உலக முதியவர்கள் தினம் மனிதனுடைய வளர்ச்சியை 3 காலகட்டங்களாக பிரிக்கலாம். குழந்தை பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம். 60 வயதை கடந்தவர்கள் முதுமை பருவத்தினராக அறியப்படுகிறார்கள் அல்லது மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.நம்மை குழந்தையிலிருந்து பாதுகாத்து சீராட்டி வளர்த்த நம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் அடைக்கலாமா?அவர்கள் நம் தலைமுறையின் ஆணிவேர்கள். இவர்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அக்டோபர் 1 உலக முதியவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1990- ம் ஆண்டு ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இது கடைபிடிக்கப்படுகிறது 1991லிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதியவர்கள் தினம் கடைபிடித்து வருகிறோம்.கடந்த 2002-ம் ஆண்டு முதியவர்களுக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு முதியோர் நலன், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 60கோடி முதியவர்கள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நாளில் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாயிலாக கீழ்கணட கோரிக்கைகளை வலியுறுத்துகிறார் சீனியர் சிட்டிசன்களின் டாக்டர் வி. எஸ். நடராஜன் சென்னை கிண்டியில் ரூ.220 கோடியில் முதியோர்களுக்காக தேசிய முதியோர் நல மையம் (மருத்துவமனை) நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை விரைவில் முதியோர்கள் பயன்பெறும் வகையில் திறக்க வேண்டும். முதுமையின் விளைவாக பலர் மறதிநோய், பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் மூட்டுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகிறது. இதற்கு பல குடும்பங்களில் நிதி வசதி இடம் கொடுக்காது. இந்நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களைக் கவனித்துக் கொள்ள தாலுகா அளவில் தொடர் சிகிச்சை மையங்களைஅரசு தொடங்க வேண்டும். வயதானகாலத்தில் பெரும்பாலான வர்கள் பல்வேறு நோய்களுடன் வாழ வேண்டியிருக்கிறது. பலருக்கு சரியான உறுதுணை இல்லை. படுத்த படுக்கையாகி விட்டால் பார்ப்பதற்கு யாரும் இல்லை. கைவிடப்பட்ட முதியோரின் நிலை பரிதாபத்துக்குரியது. இப்படிப்பட்ட நிலையில் கருணைக்கொலையை நடைமுறைப்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஓர் தெளிவான, திடமான முடிவைஎடுக்கலாம். முதியவர்களுக்காக தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்து, அதில் உடல் நலம், மன நலம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், உணவு முறை மற்றும் குடும்ப நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் முதியவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். முதியோர்களின் நிதி நிலைமையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 10 முதல் 15 சதவீத முதியோர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள். முதியோர்களுக்கு மாதம் ரூ.1,000 அரசு வழங்குகிறது. விலைவாசி அதிகரித்து வருவதால், உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது, ரூ.1,500 ஆகஉயர்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விதவைகளுக்கு மாதம் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும். முதியவர்களின் ஓய்வூதிய தொகையை அவர்களுடைய வீட்டுக்கே சென்று கொடுக்கும் திட்டத்தை ஆந்திராஅரசு அமல்படுத்தியுள்ளது. தற்போது, தமிழகத்தில் 80 வயது கடந்த முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் வீட்டுக்கே சென்று அளிக்க வேண்டும். முதியோர்களில் பலர், வங்கியில் ஓர் தொகையைச் செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டியை வைத்துதான் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள். மத்திய அரசு வங்கி வட்டியைக் குறைத்துவிட்டது. அதனால் பல முதியவர்களின் நிதி நிலைமையில் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வட்டியை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த வேண்டும். முதியோர்களைப் பராமரிக்க சட்டம் முதியோர்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் அதற்கு பொறுப்புள்ள மகன் அல்லது மகளை தண்டிக்க ஒரு சட்டம் உள்ளது. முதியவர்கள் தங்கள் சொந்த வருவாய் மூலமோ, தங்கள் சொத்து மூலம் பெறும் வருவாயிலோ தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில் இச்சட்டத்தின் உதவியை நாடலாம். மேலும், முதியோர் இல்லங்களின் தரத்தை நிர்ணயிக்க அரசு ஓர் குழுவை அமைக்க வேண்டும். முதியோர் இல்லம் ஆரம்பிப்பதற்கு முன் இக்குழுவிடம் சான்று பெறவேண்டும். முதியோர் இல்லம்அமைந்துள்ள இடம், தரமான உணவு,மருத்துவ வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போதிய அளவுக்கு உள்ளதா என்பதை இக்குழு அடிக்கடி நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். இக்குழுவில் முதியோர் நல மருத்துவர் ஒருவர்இடம்பெற வேண்டும். முதியோர்களுக்காக நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் முதியோர் இல்லங்களை ஆரம்பிக்க வேண்டும். முதியோர் நல வாரியம் முதியோர்களின் கொடுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும்’ நாளாக 2006-ம் ஆண்டில் இருந்து அனுசரிக்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த நாளில் முதியோரை மதித்தல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை வானொலி மூலம் நடத்தலாம். முதியோர்கள் நலம் பேண, அவர்களுக்கு என்று தனியாக ‘முதியோர் நல வாரியம்’ ஒன்றை அமைத்தால் மேற்சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.
