தேசிய இல்லத்தரசிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொண்டு, குடும்பத்தை அன்புடன் வழிநடத்தும் இல்லத்தரசிகளின் கடின உழைப்பையும் தியாகத்தையும் போற்றிக் கொண்டாடுவதற்காக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளையும், வீட்டையும் நன்கு கவனித்துக்கொள்ளும் அம்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இல்லத்தரசி தினம் முதலில் கொண்டாடப்பட்ட சரியான தேதி தெளிவாக இல்லை. ஆனால், கடின உழைப்புக்கு மதிப்பளிக்கப்படாத ஒரு இல்லத்தரசியால் இந்த நாள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நாள் மற்ற விடுமுறை நாட்களைப் போல இன்னும் பிரபலமாகவில்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ஒரு நாள் சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற அனைத்து வேலைகளையும் கணவரோ அல்லது பிள்ளைகளோ பொறுப்பேற்று இல்லத்தரசிகளுக்கு ஓய்வு கொடுப்பது சிறப்பாக இருக்கும். குடும்பத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் தலையாய பொறுப்பு இல்லத்தரசிகளுக்கே உண்டு. கணவன், குழந்தைகள் மற்றும் வீட்டையும் பராமரிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை நலமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியை சார்ந்தே உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத் தலைவிகளால் தான் வீட்டின் தரத்தை உயர்த்த முடியும். வீட்டு வேலை என்பது என்ன, சாதாரணமாக எல்லாப் பெண்களும் செய்கின்ற வேலைதானே. நான் அலுவலகத்தில் செய்யும் வேலையை விடவும் இது எளிது. மேலும், மதியம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் அல்லது தொலைக்காட்சி பார்க்கலாம். ஆனால், என்னுடைய வேலை மன அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்தது என்று நினைப்பவர்கள், சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் தாய், சகோதரி அல்லது மனைவி, ஒரு நாள் இல்லத்தில் செய்கின்ற வேலைகளைப் பட்டியலிட்டால், இல்லத்தரசியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
தி_டைம்ஸ்_ஆஃப்_இந்தியா”1838 ஆம் ஆண்டு தி பாம்பே டைம்ஸ் அண்ட் ஜர்னல் ஆஃப் காமர்ஸ் என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்ட நாள் நவம்பர் 3. 1861-ல் இது அங்கீகரிக்கப்பட்டது. இது ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் அச்சடித்து வெளியிடப்பட்டது, தி பாம்பே டைம்ஸ் அண்ட் ஜர்னல் ஆஃப் காமர்ஸ் வாரத்திற்கு இருமுறை பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் துணைக் கண்டங்களின் செய்திகளை கொண்டமைந்திருந்தது மற்றும் இந்திய ஐரோப்பாவிற்கிடையே தொடர்ந்து நீராவிக் கப்பல்கள் வழியாக இது ஏற்றி செல்லப்பட்டது. 1850 முதல் தினசரி பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது, 1861-ல் பாம்பே டைம்ஸ் என்ற பெயர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என மாற்றப்பட்டது.
