொல்றே… ம்… காலம்தான் எம்புட்டு விசித்திரமானது பாத்தியா.. நாங்கள்லாம் பொறந்து வளந்த வீடு அது… அந்தத் திண்ணயிலதான் எல்லாரும் ஆட்டம் போடுவோம்… நாங்க பத்துப் பேரு… எங்க சித்தப்பன் பெரியப்பன் மக்கன்னு… எங்க அப்பத்தாதான் சொல்லும் ஒரு ஊரே கூடுன மாதிரி இருக்குன்னு… ம்… என்னத்தச் சொல்ல… இன்னக்கி ஒரு மனுசங்கூட இல்லாத வீடாயிப் போச்சு… வாழ்ந்த அடையாளங்களை எல்லாம் அழிச்சிக்கிட்டுத்தானே இருக்கு கிராமங்க… பெரும்பாலான வீட்டுலயும் கசாலைகள் எல்லாம் காலியாயி ரொம்ப நாளாகுதுல்ல… இப்ப எவன் ஆடு, மாடு வளக்க ஆசைப்படுறான்… அந்த வீட்டுக் கசாலையில மாடு கட்ட இடமிருக்காது.. இன்னைக்கி மாடேயில்ல..”
“என்ன பண்ண சித்தப்பா… சும்மா போட்டு வச்சி யாருக்கு லாபம்..? வேணுமின்னா எதாவது கொடுத்துட்டு வீட்டையும் வயல்களையும் நீங்களே எடுத்துக்கங்களேன்… உங்க காலத்துக்கு அப்புறம் தம்பி வித்துக்கட்டும்…”
“எனக்கெதுக்குப்பா… ஒந்தம்பி ரெண்டு மாடியில வீடு கட்டிட்டான்… இங்க இருந்து வேலைக்குப் போறதால ஆடு, மாடு, கோழி தோட்டம் தொறவுன்னு வச்சிருக்கான்… அந்த வீட்டை வாங்கி என்ன செய்யச் சொல்றே… வெவசாயமே இல்லாம யாரு வயலெல்லாம் வாங்குவா… நீ நகரத்து வாழ்க்கையை வச்சி கிராமத்தை எடை போடுறே…”
“சரி சித்தப்பா… இம்புட்டுத்தான்னு இல்லை… வந்த விலைக்குக் கொடுங்க… வயல்களையும் சேர்த்தே சொல்லுங்க…”
“சரிப்பா கிராமத்துல எவன் அந்த வீடு வாங்க வருவான்… நம்மூரு ஆளுககிட்டதான் பேசிப் பாக்கணும்… நடுவுலாரு பேரன்… அதான் சொசைட்டியில வேல பாக்குற செலுவந்தான் வீடு கட்ட ஊருக்குள்ள எடம் வேணுமின்னு சொல்லிக்கிட்டு இருந்தான்… அவங்க வீட்டை தம்பிகளுக்கு கொடுத்துட்டான்… இப்பச் சேரந்துதான் இருக்கானுங்க… மாம்பூவாசனையா தனித்தனியாப் பொயிட்டா… கடைசி வரைக்கிம் சண்டை சச்சரவு இல்லாம வாழலாம்ல்ல மாமான்னு எங்கிட்டச் சொன்னான்…. அவனைக் கேட்டுப் பாக்குறேன்….”
“சரி சித்தப்பா.. செலுவத்துக்குன்னா அவன் தர்றதத் தரட்டும்… அவனுக்கிட்ட என்ன விலை பேசிக்கிட்டு…”
“ம்… அதெப்படி தர்றத தான்னு சொல்றது… அதுக்குன்னு ஒரு வெல இருக்குல்ல.. தாயாப்புள்ளையா இருந்தாலும் கொடுக்கல் வாங்கல்ல சரியா இருக்கணும்… ஞாயமா வாங்குவோம்… பேசிச்சிட்டு சொல்றேன்.. ரெண்டு மூணு நாள்ல கூப்பிடு…”
“ம்… சரி சித்தப்பா… உடம்பைப் பாத்துக்கங்க… வைக்கிறேன்….”