உலக சைவ உணவாளர்கள் தினம்! சைவ உணவை வலியுறுத்தி ஆண்டு தோறும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுக்க உலக சைவ உணவாளர் தினம் ( World Vegetarian Day) அனுசரிக்கப்படுகிறது. அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் நம் சமயங்கள் எல்லாம் உணர்த்தும் அடிப்படை உண்மை. மற்ற உயிர்களை கொன்று சாப்பிடுவது அதற்கு எதிரானது என்பதால் அசைவம் சாப்பிடுவதை சமயங்கள் எதிர்க்கின்றன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.மனிதனை தவிர மற்ற விலங்குகள் அவற்றுக்கு தேவையான உணவை தாங்களே உற்பத்தி செய்துக் கூடிய திறமை இல்லாதவை. அவை பிற உயிர்களை கொன்று சாப்பிடுவதில் தப்பு இல்லை. ஆனால் மனிதன் விதை விதைத்து தானே உணவை உற்பத்தி செய்யும் திறமைப்படைத்தவனாக இருக்கிறான். அதனால், அவன் பிற உயிர்களை கொன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. தாவர உணவுகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் அதிகம் இல்லை. மேலும் அவை குடலை வலிமையாக்குகின்றன. மாமிசம் உண்பதால் குடல் வலிமையை இழந்து உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைகின்றன. சிக்கல்களை கொண்ட அசைவ உணவுகளை தவிர்ப்பது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மேலும் விலங்குகள் சுகாதாரமின்றி வசிப்பவை. அவற்றின் உடலில் கிருமிகள் அதிகம். அந்த விதத்தில் அந்தக் கிருமிகள் நம்மையும் தாக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், இறந்த மீன்கள், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியில் வேகமாக கிருமிகள் தொற்றும்.மீன், முட்டையில் இருக்கும் சத்து எல்லாம் கீரைகள், முளை கட்டிய தானியங்கள், கேரட் போன்றவற்றில் இருக்கின்றன. மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது என்று நினைப்பவர்கள் கேரட், கீரைகளை சாப்பிடலாம் இவை மீனை விட சத்தானவை. மேலும், மீன் விலையோடு ஒப்பிடும் போது இவற்றின் விலை குறைவுதான். அசைவ உண்வுகள் ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. உடலில் கொழுப்பையும் அதிகரிக்கிறது. இது இதய நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.அசைவ உணவு சாப்பிடும் சிங்கம், புலி போன்றவற்றின் உடலில் பற்களின் அமைப்பு, அவற்றின் உடலில் சுரக்கும் திரவம், ஜீரண உறுப்புகள் அனைத்தும் அசைவ உணவை சாப்பிடுவதற்கு ஏற்ப இயற்கையாக அமைந்துள்ளன. ஆனால் மனிதனின் பற்கள் அமைப்பு, உமிழ்நீர், ஜீரண உறுப்புகளின் அமைப்பு சைவ உணவு சாப்பிடுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இறைச்சி சாப்பிட்டால் மனிதர்களுக்கு அதிக நேரமாவதை அனுபவ பூர்வமாக பலர் உணர்ந்திருப்பார்கள். மேலும், மலச்சிக்கல் ஏற்படுவதையும் காணலாம். அதே சமயம் சைவ உணவை சாப்பிடுவது எளிது. ஜீரணமாவது எளிது, மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும்.
இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட தினம் தகவல் பரிமாற்றம் என்பது பண்டைய காலந்தொட்டு உலக மனிதர்களிடையே தவிர்க்க முடியாத சேவையாக இருந்து வருகிறது. ஓரிடத்தில் முரசு கொட்டியோ அல்லது பறை இசைத்தோ அரசாங்கத்தின் தகவல்களைத் தெரிவிப்பது மட்டுமன்றி, ஓரிடத்திலிருந்து தொலைவிலுள்ள மற்றொரு இடத்திற்கு தகவல்களைக் கொண்டு செல்ல, ‘ஓட்ட தூதுவர்களை’ பயன்படுத்தியது வரை இதன் வரலாறு மிக நீண்ட நெடியதாகும். இந்தியாவின் அஞ்சல் வரலாற்றை சிந்து சமவெளியிலிருந்து தொடங்கிய தொன்மைக் காலம், முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது தொடங்கிய இடைப்பட்ட காலம், ஆங்கிலேய ஆட்சியின் போது தொடங்கிய நவீன காலம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஆங்கிலேயருக்குப் பிறகு இந்திய அஞ்சல் துறை நவீனத்துடன் பல்வேறு மாற்றங்களைக் காணத்தொடங்கியது. மன்னர்கள் காலத்தில், தகவல்களைக் கொண்டு சென்றவர்கள் ‘தகவலாளி’, ‘ஓட்டக்காரன்’ அல்லது ‘ஓட்டத் தூதுவன்’ என அழைக்கப்பட்டனர். அஞ்சல் ஊழியர்களை பெருமைபடுத்திய ‘ஹர்ஹரா’ திரைப்படம்: கடிதங்கள் அடங்கிய சாக்குப் பைகளைக் தூக்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். அச்சமயம் விலங்குகளாலோ, கள்வர்களாலோ அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர்களின் பாதுகாப்புக்காக கையில் வேல் ஏந்திச்சென்றனர். அண்மையில் வெளியான ‘ஹர்ஹரா’ என்ற தமிழ்ப்படத்தில் ஓட்டக்காரர்களையும், தபால்காரர்களையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். புறாக்களின் கால்களில் ஓலைகளைக் கட்டி தூது அனுப்பிய வரலாறும் உண்டு. ஆனால் நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கிடையில் முன்னொரு காலம் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது பைசா செலவில் ஒரு கடிதத்தை அனுப்பிவிட முடியும் என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு எத்தனை சந்தோஷம் தருகின்ற விஷயம் தெரியுமா? அதிலும் தொலை தூரத்தில் இருக்கும் உறவுகளையும், நட்புகளையும் எழுத்தினால் ஸ்பரிசிக்கும் அனுபவம் எத்தனை மகத்தானது. மூன்றரை ரூபாய்க்கு உள்நாட்டு அஞ்சலும், ஐந்து ரூபாயில் மூடிய உறைத் தபாலும் அனுப்ப முடியும் என்பது எவ்வளவு சவுகரியமான விஷயம்.இன்றைக்கு என்னதான் வாட்ஸ் அப்.,எஸ்.எம்.எஸ்.ஸூம், ஈ மெயிலும் வந்துவிட்டதென்றாலும், கடிதங்களின் மூலம் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் பரவசத்தை அனுபவிப்பவர்கள் இன்றும் இலட்சக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் : இந்திய அஞ்சல் சேவை என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில், கடந்த 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு 1727-இல் துவங்கியது. முதன் முதலாக கொல்கத்தாவில் ஆங்கிலேயர் காலத்தில் 1774ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் 1786-லும், மும்பையில் 1793-ஆம் ஆண்டும் அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அஞ்சல் சேவையில் சீரான தன்மையைக் கொண்டு வரும் பொருட்டு, 1837-ஆம் ஆண்டு ‘இந்திய அஞ்சல் சட்டம்’ இயற்றப்பட்டது. மேலும் இந்த சட்டத்தை விரிவுபடுத்தி தற்போதைய நவீன அஞ்சல் சேவைக்கு வித்திடும் வகையில், 1854-ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்ட இந்திய அஞ்சல் துறை இன்றைக்கும் ‘இந்தியா போஸ்ட்’ (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இன்றைக்கும் இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. உலகில் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட நாடு இந்தியாவாக்கும்.