1493 – கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டறிந்த நாள் டொமினிக்கா (Dominica, பிரெஞ்சு: Dominique), கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இது டொமினீக்க என உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமை எனப் பொருள்படும். இந்நாளிலேயே கொலம்பஸ் இத்தீவைக் கண்டுபிடித்தார். இது விண்ட்வார்ட் தீவுகளுக்கு நேர்வடக்கே அமைந்துள்ளது.…
காண்ட்டினெண்ட்டல் ஆர்மி என்றழைக்கப்படும், (உண்மையில் அமெரிக்காவின் முதல் ராணுவமான) அமெரிக்க விடுதலைப்படை கலைக்கப்பட்ட நாள் அமெரிக்காவில் குடியேற்றங்களை இங்கிலாந்து ஏற்படுத்தியபோது அங்கு ராணுவமெல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களுடனான மோதல்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடியேற்றமும் தங்களுக்கென்று குடிப்படைகளை உருவாக்கிக்கொண்டன. நிரந்தர வீரர்களற்ற இவற்றில், தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், போர்க்காலங்களில்மட்டும் வீரர்களாகப் பணியாற்றுவார்கள். பிற ஐரோப்பியக் குடியேற்றங்களுடன் மோதல்கள் ஏற்பட்டு, 1754-63இல் நடைபெற்ற ஃப்ரெஞ்ச்சுக்காரர்களும், செவ்விந்தியர்களும் இணைந்து மோதிய போரைத் தொடர்ந்து, கொஞ்சம் இங்கிலாந்துப் படைகள் அமெரிக்காவில் நிறுத்தப்பட்டன. குடியேற்றங்களின் பாதுகாப்புக்காக அங்குள்ள படைக்கு, குடியேற்றங்களிடம் வசூலித்து ஊதியமளிப்பதற்காகவே 1765இன் முத்திரைச்சட்டம் இயற்றப்பட்டது. தங்களைப் பற்றிய முடிவுகளில் தலையிட தங்களுக்கு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் பங்களிக்காத நிலையில், வரி கேட்பது நியாயமில்லை என்ற முரண்பாடே அமெரிக்க விடுதலைவரை இட்டுச்சென்றது. முரண்பாட்டின் தொடக்கமே ராணுவத்திற்கு ஊதியம் அளிப்பதில்தான் என்பதால், இங்கிலாந்து ராணுவம் குடியேற்றங்களுக்கு எதிராகவே இருந்த நிலையில், அதனுடனேயே போரிடவேண்டியதாக அமைந்த விடுதலைப்போருக்கு, அனைத்துக் குடியேற்றங்களும் படைதிரட்டி அனுப்பவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட (முறையான ராணுவமல்லாத!) குடிப்படையே, அமெரிக்க விடுதலைப்படையாக, ஒரு கட்டத்தில் சுமார் 80 ஆயிரம் வீரர்களைக்கொண்டு போரிட்டு, வெற்றியும்பெற்றது. படையினருக்கு போரின்போது வழங்கப்பட்ட ஊதியத்தில் பாதியை, போருக்குப்பின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்குவதாக 1780இல் கூட்டணிப் பாராளுமன்றம் உறுதியளித்திருந்தது. 1783 செப்டம்பர் 3இல் ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின்படிதான் போர் முறைப்படி முடிவுக்குவந்தாலும், 1781 அப்டோபரில் யார்க்டவுன் முற்றுகையில் தோல்வியடைந்ததுமே, இங்கிலாந்து பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்துவிட்டதால், போரின் தீவிரம் குறைந்துவிட்டது. இதனாலும், கடுமையான நிதிநெருக்கடியினாலும் வீரர்களுக்குப் பல மாதங்கள் ஊதியமளிக்கப்படாததுடன், ஓய்வூதியமும் குறைக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டணிப் பாராளுமன்றத்தைக் கவிழ்க்க படையினர் முயற்சித்த நியூபர்க் சதி 1783 மார்ச்சில் வெளியானது. இவற்றால், அமெரிக்காவுக்கு ராணுவமே வேண்டாம் என்று கூட்டணிப் பாராளுமன்றம் முடிவெடுக்க, போரில்லாத காலத்திலும் ராணுவம் தேவை என்று வாதிட்ட வாஷிங்டன், கடைசியாக வைத்த 900 வீரர்களாவது இருக்கட்டும் என்ற கோரிக்கைகூட ஏற்கப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களைப் பாதுகாக்க வெறும் 30 பேரை வைத்துக்கொண்டு, மீதமுள்ள படைகளுக்கு விடைகொடுக்கும் செய்தியை நவம்பர் 2இல் செய்தித்தாள்களுக்கு வாஷிங்டன் அளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3இல் படைகள் கலைக்கப்பட்டன.
