காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 28-ந் தேதி மாலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 312 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் 117.02 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 116.28 அடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