வால்ட் டிஸ்னி உருவான நாளின்று #WaltDisney திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி, 1955-ம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான டிஸ்னி வேர்ல்ட் (Disneyland Park) என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் உருவாக்கினார். இந்த பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலரும் கருதினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ மிக்கி மவுஸின் அழகை ரசித்து பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உள்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்து மிக்கி மவுஸ் உடன் செல்பி எடுத்துள்ளனர். தற்போதும் ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது. டிஸ்னி சிறுவனாக இருந்தபோது, பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது. அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால், ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்ததாம்.
பி.எஸ்.என்.எல். உருவான நாள். 150 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டர் கிரஹாம்பெல் கண்டுபிடித்த அற்புத தொலைத் தொடர்பு சாதனம் தொலைபேசி அதன் சேவையை சிறப்பாக்கி செயல்படும் BSNL ன் 25வது வெள்ளி விழா ஆண்டு இது ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும் , ஒரு மாதம் முழுவதும் இருபத்திநான்கு மணிநேரமும் மக்களுக்கான தொலைத்தொடர்பில் துணையிருந்து , சேவையாற்றுவது BSNL மட்டுமே 2001 குஜராத் பூகம்பம் , 2004 சுனாமி பேரிடர் , 2013 உத்தரகாண்ட் வெள்ளச்சேதம் , 2014 ஜம்மு காஷ்மீர் பெருவெள்ளம் , 2015 தமிழக தலைநகரில் வழிந்தோடிய வெள்ளம் , 2018 கேரளாவில் பெரு வெள்ளப் பெருக்கு , 2020 கொடிய நோய் கோவிட் கால கொரோனா பாதிப்பு , 2023 ஒரிசா ரயில் விபத்து , 2024 கேரளா வயநாடு நிலச்சரிவு , 2025 பஞ்சாப் வெள்ளம் & நாட்டின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் என்று தேசத்தின் இக்கட்டான சூழ்நிலையிலும் , பேரிடர் காலங்களிலும் நாட்டிற்கும் , மக்களுக்கும் உற்ற தோழனாகக் கை கொடுத்து , தோள்கொடுத்து துணைநின்றது BSNL நிறுவனம் மட்டும்தான். அதன் வெள்ளிவிழா ஆண்டு இது. பிரிபெய்டு , போஸ்ட்பெய்டு பிளான்களை குறைந்த கட்டணத்தில் அதிவேக FTTH இண்டர்நெட் சேவை , எந்த கம்பெனியிலும் இல்லாத அளவுக்கு குறைந்த கட்டணத்தில் அத்துடன் லே ண்ட்லைன் 24 மணி நேரமும் இலவசமாக பேசிக் கொள்ளூம் வசதி,குறைந்த செலவில் சர்க்யூட் என்று பல டெக்னாலஜி வசதி என்பவை BSNL-ன் சாதனைகள்.
இன்று நடிகரான நட்சத்திர இசை அமைப்பாளர் பாபநாசம் சிவன் காலமான நாளின்று மியூசிக் அமைப்பாளர்கள் நடிகர்களாகவது ஒன்றும் புதிதில்லை. இளையராஜா ஐல சீன்களில் வந்ததைத் தவிர பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகி இருக்காய்ங்க. எம்.எஸ்.விஸ்நாதன் முதல் விஜய் ஆண்டனி, ஹிப்ஹாப் ஆதி வரை நடிச்சிருக்காய்ங்க. ஆனா மொத முதலில் நடிகரான இசை அமைப்பாளர் பாபநாசம் சிவன். அவருக்கு முன் ஒரு சில பாடகர்கள், சில படங்களுக்கு இசை அமைத்தவர்கள் நடிச்சிருந்தாலும், தமிழ் சினிமாவில் நட்சத்திர இசை அமைப்பாளராக இருந்த பாபநாசம் சிவன் தான் முழுமையான திரைப்பட இசை அமைப்பாளர். 