ஈ.வெ.ரா. நினைவு நாளின்று
அதையொட்டி பெரியாரின் பொன்மொழிகளில் சில:
💫மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
💫பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
💫மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
💫விதியை நம்பி மதியை இழக்காதே.
💫மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
💫மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
💫பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
💫பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
💫பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
💫தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
💫வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
💫கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
💫ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
💫ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
💫ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
💫எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
💫மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
💫பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
💫என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
வாஸ்கோ ட காமா நினைவு நாளின்று! இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார்(ன்) 1498 மே மாதம் 20ஆம் தேதி அந்த வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் பொர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்து சேர்ந்தான்.இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத்துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனைத் திரவியங்களும் மிகுந்திருப்பதாய் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல் வழியே 1492 -ல் இந்தியாவிற்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த சம்பவத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது. வாஸ்கோடகாமாவோடு கப்பலில் பயணம் செய்த குழுவில் ஒருவன் எழுதி வைத்த டயரிக்குறிப்பில் அந்தப் பயணத்தின் அதிர்ஷ்டம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.பயணம் செய்த குழு தரை இறங்கி விசாரித்துவிட்டு படகில் கப்பலுக்குத் திரும்பியபோது கொண்டு விட வந்த கோழிக்கோட்டுக்காரன் “அதிஷ்டமான பயணம்! மகா அதிஷ்டமான பயணம்! வைரமும் வைடூரியமுமாய் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு தாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.: என போர்ச்சுக்கீசிய மொழியிலேயே பேசியது கண்டு பிரமிப்பு அடைந்து போனார்களாம். இந்த பயணம்தான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வழி அமைத்து கொடுத்தது. ரூட் அறிந்து அடுத்தடுத்து (மூன்றாவது முறையாக) இந்தியா வந்தபோது இந்தியாவுக்கான அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் வாஸ்கோட காமா. ஆனால் வந்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524-ஆம் ஆண்டு இதே டிசம்பர் 24-ஆம் தேதி அவர் கோழிக்கோட்டிலேயே காலமானார். கொச்சியில் உள்ள ஒரு தேவலாயத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டு பின்னர் 1539-ஆம் ஆண்டு அதன் மிச்சங்கள் போர்ச்சுக்கலுக்கு அனுப்பபட்டன. ஒவ்வொருப்பயணங்களில் அவர் புரிந்த கொடுமைகளையும், வன்முறைகளையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் வாஸ்கோட காமாவின் கண்டுபிடிப்பு வரலாற்று சாதனைகளில் முக்கியமான இடத்தைப் பெற வேண்டிய ஒன்றுதான்.
தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று. உலக நுகர்வோர் தினம் மார்ச் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. என்றாலும் இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும் வழிவகை செய்கிறது. மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