போனை வைத்தவர் ‘ம்… அந்த வீட்ட மராமத்துப் பாத்து வச்சா நல்லது கெட்டதுக்கு வந்தா தங்கிட்டுப் போக வீடுன்னு ஒண்ணு இருக்குமுல்ல… ஊரே வேணாமாமே… இந்த ஊருலதானே முப்பது வயசு வரைக்கும் இருந்தாக… காசு பணமும்… பொண்டாட்டி பேச்சுமே இந்த பயலுகளுக்கு வேதமாப் போச்சு… என்னத்தைச் சொல்ல… சரித்தான்… நாம புலம்பி என்னாகப் போவுது… நாங்க பொறந்த வீட்ட நாளக்கி எவனாச்சும் வாங்கி இடிச்சிட்டுக் கட்டப் போறான்… ம்… காலம் மாறிக்கிட்டேதானே இருக்கு… அவன் சொல்ற மாதிரி அவனோட புள்ளையளா இங்க வந்து இருக்கப் போவுதுக… அண்ணன் இருக்கும் போதே ஒருநா ஒரு பொழுது புள்ளையள இங்க கூட்டியார மாட்டாக… அவங்கூட விருந்தாடி மாதிரி வந்து பாத்துட்டு ராத்தங்க மாமியா வீட்டுக்கு போயிருவான்… பாக்க ஆளில்லாமக் கெடந்து அண்ணன மாதிரி வீடும் போறதுக்கு முன்னாடி யாருக்கிட்டயாச்சும் வித்தா அந்த எடத்துல புதுசா வீடாச்சும் வருமே…’ என்று நினைத்து பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு எழுந்தார்.
அடுத்த சில வாரங்களில் வீடு செல்வத்துக்குக் கைமாறியது.
வீட்டைச் சுத்தம் பண்ணி, சின்னச் சின்ன மராமத்துப் பணிகளைப் பார்க்க ஆட்களை விட்டிருந்தான்.
“என்னடா… உங்க புங்கஞ்ச்செய்யில வீடு கட்டணும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தே… திடீர்ன்னு மாணிக்க மாமா வீட்ட வாங்கிட்டே… இப்ப வீடு கட்டுற எண்ணமில்லையா…?” என்றான் சோமு.
“எண்ணமிருக்கு பங்காளி… விக்கப் போறோம்ன்னு சின்ராசு மாமா சொன்னாக… சரி ஊருக்கு ஒரு வீட்டு இடம் வருது… வாங்கிப் போட்டா பின்னால வீடு கட்டிக்கலாம்ன்னு வாங்கிப் போட்டேன்… வீடு அம்புட்டு ஒண்ணும் மோசமாயில்ல… நல்லாத்தான் இருக்கு பங்காளி… என்ன ஆளில்லாமக் கெடந்து சுவெரெல்லாம் ஒவடு ஆயிக்கிடக்கு… கொஞ்சம் கைமரத்தை கைபாக்கணும்… சனி மூலைச் சுவருல வெடிப்பு இருக்கு… வவ்வால் வந்து அடையும் போல… விளக்குப் போட்டு… ஆளுக இருந்தா அதுவும் போயிரும்…. கசாலையை எடுத்துக் கட்டணும்… அது இப்பத் தேவையில்லை… நமக்கிட்ட ஆடு மாடா இருக்கு… வீடு கட்டும்போது பாக்கலாம்… கசாலை வேணுமா வேண்டாமான்னு… வீடு கட்ட கொஞ்ச நாளாகட்டும்… அதுவரை இதுல இருக்கலாம் பங்காளி. அதுபோக நம்மளும் கடனகிடன எல்லாம் அடச்சிட்டு வீடு கட்டத் தயாராகணுமில்ல…”
“நீ சொல்றது சரித்தான்… வீடு நல்லாயிருக்கும் போது எதுக்கு இடிக்கணும்… ரெண்டு மூணு வருசம் போகட்டும்…”
“ஆமா… எங்க வீட்டைத்தான் தம்பிக ரெண்டு பேருக்கும் பிரிச்சிக் கொடுத்தாச்சுல்ல… இனியும் அங்க இருக்கது நல்லாயில்லையில்ல… உனக்குன்னு ஒரு வீடு கட்டுற வரைக்கும் மூணு பேரும் ஒண்ணா இருக்கலாம்… அப்புறம் தனித்தனி உலை வைக்கலாம்ன்னு தம்பிகளும் அவனுக பொண்டாட்டிகளும் சொல்லிக்கிட்டுத்தான் இருந்தாக… மூணு பேரோட புள்ளைகளுக்குள்ள கூட வேத்துமையெல்லாம் இல்ல பங்காளி… எல்ல்லாத்துக்கும் எல்லாரும் அப்பா, அம்மாதான்… பெரியப்பா, சித்தப்பான்னு எல்லாம் பாகுபாடு இல்லை…”