1936ம் ஆண்டு வெளியான ‘குசேலா’படத்தில் அவர் குசேலாவாக நடிச்சார். இந்த படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி, மணி பாகவதர், பால சரஸ்வதி உள்பட பலர் நடிச்சாய்ங்கள். பாபநாசம் சிவனே இசை அமைச்சார். படத்தில் 30 பாடல்கள் இடம் பெற்றுச்சு. இந்த படத்திற்கு பிறகு குபேர குசேலா, தியாக பூமி, பக்த சேதா ஆகிய படங்களில் நடிச்சார் பாபநாசம் சிவன். “ஆண்டாள், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோரின் பக்திப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்குக் காரணம் பக்திச் சுவையின் உருக்கமே. உருக்கமான எந்தப் பாடலும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர் பாபநாசம் சிவன்” என்று வர்ணிச்ச்சிருக்கார் கவியரசு கண்ணதாசன். பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறு வயதில் சிரமங்கள் மிகுந்த வாழ்க்கை. இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆனால், சாரீர வளமை மிகுந்திருந்த சிவன், குரல் வளத்துடன் பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்துடன் கீர்த்தனைகளைத் தாமே இயற்றிப் பாடியிருக்கிறார். கடந்த நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் பாபநாசம் சிவன். திருவையாறு ஸப்த ஸ்தான விழாவில் 1912 முதல் 1957 வரையில் 45ஆண்டுகள் விடாமல் பஜனை நடத்தியிருக்கிறார் சிவன். 19 ஆண்டுகள் நாகையில் ஆடிப்பூர பஜனை நிகழ்த்தியிருக்கிறார். சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிய பிறகு தனது இறுதிக் காலம் வரையில் மயிலையில் மார்கழி மாதத்திலும், பங்குனி உத்திரத் திருவிழாவிலும், மகாசிவராத்திரியின் போதும், அறுபத்து மூவர் உற்சவத்திலும் சிவன் நடத்திவந்த பஜனையில் கலந்துகொண்டு மகிழாத வித்வான்களும், ரசிகப் பெருமக்களும் இல்லை.
பூர்ணம் விஸ்வநாதன் மறைந்த தினம் இன்று -அக்=1 தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த ‘தில்லு முல்லு’, ‘நினைத்தாலே இனிக்கும்’ படங்கள் என்றும் மறக்க முடியாதவை. கமல்ஹாசனுடன் ‘மகாநதி’, ‘மூன்றாம் பிறை’ படங்களில் மிக அற்புதமாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார். ‘விதி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு ‘ ‘மூன்றாம் பிறை’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘கேளடி கண்மணி’, ‘ஆண் பாவம்’ என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த படங்களின் எண்ணிக்கை ஏராளம். ‘ஆசை’ படத்தில் இவரின் அபார நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. நாடகத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். தனது பூர்ணம் தியேட்டர்ஸ் மூலம் பல நெகிழ்ச்சியூட்டும், அர்த்தமுள்ள நாடகங்களைத் தந்தவர். மறைந்த எழுத்துலக மேதை சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதனுக்காகவே எழுதிய நாடகங்கள் ‘அன்புள்ள அப்பா’, ‘ஊஞ்சல்’, ‘அப்பாவின் ஆஸ்டின் கார்’… இன்னும் பல.
அன்னி பெசண்ட் அம்மையார் பர்த் டே டு டே #AnnieBesant madam Birthday today இந்திய விடுதலைக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் பட்டியலில் அன்னிய தேசத்தை சேர்ந்தவர்களும் இணைந்திருக்கிறார்கள். அதில் முக்கிய இடம் வகிப்பவர் அயர்லாந்து நாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறிய அன்னி பெசன்ட் அம்மையார். நம் நாட்டு மக்களுக்கு தொண்டு செய்வதற்காக வந்தவர் நாட்டின் விடுதலையிலும் தன்னை இணைத்து கொண்டார். அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று முழங்கியவர், இந்தியாவுக்கு சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். தனது ஆங்கில நாளேடான ‘நியூ இந்தியா’வில் விடுதலை உணர்வை தூண்டும் கட்டுரைகளை காரசாரமாக எழுதி வந்தார். காங்கிரசில் இணைந்திருந்த அன்னி பெசன்ட் அம்மையார் மகாத்மா காந்தி ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறினார். அன்னிபெசன்ட் அம்மையார் பிறந்தது (1.10.1847) லண்டனில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களுக்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த அன்னிபெசன்ட் அம்மையார் 20.9.1933 அன்று இயற்கை எய்தினார்.
