என் கைக்குச் சிக்கிய வைரங்கள் – ராஜேஷ் குமார்

 என் கைக்குச் சிக்கிய வைரங்கள் – ராஜேஷ் குமார்

கொரோனாவை கொஞ்சம் மறக்க
நான் எழுதிய இதைப்
படியுங்கள்.
– நன்றி திரு ராஜேஷ் குமார்

நான் பி.எஸ்ஸி முடித்ததும் மேற்கொண்டு பி.எட் படிக்க விருப்பப்பட்டு பெரிய நாய்க்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயத்தில் விண்ணப்பித்தேன்.கடுமையான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டடவர்கள் மொத்தம் 120 பேர் மட்டுமே.
அதில் நானும் ஒருவன்.

எல்லோரும் ஹாஸ்டலில்தான் தங்கிப் படிக்க வேண்டும். பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டேன். கோவையில் இருந்து பெரிய நாய்க்கன் பாளையம் 20 கிலோ மீட்டர். பஸ்ஸில் ஒரு மணி நேரம் பயணம். ராமகிருஷ்ணா வித்யாலயா வாசலில் பஸ் போய் நின்றபோது முற்பகல் பதினோரு மணி.

வெய்யில் அமிலமாய்த் தகித்து என் பிடரியைச் சுட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்போதுதான் அதே பஸ்ஸிலிருந்து ஒரு பெரிய சூட்கேஸோடு இறங்கிய இளைஞனைப் பார்த்தேன். பம்மிய கிராப். கூலிங்கிளாஸ். வாய் சுயிங்கத்தை அரைத்துக் கொண்டிருந்தது.

என்னைப் பார்த்து கேட்டான்.
“ராமகிருஷ்ணா வித்யாலயா இதுதானா?…”
“ஆமா.”
“டீச்சர்ஸ் காலேஜ்?…”
“ஒரு அரை கிலோ மீட்டர் உள்ளே போகணும்.”
“நீங்க பி.எட்ல ஜாய்ண் பண்ண வந்து இருக்கீங்களா?…’’
“ஆமா.”
“நானும்தான்….அயாம் ரகு “

பரஸ்பரம் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கினோம். “வாங்க போலாம்.” என்று சொல்லி என்னுடைய லக்கேஜை நான் எடுத்துக் கொள்ள, அந்த இளைஞன் ரகு சுற்றிலும் பார்த்தான்.
“என்ன பார்க்கறீங்க?…”

“ஒண்ணும் இல்லை. இந்த சூட்கேஸை எடுத்துக்கிட்டு அரை கிலோ மீட்டர் நடக்கணும்… கூலியாள் யாராவது ஒருத்தர் கிடைச்சா பரவாயில்லை… அதான் பார்த்துட்டு இருக்கேன்…”

நான் அந்த சூட்கேஸைப் பார்த்தேன். தூக்க முடியாத அளவுக்கு அப்படியொன்றும் பெரிய சூட்கேஸாய் தெரியவில்லை.

“நீங்களே தூக்கிக்கலாமே ரகு?…”
“தூக்கிட்டு நடக்கணுமே… அதுதான் யோசனைப் பண்ணிட்டு இருக்கேன்…” ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே கல்லூரியின் காம்பௌண்ட் கேட் அருகே நின்றிருந்த அந்த நடுத்தர வயது நபர் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எங்களை நெருங்கினார்.

“என்னங்க தம்பி… பொட்டியைத் தூக்கணுமா?…”
“ஆமா…”
“உள்ளுக்குள்ளே நிறைய காலேஜ் இருக்கு. எந்த காலேஜுக்குப் போகணும்?…”
“டீச்சர்ஸ் காலேஜ்.”

“அது கொஞ்சம் தூரமாச்சே… நல்ல வெய்யில் வேற…”
“அஞ்சு ரூபா தர்றேன், எடுத்துட்டு வர்றியா?…” 1970களில் ஐந்து ரூபாய் பெரிய தொகை.
“சரிங்க… பொட்டியை எடுத்து என் தலைமேல வையுங்க…”

ரகு அந்த சூட்கேஸை தூக்கி அந்த நபரின் தலைமேல் வைத்துக் கொண்டே, “அஞ்சு ரூபாய்க்கு மேல ஒரு பைசா அதிகமா தரமாட்டேன். அங்கே போனதும் தகராறு பண்ணக்கூடாது.” என்றான்.

