ஹைக்கூ என்றால் என்ன? – அனுராதா கட்டபொம்மன்

 ஹைக்கூ என்றால் என்ன? – அனுராதா கட்டபொம்மன்

இதுவே ஹைக்கூவின் முழு விளக்கமும் அல்ல. ஒரு வழிகாட்டி. அவ்வளவே.

மூன்று அடிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் கொண்டு அமைவது ஹைக்கூ என்று தெரியும்.

குத்து மதிப்பாக, தமிழில்

இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்)-ஜப்பானில் ஐந்து எழுத்துகள்.

மூன்று சீர்கள்(ஏழு அசைகள்), ஜப்பானில் ஏழு எழுத்துகள்.

இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்) ஜப்பானில் ஐந்து எழுத்துகள் என

17 அசைகள் – ஜப்பானில் 17 எழுத்துகள் – கொண்டு அமைக்கப் பெறும்

ஜப்பானியக் கவிதை
வடிவம் ஹைக்கூ..

ஜப்பானிய மொழியில் ஓர் எழுத்து = தமிழ் மொழியில் ஓர் அசை.

தமிழுக்கு வருவோம்..

அசைகள் இரண்டு. அவை,

நேர் அசை, நிரை அசை:

அசைகளின் சேர்க்கையே சீர்

ஹைக்கூ மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும் அதிக கருத்துகளை வெளிப் படுத்துகிறது என்பதே உண்மை.

#நிபந்தனை 01.

ஹைக்கூ #மூன்று_வரிகளில் அல்ல,
#மூன்று_அடிகளில் இருக்க வேண்டும்.

அது நிகழ்கால நிகழ்வை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஹைக்கூ கற்பனைகளையோ, உருவகம், உவமைப் போன்றவற்றை ஏற்காது.

ஓர் இலக்கணமில்லாத எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.

நேற்றைய பொழுதில்
நல்ல வெயில் அடித்தது.
மழையும் பெய்தது.

இந்தப் பதிவில் முதலடியில் 4 அசைகளும், இரண்டாம் அடியில் 5 அசைகளும் மூன்றாம் அடியில் 4 அசைகளும் இருக்கின்றன.

நேற்றைய நிகழ்வைச் சொல்கிறது. கண்டிப்பாக இது ஹைக்கூ கவிதை அல்ல.

இஃது ஒரு கடந்த காலச் சம்பவம். அதைத் தான் சொல்கிறது இந்த மூன்று அடிகள். அவ்வளவே.

நேற்றைய பொழுதில்
நல்ல வெயில் அடித்தது.

நேற்றைய பொழுதில் நல்ல வெயில் அடித்ததை முதல் இரண்டு அடிகளும் சொல்கின்றன.

நல்ல வெயில் அடித்தது.
மழையும் பெய்தது.

வெயிலும் அடிக்கும், மழையும் பெய்யும் இதை நாம் பார்த்திருக்கிறோம்.

முதல் இரண்டு அடிகள் சொல்லும் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை இந்த நிகழ்வு சொல்கிறதா என்றால் இல்லை

இதில் எங்கே கவித்துவம் இருக்கிறது?

சரி, இப்போது ஒரு ஹைக்கூவைப் பார்ப்போம்.

ஆற்றில் புதுவெள்ளம்
அள்ளிச் செல்ல முடியவில்லை.
வீடு கட்ட மணல்.

ஆற்/ றில் – புது/வெள்/ளம்.
நேர் நேர் – நிரை நேர் நேர்……………………..= 5 அசைகள்.
அள்/ ளிச் – செல்/ ல – முடி/ யவில்/ லை.
நேர் நேர் – நேர் நேர் – நிரை நிரை நேர்…..= 7 அசைகள்.
வீ/ டு – கட்/ட – மணல்.
நேர் நேர் – நேர் நேர் – நிரை…………………..= 5 அசைகள்.

இந்தப் பதிவில் முதலடியில் 5 அசைகளும், இரண்டாம் அடியில் 7 அசைகளும் மூன்றாம் அடியில் 5 அசைகளும் இருக்கின்றன.

ஹைக்கூவின் இலக்கணம் சரியாக இருக்கிறதா…? இருக்கிறது.

இலக்கணம் மட்டும் சரியாக இருந்தால் போதுமா…? போதாது. அது உயிரில்லாத உடல் போன்றதே.

உயிரும் – கருத்தும், கவித்துவமும் – இருக்க வேண்டும்.

இந்த மூன்று அடிகள் என்ன சொல்கிறது?

நிகழ்கால நிகழ்வைத் தான் இதுவும் சொல்கிறது. இது மட்டும் எப்படி ஹைக்கூ ஆகும்?

சரி, ஹைக்கூ கவிதைக்கு வருவோம். முதல் இரண்டு அடிகளைப் பார்ப்போம்.

ஆற்றில் புதுவெள்ளம்
அள்ளிச் செல்ல முடியவில்லை.

ஆற்றில் புதுவெள்ளம் – தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. புது வெள்ளம் என்பதால் அந்த நீர் அழுக்குகள் கலந்து நுரையோடு இருக்கிறது.

தாகம் தீரப் பருகுவதற்கு அந்த நீரை அள்ள முடியவில்லை. சரி தானே…?

ஆற்று நீரை அள்ளிப் பருக முடியவில்லை என்பது பொருள்.

கடைசி இரண்டு அடிகளைப் பார்ப்போம். அவை என்ன சொல்கின்றன…?

அள்ளிச் செல்ல முடியவில்லை.
வீடு கட்ட மணல்.

‘’அள்ளிச் செல்ல முடியவில்லை’’ – எதை?

முதல் இரண்டு அடிகளில் வந்த ‘’அள்ளிச் செல்ல முடியவில்லை’’ – சொன்னது நீரை
.
கடைசி இரண்டு அடிகளில் வந்த ‘’அள்ளிச் செல்ல முடியவில்லை.’’ சொல்வது மணலை.

இங்கு தான் ஒளிந்திருக்கிறது கவித்துவம்.

ஆக, இந்த ஹைக்கூ சொல்ல வருவது என்னவென்றால்,

ஆற்றில் புதுவெள்ளம்
அள்ளிச் செல்ல முடியவில்லை – #நல்ல_நீரை

என்பதைச் சொல்லாமல் புரிய வைக்கிறது.

அள்ளிச் செல்ல முடியவில்லை
வீடு கட்ட மணல்.

முதல் இரண்டடிகள் நீரைக் குறிக்க….
கடைசி இரண்டடிகள் மணலைக் குறிக்கிறது.

முற்றிலும் ஒரு புதிய திருப்பம்…. ஆனாலும், ஆற்றோடு தொடர்புடைய திருப்பம்.

இந்த ஹைக்கூ ஆற்றோடு தொடர்புடைய முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருளை – நீர், மணல் – உணர்த்துகிறது.

எனவே, ஹைக்கூ என்றதும் மூன்று அடிகளில் சம்பவங்களை எழுதாதீர்கள். கவித்துவத்தை எழுதுங்கள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...