ஒலிம்ப்-டி-கஸ் என்ற ஃப்ரெஞ்சுப் பெண் நாடக ஆசிரியர், கில்லட்டினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொல்லப்பட்ட நாள்.பெண்களின் உரிமைக்காகக் குரலெழுப்பிய இவர், அரசுக்கு எதிராகவும், அரசியல் சட்ட முடியாட்சியை ஆதரித்த கிரோண்டின் கட்சிக்கு ஆதவாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டது. 1780களில் நாடக ஆசிரியராக எழுதத் தொடங்கிய இவர், பின்னர் ஃப்ரான்சின் குடியேற்றங்களில் அடிமை வணிகத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கியதுடன், அரசியல் துண்டறிக்கைகளையும் வெளியிட்டார். ஆணாதிக்கத்துக்கு எதிரான இவர்தான், ஃப்ரெஞ்சு ஆண்களுக்கு இணையான உரிமைகள் ஃப்ரெஞ்சுப் பெண்களுக்கும் தரப்பட வேண்டும் என்று முதலில் குரலெழுப்பியவர். ஃப்ரெஞ்சுப் புரட்சியின்போது உருவாக்கப்பட்ட தேசிய அரசியலமைப்பு அவை, ‘மனிதனின், குடிமகனின் உரிமைகளுக்கான பிரகடனம்’ என்பதை 1789இல் நிறைவேற்றியது. மனித உரிமை ஆர்வலர் என்ற நிலையிலிருந்து ஃபிரெஞ்சுப் புரட்சியை முதலில் வரவேற்ற இவர், சம உரிமை என்பது பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால் வேதனையுற்றதுடன், பெண்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுத்த உண்மையின் நண்பர்கள் சமூகம் என்ற அமைப்பிலும் இணைந்தார். 1791இல் ‘பெண்ணின், குடிமகளின் உரிமைகளுக்கான பிரகடனம்’ என்பதை எழுதினார். “சமூக ஒப்பந்தம்” என்ற பெயரில் பாலின சமத்துவமுடைய திருமணம் ஒன்றையும் முன்மொழிந்தார். (அரசியல் உரிமைகளுக்கான கோட்பாடுகள் என்ற நூலை எழுதிய ரூசோ, அதற்குச் சூட்டிய பெயர்தான் “சமூக ஒப்பந்தம்”!) ஹைட்டியிலிருந்த ஃப்ரெஞ்சுக் குடியேற்றத்தில், உரிமைகளுக்கான பிரகடனத்தின் அடிப்படையில் உரிமைகள்கோரி அடிமைகள் போராடியபோது, அவர்களின்மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டித்தார். இவற்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டபோது, தனக்காக வாதிடுமளவுக்குத் திறமை கொண்டவர் என்று கூறி, வழக்கறிஞர் வைத்துக்கொள்ளக்கூட அனுமதிக்கப்படவில்லை. அங்கு அவரது வாதங்கள், ‘புரட்சிகர தீர்ப்பாயத்தின் முன் ஒலிம்ப்-டி-கஸ்’ என்ற பெயரில் வெளியாயின. மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டபின், அவரது பிரகடனம் அட்லாண்ட்டிக் பகுதி நாடுகளில் ஏராளமாக அச்சிடப்பட்டதுடன், பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
பறவைகள் பாதுகாப்புக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பறவையியலாளர் ஜாக் மைனர் நினைவு தினம் இன்று (நவம்பர் 3, 1944). ஜாக் மைனர் (Jack Miner) ஏப்ரல் 10, 1865ல் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜான் தாமஸ் மைனர். குடும்பம் 1878ல் கனடாவில் குடியேறியது. முறையான கல்வி கற்காத இவர், ஆரம்பத்தில் வேட்டைத் தொழில் செய்தார். பிறகு, அதைக் கைவிட்டு, பறவைகள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டினார். குளிர்காலங்களில் சிரமப்படும் காடைகள், வான்கோழிகளைப் பாதுகாத்து வளர்த்தார். அருகே உள்ள குளங்களுக்குப் பல்வேறு பறவைகள் வருவதைப் பார்த்து, தனது நிலத்தில் ஒரு குளத்தை உருவாக்கினார். ஆரம்பத்தில் ஒருசில காட்டு வாத்துகள் வந்தன. 1911 முதல் ஏராளமான வாத்துகள் வரத் தொடங்கின. அதற்கேற்ப குளத்தை பெரிதாக்கினார். 