நேபாளம் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ( பிளைட் நம்பர் IC 814) ஆயுத முனையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டு காந்தஹாருக்கு பயங்கரவாதிகள் கடத்திய தினம். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பிடம் பயிற்சி பெற்ற “ஹர்கத் உல் முஜாஹிதீன்” அமைப்பை சேர்ந்த ஐந்து தீவிரவாதிகள் இந்த கடத்தலை செய்தார்கள் பயணிகள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர் ). கடத்தல்காரர்களின் உத்தரவுப்படி அந்த விமானம் முதலில் அமிர்தசர், பிறகு பாகிஸ்தானின் லாஹூர் அதனை அடுத்து துபாய் இறுதியாக ஆப்கான் நாட்டின் காண்டஹாருக்கு ஒட்டி செல்லப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டது. 176 பயணிகளில் 27 பேர் துபாய் விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் ஒரு பயணி உடல் சுகவீனம் காரணமாக இறந்துவிட்டார் . ஒரு வாரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த கடத்தல் விவகாரத்தில் பயங்கரவாதிகள் கேட்ட (இந்திய சிறையில் இருந்த) அவர்கள் தோழர்களை இந்திய அரசு விடுதலை செய்த பின்னர் பயணிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த கடத்தல் நிகழ்வின்போது இந்தியாவில் வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர், வாத்தியார், இதய தெய்வம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எம் ஜி ஆர் காலமான நாள். மக்களைப் பொறுத்தவரை திரையில் இருப்பவரும், நிஜ வாழ்வில் இருந்தவரும் உண்மையான எம்.ஜி.ஆர் தான். அவரின் திரைப்பட பாடல்கள் பாடலாசிரியருடையதோ அல்லது இசையமைப்பாளருடையதோ அல்ல. அது எம்.ஜி.ஆருடையது. எம்.ஜி.ஆர் மறைந்து 38 ஆண்டுகள் ஓடிவிட்டாலும் மக்கள் இதயத்தில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அன்றும், இன்றும் கதை இல்லாத படங்கள்கூட வரலாம்; ஆனால் ‘பஞ்ச் டயலாக்’ இல்லாத படங்களை பார்ப்பது மிகவும் அரிது. முன்னணி நடிகர்கள் எல்லோருமே தங்களுடைய படங்களில் வில்லனிடம் சவால் விடும் போது ‘பஞ்ச்’ பேசாமல் இருப்பதில்லை. அப்படி சினிமாவில் இந்த ‘பஞ்ச் டயலாக்’க்கு பிள்ளையார் சுழி போட்டது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். அவரது ‘பஞ்ச் டயலாக்’ ரசிப்பதற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த வகையில் அவரது ‘பஞ்ச் டயலாக்’ கள் கருத்துள்ளதாக இருக்கும். அவரின் நினைவுநாள் இன்று 24-ம் தேதி கடைபிடிப்பதையொட்டி, தனது படங்களில் அவர் பேசிய சில ‘பஞ்ச் டயலாக்’குகள் சில ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் எல்லாமே காலத்தால் அழியாத புரட்சிகரமான கருத்துகளை கொண்ட ‘பஞ்ச் டயலாக்’குகள்தான். அதிலும் குறிப்பாக “மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?” என்று நம்பியார் ஆவேசத்தில் பிளிற, அதற்கு எம்.ஜி.ஆர்., “சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்” என்று பதிலடி கொடுப்பார். தொடர்ந்து நம்பியார், “தோல்வியே அறியாதவன் நான்”… என்று செல்ல, அதற்கு எம்.ஜி.ஆர். “தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்”… என்பார். ‘சந்திரோதயம்’ படத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரிடம், “சந்திரா நீ யாரோட மோதிப் பாக்குற?” என்று எச்சரிக்க, அதற்கு எம்.ஜி.ஆர்.; “என் எதிரிகூட எனக்கு சமமா இல்லன்னா அலட்சியப்படுத்துறவன் நான்” என பதிலடி கொடுக்கும் காட்சியில் ரசிகர்களின் விசில் சத்தத்தில் தியேட்டரே அதிரும். ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் ஒரு காட்சியில் வில்லன் மனோகர்; “நான் பயங்கரமானவன்” என்று மிரட்ட, அதற்கு எம்.ஜி,ஆர், சாந்தமாக, “நான் பயப்படாதவன்” என்று பதிலடி கொடுக்கும் போது தியேட்டரே அதிரும். ‘நம்நாடு’ படத்தில் ரங்கராவிடம் அவர் பேசும், “என்னோட முதல் என்ன தெரியுமா? என்னோட நாணயம்! மக்கள் என் மேல் வச்சிருக்கிற நம்பிக்கை. அதுக்கு என்னிக்குமே மோசம் வராது” என்ற வசனம் அவரது நிஜ வாழ்க்கையை பிரதிபலித்தது. “என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர; நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை” – ‘நாடோடி மன்னனில்’ எம்.ஜி.ஆர். பேசும் பிரபலமான ‘பஞ்ச் டயலாக்’ இது. ஒரு படத்தில் அவர் ‘நான் சொல்வதைத்தான் செய்வேன்; செய்வதைத்தான் சொல்வேன்’ என்று ஒரு வசனம் பேசுவார். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருந்ததால்தான் மறைந்தும் மறையாமல் அவர் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆரின் சினிமா வசனம் யதார்த்த வாழ்க்கையில் நிஜம் ஆகி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
