தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது’’ என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாசும் அவரது மகன் அன்புமணி ராமதாசும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். ராமதாஸ் எந்த கூட்டணியில் இடம் பெறுவார் என்பது இதுவரை அவர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘‘என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம். நான் நலம்! நீங்கள் நலம்தானே…?

எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.

நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரியான கல்வி, ஒரே மாதிரியான தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.

உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து லட்சியத்தை வெல்வோம்.

எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!