1913ல் இவரது மொத்த இடமும் பறவைகள் சரணாலயமாக மாறிவிட்டது. ஏறக்குறைய 50 ஆயிரம் பறவைகள் அங்கு இருந்தன. இதைக் கண்ட அரசு இவரது முனைப்பை மேலும் விரிவாக்க நிதியுதவி அளித்தது. அங்கு ஏராளமான மரங்கள், புதர்களை வளர்த்தார். நீர்நிலைகளையும் அமைத்தார். வலசை போகும் பறவைகளின் பாதையைக் கண்காணிக்க, அவற்றுக்கு பட்டயம் கட்டும் (Bird Banding) முறையை 1909ல் மேம்படுத்தினார். உலகில் இத்தகைய முறையை முதன்முதலாக மேம்படுத்தியவர்களில் ஜாக் குறிப்பிடத்தக்கவர். நூற்றுக்கணக்கான பறவைகளுக்குப் பட்டயம் கட்டப்பட்டது. பறவைகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இது பயன்பட்டது. நீர்நிலைகள் குறைவது, சுற்றுச்சூழல் சீர்கேடு வேதனையான விஷயம் என்று கூறியவர், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தினார். பறவைப் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். 1910ல் தொடங்கிய இவரது சேவை இறுதிவரை தொடர்ந்தது. வலசை போகும் பறவைகள் சில நேரங்களில் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவது இதன்மூலம் தெரியவந்தது. சில குறிப்பிட்ட பறவைகளைப் பிடிப்பது, விற்பது மற்றும் கொல்வதற்கு எதிராக அமெரிக்காவில் தடைச் சட்டம் கொண்டு வரவும் இது காரணமாக அமைந்தது. ‘ஜாக் மைனர் மைக்ரேட்டரி பேர்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை இவரது நண்பர்கள் 1931-ல் உருவாக்கினர். பல இடங்களுக்கும் சென்று வனவிலங் குப் பாதுகாப்பு, சரணாலயங்கள், வனவிலங்குப் புகலிடங்கள் அமைப்பதன் அவசியம், தனது ஆய்வுகள் குறித்து உரையாற்றினார். தான் கண்டறிந்த பட்டய முறைகள் மற்றும் நீர்ப்பறவைகள் பாதுகாப்பு ஆய்வுகள் அடங்கிய ‘ஜாக் மைனர் அண்ட் தி பேர்ட்ஸ்’ என்ற புத்தகத்தை 1923-ல் வெளியிட்டார். முதல் பதிப்பின் 4 ஆயிரம் பிரதிகளும் 9 மாதங்களில் விற்பனையாகின. அதன் பிறகு, உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்த புத்தகத்தின் பதிப்புகள் தற்போதும் வருகின்றன. பறவைகள் பாதுகாப்புக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஜாக் மைனர் நவம்பர் 3, 1944ல் தனது 79வது அகவையில் கோஸ்பைல்ட் சவுத் டவுன்சிப்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவர் வட அமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை என்று போற்றப்படுகிறார். பள்ளிச் சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டது.
1957ஆம் ஆண்டு ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைக்கா எனும் நாயை, சோவியத் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது. ஸ்புட்னிக்2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக்கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒருகூம்பு வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி தொலை அளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட்ட அறையில் லைக்கா வைக்கப்பட்டது.