வி.கே. ராமசாமி இறந்த தினம் இன்று.ஏற்காத வேஷமில்லை. பேசாத வசனமில்லை. முதலாளி, தொழிலாளி, அப்பா, தாத்தா, அண்ணன், தம்பி, கணக்கப்பிள்ளை, வேலைக்காரன், கூலிக்காரன், கடத்தல்காரன், காவல்காரன், போலீஸ், இன்ஸ்பெக்டர், அதிகாரி, தொழிலதிபர், டாக்டர், வக்கீல், குமாஸ்தா, ராஜா, மந்திரி, புலவன், சேவகன், தூதுவன், அடப்பக்காரன், நாயகனுக்கு நண்பன், விதூஷகன், நல்லவன், கெட்டவன், பைத்தியம், கோமாளி, இன்னும் என்னென்ன உங்களுக்குத் தோன்றுகிறதோ அத்தனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அப்படி எல்லா விதமான வேஷங்களையும் செய்து முடித்து விட்டவர் வி.கே,ராமசாமி ஆம்.. பழம்பெரும் தமிழ்த் திரைப்படநடிகரான வி கே ஆர் 1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகு வந்தடைந்தவர்களில் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.யார், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், முத்துராமன்,கமலஹாசன், இரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். அவருடைய வாக்குநடை, அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஏற்றுக் கொண்டிருக்கும் எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும், வேஷத்திற்குள்ளும் சென்று “பச்“சென்று பசை ஒட்டிய மாதிரி உட்கார்ந்து கொள்ளும் திறமை இவருக்கு உண்டு. இத்தனைக்கும் நாம் அடிக்கடி கேட்டுக் கேட்டு மகி்ழ்ந்த அதே வெண்கலக் கணீர்க் குரல்தான் எல்லாப் படத்திலும் ஒலிக்கும். ஆனால் பேசும் வசனங்கள் பளீரென்று ஸ்ருதி சுத்தமாக டிஜிட்டலைஸ் பண்ணியது போல் கேட்கும். ஏற்ற இறக்கத்தோடு காதுக்கு வந்து சேர்ந்து அதன் பொருளை, அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கும். முதல் அறிமுகக் காட்சியிலேயே, கதைக்கு ஏற்றாற்போல், அந்தப் பாத்திரமாகவே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் வருவதுபோல்தான் இருக்கும் 2002 ல் இதே நாளில் மறைந்த வி.கே.ஆரின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார்,நெப்போலியன், ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன், நடிகைகள் மனோரமா, காந்திமதி உள்ளிட்டோர் இறுதி மரியாதைசெலுத்தினார்கள். பின்னர் சென்னை-தி. நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கண்ணம்மாப் பேட்டை சுடுகாட்டுக்கு இறுதிஊர்வலம் கிளம்பியது. இந்த இறுதி ஊர்வலத்திற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள்ஊர்வலத்தில் நடந்து சென்றனர். இறுதி ஊர்வலத்தையொட்டி, ஒரு நாள் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படம் தொடர்பான அனைத்துப் பணிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.
பி.பானுமதி காலமான நாளின்று நடிப்பு, பாடல், இயக்கம், தயாரிப்பு என பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பழம்பெரும் நடிகை பானுமதி தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முடி சூடா ராணியாக திகழ்ந்தவர் பானுமதி. அந்தக்கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, பின்னர் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி என ஜாம்பவான்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் பானுமதி. தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோருடனும் நடித்தவர் பானுமதி. அவர் நடித்த படங்களில் அவரே பாட்டுக்களைப் பாடுவார். அந்த வகையில் அவருக்கு எந்தப் பாடகியும் பின்னணி பாடியதில்லை என்ற சிறப்புப் பெற்றவர் பானுமதி . இதுதவிர பல படங்களை தயாரித்துள்ளார், இயக்கியுள்ளார் பானுமதி . இப்படிப் பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பானுமதியை அஷ்டாவதானி என்றே திரையுலகம் கூறியது. தன் வாழ்நாளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பானுமதி நடித்துள்ளார். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் பானுமதி.
