திருவாரூர்த் தமிழியக்கம், வாழ்க தமிழ் சிறுவர் உலா நூலகம் சார்பில் 16.01.2026 வெள்ளியன்று திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில், திருவாரூர்த் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் புலவர் மு. சந்திர சேகரன் தலைமையேற்க மேனாள் ஊராட்சி உறுப்பினர் வே. தியாகராஜன் குத்துவிளக்கேற்றிப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். முன்னதாக நிறுவுநர் கவிஞர் கோமல் தமிழமுதன் அனைவரையும் வரவேற்றார்.

திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் 380 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து வருகை தந்தார்கள். 1330 திருக்குறள் ஒப்பித்த எட்டு மாணவ மாணவியர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் இரண்டு மாணவியர் 1330 குறட்பாக்களையும் ஒப்பித்து அசத்தினர்.
திருவாரூர் தண்டலை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கா. முருகேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அவர் பேசும்போது திருக்குறள் படிப்பதை நாம் அன்றாடம் ஒரு வழக்கமாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாளை நல்ல குடிமக்களாக இன்றைய குழந்தைகள் வருவார்கள். திருக்குறள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஓர் ஒப்புயர்வற்ற நூலாகும். வீடுகள்தோறும் திருக்குறள் இருந்தால் வழிகாட்டுவதற்கு அனுபவம் வாய்ந்த பெரியவர் ஒருவர் உடன் இருப்பது போலாகும். திருக்குறளைப் படித்தால் பண்பட்ட மனிதராக வாழ்வதோடு அன்பு கருணை இரக்கம் ஆகிய குணங்களைக் கொண்டவராகத் திகழ முடியும். வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு குத்துவிளக்கு இருப்பதைப்போல் அறிவொளி பரவ திருக்குறள் நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். இதுபோன்ற விழாக்கள் மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தும். திருக்குறளை மனப்பாடம் செய்வதன்மூலம் மனப்பாட சக்தி வளரும். அதனால் மாணவர்கள் பள்ளிப் பாடங்களில் நிறைய மதிப்பெண்கள் பெற முடியும் என்று குறிப்பிட்டார்கள்.

விளமல் அரிமா சங்க நிருவாகி வைத்தியலிங்கம், கவிஞர் மனத்தூயன், சாந்தி செல்வராஜ், ஆசிரியர்கள் ந. ராஜூ, செல்வராஜ், அப்பாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நடுவர்களாக கவிஞர்கள் ந. இராஜசேகரன், ஆரூர் சீ. முருகன், முத்துராமன், வீரராஜன், தர்மதாஸ், ஆசிரியர்கள் சக்திவேல், அன்பழகன், இராஜேஷ்குமார், நதியா லெட்சுமி, ச. சூர்யகலா, ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோமல் முத்துகுமரசாமி, சந்தோஷ், அசித் குமார், கவிஞர் சூரிய பிரகாஷ், ஈ. புவனா ஆகியோர் செய்தனர் .மாலா தமிழச்சி அவர்கள் நன்றிகூற, மு.பெ. தினேஷ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். தமிழார்வலர்களும் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
