பட்டாஸ் – அடிதடி

 பட்டாஸ் – அடிதடி

அடிமுறை என்பது பழந்தமிழர்களின் தற்காப்பு முறைக் கலைகளில் ஒன்றாகும். இதனை ஒரு விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதுவோரும் உள்ளார்கள். இதன் ஒரு வகையே இன்றும் வர்மக்கலை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது அடிமுறையின் இன்னொரு பரிமாணம் தான் வர்மக்கலை என்றும் சொல்வார்கள்.

‘அடிதடி’ விளையாட்டில், சுவடு, வெறும் கைப்போர், கட்டையான ஆயுதம், உயரமான ஆயுதம், மல்லுச் சண்டை, செடிகுச்சி சண்டை, குழு போட்டி ஆகிய பிரிவுகள் உள்ளன. இந்த அடிமுறை விளையாட்டினை அடி தட என்று அழைப்போருமுண்டு (“அடி’ முறை+ “தடை’ முறை = அடிதட / அடிதடி).

இன்றும் பேச்சு வழக்கில் சண்டைக்குப் போகாதே என்பதனை அடிதடிக்குப் போகாதே என்பார்களல்லவா! இந்த அடிதடி என்ற சொல்லாடல் பழைய தமிழர் தற்காப்புக் கலையின் விட்ட குறை தொட்ட குறைதான். அதே போன்று பாவலா காட்டுறது (ஏமாற்றுவது) என்று இன்னொரு சொல்லாடலும் இந்தக் கலையின் வழிவந்ததே.

முன்னால் ஓரடிப் பாவலா, பின்னால் ஓரடிப் பாவலா என்று பல தந்திரங்கள் இக் கலையிலுண்டு. இப்படி ஈரடி, மூவடி, நாலடிப் பாவலாக்களும் உண்டு. பாங்குகளும் இதில் உண்டு. அப் பாங்குகளை முன்னுடான், பின்னுடான், துள்ளுடான் என்றழைப்பார்கள்.

அடிமுறை விளையாட்டில் ஒற்றைச்சுவடு, அங்கச்சுவடு என இருவேறு வகைகளுண்டு. இதில் ஒற்றைச் சுவடு பற்றிய விளக்கமெதுவும் கிடைக்கவில்லை. சிலம்பில் இன்றும் ஒற்றைச் சுவடு என்றொரு வகையுண்டு. அது போல இருக்கலாம்.

அங்கச் சுவட்டில் இடம்பெற்ற பல்வேறு வகைகள் உலகில் பல்வேறு கலைகளாக இன்றும் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

  1. தேக்வொண்டோவில் (Taekwond) உள்ள கால்உதை.
  2. கராத்தேயில் (Karate ) உள்ள கைக்குத்து.
  3. ஜுட்ஜூவில் (Jujitsu) உள்ள உள்பூட்டுகள்.
  4. ஜூடோவில் உள்ள (Judo) தூக்கி எறிதல்.
  5. குங்பூவில் உள்ள (Kung fu) கைவெட்டு.
  6. வர்மக்கலையில் உள்ள வர்ம-உறுப்பு தாக்கம்.

மேற்கூறிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருப்பதுதான் அடிமுறை விளையாட்டின் அங்கச்சுவடு என்கின்றார்கள். இதனால் மேற்கூறிய கலைகளிற்கு எல்லாம் அடிப்படையே பழந்தமிழர்களின் அடிமுறைக் கலைதான் என்றொரு கருத்துமுண்டு.

இங்குதான் போதிதர்மர் தமிழகத்திலிருந்து தற்காப்புக் கலைகளை சீனாவிற்கு எடுத்துச் சென்றதான செய்தியினையும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இக் கருத்து நிறுவப்படுமானால்; பழந் தமிழர்களின் அடிமுறை என்ற தற்காப்புக் கலையே உலகின் ஏனைய தற்காப்புக் கலைகள் (martial arts) எல்லாவற்றுக்குமான அடிக்கல்லாக அமையும்.

இக் கலையில் 18 வகையான அடவுகள் இருக்கின்றன. முன்னும் பின்னும் கால்-தப்படி வைத்துக் கையை ஓட்டும் பாங்கினையே அடவு எனலாம். இந்த அடவுகளில் சிலவற்றினைச் சிலம்பாட்டம் என்ற போர்க்கலையில் மட்டுமல்லாமல், ஒயிலாட்டம் போன்ற ஆட்டக்கலையிலும் காணலாம்.

இன்றைய பரதநாட்டியம் கூட இந்த அடவுகளைக் கடன் வாங்கியுள்ளது. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆட்டன் அத்தி என்ற நீச்சல் நடனத்திலும் (Synchronized Swimming) இத்தகைய அடவுகளைக் காணலாம் (அகநானூறு 222, 226, 376). கழார்த்துறையில் ஆட்டனத்தி புனலாடினான். அப்போது அவன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பல அடவுகளைச் செய்து காட்டினான். அவற்றை அரசன் கரிகாலன் கண்டு களித்தான் எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.

