எண்ணூரில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன நூலகம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூரில் பொதுமக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன அரசு நூலகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பேகம் 5-வது தெருவில், ரூ.1.10 கோடியில் 2,250 சதுரஅடி பரப்பளவு கொண்ட இறகு பந்து விளையாட்டு உள்ள ரங்க மைதானம், திருவல்லிக்கேணி ராஜாஜி நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.4.44 கோடியில் 3,364 சதுர அடியில் அமைந்துள்ள அம்பேத்கர் திருமண மாளிகை, சிந்தாதிரிப்பேட்டை, சிங்கண்ண தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.59 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மண்டபம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவலு தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.3.76 கோடியில் 874.34 ச.மீ பரப்பளவில் பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

இதற்கிடையே திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வட்ட துணை செயலாளர் உடல்நலக்குறைவால் ஒரு காலை இழந்த நிலையில், அவரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அவரது கோரிக்கையை ஏற்று முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு செயற்கை காலை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட பட்டாளம், கான்ரான்ஸ்மித் நகரில் ரூ.10.89 கோடியில் கட்டப்பட்டுள்ள சலவை நிலையம், கன்னிகாபுரத்தில் ரூ.15.8 கோடியில் அமைக்கப்பட்டு கன்னிகாபுரம் விளையாட்டு திடல், ராயபுரம் மூல கொத்தளத்தில் ரூ.14.31 கோடியில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகை ஆகியவற்றையும் திறந்து வைத்து திருமண மாளிகையில் 10 இணையர்களுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

பின்னர் திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு வளாகம், எண்ணூர் மக்களின் வசதிக்காக ரூ.4.63 கோடியில் கட்டப்பட்டுள்ள கத்திவாக்கம் பேருந்து நிலையம், ரூ.2.75 கோடியில் எண்ணூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நவீன நூலகம், எண்ணூர் கத்திவாக்கத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்து, கத்திவாக்கத்தில் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எண்ணூரில் அமைக்கப்பட்டுள்ள கத்திவாக்கம் நிலையம் எண்ணூர் மக்களின் பயணத்தை எளிதாக்கும். அதேபோல் புதிதாக கட்டப்பட் டுள்ள நூலகத்தை பொதுமக்கள், மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தி அறிவை மேலும் விரிவாக்கிக் கொள்ள உதவும்.

சுகாதார நிலையம், எண்ணூர் பகுதி மக்களின் மருத்துவ தேவைக்குத் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிகழ்வுகளில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வில்சன், தயாநிதிமாறன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மாநகராட்சிப் பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!