“அதான் தெரியுமே பங்காளி… உங்க குடும்பத்தைப் பத்தி…”
“ம்… வீடு கட்ட ஆளுக்கு கொஞ்சம் பணமும் தர்றேன்னு சொல்லியிருக்கானுக… இங்கிட்டு வந்து இருந்துக்கிட்டா… மனக்கசப்பு இல்லாம எங்க அப்பா சித்தப்பாக்க மாதிரி கடைசி வரைக்கும் பாசத்தோட வாழ்ந்துட்டுப் போயிடலாமுல்ல… அதான்… வீடா வந்ததும் வாங்கிட்டேன்… அதுவும் இளங்கோ மச்சான் எனக்குன்னதும் அதிகமாவெல்லாம் விலை சொல்லலை… என்ன வயலையும் சேத்து எடுக்கச் சொன்னுச்சு… அதையும் வாங்கித்தான் போட்டிருக்கேன்… பின்னால பாக்கலாம்… அவுக பெரிய செய்யி ரெண்டு ஏக்கரா… போருகீரப் போட்டு வெவசாயம் பண்ணலாம்” என்றான் செல்வம்.
“ம்… விஸ்தாரமான வீடுதானே இது… அந்தக்காலத்து வீடு… அறைக்கதவு பர்மாத் தேக்குன்னு சொல்லுவாங்க… சுத்துக்கட்டு வீடு வேற… பின்னால பெரிய கசாலை… அப்புறம் என்ன.. முடிஞ்சவரை ஓட்டு பங்காளி… அப்புறம் வேணுமின்னா இடிச்சிட்டுக் கட்டலாம்… என்ன பூட்டியே கெடந்த வீடு… சின்னதா ஒரு பூஜை ஒண்ணு போட்டுடு… மாணிக்க மாமா செத்ததோட பூட்டிக்கிடந்த வீடு… புள்ளகுட்டிய நல்லாயிருக்கணுமில்ல…”
“ம்… இது வாழ்ந்து கெட்ட வீடு இல்லையில்ல பங்காளி… மனுசங்க வாழ்ந்த வீடுதானே… இந்த வீட்டுல பொறந்தவுக எல்லாரும் நல்லாத்தானே இருக்காக… சரி… சரி… நம்ம மனசுக்காக ஒரு பூஜையைப் போடுவோம்…” எனச் சிரித்தான் செல்வம்.
சோமு கிளம்பியதும் வீட்டுக்குள் நுழைந்த செல்வம் முற்றத்தில் நின்ற மரத்தூணைத் தடவினான்… அவனுள் பழைய நினைவுகள் மெல்ல மெல்ல எழும்பின.. யாருமற்ற ஒரு மதிய வேளையில் அந்தத் தூணில் சித்ராவைச் சாய்த்து அவள் திமிறத் திமிறக் கொடுத்த முத்தம் காட்சியாய் கண்களுக்குள்…
வெட்கி நின்றவள் மூதேவி வீட்டுக்குத் தெரியாம் சிகரெட் குடிக்கிறது சரி… வாயைக் கழுவிட்டு வரக்கூடாதா… சிகரெட் நாத்தம்… எங்க வீட்டுல வேற செல்வம் மாதிரி பிள்ளையைப் பாக்க முடியுமான்னு சொல்லிக்கிட்டு இருக்காக… இந்த திருட்டுப் பூனை பால் குடிக்கப் பாக்குது… என்றாள் தாவணியில் உதடு துடைத்தபடி.
அதன் பின்னான மதிய வேளைகள் எல்லாம் அவர்களின் காதலுக்குத் துணை போக ஆரம்பித்தன. ஏனோ இரண்டு குடும்பமும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணவில்லை… அவர்களும் வெளியில் சொல்லவில்லை… சித்ரா மாமன் மகனுக்கு மனைவியானாள்.
இரண்டு மனசுக்கு மட்டுமே தெரிந்த காதல் மூன்றாவதாய் அந்தத் தூணுக்கு மட்டும்தானே தெரிந்திருக்கும் என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவன் கண்கள் ஏனோ கலங்கியது. வாய் ‘சித்ரா இப்ப நான் சிகரெட் குடிப்பதில்லை’ என்று சொல்லியது. ●