முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை,

23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

2021-2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் எனவும், சட்டமன்ற உறுப்பினர்களுடைய தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ஒரு பகுதியை இந்நோக்கத்திற்காக பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் ஒரு சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2022-2023ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், முதல் கட்டமாக கொளத்தூர், சேப்பாக்கம், ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி, சோழவந்தான், வாணிம்பாடி, காங்கேயம், ஆலங்குடி ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.2.50 கோடி அரசு நிதியும், 50 லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், என மொத்தம் தலா 3 கோடி ரூபாய் செலவில் முதலைமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், பத்மநாபுரம் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையட்டரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2024-2025ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்-அமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதோடு, விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

தற்போது மூன்றாவது கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதிகளிலும், தஞ்சாவூர் மாவட்டம் – பேராவூரணி, திருவையாறு மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகளிலும், கோயம்புத்தூர் மாவட்டம் – கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணப்பாறை சட்டமன்ற தொகுதியிலும், விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி, திண்டிவனம் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளிலும், சென்னை மாவட்டம் – மதுரவாயல், திரு.வி.க.நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம்- திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியிலும், திருவாரூர் மாவட்டம் – நன்னிலம் மற்றும் திருத்துறைபூண்டி சட்டமன்ற தொகுதிகளிலும், கரூர் மாவட்டம் – குளித்தலை சட்டமன்ற தொகுதியிலும், செங்கல்பட்டு மாவட்டம் – ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் – கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலும், சேலம் மாவட்டம் – சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளிலும், என மொத்தம் 23 சட்டமன்றத் தொகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான விளையாட்டுகள் உட்பட குறைந்தபட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுக்களுக்கான வசதிகளுடன் இவ்விளையாட்டரங்கம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!