விடுதலைப் போராட்ட வீராங்கனை, பெண்கள் உரிமைக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியான அன்னபூர்ணா மஹாராணா (Annapurna Maharana) பிறந்த தினம் -இன்று. # ஒடிசா மாநிலத்தில் (1917) பிறந்த வர். மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்த தந்தை, மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று அப்பதவியைத் துறந்தார். விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். அருமை மகள் வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்தார். பெற்றோர் மட்டு மின்றி, இவரது உறவினர்கள் பலரும் விடுதலை வேள்வியில் பங்கேற்றவர்கள். # அபார நினைவாற்றல் கொண்ட அன்னபூர்ணா, 12 வயதில் பகவத் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 14 வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ‘வானர் சேனா’ என்ற சிறுவயதினருக்கான விடுதலை இயக்கத்தில் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார். # பெற்றோருடனும் சகோதரனுடனும் இணைந்து கட்டாக் மாவட்டத்தில் 5 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்தார். வார்தாவில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பல போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். # பல தலைவர்களிடம் அறிமுகம் பெற்ற இவர், காங்கிரஸின் அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றார். இவரது தலைமைப் பண்பையும் தேசபக்தியையும் காந்திஜி பாராட்டியுள்ளார். ஒடிசாவில் விடுதலைப் போராட்டத் திட்டங்களுக்காக காந்திஜி பல கடிதங்கள் மூலம் இவருக்கு வழிகாட்டினார். # இவர் நல்ல குரல்வளம் மிக்கவர். தேசபக்தி பாடல்களைப் பாடி விடுதலைக் கனல் மூட்டினார். 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு முதன்முதலாக சிறைசென்றார். 1934-ல் காந்திஜி நடத்திய நீண்ட பாதயாத்திரையில் கலந்துகொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். # விடுதலைக்குப் பிறகு பதவிகளை நாடாமல், எளிமையாக வாழ்ந்தார். ஏழை மக்களின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மத்தியப் பிரதேசத்தில் சம்பல் கொள்ளையர்களின் மன மாற்றத்துக்கான மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் இணைந்து சேவையாற்றினார். ‘தஸ்யு ஹ்ருதயரா தேவதா’, ‘அம்ருத அனுபவ்’ என்ற தனது நூல்களில் சம்பல் பள்ளத்தாக்கு திட்டப் பணி அனுபவங்களை விவரித்துள்ளார். # ராய்கடா மாவட்டத்தில் பழங்குடியினருக்காக இலவசப் பள்ளியைத் திறந்தார். வினோபா பாவேயின் பூதான இயக்கத்திலும் பங்கேற்றார். நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். விடுதலைப் போராட்ட அனுபவங்கள் குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். # பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி னார். பல்வேறு சமூக அமைப்புகளில் இணைந்து பணியாற்றினார். # மகாத்மா காந்தியின் பல படைப்புகளை ஒரிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவரது இலக்கிய சேவைகளுக்காக சரள புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. உத்கல் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ‘உத்கல் ரத்னா’ எனப் போற்றப்பட்டார். # அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேசபக்தியுடனும் சேவையாற்றிய இவரது வாழ்க்கை பலருக்கும் உத்வேக சக்தியாக விளங்கியது. இறுதி மூச்சுவரை ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவரும் சமூக சீர்திருத்தவாதியுமான அன்னபூர்ணா மஹாராணா 95-வது வயதில் (2012) மறைந்தார்.