இந்த விளையாட்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. இக் கலையினால் தாக்கப்படுபவர்களிற்கு ஆங்கில மருந்துகள் அன்று இல்லாத காரணத்தினால் ஆங்கிலேயர்கள் தடை செய்திருக்கலாம். எனினும், மறைமுகமாக இக்கலை தொடர்ந்து வந்தது. அதனைத் தொடர்ந்துவந்தவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார்கள். இதனால் இக் கலையின் பல அரிய கூறுகள் அழிந்துவிட்டன. எனினும் தெக்கன்களரி களரி போன்ற பெயர்களில் இன்றும் இக் கலை தமிழகத்தில் ஆங்காங்கே உயிர் வாழுகின்றது.

தமிழரின் வீரக்கலையான அடிமுறை, வீரம் குறையாத தலைமுறை, விட்ட குறை, தொட்ட குறை என எல்லாம் சேர்த்துக் கட்டி, பற்ற வைத்த சரமாக `பட்டாஸ்.’

பட்டாஸ் என்கிற சக்தி(மகன் தனுஷ்) நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிர்வீட்டில் இருக்கும் சாதனா (மெஹ்ரீன்) செய்யும் நக்கல் பிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் பதக்கங்கள், கேடயங்களை திருடுகிறார். இதனால் மெஹ்ரீனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இதையடுத்து மெஹ்ரீன் மீது பாவப்பட்டு குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் அவரின் சான்றிதழ்களை திருடச் செல்கிறார் தனுஷ். இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் இருந்த கன்னியாகுமரி (சினேகா) வெளியே வந்ததும் நேராக வில்லன் நிலனை (நவீன் சந்திரா) கொலை செய்ய குத்துச் சண்டை பயிற்சி மையத்திற்கு வருகிறார்.

வந்த இடத்தில், தான் இறந்ததாக நினைத்த மகன் சக்தி உயிருடன் இருப்பதை பார்க்கிறார். சக்தி அடிமுறைக் கலையில் வல்லவரான தன் தந்தை திரவியம்பெருமாள்(தனுஷ்) பற்றி தெரிந்து கொள்கிறார். இதையடுத்து தந்தையை கொன்றவரை பழிவாங்க கிளம்புகிறார்.

கன்னியாகுமரியாக சிநேகா, நாயகனுக்கு நிகரான கதாபாத்திரம். ஸ்டன்ட், மாஸ், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் கலக்கியி ருக்கிறார். இன்னொரு நாயகியான மெஹ்ரீன் பிர்சாடாவின் அலப்பறைகள் ரசிக்கவைக்கின்றன.

அப்பா, மகன் கதாபாத்திரங்களில் தனுஷ் அம்சமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அப்பா திரவியம். சினேகா கன்னியாகுமரியாகவே வாழ்ந்துள்ளார். கலக்கப்போவது யாரு சதீஷின் காமெடி நம்மை சிரிக்க வைக்கிறது. அவர் கவுண்ட்டர் கொடுப்பது தான் சிறப்பு.

எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பட்டாஸாகவும், பாரம்பரியமான திரவியமாகவும் தனுஷ் அனைவரையும் ஈர்க்கிறார். மெஹ்ரீன் பிர்சாதா முதல் பாதியில் சொதப்பலோ சொதப்பல். இன்னும் பயிற்சி தேவை. விவேக்-மெர்வின் இசை படத்திற்கு பக்கபலம்.

கதை ரொம்ப பழசு. அடிமுறைக் கலையை அப்படியே காட்டாமல் மாஸாக காட்டி இருப்பது புதுசு. அடிமுறை எனும் பழந் தமிழர்களின் கலையை மக்களுக்குக் கொண்டு சேர்க்க நினைத்த இயக்குநர் துரை செந்தில் குமாரின் முயற்சி பாராட்டுக் குரியது. அதை ஒரு பொழுதுபோக்குப் படத்தில் புகுத்த நினைத்து, அந்தப் பொழுதுபோக்கு ஏரியாவிலும் புதுமை.

நம் தமிழரின் பாரம்பர்ய கலையை அனைவருக்கும் கொண்டு சேர்த்தற்காக இயக்குனர் துரை செந்தில்குமார், தனுஷ், சினேகா, நாசர் மற்றும் அடிமுறை பயிற்சியாளர் செல்வராஜ் ஆகியோருக்கு மிக்க நன்றி..

ஒரு முறை ஹலோ எஃப்.எம்மில் தீபா வெங்கட் அவர்களிடம்பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் சொன்னது நம்முடைய பாரம்பர்ய கலைகளை அனைருக்கும் கொண்டு சேர்க்க பெரிய கதாநாயகர்கள் திரைப்படத்தில் அந்த கலைகளை பயன்படுத்தி நடித்தால் அனைவருக்கு சென்று சேரும் என்று சொன்னது தற்பொழுது நிறைவேறி இருக்கிறது. நன்றி தீபா வெங்கட் அவர்களுக்கு மிக்க நன்றி.

ஏன் இவ்வளவு பெரிய செய்தி என்றால், இந்த படம் நாளை (01.05.2020) மாலை 6.30 மணிக்கு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...