“நான் எதுக்காகத் தம்பி தகராறு பண்ணப் போறேன்?… நீங்க சொன்ன அதே அஞ்சு ரூபாயை எனக்குக் கொடுத்தா போதும்…”

சூட்கேஸை தன் தலையில் வைத்துக் கொண்டு அவர் நடக்க ஆரம்பித்து விட்டார். நானும் ரகுவும் அவரைப் பின்தொடர்ந்தோம். ரகு புலம்பிக் கொண்டே வந்தான்.
“இதெல்லாம் ஒரு காலேஜா?… ஏதோ பொட்டல் வெளி மாதிரி இருக்கு. எப்படித்தான் இங்கே ஒரு வருஷத்தை ஓட்டப் போறேனோ தெரியலை…”

“இந்த இடத்தைப் பார்த்து எடை போடாதீங்க ரகு. டீச்சர்ஸ் ட்ரெய்னிங் காலேஜ்களிலேயே இந்த காலேஜ்தான் நெம்பர் ஒன். இங்கே நமக்கு சீட் கிடைச்சதே பெரிய விஷயம். எக்ஸலண்ட் கோச்சிங் அண்ட் டீச்சிங்…”

“அதையும் பார்க்கத்தான் போறோம்…”
பேசிக் கொண்டே நடந்தோம். வழியில் ஒரு சிறு மரம் கூட இல்லாததால் வெய்யில் உச்சந் தலையில் இறங்கி உடம்பில் தகித்தது. அரை கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்குள் உடம்பில் இருக்கும் ஒட்டுமொத்த நீரும் வியர்வையாய் வெளியே வந்துவிடும் போல் இருந்தது.

எப்படியோ வெய்யிலைத் தாக்குப் பிடித்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பிரதான முகப்புக்கு வந்து சேர்ந்தோம். எல்லாப் பக்கமும் வேப்ப மரங்கள் பசுமையாய்த் தெரிந்தன.

தலையில் இருந்த சூட்கேஸை இறக்கி வைத்த நபர், தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தை ஒற்றிக் கொண்டே கை நீட்டினார். “பணத்தைக் குடுங்க தம்பி…”

ரகு தன்னுடைய மணிபர்ஸை எடுத்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை உருவி நீட்டினான்.

“ரொம்பவும் நன்றி தம்பி…” அவர் வாங்கிக் கொண்டு போய்விட, நானும் ரகுவும் ஃபீஸ் கட்டுவதற்காகக் கல்லூரியின் அலுவலகத்தை நோக்கிப் போனோம். ஏற்கெனவே சில மாணவர்கள் ஃபீஸ் கட்டுவதற்காக வரிசையில் காத்திருக்க நாங்களும் போய் அதில் இணைந்து கொண்டோம்.

சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவை சரியாய் இருந்தால்தான் ஃபீஸ் ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற விதியின் காரணமாய், வரிசை மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது.

சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு க்யூவில் சின்னதாய் ஒரு சலசலப்பு.
“பிரின்சிபால் வர்றார்…” என்று யாரோ ஒருவர் சொல்ல, நானும் ரகுவும் திரும்பிப் பார்த்தோம். எங்களுடைய முகங்கள் இருண்டு போவது எங்களுக்கே தெரிந்தது.

வந்து கொண்டிருந்தவர் வேறு யாருமில்லை. ரகுவின் சூட்கேஸை தலையில் சுமந்து கொண்டு வந்தவர்தான். நான் திகைத்துப் போய் நிற்க, ரகு பதட்டமும் நடுக்கமுமாய் ஓடிப்போய் அவருடைய கால்களில் விழுந்தான்.
“ஸ… ஸார்… தப்புப் பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சுடுங்க…”

அவர் ரகுவைத் தொட்டு எழுப்பினார்.
“இங்கே யாரையும் ‘ஸார்’ன்னு சொல்லக்கூடாது. என்னையும் சேர்த்துத் தான் சொல்றேன். உங்களுக்கெல்லாம் பாடம் சொல்லித் தரப் போறவங்க எல்லாரையும் நீங்க ‘அண்ணா’ன்னு தான் கூப்பிடணும். இப்ப எதுக்காக என் கால்ல விழுந்தீங்க?…”

“உங்களை?…”
“கூலியாளுன்ன்னு நினைச்சு உங்க சூட்கேஸை தூக்கிட்டு வரச் சொன்னதுக்காகவா?… இதுல என்ன இருக்கு தம்பி?… உங்களால அந்த சூட்கேஸை தூக்கிட்டு நடக்க முடியலை. என்னால நடக்க முடிஞ்சது. அவ்வளவுதான். அதுவுமில்லாம நான் பார்த்த வேலைக்குக் கூலியாய் அஞ்சு ரூபாய் கொடுத்தீங்க… நீங்க எந்தத் தப்பும் பண்ணலை…

முடிஞ்சு போன அந்தப் பிரச்சனையை மறந்துட்டு ஃபீஸ் கட்டுங்க… நாளையில் இருந்து வகுப்புகள் ஆரம்பமாயிடும். நல்லாப் படிங்க… ஆசிரியர் பயிற்சியை முடிச்சுட்டு ஒரு சிறந்த ஆசிரியராய் இந்தக் கல்லூரியை விட்டுப் போங்க…”

நிதானமாகப் பேசி முதுகைத் தட்டிக் கொடுத்து விட்டு எங்களைக் கடந்து போகும் அந்த பிரின்சிபால் இன்றளவும் என்னுடைய மனத்துக்குள் ஒரு வைரமாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...