சேது சீமையை ஆண்டமாமன்னர் மு.பாஸ்கரசேதுபதி பிறந்த தினம். (1868) இராமநாதபுரத்தை ஆண்ட முத்து ராமலிங்க சேதுபதி, முத்தாள் நாச்சியார் தம்பதிகளின் புதல்வர்தான் பாஸ்கரசேதுபதி. இவரது சகோதரர் தினகர் சேதுபதி. பாஸ்கர சேதுபதி 1868 நவம்பர் மூன்றாம் தேதி பிறந்தார். இந்நிலையில் இராமநாதபுரம் அரண்மனையை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டதுமில்லாமல், அதை சமஸ்தானமாக்கி விட்டார்கள். பாஸ்கர சேதுபதி பிறந்த ஐந்தே ஆண்டுகளில் அவரது தந்தையும் ( 1873) இறந்து விட்டார். அவரை வளர்க்கும் பொறுப்பை ஆங்கில அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அவரை சென்னைக்கு கொண்டு வந்து எழும்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து கல்வி புகட்டியது.. பாஸ்கர சேதுபதி ஆங்கிலம், தமிழ் மொழிகளோடு இசை, விளையாட்டு என்று தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். டென்னிஸ் பியானோ வாசித்தல், ஓவியம் வரைதல் ஆகியவற்றின் மீது அதிக ஈடுபாடு இருந்தது. நம் நாட்டின் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். கி.பி.1888 ஆம் ஆண்டு எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்த சேதுபதி தன்னுடைய சமஸ்தானத்துக்கு திரும்பினார். தனது இருபத்தொன்றாவது வயதில் சமஸ்தானப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பாஸ்கர சேதுபதிக்கு இந்திய அரசு `மகாராஜா’ என்று பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது.. அமெரிக்காவில் அனைத்து மத கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் பாஸ்கர சேதுபதிக்கு அழைப்பு வந்தது. ஆனால சேதுபதிக்கு அதில் தான் கலந்து கொள்வதை விட தன்னை விட ஆன்மிகத்திலும், பேச்சிலும், செயலிலும் சிறப்புற்று விளங்கும் சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்தார். தன்னுடைய யோசனையை தனக்கும் ,விவேகானந்தருக்கும் பொதுவான நண்பராக விளங்கிய ஜஸ்டிஸ் சுப்பிரமணி ஐயர் மூலம் தெரிவிக்க, முதலில் யோசித்து சொல்வதாகச் சொன்ன விவேகானந்தர், பின்னர் சம்மதம் தெரிவித்தார்.விவேகானந்தர் பயணிக்க தேவையான செலவுகள் அனைத்தையும் பாஸ்கர சேதுபதியே ஏற்றார். 1893 ஆம் ஆண்டு விவேகானந்தர் கன்னியாகுமரியில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவிற்குப் பயணமானார்.. விவேகானந்தரின் தோற்றம் மட்டுமல்ல, அவருடைய பேச்சும் ஆங்கிலேய மக்களை கவர்ந்தது. நான்காண்டுகளுக்குப் பின் 1897 இல் பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் வந்திறங்கிய போது மன்னர் பாஸ்கரசேதுபதி விவேகானந்தரின் பாதங்களை தரையில் பட விடாமல், தன் தலையில் வைத்து இறங்குமாறு பணித்தார். அத்துடன் விவேகானந்தர் பயணிக்க கொண்டு வந்த அலங்கார வண்டியை மாடுகளுக்குப் பதிலாக மன்னரும், அரண்மனை ஊழியர்களும் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.. பீரங்கிகள் முழுங்க ஒரு மன்னரை வரவேற்பது போல் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். “கலியுகத்து ராஜரிஷி” என்று பாஸ்கருக்கு பட்டமளித்தார் விவேகானந்தர். தன் அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமான விவேகானந்தர் இறந்த போது மிகவும் மனம் உடைந்து போனார் மன்னர். புலவர்களுக்கும், கோயில்களுக்கும் மிகுந்த தான தருமங்களை வாரி இரைத்தார். திருவாவடுதுறை மடத்துக்கு இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். இப்படி வருவோர்க்கெல்லாம் தான தருமங்கள் செய்வதைக் கண்ட சிருங்கேரி மடத்தின் சாமிகள் மன்னரிடம், `உங்கள் அரண்மனையை எனக்கு தானமாகக் கொடுங்கள்’ என்று கேட்டார். உடனே பாஸ்கர சேதுபதி `தானமாக கொடுத்து விட்டேன். எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியதோடு அரண்மனையை விட்டும் வெளியேறி விட்டார். சாமிகள் மனம் நெகிழ்ந்துப் போய் அரண்மனையை திரும்ப மன்னரின் மகன் முத்துராமலிங்க சேதுபதிக்கே தானமாகத் தந்து விட்டார்.. பாஸ்கர சேதுபதி மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் துவங்க காரணமாக இருந்தார்.1901 ல் துவங்கப்பட்ட இச்சங்கத்தில் உ.வே. சாமிநாத ஐயர், இரா.இராகவ ஐயங்கார், பரிதிமாற்கலைஞர், பின்னாத்தூர் நாராயணசாமி போன்றோர் இச்சங்கத்தில் அங்கம் வகித்தனர். இச்சங்கம் மூலம் சிறந்த புலவர்களுக்கும், இலக்கியங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.சேதுபதிக்கு முதுகில் கட்டி வந்து தொல்லைக் கொடுத்தது. இதனால் அவர் அடிக்கடி மடத்தில் போய் தங்கி விட்டார். 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ந் தேதி தனது முப்பத்தைந்தாவது வயதிலேயே இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார் மன்னர். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற முதல் இரயிலில் தான் பாஸ்கர சேதுபதியின் பூத உடல் கடைசியாகப் பயணித்தது..
பெங்களூர் நாகரத்தினம்மா பிறந்த தினம்.. பெங்களூர் நாகரத்தினம்மா (3 நவம்பர் 1878 – 19 மே 1952) என்கிற புகழ்பெற்ற கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் பண்பாட்டுச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். தேவரடியார் மரபில் வந்த இவர் கலை வளர்ச்சிக்கு உதவும் புரவலராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார். திருவையாற்றில் தியாகராஜர் சமாதியின் மீது ஒரு கோயிலை எழுப்பியவர். தியாகராஜ ஆராதனை விழா ஏற்பட உதவி, அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். முத்துப்பழனி என்ற பெண்கவிஞரின் ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்குக் காப்பியத்தை தேடிப்பிடித்து முந்தைய பதிப்பில் ஆபாசமாகக் கருதி வேண்டுமென்றே விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தவர். மேலும் இவர் வெளிட்ட நூல்கள்: “மத்யா பானம்” (தெலுங்கு), சமசுகிருதத்தில் “ஸ்ரீதியாகராஜ அஷ்டோத்திட நாமாவளி” (சமஸ்கிருதம்) “பஞ்சகீரண பௌதீக”
அமர்த்தியா சென் பிறந்தநாள் நவம்பர் 3 அமர்தியா குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார். பஞ்சம், பசி, வறுமை சார்ந்து மேற்கொண்ட இவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை. வங்கத்தில் இருபது லட்சம் பேர் செத்த அந்தப் பஞ்சத்தின் பொழுது சாகுபடி அதிகமாகவே இருந்தது; விலை வாசி பதினான்கு ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. உணவுப்பதுக்கல் நடந்தது; அரசும் உணவுக்கப்பலை அனுப்பவில்லை. மக்கள் பசியால் இறந்தார்கள், உணவு இருந்தால் மட்டும் போதாது அதை வாங்க மக்களுக்கு சக்தி வேண்டும் ஆகவே, பஞ்சம் ஏற்படுகிற காலத்தில் மக்களுக்குச் சம்பள உயர்வு தரவேண்டும். தானியங்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் சென். ஜனநாயகம், சுதந்திரம், தைரியமான ஊடகங்கள் ஆகியவை இணைந்திருக்கும் அரசாங்கங்களில் உலகம் முழுக்கப் பெரும் பஞ்சங்கள் நிகழ்வதே இல்லை என்று அவர் அழுத்திச் சொல்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய ‘AN UNCERTAIN GLORY’ புத்தகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குஜராத்தின் வளர்ச்சி மாதிரி உண்மையில் நல்ல வளர்ச்சி மாதிரியில்லை; தமிழகம், கேரளா ஆகியனவே நல்ல வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் வளர்ந்து இன்னொரு பக்கம் உடல்நலம், கல்வி, ஆரோக்கியமான உடல்நிலை, சுகாதாரம், சீரான வருமான பரவலாக்கம் ஆகியன இல்லாமல் ஒரு மாநிலம் இருக்குமென்றால் அது வளர்ச்சி கிடையாது. அந்த வளர்ச்சியை நெடுங்காலத்துக்குத் தக்க வைக்க முடியாது என்கிறார் சென். மக்களின் முன்னேற்றமே உண்மையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் எனத் தொடர்ந்து தன் எழுத்துக்களில் வலியுறுத்தி வருபவர். மக்கள்நலன் சார் பொருளாதாரம், வளர்ச்சி பொருளாதாரம் ஆகியவை சார்ந்து இயங்கும் இவர் கார்ல் மார்க்ஸ், ஆடம் ஸ்மித் என்று பலராலும் கவரப்பட்டவர். சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் அதே சமயம் துரிதமான சந்தைப்படுத்தல், முழுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விலக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை எதிர்க்கிறார். கண்ணியமான வாழ்க்கையை அடித்தட்டு மக்கள் வாழ பொருளாதார வளர்ச்சி வழிகோல வேண்டும் என்பது அவரின் பார்வை வளர்ச்சியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகளே என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்து காணாமல் போகும் பெண்கள் என்கிற அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பொருளாதாரத்துக்கு அறம் சார்ந்த ஒரு கோணத்தைத் தந்தமைக்காக 1998-ல் பொருளாதார நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . பொருளாதாரம் என்றால் எல்லாரும் எண்கள், வர்த்தகம், கணக்கு என்றிருந்த பொழுதுமக்களின் நலன் சார்ந்து சிந்தித்த இவர் வங்கம் வருகிற பொழுதெல்லாம் சைக்கிளில் சுற்றுவார்; எளிய கடையில் டீ குடிப்பார். ஒரு காலத்தில் கடன்வாங்கி குடும்பம் நடத்துகிற அளவுக்கு எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்
ஏ. கே. செட்டியார் பிறந்த நாள் இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர். முதன்முதலாக மகாத்மா காந்தியைப் பற்றிய வரலாற்று ஆவணப்படம் எடுத்தார். 1937-ல் தென்னாப்பிரிக்கா சென்றார். மேலும் பல நாடுகளுக்குச் சென்று அந்நாட்டு அரசு மற்றும் தனியார்களிடம் இருந்து காந்திஜி வாழ்க்கை தொடர்பாக சுமார் 50,000 அடிப் படச்சுருள்களைச் சேகரித்தார்.
- 3 ஆண்டு காலமாகத் தான் திரட்டிய தகவல்கள், ஆவணங்களின் அடிப்படையில், ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கை சம்பவங்கள்’ என்ற படத்தைத் தமிழில் தயாரித்து, 1940-ம் ஆண்டு வெளியிட்டார். இதன்மூலம் முதன்முதலாக மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படம் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு பயந்து திரையரங்குகள் இதைத் திரையிட முன்வரவில்லை.
- இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ம் ஆண்டு, சுதந்திர தினத்தன்று புதுடில்லியில் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதையே 1953-ல் ஆங்கிலத்தில் தயாரித்து ஹாலிவுட்டில் வெளியிட்டார்.
- 1912-ல் கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், காந்தியுடனான அவரது சந்திப்பு, நேருஜி கைராட்டினம் சுற்றும் காட்சி, உப்பு சத்தியாக்கிரகத்தை முடித்துக்கொண்ட காந்தியடிகள், தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் ஆவணப் படத்தில் இடம்பெற்றிருந்தன.
- பல நாடுகளுக்கும் தான் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி நூல்கள் எழுதி வெளியிட்டார். ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று இவர் எழுதிய நூற்பெயரே இவரது அடைமொழியாகவும் சிறப்புப் பெயராகவும் மாறியது. மேலும் ‘பிரயாண நினைவுகள்’, ‘மலேயா முதல் கனடா வரை’, ‘கயானா முதல் காஸ்பியன் கடல்வரை’, ‘குடகு’, ‘இட்ட பணி’, ‘ஐரோப்பா வழியாக’, ‘ஜப்பான் கட்டுரைகள்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
- விளம்பரத்தை விரும்பாதவர் என்பதால், இவரது புகைப்படம் கிடைப்பதுகூட அரிதாக இருந்தது. பாரதியிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அவரது தொகுக்கப்படாத படைப்புகளைக் கண்டெடுத்து வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். 1943-ல் ‘குமரி மலர்’ என்ற மாத இதழை வெளியிட்டார்.
- ச.வையாபுரிப் பிள்ளை, க.அ.நீலகண்ட சாஸ்திரி, டி.எஸ்.சொக்க லிங்கம், ஏ.என். சிவராமன், பாரதிதாசன், டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர., கல்கி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி உள்ளிட்ட பல இலக்கியவாதிகள் இதில் தொடர்ந்து எழுதி வந்தனர்.
- 1850 முதல் 1925-ம் ஆண்டு வரை பல்வேறு இதழ்களில் வெளிவந்த 140 கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்நாடு பயணக் கட்டுரை’ என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டார். தமிழில் பயண இலக்கியத்தைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமைக்குரிய ஏ.கே.செட்டியார், 1983-ம் ஆண்டு, 72-வது வயதில் காலமானார்.
பாடகி ஜிக்கி பிறந்ததினம் இன்று. ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 – ஆகஸ்ட் 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி. ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகையா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 – 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.
